Published:Updated:

தடுப்பூசி... ஆர்வம் காட்டாத 60+ வயதுடையோர்... மூத்தவர்கள் முன்னோடிகளாக இருக்க வேண்டாமா?

கொரோனா தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தடுப்பூசி

ஜனவரி 1-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 191 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 163 பேர் 50 வயதுக்கும் அதிகமானோர்.

தடுப்பூசி... ஆர்வம் காட்டாத 60+ வயதுடையோர்... மூத்தவர்கள் முன்னோடிகளாக இருக்க வேண்டாமா?

ஜனவரி 1-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 191 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 163 பேர் 50 வயதுக்கும் அதிகமானோர்.

Published:Updated:
கொரோனா தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தடுப்பூசி

கொரோனா மூன்றாம் அலையில் நாள் ஒன்றுக்கு இந்தியாவில் இரண்டு லட்சத்துக்கு அதிகமானோரும், தமிழகத்தில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் புதிதாகத் தொற்று பாதிப்பு அடைகின்றனர். எண்ணிக்கை அதிகரித்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே இருப்பது நம்பிக்கை தரும் விஷயம். அதேசமயம், ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்படும் நபர்களில் வயதானவர்கள், இணைநோய் உடையவர்கள்... குறிப்பாக, தடுப்பூசி போடாதவர்களே அதிகம். பல்வேறு காரணங்களால் 60 ப்ளஸ் வயதினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போட முடியாமல் திணறிவருகிறது தமிழக அரசு!

தடுப்பூசி... ஆர்வம் காட்டாத 60+ வயதுடையோர்... மூத்தவர்கள் முன்னோடிகளாக இருக்க வேண்டாமா?

தமிழக மருத்துவத்துறை சார்பில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசியும், வாரம் ஒரு முறை தமிழகம் முழுவதும் நடத்தப்படும் சிறப்புத் தடுப்பூசி முகாம்களில் 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. ஜனவரி 17-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 88.71 சதவிகிதம் பேர் (5,13,53,310) முதல் தவணை தடுப்பூசியும், 64.38 சதவிகிதம் பேர் (3,72,72,687) இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்கிறார்கள். ஆனாலும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 16-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 62 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 48 சதவிகிதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்கிறார்கள். தமிழகத்தில் மொத்தமாகத் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்த சதவிகிதம் குறைவுதான்.

ஜனவரி 1-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 191 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 163 பேர் 50 வயதுக்கும் அதிகமானோர். இவர்களிலும் 131 பேர் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தியவர்கள். மீதமுள்ளவர்களும் பெரும்பாலும் இணைநோய் உள்ளவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

60 ப்ளஸ் வயது உடையவர்களுக்குத் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜனிடம் பேசினோம். ``அனைத்துப் பிரிவினருக்கும் தடுப்பூசி மிகவும் அவசியம். குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட் டோருக்குத் தடுப்பூசி மிக மிக அவசியம். ஓர் உதாரணம் சொல்கிறேனே... தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 18 பேர் ஐ.சி.யூ வார்டில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இவர்கள் அனைவருமே 60 ப்ளஸ் வயதுடையவர்கள்தான். அவர்களில் 16 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். மீதமுள்ள இருவரும் தீவிர இணைநோய் பாதிப்பு உடையவர்கள். இந்த 16 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால், இந்த அளவுக்கு நோய் தீவிரமாகி யிருக்காது. வயதானவர்கள் பலரும், ‘நாங்கள் வெளியில் எங்கும் செல்வதில்லை. நாங்கள் ஏன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்?’ என்று சாக்குப்போக்கு சொல்லி தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அது தவறு... அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலம் அவர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. வயதானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தாலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்தான் அவர்களுக்கு எடுத்துக் கூறி தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தடுப்பூசி மட்டுமே அவர்களைத் தொற்றிலிருந்து பாதுகாக்கும்” என்றார் எச்சரிக்கும் தொனியில்.

செல்வ விநாயகம், தேரணி ராஜன்
செல்வ விநாயகம், தேரணி ராஜன்

60 ப்ளஸ் வயதுடையவர் களுக்குத் தடுப்பூசி செலுத்து வதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டோம். ``தமிழகத்தின் கடைக்கோடி கிராமம்வரை பகுதிவாரியாக தடுப்பூசி போடாதவர்களின் பெயர்ப் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட அறிவுறுத்தியிருக்கிறோம். 60 ப்ளஸ் வயதுடையோர் பலரிடமும் எங்கள் மருத்துவப் பணியாளர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும், கெஞ்சிப் பார்த்தும் அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவதில்லை. அவர்களிடம் எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றே புரியவில்லை. தடுப்பூசியின் முக்கியத்துவம் உணர்ந்து அவர்களின் குடும்பத்தினர்தான் அவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்ய வேண்டும்” என்றார்.

“இந்தப் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?” என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியனிடம் கேட்டோம்... ``60 ப்ளஸ் வயதுடையவர்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வர்களின் பெயர்ப் பட்டியல் எடுக்கப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தீவிர மடைந்துள்ளது. அதேசமயம், யாரையும் கட்டாயப்படுத்தி, தடுப்பூசி செலுத்த முடியாது என்பதையும் கவனிக்க வேண்டும். தடுப்பூசியின் நன்மையை எடுத்துக் கூறி அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவேண்டியது அரசின் கடமை. தற்போதுகூட பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு முகாம்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. 60 ப்ளஸ் உடையவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு இளம் வயதினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என்றார் அழுத்தமாக!

வருமுன் காப்பதே நன்று... மூத்தவர்களுக்கு நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism