Published:Updated:

நிலம் நீதி அயோத்தி 6: “மதம் பிடித்தவனுக்கு உள்ளூர் என்ன... வெளியூர் என்ன?”

இஸ்லாமியர்களே அதிகம் அடிவாங்கியிருந்தனர். இந்துக்கள் பலரும் மசூதி இடிபாடுகளில் சிக்கி, காயம்பட்டிருந்தனர்.

பிரீமியம் ஸ்டோரி

‘பாபர் மசூதி இடிப்பின்போது ஃபைஸாபாத் அரசு ஆண்கள் மருத்துவமனை வார்டின் தலைமைச் செவிலியராக இருந்த அகஸ்டின் ஹாபிலைத் தேடிச் சென்றேன்’ என்று கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? பலரிடம் பேசி பெரும்முயற்சிக்குப் பிறகு அவரை போனில் பிடித்தேன். விஷயத்தைச் சொன்னதும் சில நொடிகள் யோசித்தவர், மறுநாள் காலை வரச் சொன்னார். அகஸ்டின் ஹாபில் ஒரு கிறிஸ்துவர். அவரிடம் நேரம் கேட்டு போனில் பேசும்போதே இந்து - முஸ்லிம் பிரச்னை குறித்து அந்தப் பகுதியில் இருக்கும் கிறிஸ்துவர்களின் கருத்து என்னவாக இருக்கும் எனக் கேட்க எண்ணி, அங்கு இருக்கும் தேவாலயம் பற்றி விசாரித்தேன். ஃபைஸாபாத்தில் இருக்கும் சி.என்.ஐ (Church of North India) பற்றிச் சொன்னவர், ``மறுநாள் காலை அங்கே நாம் சந்திக்கலாம்’’ என்றார்.

அகஸ்டின் ஹாபில், ஈஸ்வர் தயாள்
அகஸ்டின் ஹாபில், ஈஸ்வர் தயாள்

`60 கன்ட்’ தேவாலயம் (60 CANNT) என்றழைக்கப்படும் சி.என்.ஐ தேவாலயம் 120 ஆண்டுகள் பழைமையானது. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட அந்தக் கட்டடம் கம்பீரமாகத் தெரிந்தது. தேவாலயத்தின் மதபோதகரின் பெயர் ஈஸ்வர் தயாள். இந்து பெயராக இருந்தது ஆச்சர்யமே. அருகில் உள்ள கோரக்பூரிலிருந்து ஆறு மாதங்களுக்கு முன் இங்கு வந்திருக்கிறார். 1992-ம் ஆண்டில் மசூதி இடிப்பின்போது அவர் கோண்டா மாவட்டத்தில் இருந்தாராம்.

“மசூதி இடிப்பின்போது அயோத்தியில் நடந்தவைகுறித்த ஏராளமான தகவல்கள் கோண்டா மாவட்டம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் வலம்வந்தன. நான் இங்கு வந்த பிறகுதான் தகவல்களில் எவ்வளவு முரண்பாடுகள் என்பதை அறிந்துகொண்டேன்” என்றார்.

கோண்டாவுக்கும் அயோத்திக்கும் உள்ள இடைவெளி வெறும் 50 கிலோமீட்டர்தான். இதற்கே தகவல் முரண்பாடுகள் எனில், இந்தியா முழுமைக்கும்... ஏன் உலகம் முழுமைக்கும் இந்தத் தகவல்கள் எப்படியெல்லாம் பரவியிருக்கும் என நினைத்தபோது ஆயாசமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

வணக்கம் சொன்னபடி வந்தார் அகஸ்டின் ஹாபில். அவரிடம் நேரடியாக 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் பற்றிக் கேட்டேன். நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு பேசத் தொடங்கினார்.

“நான் அப்போது ஃபைஸாபாத் அரசு மருத்துவமனையில் தலைமைச் செவிலியராக இருந்தேன். அன்றைய தினம் திடீரென கூச்சலும் குழப்பமும் மருத்துவமனையைச் சூழ்ந்து கொண்டன. அயோத்தியிலிருந்து 7 அல்லது 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது எங்கள் மருத்துவமனை. ரத்தக் காயங்களுடன் நிறையபேர் இங்கு வந்துகொண்டிருப்பதாக தகவல் வந்தது. எமர்ஜென்சி வார்டு போதாது என, சாதாரண வார்டுகளையும் தீவிர சிகிச்சைக்குத் தயார்செய்தோம். சிறிது நேரத்தில் காயம்பட்டவர்கள் வரத் தொடங்கினர். மசூதி இடிபாடுகளில் பலருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. சிலர் கத்திக்குத்துக் காயங்களுடன் வந்தனர்” என்று அகஸ்டின் சொல்லிக் கொண்டிருந்தபோதே ஈஸ்வர் தயாள் குறுக்கிட்டார்.

‘60 கன்ட்’ தேவாலயம்
‘60 கன்ட்’ தேவாலயம்

“கத்திக்குத்துக் காயங்களுடன் வந்தவர்கள் இஸ்லாமியர்களா?”

“ஆம், இஸ்லாமியர்களே அதிகம் அடிவாங்கியிருந்தனர். இந்துக்கள் பலரும் மசூதி இடிபாடுகளில் சிக்கி, காயம்பட்டிருந்தனர். மருத்துவமனைச் சுவர்களெங்கும் வலியின் கதறல்கள் எதிரொலித்தன. காயம்பட்டவர்கள் வார்டுக்குள் வந்துவிட்டாலும் அவர்கள் மரண பீதியிலிருந்து மீளவில்லை. வெளியே வெறியுடன் பலரும் கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். ஜன்னல் திரைச்சீலையை லேசாக விலக்கி வெளியே பார்த்தோம். காவி உடை அணிந்த ஆட்கள் ஆயுதங்களுடன் இஸ்லாமியர்களைத் தாக்கிக்கொண்டிருந்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கள் மருத்துவமனை ஊழியர்களில் இருவர் இஸ்லாமியர்கள். அவர்களின் ஊர் இங்கிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. எங்கள் வார்டுக்கு வெகு அருகில் கொலைவெறிக் கூச்சல் கேட்டது. மருத்துவமனை வளாகத்துக்குள்ளும் அவர்கள் வந்துவிட்டார்கள். வெளியே எதையோ உடைக்கும் சத்தம் கேட்டது. இங்கே வார்டுக்குள் மயான அமைதி நிலவியது. காயத்தின் வலியால் ஓலமிட்டுக்கொண்டிருந்தவர்கள்கூட, வலியைத் தாங்கிக்கொண்டு பேரமைதிகாத்தனர். நான் மெதுவாகத் திரும்பி இரு இஸ்லாமிய ஊழியர்களைப் பார்த்தேன். அவர்கள் முகத்தில் மரணபீதி அப்பியிருந்தது.

வண்ண மின்விளக்கு ஒளியில் வாரணாசி ரயில்நிலையம்
வண்ண மின்விளக்கு ஒளியில் வாரணாசி ரயில்நிலையம்

அவர்களைப் பார்த்து தைரியமூட்டும் வகையில் என் நெஞ்சில் கை வைத்து, ‘நான் இருக்கிறேன், பார்த்துக்கொள்கிறேன்’ என்பதுபோல் ஆறுதலாகப் புன்னகைத்தேன். ‘சரி’ என்பதுபோல் கவலையுடன் தலை அசைத்தார்கள். அவர்களின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. நான் நிலைமையைச் சமாளிக்கும்பொருட்டு இஸ்லாமிய ஊழியர்களிடம், ‘ஏய்... கிரிதாஸ் பண்டிட், அங்கென்ன வேடிக்கை, 10-ம் நம்பர் பேஷன்ட்டுக்கு சலைன் ஏத்து, ஏய் கிருஷ்ணதாஸ் ஜி... இந்த பேஷன்ட்டுக்கு ரத்தம் வழிகிறது பார்... துடைத்துவிடு’ என்று வேலை வாங்கிக்கொண்டிருந்தேன். நன்றாக நினைவிருக்கிறது... அவர்களின் பெயர் சல்மான் மற்றும் முகமது. அவர்கள் நெஞ்சம் முழுவதும் மரண பயத்தை அடைத்துக்கொண்டு, இந்து சகோதரர்களின் காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தார்கள். என் வாழ்வில் மிக மிக மோசமாக உணர்ந்த தருணங்கள் அவை!” என்றபோது அவர் குரல் கம்மியது.

அவரிடம் நான், “உள்ளூர் ஆட்கள் என்று தெரிந்தும் அடித்துக்கொண்டார்களா?” என்று கேட்டேன்.

நிலம் நீதி அயோத்தி 5: பா.ஜ.க-வின் கோயில் அரசியல்!
நிலம் நீதி அயோத்தி 4: இந்துக்களின் சர்வதேச புனிதபூமியாகும் அயோத்தி!

“மதம் பிடித்தவனுக்கு உள்ளூர் என்ன... வெளியூர் என்ன? சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த உள்ளூர் ஆட்கள் சிலர் வன்முறையில் இறங்கியது உண்மைதான். ஆனாலும், அன்றைய தினம் வன்முறையில் ஈடுபட்டவர்களில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பது அவர்கள் பேசிய பாஷையைவைத்துத் தெரிந்துகொண்டேன். அந்தக் கலவரத்தில் சிலர் என் கண் முன்னாலேயே கொலையுண்டார்கள்” என்றவரிடம், “கிறிஸ்துவர்களும் அன்றைய நாள்களில் பாதிக்கப்பட்டார்களா?” என்று கேட்டேன்.

“அது, டிசம்பர் முதல் வாரம். நாங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தோம். வழக்கமாக வீட்டில் கேக் தயார்செய்து, குடும்பத்துடன் தேவாலயத்துக்குக் கொண்டு வந்து பிரார்த்தனை செய்வோம். ஆனால், ஊரே களேபரத்திலிருக்கும்போது அதற்குச் சாத்தியமில்லாமல்போனது. இரவோடு இரவாக தேவாயலத்தில் கேக்கைக் கொண்டுவந்து வைத்துவிடுவோம். அமைதி திரும்ப, சில வாரங்கள் பிடித்தன. பிறகுதான் தெரிந்தது, அயோத்தியில் நடந்த வன்முறைகளுடன் ஒப்பிட்டால் ஃபைஸாபாத் எவ்வளவோ பரவாயில்லை என்று” என்றவரிடம் தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகுறித்துக் கேட்டேன்.

அந்துலால் யாதவ், நஸ்ரிம் முகம்மது
அந்துலால் யாதவ், நஸ்ரிம் முகம்மது

“தீர்ப்பைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. தீர்ப்புக்குப் பிறகு இங்கே இவ்வளவு அமைதி நிலவுவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் அதே அமைதி பீதியை ஏற்படுத்துகிறது” என்றார் அகஸ்டின். அவரது உடல்மொழியில் பதற்றம் தெரிந்தது.

டுத்து காசிக்குச் சென்றோம்.

ஃபைஸாபாத்திலிருந்து ஐந்து மணி நேர ரயில் பயணத்தில் வாரணாசியை அடைய முடிந்தது. பிரதமர் மோடியின் சொந்த தொகுதி இது. வாரணாசி ரயில்நிலையக் கட்டடம், மின்விளக்கு ஒளியில் மிளிர்ந்தது. நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பிங்க், வயலட் என நொடிக்கு ஒருமுறை அதன் நிறம் மாறியபோது, புதிய ரூபாய் நோட்டுகளின் வண்ணம்தான் நினைவுக்குவந்தது.

காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் அமைந்திருக்கிறது ஞான்வாபி மசூதி. இங்கும் பேனா, செல்போன் உட்பட எதையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லை. மசூதியைச் சுற்றி 30 அடிக்குமேல் உயர்ந்த இரும்புக்கம்பி அமைத்திருக்கிறார்கள். மசூதியின் நுழைவாயிலின் உள்ளே காலடி எடுத்து வைத்ததும் பாய்ந்து வந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

‘மீடியா’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டதும் ஒரு காவலர் வாக்கி டாக்கியை உயிர்ப்பித்தார்.

“ஆல்ஃபா 2... சென்னை மீடியாவிலிருந்து ஒருவர் வந்திருக்கிறார். மசூதிக்குள் சென்று பார்வையிட வேண்டும் என்கிறார். என்ன செய்வது? ஓவர்.”

“தொழுகை நேரம் முடிந்துவிட்டது. மசூதியில் யாரும் இல்லை. அங்கே பார்க்க என்ன இருக்கிறது? திருப்பி அனுப்பிவிடுங்கள். ஓவர்” என்றது வாக்கி டாக்கியின் மறுமுனை.

“வெரி ஸாரி... உங்களை கட்டாயம் அனுமதிக்க முடியாது” என்றவரிடம், “தீர்ப்பால் இந்தக் கெடுபிடியா?” என்று கேட்டேன். “பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இத்தனை வருடங்களாக இங்கே இதுதான் நடைமுறை. அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக் கூடாதல்லவா” என்றார். இங்கேயும் படம்பிடிக்க அனுமதி இல்லை.

ஞான்வாபி மசூதி
ஞான்வாபி மசூதி

அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குச் சென்றோம். நஸ்ரிம் முகம்மது, அந்துலால் யாதவ் இருவரும் ஒன்றாக போஸ்கொடுத்தார்கள். “எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை” என்றார்கள்.

நஸ்ரிம் முகம்மதுவிடம், “நீங்கள் தொழுகைக்குச் செல்வதில் ஏதேனும் சிரமங்கள் இருக்கின்றனவா?” என்று கேட்டேன்.

முகத்தில் கவலை ரேகைகள்... விரக்தியாகச் சிரித்தவர், “சொந்த நாட்டில் இருந்தாலும் நாங்கள் அகதிகள்தான். வேறு எதையும் சொல்வதற்கில்லை. நாங்கள் பரம்பரைப் பரம்பரையாக இங்கே தொழில் செய்துவருகிறோம். எங்கள் வாழ்வாதாரம் அது. அதை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். ஏதோ காலம் தள்ளுகிறோம்” என்றார்.

காசி இந்து (பனாரஸ்) பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ராம்குமார் என்னைத் தொடர்பு கொண்டார்.

(களம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு