Published:Updated:

திறன் பழகு, திறமை மேம்படுத்து! - டிஜிட்டல்மயமாகும் தொழில் துறைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திறன் பழகு, திறமை மேம்படுத்து
திறன் பழகு, திறமை மேம்படுத்து

ரீஸ்கில்லிங் பற்றிய தொடர் - 21

பிரீமியம் ஸ்டோரி

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் மாற்றத்துக்கு இதுவரை பல உதாரணங்களைப் பார்த்துவிட்டோம். இந்த மாற்றம் ஒவ்வொரு தொழில் துறையிலும் ஒரே அளவுக்கு நடந்துவிடுவதில்லை. எந்தெந்தத் தொழில் துறை, எந்த அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களைத் தழுவியிருக்கின்றன, எந்த அளவுக்கு மாற்றத்துக்கு உட்பட்டிருக்கின்றன, என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன அல்லது இனி மேற்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் பார்ப்போம்.

திறன் பழகு, திறமை மேம்படுத்து! - டிஜிட்டல்மயமாகும் தொழில் துறைகள்!

டிஜிட்டல் மாற்றம் என்பது வன்பொருள், மென்பொருள்களில் முதலீடு செய்து நிறுவனத்தை வெறும் கணினிமயமாக்குவது மட்டுமல்ல. வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், ச‌ப்ளையர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நிர்வாகச் செயல்பாடுகளில் விரயம் இல்லாமல் உற்பத்தித்திறனுடன் செயல்படுவது.

மெக்கின்சி (McKinsey) செய்த ஆராய்ச்சி

பிசினஸ் மாடல்கள் எப்படி மாறி வருகின்றன என்று சென்ற வாரம் பார்த்தோம். மெக்கின்சி நிறுவனம் அமெரிக்காவில் எந்தத் தொழில் துறை எந்த அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைத் தழுவியிருக்கிறது என்று ஆய்வுசெய்து ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் பத்திரிகையில் வெளியிட்டது.

அதற்கு அந்த நிறுவனம் எடுத்துக்கொண்ட அளவுகோல்கள் மூன்று. அவை ‍டிஜிட்டல் சொத்துகள், அவற்றின் பயன்பாடு மற்றும் ஊழியர்கள். இந்த மூன்றில் கடைசி இரண்டுதான் முக்கியமானவை. குறிப்பாக, டிஜிட்டல் வழியாக முடிவுகள் எடுக்கும் அதிகாரம்கொண்ட ஊழியர்களைத் தயார்படுத்துவது மிக முக்கியமானது. மெக்கின்சி நிறுவனம் கொடுத்த பரிந்துரைகள் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, நம் நாட்டுக்கும் பொருந்தும்.

சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute
சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

அறிவுசார்ந்த தொழில் துறைகள்

எதிர்பார்த்தபடியே மெக்கின்சி ஆய்வில், அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் பயன்பாட்டில் ஒரே அளவுக்கு வளராதது தெரியவந்தது. மிகவும் வளர்ச்்சிகண்ட துறைகள் அறிவு சார்ந்தவை (Knowledge based Industries). அதாவது, தகவல்தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு, ஊடகம் போன்றவை.

திறன் வளர்ப்பு புத்தகத்துக்காக நாங்கள் நடத்திய ஆய்வின் முடிவுகளும் மெக்கின்சி வெளியிட்ட முடிவுகளுடன் ஒத்துப் போகின்றன. மற்ற துறைகளுக்கு டிஜிட்டல்மயமாக்குவதில் ஆலோசனை வழங்கும் தகவல் தொழில்நுட்பத் துறை, இதில் மிகவும் பாதிப்படைந்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. இந்தத் துறையில் வேலை செய்யும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு புதிய திறன்களைக் கற்றுக்கொடுக்கும் தொழில்நுட்பங்கள் புயல் வேகத்தில் வளர்ந்துவிட்டன.

திறன் பழகு, திறமை மேம்படுத்து! - டிஜிட்டல்மயமாகும் தொழில் துறைகள்!

அக்சென்ச்சர் நிறுவனம் புதுத்திறன் வளர்ப்புக்காக வருடத்துக்கு ஒரு பில்லியன் டாலர் செலவுசெய்கிறது. நான்கு வருடங்களில் மூன்று லட்சம் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. கற்றுக்கொண்ட திறனை வகுப்பறையுடன் நிறுத்திவிடாமல், ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்த வாய்ப்பளிப்பது அவர்கள் மேற்கொள்ளும் மிக நல்ல பழக்கம்.

வாடிக்கையாளர்கள் இன்று கேட்கும் சேவைகளை மட்டும் நம்பி இருந்துவிடாமல், ஊழியர்களுக்குப் பயிற்சியளித்து, தயார்படுத்தி நாளைய தேவைகளுக்கு அஸ்திவாரம் போடும் நிறுவனங்களே எதிர்காலத்தில் வெற்றி காணும். தகவல்தொழில்நுட்பத் துறையின் சங்கமான நாஸ்காம் (Nasscom), அதன் உறுப்பினராக இருக்கும் நிறுவனங்களுடன் சேர்ந்து ‘Future Skills’ என்ற ஒரு கல்வி கற்கும் சூழலை இணையதளத்தில் உருவாக்கியிருக்கிறது.

பல திசைகளில் தள்ளப்படும் வாகனத் துறை

டிஜிட்டல்மயமாக்குவதில் அறிவு சார்ந்த துறைகளை அடுத்து அதிக சாத்தியக்கூறு இருக்கும் துறைகள் என்று பார்த்தால், பெரிய தொழிற்சாலைகள், அதிக முதலீடு செய்து, க‌ட்டடங்கள் எழுப்பி செயல்பட வேண்டிய துறைகளான எண்ணெய், எரிவாயு, சுரங்கம் போன்றவை.

திறன் பழகு, திறமை மேம்படுத்து! - டிஜிட்டல்மயமாகும் தொழில் துறைகள்!

புதிய கண்டுபிடிப்புகளில் முன்னோடியான வாகனத்துறைக்கு ஒரே நேரத்தில் பல திசைகளிலிருந்து அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது. சுற்றுப்புறசூழலைப் பாதுகாக்க அதிகம் புகை வெளிவராத பி.எஸ் 6 (BS VI) தரக்கட்டுப்பாட்டின்படி, எரிபொருள்களைப் பயன்படுத்த இன்ஜின் மாற்றி வடிவமைக்கப்பட்டது. ‘CASE’ (Connected, Autonomous, Shared, Electrified) என்று அழைக்கப்படும் ஐ.ஓ.டி தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட, மின்சாரத்தால் ஓடும் வாகனம் இந்தத் துறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்ஜின் இல்லாமல் மின்சாரத்தால் ஓடும் வண்டியில் மிகக் குறைந்த பாக‌ங்கள் இருப்பதால், அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் ஆட்களும் வேலைவாய்ப்பும் குறையும். இந்தப் போட்டியில் வாகனத்தின் விலையில் பாதியை எடுத்துக்கொள்ளப் போகும், மின்சாரத்தைச் சேமிக்கும் பேட்டரிகளைக் குறைந்த விலையில் தயாரிக்கும் நிறுவனம்தான் வெற்றிவாகை சூடும்.

ஒரு கண்டுபிடிப்பு ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களை அக‌ற்றிவிட்டு ஒரு புதிய சந்தையை உருவாக்கும்போது ‘சீர்குலைக்கும் கண்டுபிடிப்பு’ என்று அழைக்கப்படுகிறது.

மெக்கின்சியின் கணிப்பின்படி 2030-ம் ஆண்டு வாகனத் துறையில், டிஜிட்டல் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தும் நிறுவனங்களில் தங்கள் வருமானத்தில் 25% வரை தகவல் சார்ந்த சேவைகளில்தான் கிடைக்கும். ஐ.ஓ.டி-யைக் கொண்டு வாகனம் பழுதாவதற்கு முன்னரே எச்சரிக்கை அனுப்பலாம். பயணம் செய்யும்போது இன்ஃபோடெயின்மென்ட் மூலம் பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டுகள், மின்னஞ்ச‌ல் போன்ற சேவைகளை வழங்கலாம். இந்த டிஜிட்டல் கருவிகளை வாகனங்களைத் தயாரிக்க மட்டுமல்லாமல், வெவ்வேறு வாய்ப்புகளையும் கண்டறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சேவைத் துறையில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை

அடுத்ததாக, சுகாதாரத் துறை, வங்கி, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் வாடிக்கையாளர்களின் நீண்டகாலத் தொடர்பு, கொடுக்கல் வாங்கலை டிஜிட்டல்மயமாக்க வாய்ப்பிருக்கிறது.

மருத்துவத் துறையை எடுத்துக்கொள்வோம். நோய் வந்த பிறகு மருத்துவமனைக்கு ஓடுவது குறைந்து, கையில் கட்டியிருக்கும் ஸ்மார்ட் கடிகாரம் எல்லா நேரமும் உங்கள் இதயத் துடிப்பை கண்காணித்து மாரடைப்பு வரும் முன்னரே காக்கும்விதமாக எச்சரிக்கை அனுப்பும் நிலைமை வந்துவிட்டது.

வங்கித் துறை... நாம் கிளைகளுக்குச் சென்று காசாளரிடம் செலான் எழுதிக் கொடுத்துப் பணம் எடுக்கும் நிலைமை மாறி, எங்கிருந்தாலும் மனிதத் தொடர்பு இல்லாமல், டிஜிட்டல் சாதனங்கள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிலைமை வந்துவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திறன்களையே விரும்பும் கல்வித்துறை

கல்வித் துறையில் இன்று நாம் காணும் ஒரு பெரிய விவாதம் சான்றிதழா, திறனா என்பது. இரண்டில் எது முக்கியம்? பல்கலைக்கழகங்க‌ளில் கொடுக்கப்படும் கல்வியும், அதன் முடிவில் கிடைக்கும் பட்டமும், வெளியுலகில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பதை ஈடுகட்ட முடியாததால் ஏற்பட்ட நிலைமை இது.

தொலைபேசி, சாட்பாட், ஸ்மார்ட்போன், இணையதளம் மற்றும் கடை போன்ற எந்த வழியிலும் ஒரு பொருளை மதிப்பீடு செய்து, எந்தத் தகவலையும் இழக்காமல் வாங்க முடியும்.

இன்று பல நிறுவனங்கள் வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களிடம் கல்லூரிகள் வழங்கும் சான்றிதழை மட்டும் கேட்காமல், அவர்களின் நடைமுறைக்குத் தேவைப்படும் திறன்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

இந்த நிலைமை இந்தியாவில் மட்டுமல்ல. ‘Disruptive Innovation’ என்ற சொற்றொடரைப் பிரபலப்படுத்திய ஹார்வா்டு பேராசிரியர் க்ளேடன் கிறிஸ்டென்ஸனின் கணிப்பின்படி, `நிலைமை இப்படியே போனால் அமெரிக்காவிலிருக்கும் 4,000 கல்லூரிகளில் பாதியளவுக்கு அடுத்த 10-‍15 ஆண்டுகளில் பணமில்லாமல் மூடப்படும் நிலை உருவாகும்.’

அவர் சொன்ன ‘சீர்குலைக்கும் கண்டுபிடிப்பு’ தொழில் தலைவர்களிடையே இந்த நூற்றாண்டின் மிகவும் பிரபலமான கருத்தாக மாறியிருக்கிறது. ஒரு கண்டுபிடிப்பு ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களையும், அவர்களின் வாடிக்கையாளர்களையும் அக‌ற்றிவிட்டு ஒரு புதிய சந்தையை உருவாக்கும்போது இப்படி அழைக்கப்படுகிறது.

இதற்கு முக்கியக் காரணம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் கல்வித்துறை சிறு சிறு பாகங்களாகப் பிரிவதுதான். ஒரு தலைப்பிலுள்ள பாடங்கள், மாணவர்கள் எவ்வளவு கற்றார்கள் என்று ம‌திப்பிடும் தேர்வுகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் விவாதங்கள் போன்றவற்றை டிஜிட்டல்மயமாக்கி மனித ஈடுபாடு இல்லாமல் கணினிகள் மூலமாகவே அளிக்கலாம். இன்று மாணவர் களிடையே ‘MOOCs’ என்றழைக்கப் படும் இணையதளத்தின் மூலம் கல்வி கற்பது பிரபலமாகிவருகிறது.

பாரம்பர்யத் துறைகளில் டிஜிட்டல்

எந்தத் துறையும் டிஜிட்டல்மயமாவதிலிருந்து தப்ப முடியாது என்பதே இன்றைய நிலை. ஜவுளித் துறையில் உலக அளவில் நம் திறனை வளர்த்து மற்ற நாடுகளுடன் போட்டி போட்டு ஏற்றுமதியை அதிகப்படுத்த அமைச்சகம் திட்டங்களை வகுத்திருக்கிறது. தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி உதவித் திட்டம் மூலம் பழைய இயந்திரங்களை மாற்றி, புது முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.

கர்நாடகாவில், ம‌ர பொம்மைகள் செய்யும் சன்னபட்னாவில் சீன இற‌க்குமதியால் வியாபாரம் குறைந்தது. ஆனால், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பொம்மைகளை இ‍-காமர்ஸ் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சாத்தியமானது. பொம்மைகளைத் தாண்டி, வீட்டு உபயோகப் பொருள்களை நவீன வழிகளில் தயாரிக்கவும் கைவினைக் கலைஞர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.

பொருள்களை வாங்கி விற்கும் சில்லறை விற்பனைக் கடைகளில் இ-காமர்ஸையும் தாண்டி ‘ஆம்னி சானல்’ என்று அழைக்கும் எந்த மின்னணுச் சாதனத்தின் மூலம் பரிவர்த்தனை செய்வதே இன்றைய போக்கு.

தொலைபேசி, சாட்பாட், ஸ்மார்ட்போன், இணையதளம் மற்றும் கடை போன்ற எந்த வழியிலும் ஒரு பொருளை மதிப்பீடு செய்து, எந்தத் தகவலையும் இழக்காமல் வாங்க முடியும். கடையில் நமக்குப் பிடித்த ஒரு பொருளைப் பார்த்துவிட்டு இணையதளத்தில் அதன் விலையை ஒப்பிட்டு, குறைவாக இருப்பதை ஸ்மார்ட்போன் மூலம் வாங்குவது வழக்கமாகி விட்டது.

டிஜிட்டல்மயமாக்கல் என்பது தொழில் நுட்பங் களைப் பயன்படுத்துவது மட்டுமல்ல. ஒவ்வொரு தொழில் துறைக்கும் ஏற்ற உத்திகளை வகுத்து, ஊழிய‌ர்களுக்குப் பயிற்சியளித்து நிறுவனத்தை யும் அதன் சுற்றுச்சூழலையும் முன்னோக்கி எடுத்துச் செல்வது.

உங்கள் துறையிலுள்ள அண்மைய போக்குகள், போட்டியாளர்கள் எடுத்திருக்கும் முயற்சிகள், டிஜிட்டல்மயமாக்கப்பட விருக்கும் வாய்ப்புகள் என்னென்ன, அவற்றுக்குத் தேவையான திறன்கள் என்னென்ன என்று கணித்து அத‌ற்குத் தேவையான முயற்சி எடுத்திருக்கிறீர்களா?

(திறன் வளரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு