Published:Updated:

வக்பு வாரியத்தில் ரூ.2,000 கோடி ஊழல்? - விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

வக்பு வாரியம்
பிரீமியம் ஸ்டோரி
வக்பு வாரியம்

‘இது வக்பு சொத்து அல்ல’ என்று என்.ஓ.சி கொடுத்தும் லட்சக்கணக்கில் கல்லாகட்டுகிறார்கள்.

வக்பு வாரியத்தில் ரூ.2,000 கோடி ஊழல்? - விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

‘இது வக்பு சொத்து அல்ல’ என்று என்.ஓ.சி கொடுத்தும் லட்சக்கணக்கில் கல்லாகட்டுகிறார்கள்.

Published:Updated:
வக்பு வாரியம்
பிரீமியம் ஸ்டோரி
வக்பு வாரியம்

வக்பு வாரியச் சொத்துகளை முறைகேடாகக் கைமாற்றி, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இதன் பின்னணியை விசாரித்தால் நடைபெற்றிருக்கும் முறைகேடுகள் ஒவ்வொன்றும் கிறுகிறுக்கவைக்கின்றன!

இஸ்லாமிய மக்கள் நலன் சார்ந்து மன்னர்கள், தனிநபர்கள் எனப் பலரும் தானமாக வழங்கிய சொத்துகள் தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. பள்ளிவாசல்கள், தர்காக்கள், அறக்கட்டளைகள், பள்ளிகள், கல்லூரிகள், நிலங்கள், வணிகக் கட்டடங்கள் இதில் அடக்கம். இந்தச் சொத்துகளை நிர்வகிப்பதில்தான் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் வக்பு வாரியப் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் அஜ்மல்கான்.

வக்பு வாரியத்தில் ரூ.2,000 கோடி ஊழல்? - விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் சொத்துகள் பற்றியும், அவற்றில் நடைபெற்ற முறைகேடுகளையும் நம்மிடம் விவரித்தார் அஜ்மல்கான்... “மன்னர்கள், தனவந்தர்கள், மார்க்க சிந்தனையுள்ள குடும்பத்தினர் என மூன்று வகைகளில் தானமாகக் கொடுக்கப்பட்ட பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து அறப்பணிகள் செய்வதைக் கண்காணிக்கத்தான் வக்பு வாரியம் உருவாக்கப்பட்டு, இதற்காக 1954-ம் ஆண்டில் வக்பு சட்டமும் இயற்றப்பட்டது.

அஜ்மல்கான்
அஜ்மல்கான்

வக்பு வாரிய சொத்துகளைக் கண்காணிப் பதற்காக சி.இ.ஓ தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், பண்ருட்டி, சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி என 12 மண்டலக் கண்காணிப்பாளர்களுடன், ஆய்வாளர்களும் செயல்பட்டுவருகிறார்கள். ஆனால், இங்கிருந்துதான் முறைகேடுகளே தொடங்குகின்றன. வக்பு வாரியத்தின் பல்வேறு சொத்துகள் வெளி நபர்களாலும், அதிகாரம் மிக்கவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு ஆவணங்களும் மாற்றப்பட்டுள்ளன. அதைக் கண்காணிக்கவேண்டிய அதிகாரிகளில் பலரும் மோசடியில் ஈடுபடுகிறார்கள். முன்பெல்லாம் இது தொடர்பான புகார்களை கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் முறையிட்டுத்தான் நடவடிக்கை எடுக்க முடியும். 2006-ல் அன்றைய முதல்வர் கருணாநிதிதான் வக்பு வாரிய சி.இ.ஓ-வுக்கே இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கினார். ஆனால், அந்த சி.இ.ஓ-க்களே முறைகேடுகளில் ஈடுபட ஆரம்பித்ததுதான் கொடுமை. தவிர, இந்த அதிகாரிகள் நினைத்தால், வக்புவில் இணைந்திருக்கும் பள்ளிவாசல், தர்கா நிர்வாகிகளை ஏதாவது புகாரைக் கிளப்பி மாற்றிவிட முடியும். அதனால், அவர்களும் அதிகாரிகள் செய்யும் முறைகேடுகளை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள்.

அதிகாரிகள் சிலர், தங்களுக்கு வேண்டப்பட்ட ஆட்களை நிர்வாகிகளாகப் போட்டுக்கொண்டு, அவர்கள் மூலமாக சில பள்ளிவாசல், தர்கா சொத்துகளைத் தனிநபர்களுக்கு லீஸுக்கு விட்டு, கோடிக்கணக்கான ரூபாயைக் கணக்கில் காட்டாமல் சுருட்டியிருக்கிறார்கள். ‘இது வக்பு சொத்து அல்ல’ என்று என்.ஓ.சி கொடுத்தும் லட்சக்கணக்கில் கல்லாகட்டுகிறார்கள். கள்ளக்குறிச்சியிலும் பல்லாவரத்திலும் இப்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கைமாற்றப்பட்டுள்ளன. வாரியத்தில் உறுப்பினராக இருக்கும் வழக்கறிஞர் கான் என்பவரும் இதற்குக் காரணமாக இருக்கிறார்” என்றவர், சில முறைகேடுகளைத் தரவுகளுடன் பட்டியலிட்டார்.

வக்பு வாரியத்தில் ரூ.2,000 கோடி ஊழல்? - விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

* கடலூர் மாவட்டம், செல்லஞ்சேரியில் 114/7, 116/4, 61/2 ஆகிய சர்வே எண்கொண்ட சொத்துகளை கண்காணிப்பாளர் ஒருவரின் உறவினர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். ‘அந்தச் சொத்துகள் வக்புக்கு சொந்தமானவை இல்லை’ என்று முறைகேடாக என்.ஓ.சி வழங்கப்பட்டிருக்கிறது.

* படப்பை அருகே சாலைமங்கலத்தில் கபர்ஸ்தான் இருந்தது. அதன் ஆவணத்தை மாற்றி பெட்ரோல் பங்க் வைக்க அந்த நிலம் வழங்கப்பட்டிருக்கிறது.

* சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் பள்ளிவாசல் வசமிருந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிரவுண்ட் நிலமும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.

* செஞ்சியில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான நிலம், மெட்ரிக் ஸ்கூல் நடத்துவதற்காக ஒரு நபருக்கு 30 ஆண்டுகளுக்கு லீஸுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் உதாரணங்கள்தான்... தமிழகம் முழுவதும் நடந்துள்ள பல முறைகேடுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். பல்வேறு ஊர்களுக்கும் சென்று கள ஆய்வு செய்தே மேற்கண்ட ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறேன். கடைசியாக இப்போது நீதிமன்றத்தின் மீது நம்பிக்கைவைத்துக் காத்திருக்கிறேன்” என்றார்.

அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான்
செஞ்சி மஸ்தான்
செஞ்சி மஸ்தான்

இவர் தொடர்ந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கிருபானந்தம், “வக்பு சொத்துகளை அவ்வப்போது ஆய்வு செய்து முறையாகப் பராமரிக்க வேண்டும். முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி சொத்துகளை மீட்கவும், இழப்பீட்டை வசூலிக்கவும் சி.இ.ஓ-வுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளவில்லை. பல்வேறு காலகட்டங்களில் வக்பு வாரியத்தில் உறுப்பினராக, ஊழியர்களாக இருந்தவர்கள் கூட்டுச் சேர்ந்து சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு என்.ஓ.சி வழங்கி, விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை எனப் பலருக்கும் என் கட்சிக்காரர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் பிறகே வழக்கு தொடர்ந்தோம். தமிழக அரசு ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றார்.

இந்தப் புகார்களுக்கு என்ன பதில் சொல்கிறார் வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான்? “வக்பு வாரியத்தில் முறைகேடு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கிலும் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்கும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசியல், அதிகாரத் தலையீடு இல்லாமல் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சில நாள்களுக்கு முன்பு, புகார்களின் அடிப்படையில் மூத்த கண்காணிப்பாளர் ஒருவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம்’’ என்றார்.

சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானோ, “வக்பு வாரிய அதிகாரிகள் பற்றி வரும் அனைத்துப் புகார்களையும் விசாரித்துவருகிறோம். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. நீங்கள் சொன்ன அனைத்தையும் ஃபாலோ செய்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

கிருபானந்தம்
கிருபானந்தம்
அன்வர்தீன்
அன்வர்தீன்

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அன்வர்தீனிடம் பேசியபோது, “மற்ற அதிகாரிகளையெல்லாம் விட்டுவிட்டு என்மீது மட்டும் திட்டமிட்டுப் பழி போடுகிறார்கள். இந்தப் புகார்களெல்லாம் ஏற்கெனவே சொல்லப்பட்டு ஆதாரமில்லாமல் முடிந்துபோனவை” என்றார்.

இந்தக் குற்றசாட்டு பற்றி வக்பு வாரிய உறுப்பினர், வழக்கறிஞர் எம்.கே.கானிடம் கேட்டோம். “வழக்கில் கூறப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதும் கண்காணிப்பாளர் அன்வர்தீன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். 2,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக மனுதாரர் கூறியிருப்பது மிகையாக இருக்கலாம். அதேநேரம் தவறுகள் நடந்திருப்பதும் உண்மைதான்” என்றவரிடம், “முறைகேடுகளுக்கு நீங்களும் ஆதரவாக இருப்பதாக வழக்கு தொடர்ந்தவர் சொல்கிறாரே?” என்று கேட்டோம். “தமிழக பார் கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய உறுப்பினராக நான் மட்டுமே தொடர்ந்து இயங்குகிறேன். அது சிலருக்கு பொறாமையை ஏற்படுத்தியிருக்கலாம். மற்றபடி முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே நானும் வலியுறுத்துகிறேன்” என்றார்.