பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

திறன் பழகு, திறமை மேம்படுத்து! - உலகமயமாக்கல் சந்திக்கும் தடைகள்!

திறன் பழகு, திறமை மேம்படுத்து
பிரீமியம் ஸ்டோரி
News
திறன் பழகு, திறமை மேம்படுத்து

ரீஸ்கில்லிங் பற்றிய தொடர் - 19

லகமயமாக்கல் பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையிலுள்ள ஒன்று. ஆனால், கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்தான் உலக நாடுகள், இது குறித்துத் தீவிரமாகப் பேசிவருகின்றன. இதன் முக்கிய அம்சம், நாடுகளுக்கிடையே பொருள்கள், சேவை, சேவைக்குத் தேவைப்படும் பணியாளர்கள், தொழில்நுட்பங்கள், தகவல்கள் என எல்லாமும் தங்கு தடையில்லாமல் கிடைக்கும் வகையில் ‌வணிகம் நடத்தத் தேவையான சூழலை ஏற்படுத்துவது. இது உலக அளவில் நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் இடையே ஓர் ஆரோக்கியமான‌ போட்டியை ஏற்படுத்தியது.

திறன் பழகு, திறமை மேம்படுத்து
திறன் பழகு, திறமை மேம்படுத்து

இதனால் உலகமயமாக்கலை நிபுணர்கள் இரண்டுவிதமாகப் பார்த்தார்கள். ஒருசாரார், பலம் வாய்ந்த நாடுகள் தங்கள் உற்பத்தியை மற்ற நாடுகளில் திணித்து, தங்கள் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் செய்வதாகக் கூறினார்கள். `இதனால் கிடைக்கும் லாப‌ம் ஒரு சிலரின் கைகளுக்கு மட்டும் போய், சமுதாயத்தில் சமத்துவம் இல்லாமல் செய்துவிடும்’ என்பது அவர்கள் கருத்து.

சென்ற ஆண்டு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் பால் ரோமர், `ஜி.டி.பி-யை மட்டும் அடிப்படியாக வைத்து நாடுகளின் முன்னேற்றத்தை அளப்பதே தவறு’ என்றார். `ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மனிதவள முன்னேற்றத்தில் முதலீடு, கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுத்திறன் ஆகியவைதான் முக்கியம்’ என்றார். அவர் முன்வைக்கும் மற்றொரு வாதம், `வளர்ந்த நாடுகளில் மக்களின் வருமானம் அண்மையில் அதிகம் வளரவில்லை; தனிமனித ஜி.டி.பி-தான் வளர்ந்துவருகிறது’ என்பது.

உலகமயமாக்கலுக்கு ஆதாரவாகப் பேசுகிறவர்கள், `ஒரு வாடிக்கையாளர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்குத் தேவையான, மிகவும் தரமான, அதே நேரத்தில் விலை மலிவான ஒரு பொருள் உலகமயமாக்கல் மூலம் கிடைக்கும்’ என்கிறார்கள்.

மாற்று உலகமயமாக்கல்

உலகப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டபோது பொருள்களுக்கும் சேவைகளுக்கும் தேவை இருந்தது. எனவே, அனைவரும் உலகமயமாக்கலை வரவேற்றனர். இதனால் மக்களுக்கு நன்மையா, இல்லையா என்ற விவாதத்துக்குத் தீர்ப்புச் சொல்வதற்கு முன்னரே பொருளாதாரம் மந்தமடைந்து, அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை (Protectionist Measures) மேற்கொள்ளத் தொடங்கினார்கள். இதை, `மாற்று உலகமயமாக்கல்’ (Deglobalization) என்று அழைக்கலாம். ஐரோப்பிய யூனியனைவிட்டு வெளியேறும் இங்கிலாந்தின் ‘பிரெக்ஸிட்’ (Brexit) முயற்சி இதற்கு ஓர் உதாரணம். `வேலைவாய்ப்பு உருவாக, புதிய தொழிற்சாலைகளை அவரவர் நாட்டிலேயே அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்த ஆரம்பித்தனர் சில தலைவர்கள். ஏற்கெனவே இருந்த நிறுவனங்களிலும் இந்த நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள்.

சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute
சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

அண்மையில் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளால் பல நிறுவனங்கள் சீனாவைவிட்டு வெளியேறும் நிலை உருவான‌து. ஜப்பானிய நிதி நிறுவனம் நொமுரா இது குறித்து ஆய்வுசெய்து பத்திரிகைகளில் வெளியிட்டது. சீனாவிலிருந்து வெளியேறிய நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை மாற்றியமைக்க‌ அருகிலேயே இருக்கும் இந்தியா, இந்தோனேஷியா நாடுகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. பல நாடுகள் வியட்நாம், தைவான் மற்றும் தாய்லாந்துக்குச் சென்றன. வணிகத்தைச் சுலபமாக நடத்தும் சூழல் (Ease of business), சாலைவழிப் போக்குவரத்தை மட்டுமே நம்பி இல்லாத‌ பொருளாதாரம், நடைமுறைக்குத் தேவையான தொழில்முறைத் திறன் படைத்த மனிதவளம் ஆகியவையெல்லாம் அந்த நாடுகளில் இருந்ததே காரணம்.

இவற்றில் முதல் இர‌ண்டு காரணங்களில் நம் அரசு கவனம் செலுத்திவருகிற‌து. வணிகச் சுலபமயமாக்கல் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். சாலைவழி இயக்கத்தை மட்டும் நம்பாமலிருக்க, பலவழிப் போக்குவரத்தில் (Multimodal Transportation) நம் அரசு முதலீடு செய்துவருகிறது. உதாரணமாக மாருதி, அதன் வண்டிகளைத் தடையின்றி ட்ரக்குகள், ரயில் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து மூலம் நாடு முழுவதும் அனுப்ப ஒரு முன்னோடியாக இருக்கும். நவீன தொழிற்சாலைகளை இயக்கக்கூடிய‌ திறன் படைத்த ஊழியர்கள்தான் வெளிநாட்டு முதலீடுகள் நம் நாட்டுக்கு வர உதவுவார்கள்.

ஆப்பிள் நிறுவனத்துக்கான சாதனங்களைத் தயாரிக்கும் தைவானிலிருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவை சீனாவுக்கு ஒரு மாற்று ஏற்பாடாகப் பார்க்கிறது. இதை நடைமுறைப்படுத்துவதிலிருக்கும் பெரிய சவால், ஆப்பிளின் சிக்கலான பொருள்களைக் கையாளும் திறன் படைத்தவர்கள் நம் நாட்டில் இல்லாததுதான். பத்திரிகைகளில் வெளியான தகவலின்படி, இதைச் சமாளிக்க மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்குப் பயிற்சியளிக்கத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்பம் ஏற்படுத்தும் மாற்றம்

காலணிகள் தயாரிக்கும் நிறுவனமான அடிடாஸ், அதன் தொழிற்சாலையை சீனாவிலிருந்து ஜெர்மனிக்கு 2017-ம் ஆண்டு மாற்றியது. அதற்குக் காரணம், தொழில்நுட்பம். ரோபோக்கள் மற்றும் 3டி பிரின்டிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி, சில நாள்களிலேயே காலணிகளை வடிவமைத்து தயாரிக்க முடிந்தது. சீனாவிலிருந்து வரும் பொருள்களுக்காக மாதக்கணக்கில் காத்திருக்காமல், வாடிக்கையாளர்களின் அருகிலேயே அதிக உற்பத்தித்திறனுடன் தயாரிக்க முடிந்தது. இது ஒரு நல்ல ஏற்பாடாக அமைந்தது.

அரசியல் நெருக்கடி, தொழில்நுட்பம் காரணமாக‌ப் பல அமெரிக்க‌ நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை மீண்டும் அவர்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த‌ ‘ரீஷோரிங்’ போக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.

க்ளவுடு தொழில்நுட்பத்தால் பாரம்பர்யத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்ஸிங் நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டி யிருக்கும். கோடிங், தரக் கட்டுப்பாடு தொடர்பான சோதனைகள், கணினிகளை நிர்வாகம் செய்வது போன்ற சேவைகள் அதிகம் தேவைப்படாது.

ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் குளிர்சாதனப் பெட்டி, பாத்திரங்கழுவி போன்ற வீட்டு உபயோக சாத‌னங்களைப் பல ஆண்டுகள் சீனாவிலும் மெக்ஸிகோவிலும் தயாரித்துவிட்டு, அவற்றை மீண்டும் அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றது. தொழிலாள‌ர்களுக்குக் கொடுக்கும் ஊதியம் குறைவு என்ற ஒரே காரணத்தால், பொருள்களின் தயாரிப்பை மற்ற நாடுகளுக்கு அனுப்பிய இந்த அணி, அதை மீண்டும் தயாரிக்க ஆரம்பித்தபோது அதில் எத்தனை நன்மைகள் இருக்கின்றன‌ என்று தெரிந்துகொண்டது. இந்தச் சாதனங்களை வடிவமைக்கும் பொறியாளர்களும், தயாரிப்பில் வ‌ல்லுநர்களும் ஒன்றாக வேலை செய்தபோது பல புது உத்திகளும் யோச‌னைகளும் பிறந்து, தயாரிப்புச் செலவு சீனாவில் செய்வதைவிடப் பல வழிகளில் குறைந்தது. இதுபோல அரசியல் நெருக்கடி, தொழில்நுட்பம் அல்லது லாப நோக்கம் காரணமாக‌ப் பல அமெரிக்க‌ நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை மீண்டும் அவர்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த‌ ‘ரீஷோரிங்’ போக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும். ஆனால், அரசியல் அல்லது குறுகிய பார்வையுடன் பணம் மிச்சம் பிடிக்கும் காரணத்துக்காக மட்டும் எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றியடையாது.

திறன் பழகு, திறமை மேம்படுத்து
திறன் பழகு, திறமை மேம்படுத்து

உலகப் போட்டித்திறன் குறியீடு (Global Competitiveness Index)

சென்ற வாரம் உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்ட போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 68-ம் இடத்தைப் பிடித்தது. இதற்கு முக்கியக் காரணம், மற்ற நாடுகள் கண்ட முன்னேற்றமே. நிர்வாகம், ஸ்திரத் தன்மை, கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் இந்தியாவின் செயல்திறன் நன்றாக இருக்கிறது. முன்னேற்றம் காண வேண்டிய அம்சங்கள் தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் அதனால் ஆயுட்காலம் நீட்டிப்பு, பெண்களின் பங்கேற்பு, மற்றும் திறன்களின் அடித்தளம்.

எதிர்காலத்துக்கான திறன் வளர்ப்பு

புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் சர்வதேச நிதி நிறுவனத்தின் (International Monetary Fund) நிர்வாக இயக்குநர் தன் தொடக்க‌ உரையில், உலகப் பொருளாதார மந்தநிலை குறித்துப் பேசினார். ``இன்று நாம் காணும் வளர்ச்சி குறைவு; பல நாடுகள் ஒருங்கிணைந்து காணும் ஒன்று. 90% நாடுகள் அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகள் இதன் தாக்கத்தைச் சந்திக்கும். இதற்குத் தீர்வு காண நாடுகள் ஒன்றோடு ஒன்று முரண்பாடுகளை அகற்றி, வணிகம் நடத்த வேண்டும். நாடுகளுக்கிடையே இன்று ஒரு கற்பனையான டிஜிட்டல் பெர்லின் சுவர் எழுந்துள்ளது. அதை நாம் தகர்க்க வேண்டும். அறிவு சார்ந்த சொத்து (Intellectual Property Rights), தொழில்நுட்பம், மானியம் சார்ந்த குழப்பங்களைத் தீர்த்து, தொழில்நுட்பத்தால் பாதிப்படைந்த சமுதாயங்களுக்கு உதவ வேண்டும்’’ என்றார்.

இந்தச் சவால்களையெல்லாம் மீறி உலகப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி காணும்போது வெற்றி அடையும் நாடுகள் எவையென்றால், இன்று சரியான தொழில்நுட்பங்களிலும் அவற்றுக்கான‌ திறன் வளர்ப்பிலும் கவனம் செலுத்தும் நாடுகள்; அவற்றின் நிறுவனங்கள். உங்கள் திறனை வளர்த்துக்கொண்டு இதில் பங்கேற்க நீங்கள் தயாரா?

(திறன் வளரும்)