அரசியல்
அலசல்
Published:Updated:

கடத்தப்படும் கடல் அட்டைகள்... தடையை நீக்கச் சொல்வது சரியா?

கடல் அட்டைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் அட்டைகள்

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் காணப்படும் ‘ராஜ கடல் அட்டை’ போன்ற வகைகளுக்கு, சர்வதேச அளவில் மவுசு அதிகம்.

தமிழக கடல் மார்க்கமாக மூட்டை மூட்டையாகக் கடல் அட்டைகள் கடத்தப்படுவதும், கைதுகள் நடப்பதும் அடிக்கடி கண்ணில்படும் செய்தியாகிவிட்டது. இந்த நிலையில் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, மத்திய மீன்வளத்துறை அமைச்சரிடம் ‘மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, இந்தியாவில் கடல் அட்டை பிடித்தல் மீதான தடையை நீக்க வேண்டும்’ என்று கோரிக்கை மனு அளித்திருப்பது விவாதமாகியிருக்கிறது!

இது குறித்து மீனவர்கள் சிலரிடம் பேசினோம். “சீனா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற பல வெளிநாடுகளில் தமிழக கடலில் பிடிக்கப்படும் கடல் அட்டைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பல்வேறு மருத்துவ குணம் கொண்டதாகக் கூறப்படும் இந்த கடல் அட்டையைப் பிடிக்க இந்தியாவில் மட்டுமே தடை இருக்கிறது. 2001-ம் ஆண்டுக்கு முன்புவரை முறைப்படி கடல் அட்டையைப் பிடித்துக்கொண்டுதான் இருந்தோம். இப்போது கடல் அட்டை தவறுதலாக எங்களது வலைகளில் சிக்கினால்கூட அபராதம் விதிக்கப்பட்டு, சிறைத் தண்டனைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது” என்றார்கள்.

கடத்தப்படும் கடல் அட்டைகள்... தடையை நீக்கச் சொல்வது சரியா?

இது தொடர்பாகச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உயரதிகாரிகளிடம் பேசியபோது, “மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் காணப்படும் ‘ராஜ கடல் அட்டை’ போன்ற வகைகளுக்கு, சர்வதேச அளவில் மவுசு அதிகம். தற்போது, தடை உத்தரவு காரணமாக இந்தக் கடல் பகுதிகளில் ரகசியமாகப் பிடிக்கப்படும் கடல் அட்டைகள், இலங்கை வழியாகப் பல்வேறு நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன. இதற்கென மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது” என்றனர்.

கடல் அட்டை தடை மற்றும் பின்னணி குறித்து, கடல் சார் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தினிடம் பேசினோம். “சூழலியல் அடிப்படையில், அழியும் நிலையிலுள்ள உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால், கடல் அட்டைகளைப் பிடிப்பவர்களைக் கைதுசெய்து, அதை ஏதோ சாதனை செய்ததுபோலப் பெருமைப்படுபவர்கள் அதே கடலில் கடல் அட்டை பிடிக்கும் அண்டை நாட்டவர்களைத் தடுப்பது கிடையாது. தடையை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல், இந்திய மீனவர்களுக்கு மட்டும் தண்டனை வழங்கி பாரபட்சம் காட்டுவது மிகவும் தவறு. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட மீன்களைப் பிடிக்கவும், வலைகளைப் பயன்படுத்தவும் தடை இருப்பதுபோல, ஆய்வுகளின் அடிப்படையில் கடல் அட்டையின் இனப்பெருக்கக் காலத்தில் அவற்றைப் பிடிக்கத் தடை உத்தரவு பிறப்பிக்கலாம். மேலும், குறிப்பிட்ட காலத்தில் மட்டும் அவற்றைப் பிடிக்க மீனவர்களுக்குத் தகுந்த பயிற்சியும் வழங்கலாம். இதில் சூழலியல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மீனவர்களின் வாழ்வாதாரமும் முக்கியம். அதைக் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம். அதற்கான தகுந்த சட்டங்களை வகுக்கவேண்டியது அரசின் கடமை” என்றார்.

வறீதையா கான்ஸ்தந்தின்
வறீதையா கான்ஸ்தந்தின்

சூழலியல், மீனவர் வாழ்வாதாரம் இரண்டையும் கருத்தில்கொண்டு சரியான முடிவு எடுக்கப்பட வேண்டும்!