Published:Updated:

மதுரை ஆவின்: தி.மு.க-வுக்கு துண்டுபோடும் ஊழல் நிர்வாகிகள்!

சென்னை ஆவினுக்கு ஆறு டன் வெண்ணெய் கொண்டுபோனதாக பில் போட்டிருக்கிறார்கள். ஆனால், அது சென்னை ஆவினுக்குப் போகவேயில்லை.

பிரீமியம் ஸ்டோரி

மதுரை ஆவினில் புதுப்புது ஊழல் முறைகேடுகள் வெடித்துக் கிளம்புவது வாடிக்கை. இந்தநிலையில், கடந்த ஆண்டில் மட்டும் 13.71 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்குக் காரணமான ஐந்து அலுவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அனைவரையும் அதிரவைத்துள்ளது.

மதுரை ஆவினில் கடந்த சில ஆண்டுகளாகவே பால் கொள்முதலில் முறைகேடு, பால் வாகனங்களில் முறைகேடு, விதிகளை மீறி தலைவர் தேர்வு, பணம் வாங்கிக்கொண்டு பணி நியமனம், விற்பனையில் மோசடி... எனப் புகார்கள் வரிசைகட்டுகின்றன. பெண் தொழிலாளர்கள் கொடுத்த புகாரில் அ.தி.மு.க தொழிற்சங்க நிர்வாகிகள் பாண்டி, பரமானந்தம் ஆகியோர்மீது நடவடிக்கை எடுத்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரை ஆவின் பொது மேலாளர் ஜெயஸ்ரீ மாற்றப்பட்டார். கடந்த ஆண்டு பொறுப்பேற்ற ஜனனி சவுந்தர்யா, நேர்மையானவராகத் தன்னைக் காட்டிக்கொண்ட நிலையில், அவர்மீதும் புகார்கள் எழுந்தன. ஜனனி சவுந்தர்யாவால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உற்பத்திப் பிரிவு மேலாளர் புகழேந்தி தற்கொலை செய்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த மாதம் அவர் இடமாறுதலில் சென்றுவிட்டார். இவர் பொறுப்பிலிருந்த ஓராண்டு காலத்தில்தான், 13.71 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஆவின் அலுவலர் ஒருவரிடம் பேசினோம். ‘‘மதுரை ஆவினில் சமீபத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி நிர்வாக இயக்குநர் நந்தகோபாலுக்கு ஆவின் ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் புகார் அனுப்பினார்கள். இதையடுத்து சென்னை ஆவின் துணைப் பதிவாளர் அலெக்ஸ் தலைமையிலான அலுவலர்கள் விசாரணை செய்ததில், உற்பத்தி மற்றும் விற்பனையில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மதுரை ஆவின்: தி.மு.க-வுக்கு துண்டுபோடும் ஊழல் நிர்வாகிகள்!

சென்னை ஆவினுக்கு ஆறு டன் வெண்ணெய் கொண்டுபோனதாக பில் போட்டிருக்கிறார்கள். ஆனால், அது சென்னை ஆவினுக்குப் போகவேயில்லை. தனியார் நிறுவனங்களுக்கு நெய் விற்பனை செய்ததாக நூற்றுக்கணக்கில் பில் போட்டு, 3 கோடி ரூபாய் மதிப்பிலான நெய் வெளியே அனுப்பப்பட்டு, பின்பு அந்த ஆர்டர்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளன. கேன்சல் செய்யப்பட்ட நெய் திரும்ப வரவில்லை. அதை டெக்னிக்காக மறைத்திருக்கிறார்கள். லட்டு தயாரிக்கும் பணிக்கு திருப்பதி கோயில் நிர்வாகத்தினர் நெய்க்கு ஆர்டர் கொடுத்ததிலும் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். திருப்பதிக்கு 1.10 கோடி ரூபாய்க்கு நெய் அனுப்பிவிட்டு அந்தத் தொகையைக் கணக்கில் காட்டவில்லை.

கடந்த ஆண்டு உற்பத்திப் பிரிவில் 130 டன் வெண்ணெய் குறைந்ததாகக் குற்றம்சாட்டி மேனேஜர் புகழேந்தியை ஜனனி சவுந்தர்யா சஸ்பெண்ட் செய்தார். அந்த மனஉளைச்சலில் புகழேந்தி தற்கொலை செய்துகொண்டார். 5 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த வெண்ணெய், வேறு நபர்களால் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த முறைகேடுகளின் அடிப்படையில் உதவிப் பொது மேலாளர்கள் கிருஷ்ணன், சேகர், மேலாளர்கள் மணிகண்டன், வினிதா, மாயக்கண்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டி ருக்கிறார்கள். வெளிவந்த முறைகேடுகள் மிகவும் குறைவு. 100 கோடி ரூபாய்க்கு மேல் உண்மையில் முறைகேடுகள் நடந்திருக்கும்.

இது மட்டுமல்ல... மதுரை ஆவின் ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் நடந்த ரூ.7.92 கோடி முறைகேட்டு தொகையை இன்னும் ரெகவர் செய்யவில்லை. அதில், குற்றம்சாட்டி வழக்கு பதிவுசெய்யப்பட்ட அ.தி.மு.க-வைச் சேர்ந்த பாண்டி, பரமானந்தம் ஆகியோர் தற்போது தி.மு.க-வில் சேர முயன்றுவருகிறார்கள்’’ என்றார்.

ஆவினில் நடைபெறும் முறைகேடுகளை எதிர்த்து பல வழக்குகளைத் தாக்கல் செய்த ஓய்வுபெற்ற ஆவின் தி.மு.க தொழிற்சங்க நிர்வாகி மானகிரி கணேசன், ‘‘இப்போது அதிகாரிகள் விசாரணை செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல முறைகேடுகள் நடந்திருப்பதை வெளியே கொண்டுவரவும், ஆவினை லாபமாக நடத்தவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனி விசாரணைக்குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை முதல்வரிடம் வலியுறுத்திவருகிறோம்’’ என்றவரிடம், ‘‘மதுரை ஆவினில் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள பாண்டி, பரமானந்தம் ஆகியோர் தற்போது தி.மு.க-வில் சேர்ந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?’’ என்றோம். ‘‘இவர்களாகப் போய் மாநகரச் செயலாளர் கோ.தளபதிக்குத் துண்டு போட்டுவிட்டு நாங்களும் தி.மு.க என்று எல்லோரிடமும் சொல்லிவருகிறார்கள். அவர்களைக் கட்சியில் சேர்க்கவில்லை’’ என்றார்.

மானகிரி கணேசன், நந்தகோபால்
மானகிரி கணேசன், நந்தகோபால்

ஆவின் நிர்வாக இயக்குநர் நந்தகோபாலிடம் பேசினோம். ‘‘புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதில் நடந்த முறைகேடுகள் பற்றி அரசின் மற்ற துறைகளும் விசாரணை நடத்தும். மதுரை ஆவின் பொது மேலாளராக இருந்த ஜனனி சவுந்தர்யா மீது விசாரணை நடத்தும் அதிகாரம் எனக்கில்லை. அரசு அவரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். ஆவின் பற்றி எந்தவிதமான புகார் வந்தாலும் விசாரிக்கப்படும். தமிழகத்திலுள்ள அனைத்து ஆவினிலுமுள்ள முறைகேடுகளும் களையப்படும்’’ என்றார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜனனி சவுந்தர்யாவிடம் பேச முயன்றபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கும் பதிலளிக்கவில்லை.

விரைவில் ஆவினில் நடந்த முறைகேடுகள், அந்தத் துறையின் அமைச்சர், பணியாற்றிய நிர்வாக இயக்குநர்கள், பொது மேலாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று செய்திகள் பரபரப்பதால், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு