Published:Updated:

மோட்டார் வாகன ஆய்வாளர் நியமனத்தில் முறைகேடு? - சர்ச்சையில் டி.என்.பி.எஸ்.சி!

டி.என்.பி.எஸ்.சி
பிரீமியம் ஸ்டோரி
டி.என்.பி.எஸ்.சி

நான் இந்தப் பொறுப்புக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இருவருடைய ஆவணங்களையும் போக்குவரத்துத்துறை வாங்கியுள்ளது.

மோட்டார் வாகன ஆய்வாளர் நியமனத்தில் முறைகேடு? - சர்ச்சையில் டி.என்.பி.எஸ்.சி!

நான் இந்தப் பொறுப்புக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இருவருடைய ஆவணங்களையும் போக்குவரத்துத்துறை வாங்கியுள்ளது.

Published:Updated:
டி.என்.பி.எஸ்.சி
பிரீமியம் ஸ்டோரி
டி.என்.பி.எஸ்.சி

டி.என்.பி.எஸ்.சி-யையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாதுபோல. வினாத்தாள் லீக், ஆவணங்களில் குளறுபடி, பணம் பெற்றுக்கொண்டு ‘போஸ்ட்டிங்’ உள்ளிட்ட பல்வேறு புகார்கள் நிரூபிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்ட வரலாறும் இருக்கிறது. அந்தவகையில், 2012-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி-யால் நடத்தப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2 பதவிக்கான தேர்வும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இந்தத் தேர்வு மூலம் 17 பேர் மோட்டார் வாகன ஆய்வாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்து, பணியில் சேர்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து ஆர்.டி.ஐ வாயிலாகத் தகவல் பெற்ற சமூக ஆர்வலர் காசிமாயனிடம் பேசினோம். “17 பேர் தேர்வு செய்யப்பட்டதில் ராஜ ராஜேஸ்வரி என்பவரின் லைசென்ஸ் முழுவதுமாகத் திருத்தம் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப் பட்டிருக்கிறது. டிரைவிங் லைசென்ஸைப் பொறுத்தவரை பெயருக்குப் பின்னால் எந்தவிதமான படிப்பையும் குறிப்பிட முடியாது. ஆனால், ராஜ ராஜேஸ்வரியின் பெயருக்குப் பின்னால் டி.ஏ.இ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமத்துக்கு 20 வருடங்கள்தான் கால அளவு கொடுக்க முடியும். ஆனால், ராஜ ராஜேஸ்வரியின் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமத்தில் 23 வருடங்கள், 8 மாதங்கள், 4 நாள்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சட்டப்படி செல்லுமா என்று தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாகக் கேட்டதில், ‘செல்லாது’ என்று போக்கு வரத்துத்துறையினர் பதிலளித்துள்ளார்கள். வாகன ஆய்வாளர்களுக்கு ‘டி.எல் எக்ஸ்ட்ராக்ட் ரிப்போர்ட்’ என்பது அவர்களின் ஜாதகம் போன்றது. இதில், எந்தத் தவறு இருந்தாலும் அவர்களைப் பணியில் சேர்க்க முடியாது. ஆனால், ராஜ ராஜேஸ்வரியின் டி.எல் எக்ஸ்ட்ராக்ட் ரிப்போர்ட்டில் ‘ஆண்’ என்று இருக்கிறது.

மோட்டார் வாகன ஆய்வாளர் நியமனத்தில் முறைகேடு? - சர்ச்சையில் டி.என்.பி.எஸ்.சி!

இதேபோல், பிரபாகரன் என்பவரும் 2012-ல் டி.என்.பி.எஸ்.சி நடத்திய வாகன ஆய்வாளர் தேர்வு மூலம் பணியில் சேர்ந்திருக்கிறார். இவர் நாமக்கல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் 25.11.1996-ல் டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருப்பதாக, லைசென்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அந்தத் தேதியில் லைசென்ஸ் எடுத்தவர்களின் பட்டியலை நாமக்கல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆர்.டி.ஐ வாயிலாகக் கேட்டோம். 22 பேர் பெயர்ப் பட்டியல் கொடுக்கப்பட்டது. இதில், பிரபாகரன் பெயரே இல்லை.

தேர்வானவர்களை அரசுப்பணியில் சேர்ப்பதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அவர்களின் விவரங்களை அனுப்பி, சரிபார்த்து ரிப்போர்ட் சமர்ப்பிக்கச் சொல்வது டி.என்.பி.எஸ்.சி-யின் வழக்கம். அப்போதே, ஆவணங்களைச் சரியாகப் பார்த்திருந்தால் தவறுகளைக் கண்டுபிடித்திருக்கலாம். அது சரியாக நடக்காததால், இருவருக்கும் பணி வழங்கப்பட்டு தற்போது வரையில் பணியில் தொடர்கிறார்கள். இவர்களைத் தேர்வுசெய்தது குறித்து உரிய பதிலை டி.என்.பி.எஸ்.சி தர மறுப்பது, முறைகேடு நடந்திருப் பதை உறுதிசெய்கிறது. ராஜ ராஜேஸ்வரி, பிரபாகரன் ஆகியோரைத் தேர்வுசெய்ததில் நடைபெற்ற முறைகேடுகள்போல் 2012-ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது” என்றார்.

தவறு என்று சுட்டிக்காட்டப்படும் ஆவணங்கள்...
தவறு என்று சுட்டிக்காட்டப்படும் ஆவணங்கள்...
தவறு என்று சுட்டிக்காட்டப்படும் ஆவணங்கள்...
தவறு என்று சுட்டிக்காட்டப்படும் ஆவணங்கள்...

புகார் குறித்து ராஜ ராஜேஸ்வரியைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் தற்போது ரெட்ஹில்ஸ் ஆர்.டி.ஓ அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள கும்மிடிப் பூண்டி பகுதி யூனிட் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறார். “2003 வரை என்னுடைய ஆவணங்கள் எல்லாமே சரியாகத்தான் இருந்தன. ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போதுதான் இந்தத் தவறு நடந்துள்ளது. சாதாரண நபர்கள் ஆவணங்களில் ஏற்படும் தவற்றைத் திருத்திக்கொள்ள முடியும். ஆனால், அரசுப் பணியில் சேர்ந்த நாங்கள், உயர் அதிகாரிகள் எங்கள் ஆவணங்களைச் சரிபார்த்த பிறகுதான் தவறுகளைத் திருத்த முடியும். என்னுடைய ஆவணங்களை உயரதிகாரிகள் சரிபார்த்துவருகிறார்கள். இதனாலேயே, என்னுடைய ஆவணத்தில் ஏற்பட்டுள்ள தவற்றை நான் இதுவரை திருத்தவில்லை. பெயருக்குப் பின்னால் யாரும் படிப்பை போடக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. டாக்டர்கள்கூட லைசென்ஸுக்குப் பின்னால் ‘Dr’ என்று போட்டிருக்கிறார்கள். இது ஒரு பிரச்னையே கிடையாது. என்னுடைய ஆவணத்தில் ‘ஆண்’ என்று இருப்பது, முழுக்க முழுக்க கணினியில் பதிவேற்றும்போது ஏற்பட்ட தவறு மட்டுமே. மற்றபடி என்மீது எந்தத் தவறும் இல்லை. என்னுடைய லைசென்ஸ் மற்றும் ஆவணங்களில் ஏற்பட்டுள்ள தவறுகள் போல் பலரின் ஆவணங்களிலும் தவறுகள் நடந்துள்ளன’’ என்றார்.

நிர்மல்ராஜ்
நிர்மல்ராஜ்

திருநெல்வேலி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வரும் பிரபாகரனைத் தொடர்புகொண்டோம். “இலகுரக லைசென்ஸ் எடுக்கவில்லை என்றே என்மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அந்தப் புகார்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், உரிய ஆவணங்களைப் போக்குவரத்துத்துறையில் சமர்ப்பித்துள்ளேன். லைசென்ஸ் எடுத்த 22 பேரின் பெயர்ப் பட்டியலை நாமக்கல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நானும் கேட்டேன். ஆனால், போக்குவரத்துத்துறைக்கு அனுப்பிவிட்டதாகக் கூறினார்கள். நான் லைசென்ஸ் எடுத்தது உண்மை. காழ்ப்புணர்வு காரணமாகவே என் மீது இத்தகைய புகார்களைக் கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

காசிமாயன்
காசிமாயன்

இந்தப் பிரச்னை தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையர் நிர்மல்ராஜிடம் பேசினோம். “நான் இந்தப் பொறுப்புக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இருவருடைய ஆவணங்களையும் போக்குவரத்துத்துறை வாங்கியுள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தவறுகள் நடைபெற்றிருப்பது உறுதியானால் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

டி.என்.பி.எஸ்.சி என்பது லட்சக்கணக்கான இளைஞர் களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு அதற்கு இருக்கிறது!