Published:Updated:

திறன் பழகு, திறமை மேம்படுத்து - வழிகாட்டும் விழிப்புணர்வு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திறன் பழகு, திறமை மேம்படுத்து
திறன் பழகு, திறமை மேம்படுத்து

ரீஸ்கில்லிங் பற்றிய தொடர் - 24

பிரீமியம் ஸ்டோரி

டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் திறன் வளர்ப்பு குறித்து 24 வாரங்களாக‌ விரிவாகப் பார்த்தோம். இந்தத் தொடர் முடிவுறும் நேரம் இது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், அவற்றை வைத்து லாபகரமாக வணிகம் நடத்த உதவும் பிசினஸ் மாடல்க‌ள், இண்டஸ்ட்ரி 4.0-வின் போக்கு, நவீன உத்திகள், மேலாண்மைக் கருத்துகள் எனப் பல கோணங்களில் இன்றைய டிஜிடல் பொருளாதாரத்தை அலசிவிட்டோம்.

இவற்றின் நன்மைகள் உலக அளவில் அனைவரையும் சென்றடைய‌ மக்களின் திறன் வளர்ப்புதான் ஒரு முக்கிய சாவி என்ற நிலையில் இருக்கிறோம். இந்த விழிப்புணர்வு அனைவரையும் சென்றடைந்தால் அதுவே ஒரு பெரிய சாதனைதான்.

சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute
சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

திறன் வளர்க்க விழிப்புணர்வு

தொழில்நுட்பங்கள் வளரும் வேகத்துக்கு ஈடுகொடுத்து மக்க‌ளிடையே திறன் வளர்ப்பதென்பது ஒரு பெரிய சவால். தொழில்துறைகளின் தேவைக்கும் திறன் படைத்தவர்களின் எண்ணிக்கைக்கும் ஓர் இடைவெளி இருந்துகொண்டேயிருக்கும். இதைப் பற்றி ஆய்வுகள் வந்துகொண்டேயிருக்கும்.

அண்மையில் யூனிசெஃப் (UNICEF) நிறுவனம் இந்தியா, தெற்கு ஆசியாவில் நிலவும் கல்விநிலை குறித்து வெளியிட்ட அறிக்கை கவலைப்படும்விதமாக இருக்கிறது. அந்த ஆய்வின்படி, இன்று பள்ளிகளில் படிக்கும் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் 2030-ம் ஆண்டில் பட்டதாரிகளாக வெளியே வரும்போது வேலை செய்யத் தயாராக இருக்க மாட்டார்கள். தொழில்துறைகளில் எதிர்பார்க்கப்படும் திறன்க‌ள் அவர்களிடம் இருக்காது.

இதற்கான காரணங்களையும் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். தரமான ஆசிரியர்கள் இல்லாதது, அதிக காலத்தை எடுத்துக்கொள்ளும் சான்றிதழ் வழங்கும் செயல்முறை, பழைமையான பாடத்திட்டம் மற்றும் இளைஞர்களிடம் அரசின் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு இல்லாதது எனப் பல காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

திறன் பழகு, திறமை மேம்படுத்து - வழிகாட்டும் விழிப்புணர்வு!

இந்தக் காரணங்கள் நமக்குப் புதியவையல்ல. ஆனால், நாங்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்தும், மற்ற பல ஆய்வுகளிலிருந்தும் ஒன்று தெரியவருகிறது. இந்தத் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் திறன் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி. இது போன்ற தொடர்களை நம் நாட்டு பிராந்திய‌ மொழிகளில் எழுதுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்; அதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

இளைஞ‌ர்கள் மட்டுமல்லாமல் அனுபவஸ்தர்களும் மாற்றங்களை உணர வேண்டும். அவரவரர் துறைகளில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன, புதிய போக்குகள் என்னென்ன... அவற்றைத் தங்கள் சுய முயற்சியால் அல்லது தங்கள் நிர்வாகத்தின் மூலம் எப்படிக் கற்றுகொள்வது என்று யோசித்துச் செயல்பட வேண்டும். எப்போதோ கற்ற கல்வியை, ஒரே திறனை வைத்து ஓய்வுக்காலம் வரைக்கும் வேலை பார்ப்பது என்பது காலம் காலமாக நடக்கும் ஒன்றாகிவிட்டது. மாறிவரும் எல்லாக் காலத்துக்கும் கற்றுக்கொண்ட திறன் பயன்படுமா என்று பார்த்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

இயந்திரமயமாக்கலும் டிஜிட்டல்மயமாக்கலும் போகப்போக அதிககரிக்கவே செய்யும். வேலை வாய்ப்புகளில் பல மாற்றங்கள் வரும். ஆண்டாண்டுகளாக இருந்த வேலைகள் இல்லாமல் போகலாம். ஆனால், புதிய வேலைகள் உருவாகும்.

இந்த நிலைமையை மாற்ற யூனிசெஃப் அளித்திருக்கும் பரிந்துரையையும் பார்த்துவிடுவோம். வகுப்பறைப் படிப்புடன் சேர்த்து சுயதொழில் (Entrepreneurship) பயிற்சி, மென் திறன்கள் வளர்த்தல், அலுவலகத்தில் அல்லது தொழிற்சாலையில் வேலை செய்வதற்கு தயார்ப்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு உதவ குழந்தை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் விடுமுறை நாள்கள் போன்றவற்றை யூனிசெஃப் பரிந்துரை செய்துள்ளது.

மனிதனா, இயந்திரமா..?

திறன் வளர்ப்பு குறித்த இந்தத் தொடரின் ஆரம்பத்திலும், பின்னர் பல சந்தர்ப்பங்களிலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்வி ‍ ‘மனிதனை மிஞ்சுமா இயந்திரம்?’ என்பது. இயந்திரங்கள் செயற்கை நுண்ணறிவுடன் சேர்ந்து பல வேலைகளை மனிதர்களைவிட வேகமாக, துல்லியமாகச் செய்யப்போகின்றன. ஆனால், மனிதர்களுக்கென்று பிரத்யேகமான ஓர் இடம் இருந்துகொண்டேதான் இருக்கும். இயந்திரங்களால் மனிதர்களை எல்லாச் சூழல்களிலும் வெல்ல முடியாது.

திறன் பழகு, திறமை மேம்படுத்து - வழிகாட்டும் விழிப்புணர்வு!

படைப்பாற்றலுட‌ன் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வது, சவாலான சூழ்நிலைகளில் முடிவுகள் எடுப்பது, மற்ற மனிதர்களுடன் தொடர்புகொள்ளும்போது பச்சாதாபத்துடன் நடந்துகொள்வது போன்றவற்றை மனிதர்களால்தான் செய்ய முடியும். எவ்வளவுதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் இது போன்ற வேலைகளுக்கு மனிதர்கள்தாம் தேவைப்படுவார்கள். இதற்குப் பத்திரிகைகளைப் புரட்டினாலே போதும், நிறைய உதாரணங்களைப் பார்க்கலாம்.

விமானம் தயாரிக்கும் போயிங் நிறுவனம், நான்கு வருடங்களுக்கு முன்னர் ரோபோக்களை வைத்து செய்த முயற்சியை அண்மையில் கைவிட நேர்ந்தது. விமானத் தயாரிப்பில் துளைகள் செய்து அவற்றின் அளவுக்கேற்ப ஆணிகளைக் கொண்டு பாகங்களைச் சேர்ப்பதே அந்த ரோபோக்களின் வேலை. ரோபோக்கள் பலமுறை வேலையை முழுவதுமாக முடிக்காமல் போனதால், பிறகு மனிதர்களைக் கொண்டு செய்ய வேண்டியிருந்தது. கடைசியில் போயிங் நிறுவனம். `இந்த வேலையை மனிதர்களை வைத்தே செய்யலாம்’ என்று முடிவு செய்து ரோபோக்களைக் கைவிட்டது.

திறன் பழகு, திறமை மேம்படுத்து - வழிகாட்டும் விழிப்புணர்வு!

காலணி தயாரிக்கும் நிறுவனமான அடிடாஸ், சில வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கியது. இதில் என்ன புதுமை தெரியுமா... இந்தத் தொழிற்சாலைகளில் ரோபோக்கள் போன்ற‌ நவீன தொழில்நுட்பங்களைக்கொண்டு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பொருத்தமான வடிவத்தில், அளவில் கால‌ணி தயாரிப்பது. வேலைக்கு மனிதர்களின் தேவை குறைவு.

கடந்த வாரம் அடிடாஸ் இந்த இரண்டு தொழிற்சாலைகளையும் சரியாக நடத்த முடியாததால் மூடப்போவதாக அறிவித்தது. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. ரப்பர் மற்றும் தோல் பாகங்களை அங்கிருக்கும் செயல்முறையின்படி சேர்க்க முடியாமல் போனது; குறைந்த அளவு மாடல்களே செய்ய முடிந்தது எனச் சில காரண‌ங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நிர்வாகம் எடுத்த முடிவின்படி தயாரிப்பு மீண்டும் ஆசியாவுக்கே மாற்றப்படும்; புதிய தொழிலநுட்பங்கள் அங்கிருக்கும் தொழிற்சாலைகளுக்கு மாற்றப்படும். அடிடாஸ் கூறிய மற்றொரு முக்கியக் காரணம், ஆசியாவிலுள்ள சப்ளையர்களின் தொழில் நுண்ணறிவு. இந்தக் கதையிலும் மனிதர்களின் அறிவு இயந்திரங்களை வென்றுவிட்டதா... இதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இயந்திரமயமாக்கலும் டிஜிட்டல்மயமாக்கலும் போகப்போக அதிககரிக்கத்தான் செய்யும். வேலைவாய்ப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படும். ஆண்டாண்டுகளாக இருந்த வேலைகள் இல்லாமல் போகலாம். ஆனால், புதிய வேலைகள் உருவாகும். தங்கள் திறனை காலத்தின் போக்குக்கு ஏற்ப வளர்த்துக்கொள்பவர்களுக்கு எப்போதுமே வேலை இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வல்லுநர்களின் பார்வை

`திறன் வளர்ப்பு’ என்பது சர்வதேச அளவில் கொள்கைவகுக்கும் தலைவர்களின் கவனத்திலிருக்கும் ஒரு தலைப்பாக நீண்டகாலத்துக்கு இருக்கும். உதாரணமாக, மெக்கின்ஸி நிறுவனம் ‘ஜெனரேஷன்’ என்ற ஒரு லாப நோக்கமற்ற பிரிவைத் தொடங்கியது. இதன் இலக்கு தொழில்களுக்குத் தேவைப்படும் திறன்களை அறிந்து, அவற்றுக்குத் தேவையான மனித வளத்தை வளர்ப்பது. 13 நாடுகளில் செயல்படும் இந்த நிறுவனம் இந்தியாவிலும் மதிப்பீடு செய்துவருகிறது.

திறன் பழகு, திறமை மேம்படுத்து
திறன் பழகு, திறமை மேம்படுத்து

ஜெனரேஷன் சில சுவாரஸ்யமான யோசனைகளைப் பயன்படுத்துகிறது. `திறன் வளர்ப்புக்குச் செய்யும் முதலீட்டால் எவ்வளவு நன்மையடைந்தோம் என்பதை வணிக நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது; கல்வி கற்றதால் ஒருவருக்கு வேலைவாய்ப்பில், வருமானத்தில், வேலை நீட்டிப்பில் எவ்வளவு பயன் என்று பார்க்க வேண்டும்’ என கணிக்கிறது.

‘வேலை செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் ஆன செலவு’ என்ற ஒரு குறியீட்டைவைத்து, அதை எப்படி ஒரு டாலருக்குக் கீழே கொண்டு வரலாம் என்பதே ஜெனரேஷனின் குறிக்கோள். கல்விக்கு ஆகும் செலவு, அதனால் கிடைக்கும் வேலைவாய்ப்பு, அது எத்தனை நாள்கள் அல்லது வருடங்கள் நீடிக்கும் என்று இந்த மூன்று அம்சங்களையும் இந்தக் குறியீடு கொண்டுவந்துவிடுகிறது.

நிறுவனங்கள் சில சமயங்க‌ளில் குறிப்பிட்ட திறன் படைத்த ஊழியர்களைத் தீவிரமாகத் தேடும் நிலை ஏற்படும். அந்தத் திறன் இல்லாவிட்டால் ஒரு வாய்ப்பு தவறிப்போகும் நிலை இருக்கலாம். தரக்கட்டுப்பாடு சவாலாக இருக்கலாம். இந்தத் திறன் வளர்க்க அதிக செலவு செய்து ஆட்கள் நிலைக்காமல் இருக்கலாம். இத்தகைய ஒரு நிலைமையை ஒரு ‘விரக்திக் குறியீடு’ (Desperation Index)’ கொண்டு அளக்கிறது ஜெனரேஷன். இந்தக் குறியீட்டில் அதிகமிருக்கும் நிறுவனங்கள் திறன் வளர்க்க, ஆட்களைப் பணியில் அமர்த்த அதிகம் முயலக்கூடும்.

நிறுவனங்கள் சில சமயங்க‌ளில் குறிப்பிட்ட திறன் படைத்த ஊழியர்களைத் தீவிரமாகத் தேடும் நிலை ஏற்படும். அந்தத் திறன் இல்லாவிட்டால் ஒரு வாய்ப்பு தவறிப்போகும் நிலை இருக்கலாம். தரக்கட்டுப்பாடு சவாலாக இருக்கலாம்.

இதுபோல திறன் வளர்ப்பில், அதை மதிப்பீடு செய்வதில், விழிப்புணர்வு கொண்டுவருவதில் உங்களுக்கு நவீன‌ யோசனைகலிருந்தால் அவற்றுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.

தொழில்நுட்பமா, வணிகமா..?

திறன்களைப் பொறுத்தவரை பொதுவாக நிலவும் ஒரு கருத்து.‍.. ‘தனிநபர்களுக்கு கோடிங் தெரிய வேண்டும்; வளரும் தொழில்நுட்பங்களில் நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும்’ என்பது. இது முற்றிலும் சரியல்ல. தனி நபர்ககளின் வன்திறன்களுக்கு ஈடாக மென்திறன்களும் முக்கியமானவை.

நிறுவனங்களில் லாப‌கரமாகத் தொழில் நடத்த தொழில்நுட்பங்களில் செய்யும் முதலீட்டைவிட அவற்றைப் பயன்படுத்தும்விதம் அல்லது பிசினஸ் மாடல்தான் முக்கியம். பின்னணி எதுவாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் மதிக்கும் திறன் உங்களிடமிருந்தால் இந்த டிஜிட்டல் பொருளாதாரத்தில் உங்களுக்கு ஓர் இடம் உண்டு.

உங்கள் ஒவ்வொருவருக்கும் எந்தத் துறையில் ஆர்வம் மற்றும் திறனிருக்கிறது என்றறிந்து, அதில் மேன்மேலும் வளர்ந்து வெற்றி பெற‌ வாழ்த்துகளுடன் இந்தத் தொடரை முடித்துக்கொள்கிறோம். இந்தத் தொடர் பற்றிய உங்கள் க‌ருத்துகளை navdesk@vikatan.com என்ற மெயில் மூலம் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். எந்தெந்த வாசகர்களுக்கு எந்தெந்த தலைப்பு சுவாரஸ்யமாக இருந்தது என்று தெரிந்துகொண்டால் மேலும் எழுத பயனுள்ளதாக இருக்கும்.

(நிறைவு பெற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு