Published:Updated:

மகாராஷ்டிரா: 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாட்டுவண்டிப்போட்டி - சுப்ரீம் கோர்ட் அனுமதி!

மாட்டுவண்டிப் போட்டி
News
மாட்டுவண்டிப் போட்டி ( மாதிரிப் படம் )

மகாராஷ்டிராவில் மாட்டுவண்டிப் போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியிருக்கிறது.

நாட்டில் ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 2014-ம் ஆண்டு தடை விதித்தது. இந்தத் தடையை தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அதனை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று போட்டிகளை நடத்தி வருகின்றன. மகாராஷ்டிராவில் மாட்டு வண்டிப்போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படுவதுண்டு. ஆனால் இந்தப் போட்டிகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நிறுத்தப்பட்டன. கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய பா.ஜ.க அரசு, மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்த நிலையில், விலங்குகள் நல அமைப்பான பீட்டா சட்டத்திருத்தத்தை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தப் போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படும் என்பதால் போட்டிகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்று தன் மனுவில் குறிப்பிட்டிருந்தது. இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் மாட்டு வண்டிப்போட்டிகளை நடத்த தடை விதித்தது.

மாட்டுவண்டிப் போட்டி
மாட்டுவண்டிப் போட்டி
மாதிரிப் படம்

அதையடுத்து, இந்தத் தடையை எதிர்த்து மாட்டு வண்டி போட்டி ஆர்வலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த நிலையில், இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மாட்டுவண்டிப் போட்டிகள் நடத்த அனுமதிவழங்கியது. போட்டியின் போது விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்றும், விதிகளை மீறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு 3 ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மகாராஷ்டிரா விளையாட்டு மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் சுனில் கேதார், உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் ஆகியோர் வரவேற்றிருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz