Published:Updated:

ஊரெல்லாம் கிட்னி பிரச்னை! - அலுமினிய ஆலை காரணமா? - துயரத்தில் செங்காடு கிராமம்

செங்காடு கிராமம்
பிரீமியம் ஸ்டோரி
செங்காடு கிராமம்

கிராமத்துக்கு சில அடிப்படை வசதிகளை இப்ப கொண்டுவர்றாங்க. நல்ல விஷயம். ஆனா, குடிதண்ணிதான் இங்கே பெரிய பிரச்னையே.

ஊரெல்லாம் கிட்னி பிரச்னை! - அலுமினிய ஆலை காரணமா? - துயரத்தில் செங்காடு கிராமம்

கிராமத்துக்கு சில அடிப்படை வசதிகளை இப்ப கொண்டுவர்றாங்க. நல்ல விஷயம். ஆனா, குடிதண்ணிதான் இங்கே பெரிய பிரச்னையே.

Published:Updated:
செங்காடு கிராமம்
பிரீமியம் ஸ்டோரி
செங்காடு கிராமம்

“ஐயா, ஊர்ல பல பேர் கிட்னி ஃபெயிலியராகி ரொம்பச் சிரமப்படுறாங்க. மருத்துவ வசதிக்குப் பணமில்லை, குடிதண்ணிகூட சரியில்லை. தினமும் செத்துச் செத்துப் பிழைக்கிறோம்... ஏதாச்சும் பண்ணுங்க!”

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி, செங்காடு கிராம ஊராட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தபோது, அந்தக் கிராம மக்கள் முதல்வரிடம் இப்படித்தான் புலம்பித் தீர்த்தார்கள். உடனடி நடவடிக்கைக்கு முதல்வரும் அப்போதே உத்தரவிட்டார். அதிகாரிகளிடம், “நான் மீண்டும் செங்காடு வருவேன். அதற்குள் எல்லாப் பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று கண்டிப்பான குரலில் எச்சரிக்கையும் விடுத்தார். இது நடந்து நான்கு மாதங்களாகிவிட்ட நிலையில், மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டனவா... முதல்வரின் உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தினார்களா... விடை தேடி செங்காடு ஊராட்சிக்குப் பயணித்தோம்.

ஊரெல்லாம் கிட்னி பிரச்னை! - அலுமினிய ஆலை காரணமா? - துயரத்தில் செங்காடு கிராமம்

“பெருசா எந்த மாற்றமும் ஏற்படலை!”

செங்காடு கிராமத்துக்குள் நுழைந்தவுடனேயே குண்டும் குழியுமாக மோசமான ரோடுதான் நம்மை வரவேற்றது. “கிராமத்துக்கு முதலமைச்சர் வரப்போற தகவல் இரண்டு நாளுக்கு முன்னாடிதான் அதிகாரிகளுக்கே சொல்லப்பட்டது. இந்த ரோட்டுல முதலமைச்சரை அழைச்சுட்டு வர முடியாதுன்னு, பக்கத்துல இருக்குற மாந்தோப்பை ஒட்டி அவசர அவசரமா ரோடு போட்டாங்க. ஊருக்குள்ள வராம, அந்த ரோடு வழியாகத்தான் முதலமைச்சரும் வந்தாரு. அப்பகூட, ‘ஊரை ஏன் இவ்வளவு மோசமா வெச்சிருக்கீங்க... அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியிருக்கீங்களா, இல்லையா’னு அதிகாரிங்ககிட்ட அவரே கேட்கற அளவுக்குத்தான் ஊர் நிலைமை இருந்துச்சு. அவர் வந்துபோன பிறகு, கழிவுநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடக்குது. சில இடங்கள்ல சிமென்ட் ரோடு போடுறாங்க. ஊருக்குப் பொதுவான குளத்தைத் தூர்வாரும் பணி நடக்குது. ஆனா, எங்களோட ஆதாரப் பிரச்னைக்குத் தீர்வு வந்தபாடில்லை” என்றார்கள் ஊர் மக்கள்.

நம்மிடம் பேசிய ஜெயப் பிரகாஷ், “கிராமத்துக்கு சில அடிப்படை வசதிகளை இப்ப கொண்டுவர்றாங்க. நல்ல விஷயம். ஆனா, குடிதண்ணிதான் இங்கே பெரிய பிரச்னையே. தண்ணியில அதிகமா உப்பு கலந்திருக்கிறதால, ஊர்ல நிறைய பேர் கிட்னி பாதிப்புக்கு உள்ளாகியிருக்காங்க. சமீபத்துல நடராஜன் என்பவர் கிட்னி பிரச்னையால இறந்தேபோயிட்டார். கடந்த ஏழு வருஷமாத்தான் இந்தப் பிரச்னையை நாங்க அனுபவிக்கிறோம். முதலமைச்சர் வந்தப்போ, அவர்கிட்டயே இதைச் சொன்னோம். அதிகாரிங்களும் விசிட் பண்ணாங்க. ஆனா, பெருசா எந்த மாற்றமும் ஏற்படலை” என்றார்.

ஊரெல்லாம் கிட்னி பிரச்னை! - அலுமினிய ஆலை காரணமா? - துயரத்தில் செங்காடு கிராமம்

“எங்க ஊர் மக்களுக்கு மட்டும் ஏன் கிட்னி பிரச்னை வருது?”

கிட்னி பாதிப்பால் சிகிச்சையிலிருக்கும் சிவகாமியிடம் பேசினோம். “ஊருக்கு வெளியே அலுமினியம் தொழிற்சாலை வந்த பிறகுதான், எங்களுக்கு கிட்னி பாதிப்பு வர ஆரம்பிச்சுது. அந்தத் தொழிற்சாலையோட கழிவுகள் நிலத்தடி நீர்ல கலக்குறதால, உப்போட அளவு தண்ணியில அதிகமாகிடுது. அதைத்தான் நாங்க குடிக்கிறோம். ராத்திரியிலதான் அந்த ஆலையை இயக்குறாங்க. அதனால, ஊரே புகை மண்டலமாகிடுது. புகை துர்நாற்றத்தால மூச்சுவிடக்கூட சிரமமா இருக்கு. என்னை மாதிரி ஊர்ல பல பேர் கிட்னி பிரச்னையால பாதிக்கப்பட்டிருக்காங்க. அதுல நிறைய பேர் 100 நாள் வேலைக்குப் போறவங்கதான். பக்கத்துல ஒரு மருத்துவமனையிலதான் கிட்னி டயாலிசிஸ் பண்ணிக்குறோம். ஒரு முறை சிகிச்சை எடுத்துக்கக் குறைஞ்சது 2,000 ரூபாய் ஆகிடுது. ஒரு மாசத்துக்கு எட்டு முறை பண்ணிக்கணும். மொத்தமாக 16,000 ரூபாய் செலவாகுது. மாசத்துக்கு 7,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்குற குடும்பமெல்லாம் இங்க இருக்குது. அவங்கல்லாம் இந்தச் செலவை எப்படிச் சமாளிப்பாங்க?

முதலமைச்சர் வந்தபோது, இந்தப் பிரச்னையையெல்லாம் சொன்னோம். அதற்குப் பிறகு காஞ்சிபுரம் மருத்துவமனையிலருந்து டாக்டர்ஸ் டீம் வந்தாங்க. ஊருக்கே ரத்தப் பரிசோதனை நடத்தினாங்க. நிறைய பேருக்கு ரத்தத்துல உப்பு அளவு அதிகமா இருந்ததால, மாத்திரை மருந்தெல்லாம் கொடுத்தாங்க. ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில கிட்னி டயாலிசிஸ் பண்ணிக்க ஏற்பாடு பண்ணியிருக்காங்க. ஆனா, அந்த மருத்துவமனைக்கு பஸ்ஸைவிட்டு இறங்கி ஒரு கி.மீ-க்கு மேல நடக்கணும். டயாலிசிஸ் பண்ணிட்டு வரும்போது ரொம்ப டயர்டா ஆகிடும். அதுக்கு பயந்தே யாரும் அங்கே சிகிச்சைக்குப் போறதில்லை. சம்பந்தப்பட்ட அலுமினியம் தொழிற்சாலையையும் ஆய்வு செஞ்சாங்க. அந்தத் தொழிற்சாலையால எந்தப் பிரச்னையும் இல்லைனு ரிப்போர்ட் வந்துடுச்சாம். எதனால எங்க ஊர் மக்களுக்கு மட்டும் கிட்னி பிரச்னை வருதுனு யாருக்கும் தெரியலை. ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்குப் போறதுக்கு வாரத்துக்கு இரண்டு முறை இலவசப் பேருந்து வசதியும், நிதியுதவியும் அரசாங்கம் கொடுத்தா ரொம்ப உதவியா இருக்கும்” என்றார்.

ஜெயப்பிரகாஷ்
ஜெயப்பிரகாஷ்
சிவகாமி
சிவகாமி

கிட்னி பிரச்னையால் மரணமடைந்த நடராஜனின் வீட்டுக்குச் சென்றோம். 47 வயதான அவர் மரணத்தால் நிலைகுலைந்து போயிருக்கிறது அவர் குடும்பம். நம்மிடம் பேசிய நடராஜனின் 18 வயது மகள் திலகவதி, “அப்பா, கிராமக் கோயில் பூசாரியா இருந்தாரு. கிட்னி பிரச்னையால ரொம்ப கஷ்டப்பட்டுட்டார். கடைசியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போனோம். அங்கேயும் அவரைக் காப்பாத்த முடியலை. நான் நல்லா படிப்பேன். இப்ப குடும்ப வறுமையால, படிப்பைத் தொடர முடியலை. பக்கத்துல இருக்குற கம்பெனியிலதான் வேலைக்குச் சேர்ந்திருக்கேன். இனிமேலும், இந்த நிலைமை யாருக்கும் இந்தக் கிராமத்துல ஏற்படக் கூடாது” என்றார் கண்ணீருடன்.

சுற்றிலும் பல கிராமங்கள் இருக்கும் நிலையில், செங்காடு கிராம மக்களுக்கு மட்டும் கிட்னி பிரச்னை ஏற்படுவது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஊர் மக்களின் சந்தேகத்துக்குரிய அலுமினியம் தொழிற்சாலைக்குச் சென்றோம். தொழிற்சாலை பூட்டியே இருந்தது. “ராத்திரியில மட்டும் சின்ன கேட் வழியாக ஆட்கள் உள்ளே போவாங்க. தொழிற்சாலை செயல்பட ஆரம்பிக்கும். பகல்ல பூட்டியேதான் இருக்கும்” என்றார்கள் ஊர் மக்கள்.

பகலில் மூடப்பட்டிருக்கும் ஆலை
பகலில் மூடப்பட்டிருக்கும் ஆலை

இறுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் பேசினோம். “செங்காடு கிராம மக்களுக்காக ஆர்.ஓ வாட்டர் வசதி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் கிட்னி டயாலஸிஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அந்த மக்கள்தான் ஸ்ரீபெரும்புதூர் வர மறுக்கிறார்கள். வாகன வசதி ஏற்படுத்தித் தர முடியுமா என்பதை ஆலோசிக்கிறோம். மற்றபடி, நிலத்தடி நீரை டெஸ்ட் செய்தபோது, அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்தது. செங்காடு கிராம மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ, எல்லா முயற்சிகளையும் அரசு எடுக்கும்” என்றார்.

நடராஜன்
நடராஜன்
ஆர்த்தி
ஆர்த்தி

ஒரு ஊரே கிட்னி பிரச்னையால் சிக்கித் தவிக்கிறது. அதற்கான காரணத்தை அதிகாரிகளால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள். மக்கள் நேரடியாகவே முதல்வரிடம் தங்கள் துயரத்தை முறையிட்டிருக்கிறார்கள். அவரும் வாக்கு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். உடல்ரீதியாக, பொருளாதாரரீதியாகப் பெரும் வலியை அனுபவித்துவரும் செங்காடு மக்களின் பிரச்னைக்கு, அரசு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!