Published:Updated:

நிலம் நீதி அயோத்தி 4: இந்துக்களின் சர்வதேச புனிதபூமியாகும் அயோத்தி!

அயோத்தி
பிரீமியம் ஸ்டோரி
News
அயோத்தி

270 அடி நீளம் - 140 அடி அகலம் - 128 அடி உயரம் - 5 வாயில்கள் - 24 கதவுகள் - 212 தூண்கள் - ராமர் ரதம்

அயோத்தி காவல் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ராம ஜென்ம பூமி ந்யாஸ். அது என்ன ராம ஜென்ம பூமி ந்யாஸ்?

1990 - நவம்பர், அயோத்தியில் துப்பாக்கிச்சூடு நடந்தது அல்லவா... இந்த விவகாரத்தில் அப்போதைய முதல்வர் ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ், முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று பிரசாரங்கள் பறந்தன. ‘ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்தது சரிதானே’ எனத் தோன்றினாலும், அயோத்தி இந்துக்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை. இந்த அதிருப்தியை முன்வைத்துதான் அங்கு பா.ஜ.க வாக்குவங்கியைப் பெருக்கியது. தொடர்ந்து 1991, ஜூன் 24-ம் தேதி பா.ஜ.க-வின் கல்யாண் சிங் அங்கு முதல்வர் ஆகிறார். உத்தரப்பிரதேசத்தில் முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது பா.ஜ.க.

நிலம் நீதி அயோத்தி 4: இந்துக்களின் சர்வதேச புனிதபூமியாகும் அயோத்தி!

அவரின் ஆட்சிக்காலத்தில்தான் 1992 டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் நடைபெற்றது. அதற்குப் பிறகு 1993-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி விஷ்வ இந்து பரிஷத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் ராம ஜென்ம பூமி ந்யாஸ்.

2010-ம் ஆண்டு சன்னி வஃபு வாரியம், ராம ஜென்ம பூமி ந்யாஸ், நிர்மோகி அகாரா ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் சர்ச்சைக்குரிய நிலத்தைப் பிரித்துக் கொடுத்தது அலகாபாத் நீதிமன்றம். அந்தத் தீர்ப்பை எதிர்த்து ராம ஜென்ம பூமி ந்யாஸால் தொடுக்கப்பட்ட வழக்கில்தான் 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில், `சம்பந்தப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம்’ என்றும், `அதற்கென அரசு சார்பில் அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும்’ என்றும் சொல்லப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத்தின் அங்கமான ராம ஜென்ம பூமி ந்யாஸின் பங்கு அந்த அறக்கட்டளையில் நிச்சயம் இருக்கும் என்பதால், இந்த இடத்தின் முக்கியத்துவம் மேலும் கூடியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘கர்சேவக்புரம்’ என்றழைக்கப் படும் இங்கேயும், கொஞ்சம் தள்ளி இருக்கும் ராம் ஷிவபுரத்திலும் கற்களைச் செதுக்கும் பணிகளும், சிலைகளை உருவாக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. 1993-ம் ஆண்டு முதல் இன்று வரை உலகம் முழுவதுமிருந்தும் செங்கற்கள் உட்பட பல்வேறு வகையான கற்கள் இங்கே குவிந்துவருகின்றன. கட்டப்படவிருக்கும் ராமர் கோயிலுக்கான மாதிரியும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

தயார் நிலையில் தூண்கள் - ரஞ்சித் மண்டல்
தயார் நிலையில் தூண்கள் - ரஞ்சித் மண்டல்

இந்தக் கற்களும் தூண்களும்தான் ராமர் பீடமாகவும் கோயிலாகவும் மாறப்போகின்றன என்பதால், பக்தர்கள் ராம கோஷத்துடன் இவற்றைத் தொட்டு வணங்கிச் செல்கிறார்கள். தீர்ப்புக்குப் பிறகு பக்தர்களின் வருகை இங்கு இரட்டிப்பாகியிருக்கிறது. இந்த இடத்தைச் சுற்றி விஷ்வ இந்து பரிஷத்தின் புகழ்பாடும் ஓவியங்களும் ராமாயணக் கதையின் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிநவீன புனித நகரம்!

அங்கேதான் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் அயோத்தியின் மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா. ‘‘அயோத்தி மட்டுமல்ல... உத்தரப்பிரதேசம் முழுவதுமே சிறு அசம்பாவிதம்கூட நடக்காமல் இருக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் காரணம். அயோத்தியில் ராமர் கோயில் அமைந்தால் ஏராளமான பக்தர்கள் திரள்வார்கள். அதனால் சாலைகள், விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சர்வதேச விமானநிலையமும் இங்கு வரவிருக்கிறது’’ என்றார். அவருடன் வந்த அதிகாரிகளிடம் பேசியதில் மேலும் சில தகவல்கள் கிடைத்தன.

“இந்தியாவிலேயே சிறந்த புனித யாத்திரைத்தலமாக அயோத்தியை உருவாக்குவதுதான் யோகி ஆதித்யநாத்தின் திட்டம். திருப்பதியை விஞ்ச வேண்டும் என்பது இலக்கு. சரயு நதியில் கப்பல் போக்குவரத்து, ஐந்து நட்சத்திர விடுதிகள், தீம் பார்க்குகள், நவீன ரயில்நிலையம் மற்றும் பேருந்துநிலையம் என்று அயோத்தியை அதிநவீன புனித நகரமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2020 ராமநவமி அன்று அயோத்தியிலிருந்து முதல் விமான சேவை தொடங்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பணியாளர்கள் வேலைசெய்தால் இரண்டரை வருடத்தில் ராமர் கோயிலைக் கட்டி முடிக்கலாம். ஆகவே, நீதிமன்றத் தீர்ப்பின்படி அறக்கட்டளை அமைத்து கோயில் கட்டுவதற்கான வேலைகளும் துரிதப்படுத்தப்படும்” என்றார்கள் அதிகாரிகள்.

உலகம் முழுவதுமிருந்தும் குவியும் செங்கற்கள்
உலகம் முழுவதுமிருந்தும் குவியும் செங்கற்கள்

ராமர் கோயிலுக்கான கட்டட வேலைகளைச் செய்ய குஜராத்தைச் சேர்ந்த வாஸ்து மற்றும் கட்டடக்கலை நிபுணர் சந்திரகாந்த் சோம்புரா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், குஜராத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோயிலை வடிவமைத்தவரின் வாரிசு என்கிறார்கள். கோயிலின் மேற்புறம் மற்றும் கீழ்புறத் தளங்களுக்கான கல் வேலைப்பாடுகள் தற்போது நடந்துவருகின்றன. இதுவரை ஒரு லட்சம் கன அடிக்கான வேலைகள் முடிந்துவிட்டன என்கிறார்கள்.

எப்படி அமையவிருக்கிறது ராமர் கோயில்?

மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க 24 கதவுகள். நிருத்ய மண்டபம், ரங் மண்டபம் தனித்தனியாக அமையப்பெறும். கீழ்த்தளத்தில் ராமர் சிலை. மேல்தளத்தில் ‘ராமர் தர்பார்’. கீழ்த்தளத்தில் 106, மேல்தளத்தில் 106 என மொத்தமாக 212 தூண்கள். தூண்கள் ஒவ்வொன்றும் 16 அடி உயரம்கொண்டது. ஒவ்வொரு தூணிலும் 16 சிற்பங்கள். இவை தவிர, பிரமாண்டமான ராமர் ரதம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது ராமர் கோயில். சர்வதேச அளவில் அயோத்தியை இந்துக்களின் புனித பூமியாக்கும் வகையில் இருக்கின்றன இவர்களின் யோசனைகள்.

இவை மட்டுமா... இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராம் ஷிவபுரத்தில் ராமாயண இதிகாசத்தை கற்சிற்பங்களில் கதையாக வடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. 125 ஸ்கிரிப்ட்டுகள். அவை 125 பீடங்களில் தயாராகிவருகின்றன. அங்கு இருக்கும் சிற்பக்கலைஞர் ரஞ்சித் மண்டலிடம் பேசினேன். “2006-ம் ஆண்டிலிருந்து 13 வருடங்களாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதுவரை 40 பீடங்கள் வடிக்கப்பட்டு, வண்ணப்பூச்சு வேலை மட்டும் பாக்கி இருக்கிறது. தீர்ப்பு வந்துவிட்டதால் பணிகளை மேலும் தீவிரமாக்கியிருக்கிறோம்” என்றார்.

சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை!

இன்னொரு பக்கம் வேறுமாதிரியான திட்டங்களும் சொல்லப்படுகின்றன. அயோத்தியைச் சுற்றி ஏராளமான இந்து சாதுக்கள் இருக்கிறார்கள். இவர்களில் காங்கிரஸ், பா.ஜ.க என கட்சி சார்புடையவர்களும் உண்டு; அரசியலுக்கு அப்பாற்பட்டு பக்தியே பிரதானம் என நினைப்பவர்களும் உண்டு. பா.ஜ.க கட்சி சார்புடைய இந்து சாதுக்கள், ‘`2023-ம் ஆண்டுக்குள் ராமர் கோயிலைக் கட்டிவிட வேண்டும்’’ என்கிறார்கள். ``கோயிலைக் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெறும் நாளில், தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகளையும் அயோத்திக்கு அழைத்து மரியாதை செய்யவேண்டும்’’ என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள். 2023-ம் ஆண்டுக்குள் ராமர் கோயிலைக் கட்டி முடித்தால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரம்மாஸ்திரமாக பா.ஜ.க இதைப் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இவர்களுக்குள் மற்றொரு தரப்பினரோ, ‘‘ராமர் கோயில் இந்துக்களின் ஆன்மா; இந்தியாவின் பெருமை. இதை தேர்தல் மற்றும் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது” என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ‘நிர்மோகி அகாரா’ என்னும் சாதுக்கள் அமைப்பினர், ராமர் கோயிலின் மாதிரியை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘நிர்மோகி அகாரா’ என்றால் ‘பற்றற்றக் குழு’ என்று பொருள். இந்தக் குழுவும் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயிலைக் கட்டும் உரிமையைக் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது. உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் அதை நிராகரித்திருந்தது. ‘நிர்மோகி அகாரா’ அமைப்பின் தலைமை சாதுக்களில் ஒருவரான மஹந்த் ராஜா ராமசந்திர ஆச்சார்யா, “இது ஒன்றும் மாடர்ன் காம்ப்ளெக்ஸ் அல்ல. கோயிலுக்கென சில கடமைகள், பிரார்த்தனை முறைகள், மரபுகள் உள்ளன. அவற்றையொட்டியே கோயிலின் மாதிரி முடிவுசெய்யப்பட வேண்டும். கோயிலைக் கட்டுவதற்கான அறக்கட்டளைக் குழுவில் எங்களையும் சேர்க்க வேண்டும். கோயிலின் இறுதி மாதிரியை முடிவுசெய்யும் முன் எங்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்” என்று எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார். இதுமட்டுமல்ல... “ராம ஜென்ம பூமி ந்யாஸ், கோயில் கட்டுவதாகச் சொல்லி பக்தர்களிடம் கடந்த முப்பது வருடங்களாக பணம் வசூல் செய்கிறது. அதன் கணக்கு வழக்குகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்றும் கேட்டிருக்கிறது ‘நிர்மோகி அகாரா’.

நிலம் நீதி அயோத்தி 4: இந்துக்களின் சர்வதேச புனிதபூமியாகும் அயோத்தி!

ஆனால், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரிகளில் ஒருவரான சரத் ஷர்மா, “இதுதான் இறுதி மாடல். இதன் அடிப்படையில்தான் கோயில் கட்டப்படும். முப்பது வருடங்களாக இதற்கான பணிகள் நடைபெறுகின்றன. ஆகமவிதிகளின்படியே கோயில் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை அமித் ஷாவும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அறக்கட்டளையில் இடம்பெற வேண்டும். தேவைப்பட்டால் அதற்கேற்ப விதிகளைக்கூட மாற்றி அமைப்போம்” என்கிறார்.

குஜராத்தின் சோம்நாத் கோயில் கட்டப்பட்டபோது அதற்காக அமைப்பட்ட அறக்கட்டளையில் மத்திய அமைச்சர் கே.கே.முன்ஷி இடம்பெற்றிருந்ததை இதற்கு முன்னுதாரணமாகச் சொல்கிறார்கள். சோம்நாத் கோயிலின் வரலாற்றைப் படித்தபோது பிரதமர் மோடியின் மாஸ்டர் பி்ளான் கண்முன் விரிந்தது!

(களம் தொடரும்)