Published:Updated:

மாதம் ஒரு சொத்து டார்கெட்... பண்ணை வீடு... நீச்சல் குளம்... கோடிகளில் கொழிக்கும் சார்பதிவாளர்கள்!

கோடிகளில் கொழிக்கும் சார்பதிவாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கோடிகளில் கொழிக்கும் சார்பதிவாளர்கள்!

- அதிரவைக்கும் பதிவுத்துறை ஊழல்

மாதம் ஒரு சொத்து டார்கெட்... பண்ணை வீடு... நீச்சல் குளம்... கோடிகளில் கொழிக்கும் சார்பதிவாளர்கள்!

- அதிரவைக்கும் பதிவுத்துறை ஊழல்

Published:Updated:
கோடிகளில் கொழிக்கும் சார்பதிவாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கோடிகளில் கொழிக்கும் சார்பதிவாளர்கள்!

தமிழக அரசுக்கு, ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் துறை, பதிவுத்துறை. உண்மையில் இதைவிடப் பல ஆயிரம் கோடி வருவாய் இந்தத் துறையிலிருந்து அரசுக்கு வர வேண்டும் என்கிறார்கள் துறையின் உள்விவரம் அறிந்தவர்கள். ஆனால், துறையில் நடக்கும் கட்டுப்படுத்த முடியாத ஊழல்களால் அந்தத் தொகை தனிநபர்களின் பாக்கெட்டுகளுக்குச் செல்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டுமே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் நான்கு சார்பதிவாளர்கள்மீது வழக்கு பதிவு செய்திருப்பதே இதற்குச் சாட்சி! பதிவுத்துறையில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய தீவிர விசாரணையை மேற்கொண்டோம்... முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளைப் பற்றிப் பார்ப்போம்.

பிப்ரவரியில் மட்டுமே நான்கு வழக்குகள்!

கடந்த பிப்ரவரி 3 அன்று திருத்தணியில் சார்பதிவாளராகப் பணியாற்றிய செல்வகுமரன், விதிகளை மீறி அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது. இது தொடர்பாக 20.02.2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் ‘சதுர அடி ரூ.25 லட்சம்... திருத்தணி மெகா மோசடி!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்தக் குற்றச்சாட்டில் சார்பதிவாளர் செல்வகுமரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த மோசடி விவகாரத்தில் அவருக்குப் பின்னணியிலிருந்த பெண் அதிகாரிக்கு இந்த ஆட்சியில் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதுதான் ஆச்சர்யம்.

இரண்டாவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சிக்கியிருப்பது, வேளச்சேரியில் சார்பதிவாளராகப் பணியாற்றிவரும் விவேகானந்தன். இவர், தாம்பரம் சார்பதிவாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில், கூடுதலாக சேலையூர் சார்பதிவாளர் பொறுப்பையும் கவனித்துக்கொண்டார். அப்போது, சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட தாம்பரம் தாலுகாவிலுள்ள மாடம்பாக்கத்தில், 14 ஏக்கர் 80 சென்ட் இடத்தை விதிகளை மீறிப் பதிவுசெய்திருக்கிறார். இது தொடர்பாக இவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பிப்ரவரி 7-ம் தேதி வழக்கு பதிவுசெய்தாலும், விவேகானந்தனின் செல்வாக்கு காரணமாக அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாதம் ஒரு சொத்து டார்கெட்... பண்ணை வீடு... நீச்சல் குளம்... கோடிகளில் கொழிக்கும் சார்பதிவாளர்கள்!

மூன்றாவதாகச் சிக்கியிருக்கும் சார்பதிவாளர் செல்வசுந்தரி. பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக பிப்ரவரி 7-ம் தேதி இவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்த நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரைப் பற்றி விசாரித்தபோது, ‘‘லஞ்சக் குற்றச்சாட்டு மட்டுமல்ல... சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 12.3.2015 முதல் 1.8.2017 வரை செல்வசுந்தரி பணியாற்றியபோது, பதிவுத்துறைத் தலைவரின் முன் அனுமதி இல்லாமல் தனது பெயரில் உயில் சாசனமாகச் சொத்து ஒன்றைப் பதிவுசெய்துள்ளார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, சட்டத்துக்குப் புறம்பாக அங்கீகரிக்கப்படாத 48 காலிமனைகளைப் பல்வேறு நபர்களுக்குப் பதிவுசெய்து கொடுத்திருக்கிறார்.

நான்காவதாகச் சிக்கியிருப்பது, தாம்பரம் சார்பதிவாளர் வெங்கடசுப்பிரமணியன். இவர்மீது பிப்ரவரி 14-ம் தேதி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வெங்கடசுப்பிரமணியன் உட்பட எட்டுப் பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். வனத்துறைக்குச் சொந்தமான இடங்களை விதிகளை மீறிப் பதிவுசெய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகவும் வெங்கடசுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு உள்ளது. இவரது பின்னணியில், பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் பணியாற்றும் ஏழுமலையான் பெயர்கொண்ட அதிகாரி ஒருவர் இருக்கிறார் என்கிறார்கள்.

இவர்களைத் தவிர, கடந்தகாலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கும் சார்பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்கள், உதவி பதிவுத்துறை தலைவர்களின் பட்டியல் மிக நீளம். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 2021-ம் ஆண்டு 22 வழக்குகளும், 2020-ம் ஆண்டு 28 வழக்குகளும் பதிவுசெய்திருக்கிறார்கள். சிலர்மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் போலி ஆவணங்களைப் பதிவுசெய்தது தொடர்பாக 18,000 புகார்கள் பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு வந்திருக்கின்றன.

மாதம் ஒரு சொத்து... அதிகாரிகள் டார்கெட்!

மேற்கண்ட விவகாரம் பற்றி பதிவுத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் கிறுகிறுக்க வைக்கின்றன... ``தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், நெல்லை, திருச்சி, வேலூர் என ஒன்பது பதிவுத்துறை மண்டல அலுவலகங்கள் உள்ளன. 50 மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களும், 575 சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்படுகின்றன. பதிவுத்துறையைப் பொறுத்தவரை அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்து ஊழலில் ஈடுபடுவது காலம் காலமாக நடந்துவருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 84 சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதைவைத்தே இந்த விவகாரத்தின் வீரியத்தை அறிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் அதிக பதிவுகள் நடக்கும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்ற மேலிடத்து சிபாரிசு, பணபலம் தேவை.

கிட்டத்தட்ட ஏலம்விடாத குறையாக நடக்கும் இந்தப் போட்டியில் கோடிகளைக் கொட்டி டிரான்ஸ்ஃபர் வாங்கிவரும் சார்பதிவாளர்கள், ஒருசில மாதங்களிலேயே போட்ட முதலை எடுக்கும் வகையில் கொள்ளையடிக்கிறார்கள். தமிழகத்தில் பத்திரப்பதிவு அதிகம் நடக்கும் டாப் 50 சார்பதிவாளர் அலுவலகங்களில், முதல் 14 இடங்கள் சென்னை மண்டலத்தில் உள்ளன. குன்றத்தூர், சைதாப்பேட்டை, நீலாங்கரை, விருகம்பாக்கம், சேலையூர், கூடுவாஞ்சேரி, அம்பத்தூர், செங்குன்றம், வில்லிவாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், மாதவரம் ஆகியவையே அந்த 14 அலுவலகங்கள்.

இங்கெல்லாம் பணியாற்ற ஐந்து கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது. ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் ‘எம்’-க்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லியே ஒரு தொகையை வசூலிக்கிறார்கள். தமிழகத்தில் பணக்கார அரசியல்வாதிகள்கூட இவ்வளவு சொகுசு வாழ்க்கை வாழ்வார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், பல சார்பதிவாளர்கள் ஈ.சி.ஆரில் பங்களா, பண்ணை வீடு, நீச்சல் குளம், வெளிநாடுகளில் முதலீடு என்று ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள். மாதம் ஒரு சொத்தையாவது வாங்கிப்போட்டுவிட வேண்டும் என்பதே இவர்களில் பலரது டார்கெட்டாக உள்ளது” என்றவர்கள் கடந்த சில ஆண்டுகளில் நடந்த முக்கியமான சம்பவங்களையும் விவரித்தார்கள்...

மூர்த்தி
மூர்த்தி

வழக்கு பதிவுகளெல்லாம் கண்துடைப்பா?

“2019, அக்டோபர் 24 அன்று அம்பத்தூர் மாவட்டப் பதிவாளராகப் பணியாற்றிய மகேஷ் என்பவரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் வராத நான்கு லட்சத்து 68 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, பதிவுத்துறையில் செயல்படும் விஜிலென்ஸ் பிரிவிலேயே மகேஷுக்கு உதவி பதிவுத்துறைத் தலைவராக பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதுதான் விநோதத்திலும் விநோதம்!

ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ‘முத்தான’ நபர் குற்றச்சாட்டில் சிக்கியபோதிலும், அவர் பதவி உயர்வு பெற்று தென்மாவட்டத்தில் பணியாற்றிவருகிறார். ஆறுமுகநவராஜ் என்பவர் நீலாங்கரையில் சார்பதிவாளராகப் பணியாற்றியபோது அவர்மீது 21.12.2018 அன்று போலி ஆவணப்பதிவு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்தது. ஆனாலும், ‘வளம் கொழிக்கும்’ கூடுவாஞ்சேரி பகுதிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு அங்கு பணியில் நீடிக்கிறார் ஆறுமுகநவராஜ்.

இதேபோல பள்ளிக்கரணையில் சதுப்பு நிலங்களை விதிமுறைகளை மீறிப் பதிவுசெய்த பெண் அதிகாரி ஒருவர்மீது துறைரீதியான புகார்கள் நிலுவையில் உள்ளபோதும், கூடுதல் பதிவுத்துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார். காஞ்சிபுரத்தில் சார்பதிவாளராக இருந்த ஒருவர், தன்னுடைய எல்லையைத் தாண்டி, சொத்துகளை அதிக அளவில் பதிவுசெய்த குற்றத்துக்காக 2019-ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர், ஓய்வுபெற்ற சார்பதிவாளர் ஒருவரின் துணையோடு செயல்பட்டுவருகிறார். அந்த ஓய்வுபெற்ற அதிகாரியின் சொத்து மதிப்பு மட்டும் 500 கோடி ரூபாயைத் தாண்டும். அத்துடன், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 10 ஏக்கரில் தொழிற்சாலையையும் அவர் நடத்திவருகிறார். விஜிலென்ஸ் அதிகாரிகளின் தயவு இவருக்கு இருப்பதால் இவரை நெருங்க முடியவில்லை.

சென்னையில் பணியாற்றும் ஏழுமலையானின் பெயரைக்கொண்ட அதிகாரி ஒருவரின் சொத்து மதிப்பு மட்டும் 100 கோடியைத் தாண்டும். தென் மாவட்டங்களிலுள்ள சார்பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்களைக் கையில் வைத்திருக்கும் இவரது ரூட்டே தனி. பிரச்னைக்குரிய பத்திரப்பதிவுகள் குறித்துத் தகவல் கிடைத்தால், உடனடியாகத் தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை அங்கு டெபுடேஷனில் பணிக்கு அனுப்பி, பதிவுசெய்து கொடுத்துவிடுவார். இதற்காக, அந்த அலுவலகத்திலுள்ள சார்பதிவாளரை விடுமுறையில் அனுப்புவது அல்லது வேறு இடத்துக்கு இடம் மாற்றுவது என லாபி செய்வதில் இவர் கில்லாடி.

சென்னை மண்டலத்தைப் பொறுத்தவரை தென் சென்னை மாவட்டக் கட்டுப்பாட்டிலுள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வசூல் மழை கொட்டுகிறது. இங்கு ஏ.ஐ.ஜி-யாகப் பணியாற்றிய ரவீந்திரநாத் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தென் சென்னையில் மீனாகுமாரி பதவியேற்றார். 2021-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் மீனாகுமாரி மீது வழக்கு பதிவுசெய்தனர். இதற்கிடையே மீண்டும் அதே பணியிடத்துக்கு வருவதற்காக அவரை போலீஸில் சிக்கவைத்ததே முன்னாள் அதிகாரி ஒருவர்தான் என்கிறார்கள்.

மாதம் ஒரு சொத்து டார்கெட்... பண்ணை வீடு... நீச்சல் குளம்... கோடிகளில் கொழிக்கும் சார்பதிவாளர்கள்!

சேலையூரில் சார்பதிவாளராக ஜார்ஜ் என்பவர் பணியாற்றியபோது, லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் 5.5.2020-ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்தார்கள். தற்போது ஜார்ஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் மாதவரத்தில் ரயில்வே இடத்தைப் பதிவுசெய்த குற்றச்சாட்டிலும் சிக்கியவர். ஆலந்தூரில் சார்பதிவாளராகப் பணியாற்றிய ஜெயபிரகாஷ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்ததாக 12.10.2021 அன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். சைதாப்பேட்டையில் மாவட்டப் பதிவாளராக 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை பணியாற்றிய சிவப்பிரியா மீது போலி ஆவணங்கள், அரசு ஆவணங்களை மாற்றுவது, அரசு இடங்களைப் பதிவுசெய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. குன்றத்தூரில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தின் ஆவணங்களை மாற்றியது தொடர்பாகவும் 2019-ம் ஆண்டு வழக்கு உள்ளது. திருவான்மியூரில் 350 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆள்மாறாட்டம் மூலம் பதிவுசெய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் விஜிலென்ஸில் வழக்கு உள்ளது. 2012-ம் ஆண்டு செம்மஞ்சேரியில் ஒன்பது ஏக்கர் அரசு இடத்துக்கு போலி பட்டா தயார் செய்த விவகாரத்திலும் இவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சிவப்பிரியாவைக் கைதுசெய்தார்கள். அதன் பிறகு, அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளில் சிவப்பிரியா சிக்கியதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போதும்கூட பதிவுத்துறையின் பல அலுவலகங்களில் சிவப்பிரியாவின் ஆதிக்கம் மிக அதிகம்.

கோவையில் அரசுக்குச் செலுத்தவேண்டிய கட்டணத்தொகையை தங்களின் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீது இதுவரை பதிவுத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களைக் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர் ஒருவர் ‘நல்ல’படியாக காப்பாற்றிவருகிறார். தற்போது பதிவுத்துறையில் உயர் பதவியிலிருக்கும் ‘ஒளிமயமான’ பெண் அதிகாரி ஒருவர் போரூரிலுள்ள நிறுவனத்துக்குச் சாதகமாகச் செயல்பட்டு அரசுக்கு மூன்றே கால் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல அம்பத்தூர் பாடி பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு முக்கிய உயரதிகாரி எடுத்த சாதகமான முடிவால், அரசுக்கு ஆறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பதிவுத்துறையில் நடக்கும் ஊழல்களையும் அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தையும் கட்டுப்படுத்தினாலே தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும்’’ என்று அவர்கள் விவரித்தபோது உண்மையிலேயே கிறுகிறுத்துப்போனது!

மேற்கண்ட புகார்கள் குறித்து, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் கேட்டோம்... அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், ‘‘என்னங்க பண்றது... சிலரைத் திருத்தவே முடியலை. அதனாலதான் புகார் கிடைச்சு, அது உறுதியானவுடனேயே அவங்க மேல உடனடி நடவடிக்கை எடுக்குறோம். யார், யார் என்னென்ன தவறுகள் செஞ்சுருக்காங்கன்னு எனக்குத் தகவல் சொல்லுங்க. விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றார். இதையடுத்து நமக்குக் கிடைத்த தகவலின்படி முறைகேட்டில் ஈடுபட்டுவரும் அதிகாரிகளின் விவரங்களை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறோம்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை வாங்கும் ஊழல் அதிகாரிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும்!