Election bannerElection banner
Published:Updated:

நெல்லை: விளையாட்டாகப் பூச்சிமருந்தைக் குடித்த சிறுவன் பலி! - கதறிய பெற்றோர்

பூச்சிமருந்து - சிறுவன் பலி
பூச்சிமருந்து - சிறுவன் பலி

பள்ளிக்குச் செல்லாததால், சக நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், விளையாட்டாக விஷம் குடித்திருக்கிறான். சிறுவன் மயங்கி விழுந்ததால் நண்பர்கள் ஓடிச் சென்று பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தகவல் அளித்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. கிராமப் பகுதியிலுள்ள சிறுவர், சிறுமியர்கள் நண்பர்களுடன் விளையாடிப் பொழுதைக் கழித்துவருகிறார்கள்.

கொரோனா
கொரோனா

பள்ளிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் விளையாடும் சிறுவர், சிறுமியரைப் பெற்றோர் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.

பாளையங்கோட்டையை அடுத்த முத்தூர் காமராஜர் நகர் பகுதியில் வசிப்பவர், முத்தையா. விவசாயக் கூலி வேலை செய்துவருகிறார். அவரின் மகன் சதீஷ். 12 வயதான சிறுவன் சதீஷ், பாளையங்கோட்டையிலுள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவந்தார்.

Vikatan

கொரோனா ஊரடங்கு காரணமாக சிறுவன் சதீஷுக்கு வகுப்புகள் நடைபெறவில்லை. பெற்றோர் வயல் வேலைக்குச் சென்றுவிடுவதால், சக நண்பர்களுடன் வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தார்.

வயல்வெளியில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடியதுடன், வாய்க்கால் தண்ணீரில் குளித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அப்போது அங்குள்ள வயலில் பூச்சிகள் தாக்குதல் அதிகமிருந்ததால், அவற்றைக் கட்டுப்படுத்த பூச்சிமருந்து வாங்கி வைத்திருந்திருக்கிறார்கள்.

பூச்சிக்கொல்லி மருந்துகள்
பூச்சிக்கொல்லி மருந்துகள்

அது விஷம் என்பது தெரியாத சிறுவன் சதீஷ், அதைக் குடிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அப்போது உடனிருந்த நண்பர்கள் அவனைத் தடுத்திருக்கிறார்கள். ஆனாலும், விளையாட்டாக நினைத்த சிறுவன் சதீஷ், அந்தப் பூச்சிமருந்தைக் குடித்திருக்கிறார்.

விஷமருந்திய சிறுவன் சதீஷ், அங்கேயே வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததால், பயந்துபோன நண்பர்கள், ஊருக்குள் ஓடிச் சென்று நடந்தவற்றைப் பெரியவர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு சென்ற ஊர்க்காரர்கள், சிறுவனை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விஷம் குடித்த சிறுவன் சிகிச்சை பெற்ற அரசு மருத்துவமனை
விஷம் குடித்த சிறுவன் சிகிச்சை பெற்ற அரசு மருத்துவமனை

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் சதீஷ் உயிரிழந்தார். விளையாட்டாக விஷம் அருந்தி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெற்றோரையும் உறவினர்களையும் வேதனை அடையவைத்திருக்கிறது. இதற்கிடையே, `குழந்தைகளைப் பெற்றோர் கூடுதல் கவனத்துடன் கண்காணிப்பதுடன், எது நல்லது எது கெட்டது என்பது குறித்த அறிவை போதிக்க வேண்டும். அத்துடன், பூச்சிக்கொல்லி மருந்துகளை சிறுவர்கள் எளிதில் எடுக்கும் இடத்தில் வைக்கக் கூடாது’ என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு