Published:Updated:

கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த சிறுவன்; 24 மணி நேரப் போராட்டம்! -நண்பருடன் சென்றபோது விபரீதம்

கிருஷ்ணா கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்!
கிருஷ்ணா கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்!

திருவள்ளூர் அருகே, கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்றபோது தவறி தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை  தீயணைப்புத்துறையினர் 24 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் சடலமாக மீட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டையை அடுத்த விநாயகபுரம் பகுதியில் வசித்துவருபவர் முரளிதரன் (53). சென்னை அம்பத்தூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இவரின் மகன் பிரனேஷ் (16), திருநின்றவூர் அருகே தனியார்ப் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்துவந்தார். கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவரும் நிலையில், சிறுவன் பிரனேஷ் நேற்று மாலை தனது பள்ளி நண்பனின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். வேல்சரவணன் என்ற சிறுவனின் வீட்டுக்குச் சென்ற பிரனேஷ், அவரை அழைத்துக்கொண்டு திருவள்ளூரை அடுத்த தொட்டிகளை கிராமத்தில், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தண்ணீர் செல்லும் கிருஷ்ணா கால்வாய் பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த சிறுவன்; 24 மணி நேரப் போராட்டம்! -நண்பருடன் சென்றபோது விபரீதம்

கிருஷ்ணா கால்வாயைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுவன் பிரனேஷ் திடீரென கால் தவறி கால்வாயில் விழுந்திருக்கிறார். நீச்சல் தெரியாத நிலையில், பிரனேஷ் கால்வாயில் பாய்ந்து சென்ற நீரில் தத்தளித்துக் கூச்சலிட்டபடி அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். அதைக் கண்டு உடனிருந்த சிறுவன் வேல்சரவணன் அதிர்ச்சியில் நீச்சல் தெரியாததால் செய்வதறியாமல் அருகிலிருந்தவர்களைக் கத்தி கூச்சலிட்டு உதவிக்கு அழைத்திருக்கிறார்.

அதையடுத்து, அங்கு விரைந்த இளைஞர்கள் சிலர் சிறுவன் பிரனேஷைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், கால்வாயில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் சிறுவன் பிரனேஷ் மூச்சுத்திணறி நீரில் மூழ்கி வேகமாக அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த செவ்வாய்பேட்டை போலீஸார், உடனடியாக திருவூர் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் கிருஷ்ணா கால்வாயில் மிதவைப் படகுகள் மூலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர். ஆனால், பல மணி நேரமாகத் தேடியும் கிடைக்காததால் சிறுவனின் பெற்றோர் கிருஷ்ணா கால்வாய் பகுதியில் கதறி அழுதபடி காத்துக்கிடந்தனர். அதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்கு அனுப்பிவைத்த தீயணைத்துறையினர், தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணா கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்!
கிருஷ்ணா கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்!

நேற்று முன்தினம் மாலை அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் பிரனேஷை தீயணைப்புத்துறையினர் 24 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு நேற்று மாலை சடலமாக மீட்டனர். அவர்களிடமிருந்து உடலைக் கைப்பற்றிய செவ்வாய்பேட்டை போலீஸார், பிரேத பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்கு பதிவு செய்து சிறுவனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பள்ளிச் சிறுவன் கிருஷ்ணா கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு