
காஷ்மீர் பயங்கரவாதத்தின் மற்றொரு முகம் - மினி தொடர்
தொடர்ந்து பேசினார் காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் பிரபோத் ஜம்வால். ‘‘மக்கள், வீடுகளுக்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகிறார்கள். அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் பணிக்கு வருவதில்லை. முடங்கிக்கிடக்கிறது அரசு நிர்வாகம். மக்களின் அமைதி அச்சமூட்டுகிறது. 2016-ம் ஆண்டில் புர்ஹான் வானி படுகொலை நடந்தபோது, ஆறு மாதங்களாக மக்கள் இதேபோன்று தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். அவர்களை சமாதானப்படுத்தி சகஜநிலைக்குக் கொண்டுவந்தார்கள். அதுபோல்தான் இப்போதும் நடக்கிறது.’’
‘‘இத்தனை நாள்கள் எப்படித் தாக்குப்பிடிக்கிறார்கள். சாப்பாடு, உடை, அத்தியாவசியப் பொருள்கள் தேவைப்படுமே?’’
‘‘காஷ்மீரில் குளிர்காலம் வருவதற்கு முன்பு, அடுத்த சில மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம். தவிர, பரஸ்பரம் உதவி செய்துகொள்வதில் காஷ்மீரி களை விஞ்ச முடியாது. அத்தியாவசியப் பொருள்கள் யாருக்கேனும் தேவை எனத் தெரிந்தால், உடனடியாகக் கொடுத்து உதவுகிறார்கள். எங்கள் மாநில மக்கள் ஏழைகள் அல்லர்; மத்திய, மாநில அரசு இயந்திரங்கள்தான் அவர்களின் சுயநலத்துக்காக எங்களை ஏழைகளாகச் சித்திரிக்கின்றன. உண்மையில், நாங்கள் பொருளாதார ரீதியிலும் தொழில்ரீதியிலும் மனதளவிலும் உயர்ந்தவர்கள். காலம்தான் இதையெல்லாம் புரியவைக்கும்’’ என்று கண்கலங்கினார்.
பயங்கரவாதத்துக்கு ஒரே முகம்தான். அதன் பெயர், பயங்கர வாதம் மட்டுமே. அது இஸ்லாமிய பயங்கரவாதிகளாக இருந்தாலும் சரி... இந்து பயங்கரவாதிகளாக இருந்தாலும் சரி. இரண்டு முகங்களின் ஒரே நோக்கம் அழிவு மட்டுமே. தற்போது காஷ்மீரில் `இஸ்லாமியர் களை ஒடுக்குகிறார்கள்’ என்ற குரல்கள் எழும் அதே சமயம், இந்துக்கள் எப்படியெல்லாம் காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பாதிக்கப் பட்டார்கள் என்றும் குரல்கள் எழுகின்றன. அப்படி சமீபத்தில் எழுந்த குரல், சுனந்தா வசிஷ்ட் என்கிற பத்திரிகையாளருடையது.

உலகளவில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதம் நடத்தும் அமெரிக்க நாடாளு மன்றக் குழுவினர், வாஷிங்டன் னில் நவம்பர் 14 அன்று, காஷ்மீரின் மனித உரிமை மீறல்கள் பற்றியும் விவாதம் நடத்தினர். அதில் பங்கேற்ற சுனந்தா வசிஷ்ட்டின் பேச்சு, சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.
‘‘மறைந்த அமெரிக்க எம்.பி-யான டாம் லேன்டோஸ், 2003-ம் ஆண்டில் ஒரு கருத்தைக் கூறினார். ‘யூதர்களுக்கும் இந்தியர்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கின்றன. இரு பிரிவினருமே மற்றவர்களுடைய உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பு கொடுப்பவர்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், நீதிமன்றத் தீர்வை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள். உலகை ஆட்டிப் படைக்கக்கூடிய இஸ்லாமிய பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்களும் யூதர்களுமே. பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அமெரிக்கப் பத்திரிகையாளர் டேனியல் பேர்லை, இந்த நேரத்தில் நான் நினைத்துப்பார்க்கிறேன். கொல்லப்படுவதற்கு முன் டேனியல் பேர்ல் சொன்ன கடைசி வார்த்தைகள்... ‘என் அப்பா ஒரு யூதர். என் அம்மா ஒரு யூதர். நானும் ஒரு யூதர்’. இப்படிச் சொன்னதும் அவருடைய கழுத்து வெட்டப்பட்டு தனியாக விழுந்தது.
நான் இப்போது சொல்கிறேன்... என் அப்பா ஒரு காஷ்மீரி இந்து. என் அம்மா ஒரு காஷ்மீரி இந்து. நானும் ஒரு காஷ்மீரி இந்து. எங்கள் வீடு, வாழ்க்கை, உடைமைகள் எல்லாமே இஸ்லாமிய பயங்கரவாதத்தால் அழிந்துபோயின. நான் இங்கே துணிச்சலாகப் பேசுகிறேன். ஆனால், எத்தனையோ குரல்கள் பயங்கரவாதி களால் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் சார்பாகவும் என் குரல் ஒலிக்கவேண்டும்.
நான், காஷ்மீரில் சிறுபான்மையாக இருக்கும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவள். இந்தியா இதுவரை காணாத கொடூரமான இன அழிப்பில் அதிர்ஷடவசமாகத் தப்பிப் பிழைத்த இந்து பெண்ணாக நான் இங்கே பேசுகிறேன். லேப் அசிஸ்டென்டாக வேலை செய்துகொண்டிருந்த கிரிஜா என்கிற என் தோழியை, கண்களைக் கட்டிக் கடத்திக் கொண்டு போய் கொடூரமாக பலாத்காரம் செய்தார்கள். ஒரு ரம்பத்தால் அவளை உயிருடன் அறுத்து இரண்டு துண்டுகளாகத் தூக்கியெறிந்தனர்.
இதேபோல் பி.கே.கஞ்சு என்கிற இன்ஜினீயரைத் தேடி பயங்கரவாதிகள் அவருடைய வீட்டுக்குள் புகுந்துவிட்டனர். அரிசி மூட்டைக்கு அருகில் ஒளிந்திருந்த அவரைச் சுட்டுக்கொன்று, ரத்தமும் சதையுமாக இருந்த அரிசியை அவருடைய மனைவியின் வாயில் போட்டனர்.
இப்படி எத்தனையோ பேரின் கொடூரமான முடிவை என்னால் பட்டியலிட முடியும். இஸ்லாமிய பயங்கரவாதம் என்றால் என்னவென்று அமெரிக்காவும் ஐரோப்பாவும் தெரிந்துகொள்வதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இந்தியா அதனால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் நடப்பதுகுறித்து அமெரிக்காவில் விசாரணை நடத்துவதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், எங்கள் உடைமைகளை அழித்துத் துரத்தியபோது இந்த மனித உரிமை அமைப்புகள் எங்கே போயிருந்தன? ‘இந்து பெண்களைத் தவிர, ஆண்கள் அனைவரும் காஷ்மீரைவிட்டு ஓடிவிடுங்கள்’ என்று 1990, ஜனவரி 10-ம் தேதி காஷ்மீரின் சில மசூதிகளில் பயங்கரவாதிகள் பகிரங்க மிரட்டல் வெளியிட்டார்களே... அப்போது இந்த மனித உரிமை காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?
அப்போது காஷ்மீர் இந்துக்களுக்கு மூன்று வாய்ப்புகள் கொடுக்கப் பட்டன. ஒன்று, பெண்களை மட்டும் விட்டுவிட்டு ஆண்கள் போய்விட வேண்டும் அல்லது மொத்தமாக இஸ்லாம் மதத்துக்கு மாறவேண்டும். இரண்டுக்கும் தயாரில்லையென்றால், சாகவேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அந்த மரண எச்சரிக்கை ஒலித்தது. நான்கு லட்சம் இந்துக்கள் இரவோடு இரவாக ஓடிப்போய் தப்பித்தனர். ஓடிப்போக மனமில்லாத வர்களையும், நடக்க முடியாமல் வீட்டில் இருந்தவர்களையும் தேடித் தேடி வெட்டினார்கள். இந்துக்களின் வீடுகளை ஆக்கிரமித்தனர். அதில் எங்கள் வீடும் ஒன்று. காஷ்மீரில் இருந்த இந்துக்களை விரட்டிவிட்டு, அங்கு இருந்த கோயில்களையெல்லாம் இடித்துவிட்டுத்தான் காஷ்மீரை `ஒரு முஸ்லிம் மாநிலம்’ என்று சொல்கிறார்கள்.

இந்துக்கள் மட்டுமல்ல, ஏராளமான சீக்கியர்களும் கொல்லப்பட்டனர். மனித உரிமை, மத உரிமை எனக் குரல்கொடுக்கக்கூடியவர்களைக் கேட்கிறேன்... மனித உரிமைக்கு முதல் எதிரி பயங்கரவாதம்தான் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? மனித உயிரைவிட மேலான மனித உரிமை எதுவுமில்லை. காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதம் இப்போதும் ஒழியவில்லை. பல நாள்களாகப் பூட்டிக் கிடந்த மளிகைக்கடையைத் திறந்ததற்காக குலாம் நபி என்கிற 65 வயது முஸ்லிம் பெரியவரை அநியாயமாகச் சுட்டுக்கொன்றிருக்கின்றனர். ஆப்பிளை எடுக்கச் சென்ற தொழிலாளர்களைக் கொன்றிருக்கின்றனர். மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை எடுத்துக்கொண்டு போன லாரி டிரைவர்களைக் கொன்றுள்ளனர். காஷ்மீர் இயல்பாக இருக்கிறது என்று வெளியுலகத்துக்குத் தெரிந்தால், காஷ்மீர் பற்றி உருவாக்கிவைத்திருக்கும் பிம்பம் உடைந்துவிடும். அதனால்தான், மக்களை வெளியில் வரவிடாமல் செய்துவிட்டு பழியை ராணுவத்தின்மீது போடுகின்றனர்.
காஷ்மீர் சிறப்புப் பிரிவை நீக்கியதற்கு எதிராக இந்தப் போராட்டம் என்று சொல்கின்றனர். உண்மையில், இந்த விதியை நீக்கியதால், காஷ்மீர் மக்களுக்கு உரிமைகள் திரும்பக் கிடைத்துள்ளன. அமெரிக்க அரசியல் சாசனத்தைப் பின்பற்றி உருவாக்கப்பட்டதுதான் இந்திய அரசியல் சாசனம். மக்களுக்கு அளவற்ற சுதந்திரத்தை அது வழங்கியிருக்கிறது. இதுவரை அது காஷ்மீர் மக்களுக்குக் கிடைக்கவில்லை. பிரிவு 370-ஐ நீக்கியிருப்பதால் காஷ்மீர் மக்கள் இதுவரை அனுபவிக்க முடியாத உரிமைகள் அவர்களுக்குக் கிடைத்துள்ளன.
காஷ்மீரில் பெண் குழந்தைகள் கடத்தல், கட்டாயத் திருமணம், விபசாரத்துக்கு விற்பது ஆகியவையெல்லாம் சர்வசாதாரணம். காஷ்மீரில் குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் செல்லாததாக இருந்தது. அதனால், நிறைய குற்றங்கள் நிகழ்ந்தன. இனிமேல் காஷ்மீர் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படாத நாடே கிடையாது. அந்த நாடுகளையும் சேர்த்துதான் சொல்கிறேன். இந்திய அரசு, தன் மக்களுடைய உரிமைகளை மறுப்பதாகச் சொல்வது அபத்தம். உண்மையைச் சொல்வ தென்றால், காஷ்மீரில் பாகிஸ்தான் தூண்டுதலில் நடக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவும் மற்ற நாடுகளும் உதவவேண்டும். யாருமே உதவவில்லை என்றாலும், அதை அடக்கக்கூடிய வலிமை இந்தியாவுக்கு இருக்கிறது. அடக்கவே முடியாத பஞ்சாப் பயங்கரவாதத்தையும் வடகிழக்குப் பிரிவினையையும் ஒடுக்கியது இந்தியாதான்!’’ - காஷ்மீரின் இன்னொரு முகத்தை விவரித்தார் சுனந்தா வசிஷ்ட்.
அலைபேசி அழைத்தது. மறுமுனையில், ஜம்முவைச் சேர்ந்த நிர்தோஷ் உப்பால் பேசினார். சி.பி.ஐ (எம்.எல்) லிபரேஷன் கட்சியின் மாநிலச் செயலாளர் அவர்.
(திரை விலகும்)