Published:Updated:

திறன் பழகு, திறமை மேம்படுத்து - அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல்மயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திறன் பழகு, திறமை மேம்படுத்து
திறன் பழகு, திறமை மேம்படுத்து

ரீஸ்கில்லிங் பற்றிய தொடர் - 23

பிரீமியம் ஸ்டோரி

கவல் தொழில்நுட்பத்தின் தாக்கம் இன்று அனைத்துத் தொழில் நிறுவனங்களிலும் எதிரொலிக்கிறது. இதை ஒரு சூழல் அல்லது சமுதாய அளவிலுள்ள ஒரு சக்தி என்று சொல்லலாம் (Ecosystem of Technologies). இதன் பின்னணியிலிருப்பது `டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம்’ (Digital Platform) என்று அழைக்கப்படும் பலரும் பயன்படுத்தும் ஒரு மென்பொருளும், அதனால் கிடைக்கும் சேவைகளும்.

திறன் பழகு, திறமை மேம்படுத்து - அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல்மயம்!

நிறுவனங்களுக்கிடையே நிலவும் கடும்போட்டியில் தனித்துவத்துடன் வெற்றி பெற நவீன‌ டிஜிட்டல் தொழில்நுட்பம் ஒரு கருவியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இதில் முன்னோடியாக இருந்தவர்கள் ஓர் உண்மையைத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். அது, ‘டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் அடையும் வேகமான முன்னேற்றத்தில், நாம் மட்டும் வேகமாக முன்னே சென்றால் அதனால் கிடைக்கும் நன்மை குறைவாகவே இருக்கும். நம் வாடிக்கையாளர்களுக்கும், சப்ளையர்களுக்கும், ஏன் மாணவர்களுக்கும் பயிற்சியளித்து அவர்களையும் சேர்த்துக்கொண்டு முன்னேறினால் அதனால் கிடைக்கும் நன்மை பல மடங்கு அதிகமாக இருக்கும்.’

இதை, `வலைப்பின்னலின் விளைவு’ (Network Effect) என்று அழைக்கலாம். இணையதளம், கைப்பேசி போன்ற கண்டுபிடிப்புகள் முதலில் வந்தபோது அவற்றைப் பயன்படுத்திய மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அந்தச் சாதனங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிக‌ரிக்கத்தான் அவற்றின் தாக்கமும் பெருகியது.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை உங்கள் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வட்டங்கள் அதிகம் பயன்படுத்தும்போதுதானே அவற்றின் பயன்பாடு அதிகரிக்கும்... இது சமூக வலைதளங்களுக்கு மட்டுமல்ல, பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கும் மென்பொருள்களுக்கும் பொருந்தும்.

சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute
சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

பாராம்பர்யமான தொழில்துறை சுற்றுச்சூழல்கள்

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பிரபலமாவதற்கு முன்னரே சில தொழில் வகைச் சுற்றுச்சூழல்கள் புழக்கத்தில் இருந்தன. ஜப்பானில் ‘கீரெட்சு’ (keiretsu) என்று அழைக்கப்படும் கூட்டு நிறுவனங்கள் பல உள்ளன. வங்கி போன்ற துறைகளில் ஒரு பெரிய வங்கி மற்ற நிதி நிறுவனங்களில் பங்குச் சந்தை மூலம் முதலீடு செய்யும். மற்றொரு ‘கீரெட்சு’ வாகனத் துறையில் வண்டி தயாரிக்கும் நிறுவனத்தில் தொடங்கி, பாகங்கள் சப்ளை செய்யும் சிறு நிறுவனங்கள்கொண்ட அமைப்பாக மாறும். அவை ஒரு பெரிய தொழிற்சாலையைச் சுற்றி அருகில் அமைக்கப்பட்டிருக்கும்.

டொயோட்டா, ஹோண்டா போன்ற வாகனம் தயாரிக்கும் நிறுவனங்க‌ள் இது போன்ற அமைப்பைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றன. இதுபோல, கொரியாவில் ‘சேபால்’ (Chaebol) என்று அழைக்கப்படும் நிர்வாகம் பிரபலமாக இருக்கிறது. ஒரு நிறுவனத்தைத் தொடங்கிய குடும்பமே அதைப் பல பிரிவுகளாக வளர்த்து, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். `சாம்ஸங்’ போன்ற கொரியாவின் முதல் 10 ‘சேபால்’ நிறுவனங்களின் அளவு எவ்வளவு என்று பார்த்தால், கிட்டத்தட்ட கொரியாவின் பொருளாதாரத்தில் பாதி!

நவீன டிஜிட்டல் சார்ந்த‌ சுற்றுச்சூழல்கள்

இந்த இரண்டு உதாரணங்கள் உற்பத்தித்துறையில் பாகங்களை வாங்கி விற்று, பரிவர்த்தனை செய்யப் பயன்பட்டன. ஜப்பானிய நிறுவனங்கள் தேவைக்கேற்ப ‘Just-in-time’ எனப்படும் உற்பத்தி உத்தியைக் கடைப்பிடிக்கின்றன. அதற்கு பாகங்கள் சரியான நேரத்துக்குத் தொழிற்சாலைக்கு வந்து சேர‌, அவற்றின் சப்ளையர்கள் அருகிலிருக்க வேண்டியது அவசியம். இன்றைய டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம் யுகத்தில் பல பரிவர்த்தனைகள் தகவலை வைத்துத்தான் நடக்கின்றன. இதில் தூரம் என்பது ஒரு பொருட்டே அல்ல.

திறன் பழகு, திறமை மேம்படுத்து - அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல்மயம்!

இந்திய வாகனத் துறையில் சுற்றுப்புறச்சூழல் அளவில் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு ஓர் உதாரணம் ‘AutoDX’ (Automotive Data Exchange).’ இதன் இலக்கு, வாகனம் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களுக்கும், அவர்களுக்கு பாகங்களைக் கொடுக்கும் சப்ளையர்களுக்குமிடையே நடக்கும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல்மயமாக்குவது.

பாரம்பர்ய முறையில், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தேவைப்பட்டால் அதன் விவரங்களை மின்னஞ்சல், ஃபேக்ஸ், தொலைபேசி மூலம் குறிப்பிட்ட சப்ளையர்களுக்கு அனுப்புவார்கள். இந்த முறையில் நேர விரயம் என்பது அதிகமாக இருந்தது; பிழைகளுக்கும் வாய்ப்பு அதிகம். இந்தப் பழக்கத்திலிருந்து க்ளவுடில் செயல்படுத்தப்பட்ட ‘AutoDX’-ன் செயல்முறை வேறுபட்டது.

தினமும் தேவைப்படும் உதிரி பாகங்களின் விவரத்தை ஏற்கெனவே ஒப்புக்கொண்ட வடிவத்தில் ‘AutoDX’-க்கு இணையதள இணைப்புக்கொண்டு அனுப்பிவிட்டால், அது பதிவுசெய்த குறிப்பிட்ட சப்ளையர்கள் பலருக்குக் கண்ணிமைக்கும் நேரத்தில் டிஜிட்டல் தகவலாக அனுப்பிவிடும். அந்தக் குறிப்பிட்ட பாகத்தை விநியோகிக்க‌த் தயாராக‌ இருப்பவர்கள் ‘AutoDX’ மூலமாகவே தொடர்பு கொண்டு, ஒப்புதல் பெற்று, பின்னர் அவற்றை அனுப்பிவைக்கலாம். பணப் பட்டுவாடாவையும் இதன் மூலமே நடத்தலாம். இதனால் ஒருவரை ஒருவர் தனித்தனியாகத் தொடர்புகொள்ள வேண்டிய தேவை ஏற்படாது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த முயற்சியை இன்று பிளாக்்செயின் மூலம் நடத்தப்போவதாக வாகனத் துறைத் தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்படி ஒரு நிகழ்வு செயல்பட்டால், இந்திய வாகனத்துறை ஒன்றுபட்ட, தகவல் சார்ந்த டிஜிட்டல் சுற்றுச்சூழலாக உருமாறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மென்பொருள் நிறுவனங்களின் திறன் வளர்ப்பு

பல மென்பொருள் நிறுவனங்கள் இந்தச் சுற்றுச்சூழல் போக்குக்கேற்ப பயிற்சியளிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு, அனாலிடிக்ஸ் போன்றவற்றில் தொழில்நுட்பங்கள் வேகமாக முன்னேறியுள்ளன. அவற்றை சமுதாயத்துக்குப் பயனுள்ளவையாக்க திறனுள்ளவர்கள் பலர் தேவைப்படுகிறார்கள். இதற்குப் பயிற்சி அளிப்பதுதான் ஒரே வழி.

திறன் பழகு, திறமை மேம்படுத்து - அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல்மயம்!

மைக்ரோசாஃப்ட், திறன் வளர்ப்பு அமைச்ச‌கத்துடன் சேர்ந்து ‘புராஜெக்ட் சங்கம்’ என்ற திட்டத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது. இதில் ஆதார் எண் மூலம் பதிவுசெய்து பயிற்சிகளை முடிக்கலாம். `லிங்க்டு இன்’ போன்ற சமூக வலைதளங்களுடன் இவை இணைக்கப்படு வதால், இதில் படிப்பை முடிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புமிருக்கிறது.

ஒருமுறை நந்தன் நிலேகனியிடம், மைக்ரோ சாஃப்ட் சத்யா நாதெல்லா இது குறித்து இப்படிச் சொன்னார்... ``செயற்கை நுண்ணறிவு, வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் முக்கியமாகக் கருத்தில்கொள்ள வேண்டும். அதனால்தான் இந்தியாவில் திறன் வளர்ப்பு முயற்சிகள் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

செயற்கை நுண்ணறிவு, அனாலிடிக்ஸ் போன்றவற்றில் தொழில்நுட்பங்கள் வேகமாக முன்னேறியுள்ளன. அவற்றை சமுதாயத்துக்குப் பயனுள்ளவையாக்க திறனுள்ளவர்கள் பலர் தேவைப்படுகிறார்கள். இதற்குப் பயிற்சி அளிப்பதுதான் ஒரே வழி.

மொபைல் நிரலாக்கத்தில் இந்தியாவை ஒரு மையமாக்குவதை ஒரு தொலைநோக்குப் பார்வையாக எடுத்துக்கொண்டிருக்கிறது கூகுள். கூகுளைப் பொறுத்தவரை, சீனாவுடன் ஒப்பிடும்போது புதிய கண்டுபிடிப்புகளில் பின்தங்கியிருந்தாலும், தொழில்நுட்பங்களில் முன்னோடியாக இருப்பது இந்தியாதான்.

கூகுளின் சுந்தர் பிச்சை இதைப் பற்றிப் பேசும் போது, ‘‘அனைவரும் கோடிங் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை’’ என்று கூறினார். ``கோடிங்கைவிட குறைவான திறன் தேவைப்படும் வேலைகள் பல இருக்கின்றன. அவற்றில் வேலை கிடைக்கத் தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும்’’ என்றார்.

இந்தியப் பொருளாதாரத்தில் ஏறக்குறைய 40% பங்களிக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்குதான் டிஜிட்டல்மயமாக்கப்பட்டிருக்கின்றன. டிஜிட்டல்மயமாகாத நிறுவனங்களுக்குப் பயிற்சி மற்றும் தேவைப்படும் வசதிகளைச் செய்துகொடுப்பதால், அவற்றின் ஜி.டி.பி பங்களிப்பு 10% புள்ளிகள் வரை உயரும் என்று கணிக்கப்பட்டது. இதற்கு கூகுள் மூலம் ஒரு தனிப்பட்ட பயிற்சித் திட்டத்தை அறிவித்தார் சுந்தர் பிச்சை. இதுபோல, மற்ற மென்பொருள் மற்றும் 3டி பிரின்டிங் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களும் ஒரு திறனுள்ள சுற்றுச்சூழல் வளரத் தேவையான பயிற்சி மற்றும் முதலீடுகளைச் செய்துவருகின்றன.

தலைகீழான நிரலாக்கம்

உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) தன் அறிக்கையில், ப்ளாட்ஃபார்ம் மற்றும் அதனால் உருவாகும் சுற்றுச்சூழல் எப்படி ஒரு டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்பதை வெளியிட்டது. ஒரு சாதாரண மென்பொருளுக்கும் ப்ளாட்ஃபார்ம் மூலம் நடக்கும் சுற்றுச்சூழலுக்கும் அடிப்படை வித்தியாசங்கள் இருக்கின்றன. ப்ளாட்ஃபார்ம்களை நடத்தும் நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆனால், அவற்றின் கண்டுபிடிப்புத் திறனும் வேகமும் மிக அதிகமாக இருக்கும். வலைப்பின்னலின் விளைவால் நிறுவனத்தின் உள்ளே நடக்கும் கோடிங்கைவிட வெளியே நடப்பதே அதிகமாக இருக்கும். இதைத்தான் `தலைகீழான நிரலாக்கம்’ (Inverted Programming) என்று உலகப் பொருளாதார மன்றம் அழைக்கிறது.

`என் நிறுவனம்’, `என் தொழில்’ என்று யோசிக்காமல் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் இந்த டிஜிட்டல் பயணத்தில் எப்படிச் சரியான பாதையில் முன்னேற்றிச் செல்லலாம் என்பதைத் தலைவர்கள் யோசிக்க வேண்டும். இனிவரும் காலத்தில் குறிப்பிட்ட துறைகள் உலக அளவில் மொழிகள், கலாசாரங்கள், நாட்டு எல்லைகளைத் தாண்டி சுற்றுச்சூழ‌ல்கள் ஆவதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. இதில் திறன் வளர்ப்பின் பங்கு மிக முக்கியம்.

(அடுத்த இதழில் முடியும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு