அரசியல்
அலசல்
Published:Updated:

வீடு பராமரிப்புக்கு ரூ.70 லட்சம்... திரைச்சீலைக்கு ரூ.1.5 லட்சம்...

என்.எல்.சி
பிரீமியம் ஸ்டோரி
News
என்.எல்.சி

என்.எல்.சி-யில் கிளம்பும் முறைகேடு புகார்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அமைந்திருக்கிறது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி (நெய்வேலி நிலக்கரி நிறுவனம்) இங்கு தலைமைப் பொது மேலாளராகப் பணியாற்றிவரும் சி.துரைக்கண்ணு, மனிதவளத்துறை இயக்குநரான விக்கிரமன்மீது பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த மே மாதம், 6 மற்றும் 13-ம் தேதிகளில் துரைக்கண்ணு அனுப்பியிருக்கும் புகார் கடிதங்களில் கூறப்பட்டிருப்பது இதுதான்...

விக்கிரமன் - துரைக்கண்ணு
விக்கிரமன் - துரைக்கண்ணு

‘‘விக்கிரமன் பொறுப்புக்கு வந்ததிலிருந்து முறைகேடாகப் பல்வேறு பணி நியமனங்களைச் செய்துவருகிறார். ஒவ்வொரு பணி நியமனத்துக்கும் 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாகப் பெறுகிறார். குறிப்பாக நிறுவனத்தில் தலைமை மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது என்.எல்.சி அல்லது அதேபோன்ற அரசின் பிற பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்கள் இவ்வளவு தொகையை கொடுக்க முன்வர மாட்டார்கள் என்பதால், சிறிய தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்தப் பதவிகளை நிரப்பிவருகிறார்.

அவர் தங்கியிருக்கும் என்.எல்.சி குடியிருப்புக்கு விதிகளை மீறி 70 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார். ஜப்பான், டோக்கியோ உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தப் பயணம் மேற்கொண்ட இவர், அப்போது பயன்படுத்திய செல்போன் பில்லுக்கான கட்டணத் தொகையாக 1.3 லட்சம் ரூபாயை நிறுவனத்தின் கணக்கில் சேர்த்திருக்கிறார். நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், அவரது பணிக்காலத்தில் ஒரு முறைதான் வீட்டுக்குத் திரைச்சீலைகள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவர் 10 மாதங்களுக்குள் இரண்டு குடியிருப்புகளை மாற்றி, அதற்காக 1.5 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்’’ என்று நீள்கிறது புகார்ப் பட்டியல்.

வீடு பராமரிப்புக்கு ரூ.70 லட்சம்... திரைச்சீலைக்கு ரூ.1.5 லட்சம்...

இது குறித்துப் பேச துரைக்கண்ணுவைத் தொடர்பு கொண்டபோது, ‘‘விக்கிரமன் குறித்து சி.பி.ஐ மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்குப் புகார் அனுப்பியிருப்பது உண்மைதான். ஆனால், இப்போதைக்கு அது குறித்து எதுவும் பேச முடியாது’’ என்றார்.

விக்கிரமனிடம் பேசியபோது, ‘‘துரைக்கண்ணு கூறும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை கிடையாது. காழ்ப்புணர்ச்சியுடன் குற்றம் சுமத்துவதும், நிர்வாக இயக்குநர்கள் அனைவரிடமும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்வதும்தான் அவரது வேலை. கடந்த காலங்களில் சக தொழிலாளிகள்மீதும், நிர்வாகத்துக்கு எதிராகவும், நீதிமன்றத்தில் அவர் தொடுத்த பல வழக்குகளில் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வந்திருக்கிறது. இப்போதுகூட அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றுதான் இப்படியெல்லாம் அவதூறு கிளப்புகிறார். அவரது அனைத்துப் புகார்களையும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம்” என்றார்.

என்.எல்.சி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘பூனைக்கு யாராவது மணிகட்ட வேண்டுமல்லவா?’’ என்கிறார்கள்.

‘‘இந்த விவகாரத்தில் உடனே சி.பி.ஐ தலையிட்டு, வலுவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான பாலகிருஷ்ணன் அறிக்கைவிட்டிருப்பதால், நெய்வேலி தகிக்கிறது.