Published:Updated:

`நூறு சதவிகிதம் நேர்மை; மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவும்!'- அரசுப்பள்ளியில் அசத்தும் ஆள் இல்லா கடை

திருவையாறு அருகே அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் நேர்மையை விதைக்கும் நோக்கத்தில் ஆள் இல்லா கடை திறந்துள்ளனர்.

ஆள் இல்லா கடை
ஆள் இல்லா கடை

திருவையாறு அருகே அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் நேர்மையை விதைக்கும் நோக்கத்தில் ஆள் இல்லா கடை திறந்துள்ளனர். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு கல்லாபெட்டியில் அவர்களாகவே காசை வைத்துவிட்டுச் செல்கின்றனர். இது நூறு சதவிகிதம் சரியாக இருப்பதாக ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

ஆள் இல்லா கடை
ஆள் இல்லா கடை

திருவையாறு அருகே உள்ள வீரசிங்கம்பேட்டை கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 140 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் நிறைவடைந்ததையொட்டி பள்ளி வளாகத்துக்குள் ஆள் இல்லா கடையை திறந்தனர்.

மாணவர்களுக்குத் தேவையான பேனா, பென்சில், கட்டர், ரப்பர், பேப்பர், மிட்டாய், ஸ்கேல், சாக்லேட், பேப்பர் மற்றும் சிறிய அளவிலான தின்பண்டங்கள் ஆகியவற்றை வைத்துவிடுவர். மற்றும் அந்தந்தப் பொருளின் விலையை துண்டுச் சீட்டில் எழுதியும் வைத்திருக்கின்றனர். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு அதற்குரிய காசை அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ள கல்லாபெட்டியில் வைத்து விட்டுச் செல்கின்றனர்.

ஆள் இல்லா கடை
ஆள் இல்லா கடை

இதுகுறித்து ஆசிரியர் மிசேல்தாஸிடம் பேசினோம். ``சிறிய வயதில் மாணவர்களின் மனதில் எதை விதைக்கிறோமோ அவை ஆழமாகப் பதிந்துவிடும். அதன் அடிப்படையில் நாங்கள் மாணவர்களின் மனதில் நேர்மையையும் அதைப்பற்றிய விழிப்புணர்வையும் விதைக்க நினைத்தோம்.

அதன்படி கடந்த மாதம் கொண்டாடப்பட்ட காந்தி ஜயந்தியை முன்னிட்டு இந்த ஆள் இல்லா கடையைத் திறந்தோம். மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய பொருள்களை நாங்களே வாங்கி வைத்துவிடுவோம். அவர்கள் தேவையானதை எடுத்துக்கொண்டு காசை வைத்துவிட்டுச் செல்கிறார்கள்.

ஆசிரியர்கள்
ஆசிரியர்கள்

பின்னர் சில தினங்கள் கழித்து எவ்வளவு பொருள்கள் எடுக்கப்பட்டிருக்கு என்றும் அதற்குரிய பணம் சரியாக இருக்கிறதா என்றும் கணக்குப் பார்த்தோம். ஒரு பைசா கூட குறையாமல் மிகவும் சரியாக இருந்தது. இது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. இந்தக் கடை திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இந்த வருடம் முழுக்கவும் இதை நடத்த இருக்கிறோம். இதில் எங்க மாணவர்களின் செயல் நூறு சதவிகிதம் நேர்மையாக இருக்கிறது. இதை விதைக்கவே இந்தக் கடையை நடத்துகிறோம். இது எதிர்காலத்தில் நிச்சயம் அவர்களின் வாழ்க்கைக்கு உதவும்'' என்றார்.