Published:Updated:

இரும்புத்திரை காஷ்மீர்! - 8 - பதுங்குக்குழி... பக்கத்தில் பாகிஸ்தான் ராணுவ முகாம்!

இரும்புத்திரை காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
இரும்புத்திரை காஷ்மீர்

எல்லையோர கிராமத்தில் ‘திக்திக்’ நிமிடங்கள் - மினி தொடர்

சலாமாபாத்... உரி அருகேயுள்ள ஒரு சிறு நகரம்.

அங்கே பிரமாண்டமான ஒரு கட்டடத்தில் வர்த்தக மையம் இருக்கிறது. நாங்கள் போனபோது, அதன் வாசலில் பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. காஷ்மீரில் ஸ்ரீநகர் டு முசாஃபராபாத் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி) வழித்தடமும், ஜம்மு பகுதியில் பூஞ்ச் டு ரவலாகோட் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி) வழித்தடமும் வர்த்தகரீதியான பயன்பாட்டுக்கு உரியவை.

இரும்புத்திரை காஷ்மீர்! - 8 - பதுங்குக்குழி... பக்கத்தில் பாகிஸ்தான் ராணுவ முகாம்!

இந்த இரு வழித்தடங்களிலும் 600 வியாபாரிகள் முறைப்படி பதிவு செய்திருக்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் வியாபாரிகள் கூடும் மையம்தான் சலாமாபாத். நம்மூரில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், உலர்கனிகள், வாழைப்பழம் உள்ளிட்ட 21 பொருள்களை சரக்கு லாரியில் ஏற்றி பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார்கள். அதேபோல், பாகிஸ்தானில் விளையும் பொருள்கள் இங்கே வந்து இறங்குகின்றன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, கமான் பாலத்தை மூடிவிட்டார்கள். வர்த்தக மையத்துக்கும் பூட்டுப்போட்டுவிட்டார்கள்.

மையத்துக்கு அருகில் கவலைதோய்ந்த முகத்துடன் சிலர் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம் கமான் முனை மூடப்பட்டது குறித்து கேட்டோம். ‘‘காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டவுடன் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்படும் என்பதால் கமான் முனை மூடப்பட்டது. இரு தரப்பு வாகனப் போக்குவரத்தும் நின்றுவிட்டது. அதனால், வியாபார மையமும் மூடிக்கிடக்கிறது. இதனால் என்னைப்போன்ற விவசாயிகளுக்குத் தான் ஏகப்பட்ட நஷ்டம். விளைபொருள்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை’’ என்றார்கள் அழாதகுறையாக.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சலாமாபாத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் கமான் பாலம் இருக்கிறது. அதைத்தாண்டி, 22 கிலோமீட்டர் தொலைவில் சென்றால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலிருக்கும் முசாஃபராபாத் நகரம் இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் தரப்பு பயங்கரவாதிகளின் முக்கிய இலக்கு எது தெரியுமா?

உரியை ஒட்டியுள்ள ஜீலம் நதியில் உரி 1, உரி 2 என இரண்டு நீர்மின் திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை என்.ஹெச்.பி.சி என்கிற மத்திய அரசு நிறுவனம்தான் இயக்கி வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதல் இலக்குகள் இந்த இரண்டு நீர்மின் உற்பத்தி நிலையங்கள்தான். ஜீலம் நதி இங்கே உற்பத்தியாகி பாகிஸ்தானுக்குள் செல்கிறது. அந்த நதியின் தண்ணீரை இந்தியா தடுத்து நீர்மின் நிலையங்களை ஏற்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டுகிறது பாகிஸ்தான். போர்மேகம் சூழ்ந்தால், இந்த நீர்மின் நிலையங்கள் மீதுதான் பாகிஸ்தான் முதலில் குறிவைக்கும். இதனால், இவற்றின் மொத்த வளாகத்தையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படைப் பிரிவினரிடம் இந்திய அரசு ஒப்படைத்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உரிக்குள் நுழைந்ததும் அங்குள்ள கடைவீதிக்குச் சென்றோம். ரொம்பவும் இயல்பாக இருந்தது கடைவீதி. கடைகள் திறந்திருந்தன. மக்கள் நடமாட்டம் இருந்தது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கான எதிர்ப்பு அலை பெரிதாகத் தெரியவில்லை. அங்கிருந்த ஓர் இளைஞரிடம் பேசினேன். மற்றவர்களைப்போல தீவிரவாதம், ராணுவத்தின்மீதான குற்றச்சாட்டு எதையும் கூறவில்லை அவர். ஆனால், அவர் சொன்னது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் மைய அரசின் காரணிகள்.

‘‘காஷ்மீரில் மொத்தம் எட்டு நீர்மின் உற்பத்தி திட்டங்களை என்.ஹெச்.பி.சி செயல்படுத்துகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சக்தியில் 13 சதவிகிதம் மட்டுமே எங்களுக்குத் தருகின்றனர். மீதியை வடமாநிலங்களுக்குக் கொண்டுசெல்கின்றனர். அதற்கான ராயல்டிகூட எங்களுக்குத் தருவதில்லை. எங்களுடைய மண்ணின் உற்பத்தி செய்யப்படும் நீர்மின்சக்தியை எங்களுக்கே தந்தால் இங்கே தொழிற்சாலைகள் வளரும். நகரங்கள் நவீனமயமாகும். இதனால், எவ்வளவு முன்னேற்றங்கள் தடைபட்டு நிற்கின்றன தெரியுமா?’’ என்றார். மாநிலத்தின் வளர்ச்சிக்கான ஏக்கத்தை அவரின் முகத்தில் பார்க்க முடிந்தது.

உரி கிராமத்துக்குள் நுழையும் இடத்தில் ஒரு ஸ்தூபி எதிர்பட்டது. 2005–ம் ஆண்டில் அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் நிறைய பேர் இறந்து போயிருக்கிறார்கள். அவர்களின் நினைவிடத்தில் ஸ்தூபியை நிறுவியிருக்கின்றனர். முக்கிய நாள்களில் இங்கு வந்து மரியாதை செலுத்திவிட்டுப் போகிறார்கள் உள்ளூர் மக்கள்.

ஊரையும் மலைப்பாதையையும் இணைக்கிறது மரத்தாலான பாலம் ஒன்று. என்.எஸ் (நந்து சிங்) பாலம் என்று அழைக்கிறார்கள். இந்திய ராணுவ வீரரான நந்து சிங் 1947–ம் ஆண்டில் நடந்த போரில் கடுமையாக எதிர்த்தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தினரை நிலைகுலையச் செய்து வீரமரணம் அடைந்திருக்கிறார். அவர் நினைவாக என்.எஸ் பாலம் என்று பெயரை வைத்திருக்கிறார்கள். அந்தப் பாலம் 2005–ம் ஆண்டு நிலநடுக்கத்தில் சேதமடைந்திருக்கிறது. அதனருகே தற்காலிகப் பாலம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதில்தான் வாகனங்கள் போய்வருகின்றன.

உரியைத் தாண்டி கமான் முனையை நோக்கிப் பயணித்தோம். பத்து கிலோமீட்டர் தூரம் கடந்தவுடன் மலைப்பாதை குறுகிக்கொண்டே போனது. கமான் முனைக்கு முன்பாக உரோசா கிராமம் இருந்தது. ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள அழகான கிராமம் அது. அருகில் இருந்த மலைப்பகுதியின் உச்சியிலும் ஒரு கிராமம் தெரிந்தது. அங்கிருந்த ஒரு போலீஸ்காரரிடம் பேசினோம்.

‘‘மலை உச்சியிலிருப்பது ஜப்டா. இந்தியாவின் கடைசி கிராமம். அதையடுத்து பாகிஸ்தான் எல்லை ஆரம்பமாகிறது. அதற்கு அருகிலுள்ள டலாஞ்சா கிராமம்தான் பெரிய கிராமம். சுமார் 1,500 பேர் வாழ்கிறார்கள். சுற்றிலும் ஆறு சிறு கிராமங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியை நானக் போஸ்ட் என்பார்கள். இந்திய ராணுவத்தின் கடைசி பாயின்ட் அதுதான்’’ என்று விளக்கினார்.

உரோசா கிராமத்தில் பிரமாண்ட கேட் கொண்ட ஒரு கட்டடம் தென்பட்டது. அதுதான், ஜம்மு காஷ்மீர் போலீஸின் கடைசி செக்போஸ்ட் பாயின்ட். அங்கே ஒரு போலீஸ் அதிகாரி இருந்தார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், சிரித்து சிரித்துப் பேசினார். எல்லையில் வேலை பார்ப்பதற்கான இறுக்கமோ பதற்றமோ அவரிடம் இல்லை. “இவ்வளவு ஆபத்தான இடத்தில் இவ்வளவு சகஜமாக எப்படி வேலை செய்கிறீர்கள்?’’ என்று கேட்டேவிட்டேன்.

வாய்விட்டு சிரித்தவர், “என்னோடு வாங்க” என்று அழைத்துச் சென்றார். அங்கே கான்கிரீட்டால் உருவாக்கப் பட்ட பதுங்குக்குழி ஒன்று இருந்தது. உள்ளே இறங்கினால் கும்மிருட்டு. தரைப்பகுதியிலிருந்து சுரங்கப்பாதை போல படிக்கட்டுகள் இறங்கின. உள்ளே சென்றோம். ஆழத்துக்குச் சென்றவுடன் மூச்சுவிட சிரமமாக இருந்தது. உள்ளே இருந்தபடி துப்பாக்கியால் சுடுவதற்கு வசதியாக சிறு ஜன்னல்கள் உள்ளன. நமது செக்போஸ்ட்டைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவமோ தீவிரவாதிகளோ தாக்குதல் நடத்தினால், இந்தப் பதுங்குக்குழியில் இருந்து எதிர்தாக்குதல் நடத்துவார்கள். பதுங்குக்குழியிலிருந்து வெளியே வந்தோம்.

இரும்புத்திரை காஷ்மீர்
இரும்புத்திரை காஷ்மீர்

பாகிஸ்தான் ராணுவ முகாம்களுக்கு மிகவும் அருகில் உள்ள பாயின்ட் இது. மலைமுகடுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் முகாமிட்டிருக்கிறார்கள். மலையின் மேல்பகுதியிலிருந்து இந்த செக்போஸ்ட் பாயின்ட்டுக்குள் யார் வந்துபோனாலும் தெளிவாக பைனாகுலரில் பார்க்க முடியுமாம். நாம் பைனாகுலர் இல்லாமலேயே மேல் நோக்கிப்பார்த்தோம். பாகிஸ்தான் ராணுவ டென்ட்கள் நன்றாகவே தெரிந்தன. உள்ளிருந்து துப்பாக்கி முனைகள் நீட்டிக்கொண்டிருந்தன.

அந்த அதிகாரி தொடர்ந்தார்...

‘‘நீங்கள் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் சொல்கிறேன். உயிர் உட்பட எதற்கும் உத்தரவாதம் இல்லை என்கிற மனநிலைக்கு எப்போதோ வந்துவிட்டேன். முற்றும் துறந்த துறவு நிலைக்கு சமம் இது. அதனால், என்னிடம் பதற்றம் இல்லை. இதோ... சில நாள்களுக்கு முன்புகூட இந்தக் கட்டடத்தைக் குறிவைத்து ஷெல் தாக்குதல் நடத்தினார்கள். சத்தம் கேட்டு நாங்கள் இந்தப் பதுங்குக்குழிக்குள் ஒளிந்துகொண்டு எதிர்த்தாக்குதல் நடத்தினோம். நீண்ட நேரத்துக்குப் பிறகு வெளியே வந்து பார்த்தோம். எங்கள் செக்போஸ்ட்டுக்கு மிக அருகில் இரண்டு ஷெல்கள் வெடித்த நிலையில் கிடந்தன’’ என்றார் அவர். சுடச்சுட டீ போட்டுக்கொடுத்தார்கள் அங்கிருந்த போலீஸார். அங்கு பணியாற்றும் போலீஸார் அனைவருமே சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்குதான் அந்த ஏரியா பழக்கம் என்பதால் வேலையில் சேர்வதற்கு முன்னுரிமை தருகிறார்கள்.

இரும்புத்திரை காஷ்மீர்
இரும்புத்திரை காஷ்மீர்

சென்னையிலிருந்து எல்லைப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் வந்திருப்பதை அறிந்த கிராமவாசிகள் சிலர் எங்களைத் தேடி வந்து பேசினர்...

‘‘நீங்க டெல்லிக்குப் போவீங்களா?’’

‘‘நிச்சயமா!’’

‘‘எங்க கிராமத்துக்கு வேறு எந்த வசதி தராவிட்டாலும் பரவாயில்லை. உடனடியாக ஓடி உயிரைப் பாதுகாத்துக்கொள்ள கான்கிரீட் பதுங்குக்குழிகள் வேண்டும். பாகிஸ்தான் எப்போது குண்டு வீசுமோ என்கிற அச்சத்திலேயே வசிக்கிறோம். எங்களை இந்திய ராணுவத்தின் உளவாளிகள் என்று பாகிஸ்தான் ராணுவம் தாக்குகிறது. கால்நடைகள் இறந்துபோகின்றன. அவ்வப்போது ஆட்களும் பலியாகிறார்கள். டெல்லியில் எங்கள் நிலைமையைச் சொல்லுங்கள்” என்றார்கள் கண்ணீருடன்!

உரோசா காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாக இருக்கிறார் சவுகத் உசேன். பணியிலிருந்து ஓய்வுபெற ஆறு மாதங்களே இருக்கின்றனவாம். ‘‘இந்த நாட்டுக்காக இதுவரை உழைத்துவிட்டேன். ஓய்வு பெற்றாலும் என்னுடைய வேலை தொடரும்!’’ - நம்மைப் பார்த்து சிரித்தபடி விடை கொடுத்தார்.

இவர் போன்றவர்கள்தாம் நம் தேசத்தின் காவல் தெய்வங்கள். ஒரு சல்யூட் அடித்துவிட்டு காரில் ஏறினோம்.

(திரை விலகும்)