Published:Updated:

அந்தக் குழந்தையே நாங்கதான் சார்!

அந்தக் குழந்தையே நாங்கதான் சார்!
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தக் குழந்தையே நாங்கதான் சார்!

என்னைய நேரத்துலயே எழுப்பிவிட்ருவாங்க. கிளம்பி நிக்கறதுக்குள்ள ஆட்டோ வந்துரும். நான் ஸ்கூல் போகறதுக்குள்ள ரொம்ப லேட் ஆகிடும்.

பள்ளிக்கு லீவு விடும் பெரிய சைஸ் வருண பகவானாகத்தான் கொரோனாவை முதலில் பார்க்க ஆரம்பித்திருப்பார்கள் குழந்தைகள். ஆனால், எதுவும் ஒரு கட்டத்தில் சலித்துப்போகும் இல்லையா? அப்பாவும் அம்மாவும் தங்கள் வேலைகளில் மூழ்கிவிட, பரணையும் மொபைலையும் எத்தனை மாதங்களுக்குத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கொரோனா மூன்றாம் அலை என்கிறார்கள், டெல்டா, லாம்ப்டா என்றெல்லாம் சொல்கிறார்கள். ‘இதுக்கு பள்ளிக்கூடமே தேவலைடா’ என யோசிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் குழந்தைகள். என்ன சொல்கிறார்கள் தமிழகத்தின் எதிர்காலங்கள்?

ஆர்யா (1-ம் வகுப்பு, கோவை):

என்னைய நேரத்துலயே எழுப்பிவிட்ருவாங்க. கிளம்பி நிக்கறதுக்குள்ள ஆட்டோ வந்துரும். நான் ஸ்கூல் போகறதுக்குள்ள ரொம்ப லேட் ஆகிடும். மிஸ் கிட்ட திட்டு வாங்குவேன். ஈவ்னிங் ஆனனோயும் வீட்டுக்கு வந்து ஹோம்வொர்க் எழுதிட்டு, ரொம்ப டயர்டாகி தூங்கிருவேன். இப்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். ப்ரெண்ட்ஸ்கூட கண்ணாமூச்சி ரே...ரே... ஓடிப் பிடிச்சு விளையாடுவேன். பல்லாங்குழி, தாயக்கட்டைலாம் விளையாடுவேன்.

ராகவி (ஏழாம் வகுப்பு, சென்னை)

ஸ்கூல்ல ஃபிரெண்ட்ஸ் கூட லஞ்ச் எல்லாம் ஷேர் பண்ணி சாப்பிடுவோம். பீ.டி பீரியட் மொத்தமா போச்சு. மியூஸிக் கிளாஸ் இருக்கும். குரூப் பிரேயர் பண்ணுவோம். எல்லாமே மிஸ் பண்றேன். ஸ்கூல்ல சொல்லிக்கொடுக்கறதுதான் நல்லா புரியும். மிஸ்கிட்ட டவுட் எல்லாம் கேட்க முடியும்.

கலை (3-ம் வகுப்பு, சென்னை):

ஸ்கூல்ல ப்ரேயர் அப்போ பாட்டு பாடுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அத ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். எங்க ஸ்கூல்ல ஒரு மரம் இருக்கு, அதுல வீசுற காத்து எனக்குப் பிடிக்கும். பி.டி பீரியட்ல ரொம்ப ஜாலியா, கத பேசி விளையாடுவோம். என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் பாத்து எவ்ளோ நாள் ஆகிருச்சு தெரியுமா... ஸ்கூல் எப்ப திறப்பாங்க?!

தன்வந்த் (7-ம் வகுப்பு, வேலூர்):

ஆன்லைன் க்ளாஸ் மட்டும்தான். ஸ்கூலுக்கே போல. என் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் எப்பயாவது ஒன் டைம்தான் ப்ரெண்ட்ஸைப் பாக்க முடியிது. வீடியோ கால்லதான் டெய்லியும் சாட் பண்றோம். விளையாடக்கூட வெளியில அனுப்பறதில்ல. லைஃப் செம போரிங்கா போகுது. ஸ்கூலோட அட்மாஸ்பியரையும் ரொம்பவும் மிஸ் பண்றேன். சீக்கிரமா ஸ்கூல் திறந்தாதான் நல்லாருக்கும்.

விஸ்வ ஸ்ருதி (11-ம் வகுப்பு, மதுரை):

ஒன்னரை வருஷமா ஸ்கூலுக்குப் போகல. டென்த் பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறோம்னு நினைச்சிட்டிருந்தோம். அந்த ஃபீலை அனுபவிக்க முடியல. இப்பவும் பப்ளிக் எக்ஸாம் நடக்குமான்னு தெரியல. ஆன்லைன் க்ளாஸ் ஆரம்பத்துல நல்லா இருந்தது. இப்ப போரடிக்குது. அதனால ஒரே கன்ப்யூஷனா இருக்குது.

யாழினி (3-ம் வகுப்பு, நெல்லை):

ஸ்கூலுக்குப் போகலேயேன்னு வருத்தமா இருந்தாலும், வீட்டுல் அக்கா கூட விளையாடி ஜாலியா இருக்கேன். ஸ்கூல்ல போயி ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. ஆனால் ஸ்கூல் போனா எழுதச் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. கையெல்லாம் வலிக்கும். வீட்டுல அந்த வலி இல்ல, சந்தோஷமா இருக்கேன்.

சரண்யா தேவி (8-ம் வகுப்பு, நெல்லை)

ஆன்லைன் கிளாஸ், டிவின்னு இருந்தாலும் எங்களுக்குப் படிக்கக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. எப்ப ஸ்கூலுக்குப் போய் டீச்சர்ஸ், ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பார்ப்போம்னு ஆசையா இருக்கு. ஸ்கூல் தொறந்தா எங்க மைண்ட் ப்ரெஷ்ஷா இருக்கும். தனித்தனியா வீட்டுக்குள்ள இருக்கறதால எங்க மனசுக்குக் கஷ்டமாதான் இருக்கு.

அஸ்மிகா (5-ம் வகுப்பு, கன்னியாகுமரி):

ஸ்கூல்ல ஜாலியா இருக்கும். ஏதாவது புதிய சாதனம் கொண்டுபோனா ப்ரெண்ட்ஸ்கிட்ட காட்டலாம், அவங்க கொண்டுவரும் சாதனங்களை என்கிட்ட காட்டுவாங்க. பக்கத்தில இருக்கிறவங்களுக்குப் பட்டப் பெயர் வெச்சுக் கூப்பிடுவோம். இப்ப தனித்தனியா இருக்கறது கஷ்டமா இருக்கு.

தூரிகாஸ்ரீ (5-ம் வகுப்பு, நாகர்கோவில்):

ஸ்கூல்ல ப்ரெண்ட்ஸெல்லாம் பேசுவோம், சண்ட போட்டாலும் சேர்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிடுவோம். அதையெல்லாம் ரொம்ப மிஸ் பண்றோம். வீட்ல இருக்கிறது சுத்தமா யாருக்கும் பிடிக்கல. லாக்டெளன் ஸ்டார்ட்டிங்ல ரொம்ப ஜாலியா இருந்துச்சு. போகப்போக போரடிக்க ஆரம்பிச்சிடுச்சு. ஆன்லைன் கிளாஸ்ல ஸ்டூடன்ஸ் எல்லாம் கேமராவ ஆன் பண்ணி வெச்சிருப்பாங்க, அது தெரியாம பேரன்ட்ஸ் அடிப்பாங்க. ஒரு பையன் பனியன் போட்டுட்டு ஆன்லைன் கிளாஸ்ல இருந்தான், மேம் திட்டினாங்க. அதெல்லாம் பாக்க வேடிக்கையாதான் இருந்தது. இருந்தாலும் கொரோனா முடிஞ்சு ஸ்கூல் திறக்கணும்.

ஸ்வாதிகா ஸ்ரீ (5-ம் வகுப்பு, நாகர்கோவில்):

ஸ்கூல் திறந்திருக்கும்ப நாங்க ராஜா கணக்கில இருந்தோம். இப்ப லாக்டெளன் போட்டதில இருந்து நம்மள குப்ப தட்டச் சொல்லுறாங்க, கழனிபோய் உட்டுட்டு வான்னு சொல்லுறாங்க. அதனால நமக்கு நிறைய இதாவுது. ஆன்லைன் கிளாஸ்ல போன் பாக்கிறதனால கண்ணு வலிக்குது. நைட் தூங்கச்சில கண்ணு எரியுது, ரொம்ப பிரச்னையா இருக்குது. ஸ்கூல் ஓப்பன் ஆகணும்.

அந்தக் குழந்தையே நாங்கதான் சார்!

ஜெயசுதன் (6-ம் வகுப்பு, தூத்துக்குடி):

ரெண்டு வருசமா ஸ்கூல் மூடிக்கிடக்குறதனால அஞ்சாம் கிளாஸ் ப்ரெண்ட்ஸை மிஸ் பண்ணிட்டேன். இப்போ புதுப் பள்ளிக்கூடம், புது கிளாஸ் ரூம். புது ப்ரெண்ட்ஸ். எல்லாத்தையும் மிஸ் பண்றேன். இந்த லாக்டெளன் லீவுல சைக்கிள் ஓட்டிப் பழகிட்டேன். ஆட்டோவுல போகாம, நானே சைக்கிள்ல ஸ்கூலுக்குப் போகப் போறேன். எப்போ ஸ்கூல் தொறப்பாங்கன்னு வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன்.

மித்ரா (6-ம் வகுப்பு, கரூர்):

வீட்டுல ஒரே மூஞ்சிகளைப் பார்த்துப் பார்த்து போர் அடிக்குது. ஸ்கூலுக்கு வெளியே ஒரு பாட்டி பிஸ்கட், நொறுக்குத் தீனியெல்லாம் விப்பாங்க. அதை ஃப்ரெண்ட்ஸோட போய் வாங்கி சாப்பிடும்போது, அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும். ஸ்கூல்ல டெஸ்டுல யாரு நல்லா மார்க் எடுக்கிறாங்களோ, அவங்களுக்கு மிஸ் சாக்லேட் கொடுப்பாங்க. ஆனா, இங்க யாரும் அப்படி சாக்லேட் தர்றதில்லையே.

காயத்ரி (5-ம் வகுப்பு, கன்னியாகுமரி):

ஸ்கூல் போவாதது ஜாலியாத்தான் இருக்கு. காலையில எழும்பி சாப்பிடுவேன், அடுத்தது பொம்மப் படம் பார்ப்பேன், தம்பிகூட விளையாடுவேன். பள்ளிக்கூடத்துக்குப் போனா படிக்கச் சொல்லுவாங்க. இதுன்னா விளையாடிட்டு ஜாலியா இருக்கலாம். இனி நான் காலேஜ் போவும்ப பள்ளிக்கூடம் திறந்தால் போதும்.

சாத்விகா (2-ம் வகுப்பு, ஈரோடு):

ஸ்கூலுக்கு வேன்ல எல்லாம் ஒன்னா ஒக்காந்து ஜாலியா பேசிக்கிட்டே போவோம். சாப்பாடு எல்லாம் ஷேர் பண்ணி சாப்பிடுவோம். ஜாலியா இருக்கும் தெரியுமா! அதையெல்லாம் மிஸ் பண்றேன். மொதல்ல எல்லாம் ஸ்கூலுக்கு எப்படா கலர் டிரஸ் போட்டுக்கிட்டுப் போவோம்னு இருக்கும். இப்ப எப்படா யூனிஃபார்ம் போடுவோம்னு இருக்கு.

ஆஸ்னிக் (8-ம் வகுப்பு, தூத்துக்குடி):

எங்க வீட்டுக்குள்ள செல்போன் டவர் கிடைக்காது. ஆன்லைன் கிளாஸ் நேரத்துல செல்போனை எடுத்துக்கிட்டு பக்கத்து வீட்டு மாடிக்குப் போக வேண்டியதிருக்கு. எத்தனை நாளைக்கு இன்னொரு வீட்டுக்குப் போக முடியும்? நெட் கார்டு போடுறதுக்காகவே நான் உண்டியல்ல சேர்த்து வெச்சிருந்த பணத்தைச் செலவு செஞ்சுட்டேன். இத்தனை நாளு வீட்லயே இருந்தது போதும். ஸ்கூலை எப்போ திறப்பாங்க சார்?

அனந்தராமன் (7-ம் வகுப்பு, தூத்துக்குடி):

எனக்கு ரொம்பப் பிடிச்சதே பி.இ.டி பீரியடுதான். நல்ல ஓடிப் பிடிச்சு விளையாண்டாதான் உடம்பும் மனசும் புத்துணர்ச்சியா இருக்கும். அப்போதான் நல்லாப் படிக்க முடியும். அந்த ஒரு பீரியடுல எல்லாத்தையும் மறந்து விளையாடுவோம். எங்க ஸ்கூல் கிரவுண்டுல கபடி விளையாடுற விதமே தனி. ஸ்கூலையும், ஸ்கூல் கிரவுண்டயும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன்.

தனலெட்சுமி (6-ம் வகுப்பு, தூத்துக்குடி):

ஆன்லைன் கிளாஸ்ல கண்ணு கூசுது. தொடர்ந்து செல்போனயே பார்த்துக்கிட்டிருந்தா என்ன ஆகும்? ஏற்கெனவே நான் கண்ணாடி போட்டிருக்கேன். கிளாஸ் ரூம்ல பாடம் கவனிச்ச மாதிரி வருமா? நான் முதல் பெஞ்சுல உட்கார்ந்திருக்கிறதனால எங்க டீச்சர் என் முகத்தைப் பார்த்துதான் பாடம் நடத்துவாங்க. எல்லார்கிட்டயும் அடிக்கடி கேள்வி கேட்பாங்க. கேள்விக்கு பதில் சொன்னா ‘பேனா’ பிரைஸ் கொடுப்பாங்க. இது எல்லாத்தையுமே மிஸ் பண்றேன்.

மக (5-ம் வகுப்பு, மயிலாடுதுறை):

எங்கயும் போக முடியல, படிக்க முடியல. ஸ்கூல் இருக்கும்போது டீச்சர்ஸ் எல்லாம் நல்லா சொல்லிக் கொடுத்துட்டு இருந்தாங்க. இப்ப வீட்ல தனிமையில் இருக்கறதால எல்லாமே மறந்து போய்ட்டு. எப்படா ஸ்கூல் தொறக்கும்னு இருக்கு. ஸ்கூல் இருக்கிறப்ப கரெக்ட் டயத்துக்கு சாப்பிடறது, விளையாடறது, படிக்கறது எல்லாமே சரியா இருந்தது. வீட்ல சும்மா இருக்கறதால ‘அத செய், இத செய்’னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.

சாம்பவி (6-ம் வகுப்பு, தஞ்சாவூர்):

லாக்டெளனால ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு. தோசை ஊத்த, டீ போட, சுடு தண்ணி வைக்கக் கத்துக்கிட்டேன். இருந்தாலும் ஸ்கூல ரொம்ப மிஸ் பண்றேன். கிளாஸ்ல லெசன் எடுக்கும்போது புரிஞ்சிக்கிற மாதிரி ஆன்லைன் கிளாஸில் புரிஞ்சிக்க முடியல. ஆன்வல் டே, ஸ்போர்ட்ஸ் டே, ப்ரெண்ட்ஸ் எல்லாத்தையும் மிஸ் பண்றேன். முக்கியமா நான் சண்ட போட்ட புள்ளைங்களோட பேசணும்னு தோணுது. ப்ளீஸ், சீக்கிரம் ஸ்கூல ஓப்பன் பண்ணுங்க.

அட்சயா (5-ம் வகுப்பு, தஞ்சாவூர்):

வீட்டுல அம்மாவுக்கு ஹெல்ப் செஞ்சாலும், தங்கச்சி கூட விளையாண்டாலும், டிவி பார்த்தாலும், பார்க்குக்குப் போனாலும் டைமே போக மாட்டேங்குது. ஆன்லைன் கிளாஸ்ல ஒரே இடத்துல உட்கார்ந்திருப்பது பிடிக்கவே இல்ல. வீட்லேயே இருந்து விளையாடியதுல விளையாடவே போரடிச்சிடிச்சு. ஸ்கூல் சீக்கிரம் தொறந்தா நல்லா இருக்கும்.

ஆப்ரஹாம் லிங்கன் (3-ம் வகுப்பு, தஞ்சாவூர்):

லாக்டெளன்ல என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாத்தையும் மறந்து போயிட்டேன். தமிழ் டீச்சர், இங்கிலீஷ் டீச்சர், பி.டி சாரையெல்லாம் பாக்கணும், கிரவுண்டல விளையாடணும். டேபிள்ஸ் மறந்துபோச்சு. இங்கிலீஷ் சுத்தமா மறந்துபோச்சு. சீக்கிரம் ஸ்கூலுக்குப் போகணும்.

ஹர்ஷேந்திரா (9-ம் வகுப்பு, கரூர்):

ஸ்கூலு இருந்தப்ப, காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருச்சு கிளம்புவோம். இப்போ லேட்டா எழுந்திருச்சுட்டு, எழுந்திருச்ச உடனே ஆன்லைன் கிளாஸ்ல உட்காருறமாதிரி இருக்கு. அது நல்லால்ல. ஸ்கூல் ஆரம்பிச்சாங்கன்னா, ரொட்டீன் லைஃபுக்கு வரலாம். கொரோனா இல்லாதப்ப சம்மர் லீவே கொஞ்சம் போரடிக்கும். இப்போ ஒன்றரை வருஷமா லீவு விட்டது கொடுமையா இருக்கு.