Published:Updated:

உலகை இயக்கும் இந்தியர்கள் - 3

ஷாந்தனு நாராயண்
பிரீமியம் ஸ்டோரி
ஷாந்தனு நாராயண்

- ஷாந்தனு நாராயண்

உலகை இயக்கும் இந்தியர்கள் - 3

- ஷாந்தனு நாராயண்

Published:Updated:
ஷாந்தனு நாராயண்
பிரீமியம் ஸ்டோரி
ஷாந்தனு நாராயண்
ஆந்திராவில் ஒரு பழக்கமுண்டு. இன்ஜினீயரிங் படிப்பார்கள். பின், அம்மா செய்து தரும் ஊறுகாயை, நல்ல ஸ்டைலான டிராலி பேகில் பேக் செய்துகொண்டு அமெரிக்கா கிளம்பிவிடுவார்கள். விமான நிலையத்தின் பேகேஜ் கிளைம் ஏரியாவில் பார்த்தால் சில டிராலி பேக்குகளில் எண்ணெய் வழிந்திருக்கும். அப்படியென்றால் அவர்கள் ஹைதராபாத்திலிருந்து வருகிறார்கள் எனப் பொருள். அப்படியொரு எண்ணெய்ப் பிசுக்கான பேக்குடன், 1980களில் அமெரிக்கா வந்த ஒருவரைப் பற்றிய கதைதான் இது. அவர், ஷாந்தனு நாராயண்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இருக்கும் பொதுவான ஒரு விஷயம் எதுவென்றால் பேனர்கள் எனச் சொல்லலாம். எல்லா மொபைலிலும் இருக்கும் விஷயமென்றால் மீம்களைச் சொல்லலாம். இந்த இரண்டுக்கும் முக்கியம் போட்டோஷாப். அந்த மென்பொருள் மட்டுமன்றி, இன்னும் ஏராளமான மென்பொருள்களை உருவாக்கிய அடோப் (Adobe) நிறுவனத்தின் இப்போதைய சி.இ.ஓ ஷாந்தனுதான். ஒரு பேராசிரியை அம்மாவுக்கும் பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றின் முதலாளி அப்பாவுக்கும் இரண்டாம் பிள்ளையான ஷாந்தனு எப்படி உலகை ஆட்டுவிக்கும் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்?

உலகை இயக்கும் இந்தியர்கள் - 3

பத்திரிகையாளர் ஆக வேண்டுமென்பதுதான் ஷாந்தனுவின் சிறு வயது ஆசை. ‘எதுவாக விரும்பினாலும் இன்ஜினீயரிங் படிக்கணும்’ என்பதுதான் அப்போது ஆந்திராவின் அப்பர் மிடில் கிளாஸ் குடும்பங்களின் மனநிலை. அதனால், ஹைதராபாத்தில் இருக்கும் புகழ்பெற்ற உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடித்தார். மாஸ்டர்ஸ் படிக்க அமெரிக்கா சென்றார். நன்றாகப் படித்தார். படிப்பு முடிந்ததும் பெரிய நிறுவனங்களிலிருந்து வேலைகள் வந்தன. ஷாந்தனு சேரவில்லை. அவர் தேர்வு செய்தது Measurex (1986-ல்) என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் வேலையை. இங்கிருந்து தொடங்குகிறது ஷாந்தனுவின் அபாரமான கரியர்.

‘நாம் முதன்முதலில் சேரும் வேலையில் சம்பளத்தை எண்ணக்கூடாது. பணத்தைவிட, நாம் என்ன கற்கிறோம் என்பதே அப்போது முக்கியம். பெருநிறுவனங்களைவிட ஸ்டார்ட் அப்களில் அந்தக் கற்றல் வேகமாக இருக்கும். அதனால்தான் என் முதல் வேலையை ஸ்டார்ட் அப்பிலிருந்து தொடங்கினேன்’ என்கிறார் ஷாந்தனு. இங்கு இன்னொரு ஸ்கூப் நியூஸ் சொல்கிறேன். ஷாந்தனு இண்டர்வியூ என ஒன்றுக்குச் சென்று வேலை கிடைத்தது இங்கு மட்டும்தான். மற்ற வேலைகள் எல்லாம் அவரைத் தேடி வந்தன. அதற்கு முக்கிய காரணமாக, முதல் வேலையிலேயே ஒரு மாஸ்டர் பிளானோடு இறங்கியதைச் சொல்லலாம்.

ஷாந்தனுவுக்கு ஆப்பிள் நிறுவனத்துக்காகப் பணிபுரியும் வாய்ப்பு பின்னர் கிடைத்தது. ஆப்பிள் அவருக்குப் பிடித்த இடமென்பதால் வெறித்தனமாக வேலை பார்த்தார். வேலை செய்யும் விதத்தில் ஸ்மார்ட் வொர்க், ஹார்டு வொர்க் என இரண்டு விஷயங்கள் உண்டு. கடினமாக, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, எதற்கும் நோ சொல்லாமல், இலக்கை நோக்கி ஓட வேண்டுமென்பது ஹார்டு வொர்க். என்ன செய்கிறோமென்ற 100% தெளிவுடன், இலக்கை அடைய எது சிறந்த வழி என்ற தீர்க்கமான திட்டத்துடன் வேலை செய்வது ஸ்மார்ட் வொர்க். ஆப்பிளில் ஷாந்தனு ஸ்மார்ட் வொர்க்கையே ஹார்டு வொர்க் போல செய்தார். அதாவது, எப்போதும் வேலை; அதே நேரம் ஸ்மார்ட்டான வேலை. இது போதாதென்று மாலை நேரக் கல்லூரியில் எம்.பி.ஏ-வும் சேர்ந்தார். ஷாந்தனு பெரிய பிராண்டு ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரி ஆனது உலக்குக்குத்தான் தாமதமாகத் தெரியும். அவருக்கு எப்படியும் ஆகிவிடுவோம் என அவருக்குத் தெரிந்ததால், அதற்கு உதவும் எம்.பி.ஏ படிப்பை முடித்தார்.

கொஞ்சம் பணமும், நிறைய அனுபவமும் சேர்ந்ததும் 1996-ல் ஷாந்தனுவே ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கினார். உலகம், பிலிம் ரோலிலிருந்து டிஜிட்டல் கேமராவுக்கு மாறத்தொடங்கிய காலகட்டம் அது. டிஜிட்டலாகப் படம் கிடைத்தால் அதை எப்படியும் டிஜிட்டலாக எங்கேனும் பகிர விரும்புவார்கள் என்பது அப்போது பலருக்கும் தோன்றிய ஐடியாதான். ஷாந்தனுவுக்கும் தோன்றியது. நல்ல ஐடியாதான்; ஆனால், எக்ஸிக்யூஷனில் எங்கோ தவறு நடந்தது. தவறு நடந்துவிட்டது என்பதை முதலில் உணர்ந்தது ஷாந்தனுதான். உடனே, அதற்கு மூடுவிழா நடத்திவிட்டார். நல்ல தலைவன் என்பவன் தவறே செய்யாதவன் அல்லன்; அது தவறு எனத் தெரிந்ததும் மாற்றிக்கொள்பவன். ஷாந்தனு மாற்றிக்கொண்டார்.

உலகை இயக்கும் இந்தியர்கள் - 3

சொந்த ஸ்டார்ட்-அப்பை மூடியதும் அடோப் நிறுவனத்துக்கு (1998) வேறு ஒரு பிசினஸ் விஷயமாகப் பேசச்சென்றிருந்தார். கவனிக்க - வேலை கேட்டுச் செல்லவில்லை. ஆனால், அப்போதைய அடோபின் சி.இ.ஓ புரூஸ் (Bruce Chizen) ஷாந்தனு சொன்ன விஷயத்தைவிட சொன்ன விதத்தை ரசித்துக்கொண்டிருந்தார். ஷாந்தனுவுக்குள் ஒரு மிகப்பெரிய லீடர் இருப்பதை அவர் உணர்ந்தார். கண்டதும் காதல் வந்து ‘ஐ லவ் யூ’ எனச் சொல்வதைப்போல உடனே, ‘அடோபில் சேரத் தயாரா?’ என ஷாந்தனுவிடம் கேட்டுவிட்டார். சேர்வதென்றால் ஏதோ ஒரு வேலை அல்ல; அடோபின் வைஸ் பிரசிடெண்ட். ‘சரி’யென்றார் ஷாந்தனு. புரூஸ் அப்போது அடோபின் செல்லப்பிள்ளை; நிறுவனத்தின் முக்கியமான மனிதர். வெற்றியாளரும்கூட. அவர் ஒருவரைப் பார்த்து ‘இவன் செம லீடர் மெட்டீரியல்பா’ என நிறுவனத்துக்குள் சேர்த்தது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. ‘எதிர்நீச்சல்’ படத்தை தனுஷ் தயாரித்த கதை தெரியுமில்லையா? சிவகார்த்திகேயனுடனும் ‘3’ படத்தில் தனுஷ் நடித்தபோது ‘சிவாவுக்குள் ஒரு ஹீரோ இருக்கான். அவனை நானே வெளியே கொண்டு வர்றேன். ஒரு நாள் எனக்கு விழும் கைத்தட்டலைவிட சிவாவுக்கு அதிகம் விழும்’ என்றாராம் தனுஷ். சிவாவுக்கு நடந்ததேதான் ஷாந்தனுவுக்கும் நடந்தது.

உலகம் மாறிக்கொண்டேதானிருக்கும். அதற்கு அடோபும் விதிவிலக்கல்ல. தன் மென்பொருள்களை நல்ல விலைக்கு ஒட்டுமொத்தமாக விற்று லாபம் பார்த்து வந்தது அடோப். அதாவது, போட்டோஷாப் வேண்டுமென்றால் ஒரு விலை சொல்வார்கள். தந்துவிட்டால் அடோப் அதை நமக்குக் கொடுத்துவிடும். சில பல தசாப்தங்களாக தங்க முட்டை தந்துவந்த பிசினஸ் மாடல்தான். ஆனால், ஒரு காலக்கட்டத்துக்குப் பின் இது வேலைக்காகவில்லை. டெக்னிக்கல் விஷயத்தில் அடோப் எந்தக் குறையும் வைக்கவில்லை. புதுப்புது அப்டேட்ஸ், புதுப்புது மென்பொருள்கள் என நன்றாகவே வளர்ந்தது. ஆனால், வேறு எங்கோ பிரச்னை. ‘சென்னை சூப்பர் கிங்ஸ் கப்பலில் ஓட்டை விழுந்துவிட்டது’ எனப் புலம்பினாரே தோனி. அப்படி செய்வதறியாமல் நின்றது அடோப். அதன் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டேயிருந்தது. பிரச்னை என்னவெனத் தெரியும்முன்னரே அதை யார் தீர்க்க முடியுமென அடோப் போர்டுக்கு ஒரு ப்ளாஷ் அடித்தது. முன்பிருந்த சி.இ.ஓ தவறவிட்ட வாய்ப்பை அவரால் வந்த ஷாந்தனு சரி செய்வார் என நினைத்தார்கள். அப்போது அடோபின் சீப் ஆப்ரேட்டிங் ஆபீசராக (2005 முதல்)உயர்ந்திருந்தார் ஷாந்தனு. ‘இப்போது, நீங்கள்தான் சி.இ.ஓ’ (2007-ல்) என்றார்கள். சவாலை ஏற்றுக்கொண்டார் ஷாந்தனு. ஒரு நல்ல தலைவனுக்கான அடையாளம், சவாலை ஏற்று அதைச் சமாளிப்பதுதானே?

“ஒரு நிறுவனத்தின் வியாபாரத் திட்டம் அதன் முந்தையகால நற்பெயரைக் காப்பாற்றுவதுதான் என்றால், அது வேலைக்கு ஆகாத திட்டம்” என்றார் ஷாந்தனு. அடோபின் தயாரிப்புகளை அவர் ஒன்றும் செய்யவில்லை. மாறாக, அதை விற்கும் முறையை மாற்ற நினைத்தார். “இனி எங்கள் சாப்ட்வேர்களை பணம் தந்து முழுவதுமாக வாங்க முடியாது. சப்ஸ்க்ரிப்ஷன் முறையில்தான் வாங்க வேண்டும். மேலும், கிளவுட் மூலமாகத்தான் எங்கள் புராடக்ட்களைத் தருவோம்” என்றார் ஷாந்தனு. இந்த முறையில் மென்பொருளை விற்க முன் வந்த முதல் நிறுவனம் அடோப். போதாதா? ‘இது ஆகாது. இது போகாத ஊருக்கு வழி சொல்ற வேலை. ஏற்கெனவே உடைஞ்ச கப்பல்ல இவரு இன்னும் பெருசா ஓட்டை போடுறாரு’ என எட்டுத்திக்கிலிருந்தும் அபாயக் குரல்கள். ஒரு கேப்டனுக்கு எப்போதும் அந்தக் குரல்கள் கேட்பதில்லை. பிரச்னையும் அதற்கு அவரிடமிருக்கும் தீர்வும்தான் அவர்களுக்கு எல்லாமே. ஷாந்தனு கேப்டன். ஆனால் அவருக்கு அடோப் நிறுவனத்தின் ஊழியர்கள் பற்றி கவலை இருந்தது. அவர்கள் குரல்கள் எப்போதும் அவருக்குக் கேட்கும்.

உலகை இயக்கும் இந்தியர்கள் - 3

ஊர் சிரித்தது என்றால் ஊரா சிரிக்கும்? ஊரிலுள்ள மக்கள்தானே? அதுபோல அடோப் என்றால் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள்தான் என்பது ஷாந்தனுக்குத் தெரியும். அவர்களைத் தன் வழிக்கு அழைத்தார். ‘இனி இப்படித்தான்; எல்லாம் மாறியாச்சு’ என்ற மேனேஜ்மென்ட் மொழிகளில் பேசாமல் அவர்களுக்குத் தொடர்ந்து மாற்றங்கள் பற்றியும் அதன் அவசியம் பற்றியும் எடுத்துச் சொன்னார். கே.ஜி.எப் படத்தில் ஒரு மாஸ் வசனம் வரும். ‘உனக்குப் பின்னாடி ஆயிரம் பேர் இருக்காங்கன்ற தைரியம் உனக்கிருந்தா உன்னால ஒரு போர்லதான் ஜெயிக்க முடியும். அதே ஆயிரம் பேருக்கு முன்னாடி நீ இருக்குறேன்ற தைரியம் வந்துச்சுன்னா உலகத்தையே ஜெயிக்கலாம்.’ அடோப் நிறுவனத்தில் அப்போது கே.ஜி.எப் தீம் மியூசிக் ஓடியது. எல்லோருக்கும் ஷாந்தனு மீது நம்பிக்கை வந்தது.

ஷாந்தனு ஒரு குரூர லீடர்தான். எப்போது ஒருவர் கம்பர்ட் ஜோனிலிருந்து வெளியே வருகிறாரோ அப்போதுதான் அவர் அதிசயங்கள் செய்வார் என நம்புகிறவர் ஷாந்தனு. அதனால் என்ன நடந்தாலும் ‘இது போதாது’ என்பார். சேர்க்கவே முடியாத புள்ளிகளை வைத்து அதைச் சேர்ப்பதே அவர்கள் இலக்கு என முடிவு செய்வார் ஷாந்தனு. இந்தப் புள்ளிகளை இணைக்க முடியுமென அவர்கள் நம்பினால் அதில் இன்ஸ்பையர் ஆக என்ன இருக்கிறது என்பது அவர் வாதம். நிர்வாக ரீதியாக அவருடன் வேலை செய்ய பலர் பயந்தார்கள். ஆனால், அவரால் நடந்த நல்லவை அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள வைத்தன.

கிளவுட் மூலம் மென்பொருள் தந்ததால் தங்கள் தயாரிப்புகளை யார் யார், எப்படி எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என அடோபுக்குத் தெரிய வந்தது. அதன்மூலம் தங்கள் சந்தையை விரிவுபடுத்தினார்கள். அதாவது, அதுவரை அடோப் தயாரிப்புகளைப் பயன்படுத்தாதவர்களிடம்கூட அடோப் தங்கள் மென்பொருள்களை விற்க முடிந்தது. ஒரே ஆண்டில் வித்தியாசம் தெரிந்தது. மூழ்கும் கப்பலின் ஓட்டையை அடைத்ததும் கப்பல் நிமிர்ந்தது. ஷாந்தனுவின் அசாத்திய தலைமையின்கீழ், கப்பலுக்குள் நுழைந்திருந்த தண்ணீர் வேகமாக வெளியேற்றப்பட்டது. பின், கப்பல் தொடர்ந்து பயணிக்கத் தயாரானது. முன்பைவிட சாமர்த்தியமான கேப்டன், உழைக்கத் தயாராக ஊழியர்கள், அடுத்து சில தசாப்தங்களுக்குத் தடையற்ற பாதை, பிரச்னையில்லாத கப்பல் என எல்லாமே தெளிவானது. இதோ, அடோப் கப்பல் பிரமாண்டமாக கடலில் சென்று கொண்டிருக்கிறது. அதன் உச்சியிலிருக்கும் அறையில் நின்று இந்தக் கடலில் வேறு என்னவெல்லாம் நடக்கும் என யோசித்துக் கொண்டிருக்கிறார் ஷாந்தனு; கேப்டன் ஷாந்தனு நாராயண்.

- இயக்குவார்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism