Published:Updated:

சமோசா, பிரியாணியில் பல்லி; உணவுக்காக நாடகமாடிய முதியவர்! - எச்சரித்து அனுப்பிய ரயில்வே அதிகாரிகள்

ராம் பிரசாத்

சுரேந்தர் பால், ரயில் நிலையங்களில் விற்கும் உணவுகளை வாங்கிவிட்டு, தான் வாங்கும் உணவு தரமற்றதாக இருக்கிறது எனப் புகார் கூறியுள்ளார்.

உணவுக்காக நாடகமாடிய முதியவர்
உணவுக்காக நாடகமாடிய முதியவர்

`வெஜிடபுள் பிரியாணியில என்னய்யா பல்லி இருக்கு...' என்று கூறி, 70 வயது முதியவர் ஆந்திர மாநிலம் குண்டக்கல் ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால், எனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, உடனடியாக அவர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது... அவர் எந்த கேன்டீனில் உணவு வாங்கினார் என அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.

பிரியாணி
பிரியாணி

அப்போதுதான், கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம் ஜபல்பூர் ரயில்நிலையத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்ததாகவும், அதுபோன்ற புகாரை தெரிவித்ததாகவும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக ஜபல்பூர் ரயில்நிலைய அதிகாரிகளைத் தொடர்புக்கொண்டு, அந்த முதியவரின் படத்தை அனுப்பும்படி கேட்டுள்ளனர். இதே முதியவர்தான் அந்த ரயில்நிலையத்திலும் தகராறு செய்தது தெரியவந்துள்ளது.

அந்த முதியவர் பெயர் சுரேந்தர் பால் என்பதும் ரயில்வே கேன்டீன்களில் உணவை வாங்கிவிட்டு, தான் வாங்கும் உணவு தரமற்றதாக இருக்கிறது. உணவில் பல்லி விழுந்துள்ளது எனக் கூறி, ரயில்வே அதிகாரிகளிடம் எக்ஸ்ட்ரா உணவு வாங்கி சாப்பிட்டதும், உணவுகளை அந்த முதியவரே வீணாக்கியதும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். அவர், தான் செய்த தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார். குண்டக்கல் ரயில்வே அதிகாரிகள் அந்த முதியவர் பேசுவதை வீடியோவாக எடுத்துள்ளனர்.

சமோசா
சமோசா

``நான் தவறு செய்துவிட்டேன். நான் வயதானவன். நான் மனவளர்ச்சி குன்றியவன். எனக்கு ரத்தப்புற்றுநோய் இருக்கிறது. தயவுசெய்து என்னை வெளியில் செல்ல அனுமதியுங்கள். பஞ்சாபில் நான் இதற்காக சிகிச்சை எடுத்துவருகிறேன்” என்று சுரேந்தர் பால் கூறியுள்ளார். அந்த முதியவருக்கு உண்மையில் புற்றுநோய் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், 'அவரை எச்சரித்து அனுப்பிவிட்டோம்' என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.