மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 21 - எவ்வாறு நகர்ந்தன கற்கள்?

எவ்வாறு நகர்ந்தன கற்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
எவ்வாறு நகர்ந்தன கற்கள்?

கீஸா பிரமிடு, 4,600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. அது எத்தனை பழைமையான காலம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

தொடரைப் படித்துவரும் உங்களுக்கு, ‘இது என்ன வகையான தொடர்?’ எனும் சந்தேகம் உருவாகலாம். அறிவியலா, அமானுஷ்யமா, வரலாறா, வானவியலா என்றில்லாமல் அனைத்தையும் தொட்டுச் செல்கிறதே என்று நினைப்பீர்கள். மனித வரலாற்றில், ஆங்காங்கே நடைபெற்ற விடையில்லாத மர்மங்களையும் விந்தைகளையும் கண்டெடுத்துச் சொல்வதே இந்தத் தொடரின் ஒரே நோக்கம். விந்தைகளும் மர்மங்களும் அனைத்து இடங்களிலும் இருக்கின்றன. அவை எங்கிருக்கின்றன என்பதைத் தேடுவதுதான் என் கடமை. இவற்றில் சிலவற்றை ஏற்கெனவே ஆங்கிலத்தில் நீங்கள் படித்திருக்கலாம். ஆனால், தமிழுக்குப் புதிதென்பதால் தருகிறேன். இப்போதுகூட, நாம் எகிப்தின் புராதன நகரங்களுக்குள் செல்லப்போகிறோம். அங்கு உருவாக்கப்பட்டிருக்கும் விந்தை ஒன்றைப் பார்க்கப்போகிறோம். நான் எதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். ஆம், பிரமிடுகள் பற்றி நீங்கள் அதிக அளவில் அறிந்திருப்பீர்கள். சொல்லப்போனால், அவை சார்ந்து பல தகவல்களும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ‘அவற்றைவிட நான் எதைச் சொல்லப்போகிறேன்’ என்று யோசிப்பீர்கள். என்னுடன் கூடவே வாருங்கள்...

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 21 - எவ்வாறு நகர்ந்தன கற்கள்?

எகிப்தில், அருகருகே அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மிகப்பெரிய பிரமிடுகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இன்றுள்ள உலக அதிசயங்களில் அவையும் ஒன்று. ‘மென்கவ்ரெ பிரமிடு’ (Pyramid of Menkaure), ‘காஃப்ரெ பிரமிடு’ (Pyramid of Khafre), ‘கூஃபு பிரமிடு’ (Pyramid of Khufu) ஆகிய மூன்று பிரமிடுகளும் மனித ஆச்சர்யங்களின் உச்சம். அவற்றில் பெரியது கூஃபு பிரமிடுதான். அதை ‘கீஸா பிரமிடு’ (Pyaramid of Giza) என்றும் அழைக்கிறார்கள். அதன் ஆச்சர்யங்களைச் சொல்வதற்கே உங்களை எகிப்துவரை அழைத்து வந்தேன். கீஸா பிரமிடு எப்படிக் கட்டப்பட்டது என்பதை மையமாக வைத்தே இந்தப் பயணம் ஆரம்பிக்கிறது. கீஸா பிரமிடு எப்படிக் கட்டப்பட்டது என்று இன்றுவரை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவிழ்க்க முடியாத பெரும் மர்மமாக அது இருக்கிறது. இப்படிக் கட்டப்பட்டிருக்க வேண்டும், அப்படிக் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று பலவிதமான சந்தேகங்களும் அபிப்பிராயங்களும் சொல்லப்பட்டாலும், அவையெல்லாம் படிப்படியாக நிராகரிக்கப்பட்டன. பிரமிடுகளை ஆராயும் துறைக்கு ‘ஈஜிப்டாலாஜி’ (Egyptology) எனும் தனிப்பெயர்கூட வைத்திருக்கிறார்கள். பிரமிடுகள் எப்படிக் கட்டப்பட்டன எனும் மர்மத்தை விடுவிக்கும் முயற்சியில் இப்போதுகூட ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுகிறார்கள். ஆனால், எப்போதும் சரியான விடை கிடைக்கவில்லை என்பதுதான் நிஜம். பிரமிடுகளைக் கட்டுவதில் அப்படி என்ன மர்மம் இருக்க முடியும்? அதையே இனி பார்க்கலாம்.

முதலில், அடிப்படையான சில தகவல்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கீஸா பிரமிடு, 4,600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. அது எத்தனை பழைமையான காலம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ‘மம்மூத்’ என்று அழைக்கப்படும், ரோமங்கள் மூடிய ராட்சச யானை இனம், 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துபோய்விட்டது. அந்தவகை யானைகளைக் கொண்டுதான் பிரமிடுகள் கட்டப்பட்டன என்று சிலர் சொல்வார்கள். அது தவறு. சாதாரண யானைகளோ குதிரைகளோகூட அந்தக் காலங்களில் அங்கிருக்கவில்லை. எகிப்தில் குதிரைகள் அறிமுகமானது, சுமார் 3,500 ஆண்டுகளுக்குப் பின்னர்தான். அதிகபட்சம் அங்கிருந்த பாரங்களைச் சுமக்கும் மிருகங்களாக மாடுகளும் கழுதைகளுமே இருந்தன. இந்த மிருகங்களைப் பிணைத்த வண்டிகளும் அப்போது இருக்கவில்லை. 5,500 ஆண்டுகளுக்கு முன்னர், மொசபடோமியர்களால் சக்கரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும், பிரமிடு கட்டப்பட்ட காலங்களில் எகிப்துக்குச் சக்கரங்களோ, சக்கரமுள்ள வண்டிகளோ இருக்கவில்லை. உருளைகளாகப் பயன்படுத்துவதற்கு மிகப்பெரிய மரங்களும் அங்கில்லை. எகிப்து நாடு, மண்மேடுகள் நிறைந்த பாலைவனம். அத்துடன், பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களும் எகிப்தில் இருக்கவில்லை. கீஸாப் பிரமிடு ஒருவித சுண்ணாம்புக் கற்களாலும் (Lime Stones), கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. ஆனால், அந்தக் கற்களை வெட்டியெடுக்கக்கூடிய மலைகளோ, இடங்களோ அங்கு காணப்படவில்லை. இத்தனை இல்லாமைகளுக்கும் மத்தியிலேயே அந்த பிரமிடு கட்டப்பட்டிருக்கிறது. அதை எப்படிச் சாத்தியமாக்கினார்கள்? இந்தக் கேள்விக்கான பதிலையே இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறது உலகம்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 21 - எவ்வாறு நகர்ந்தன கற்கள்?

கீஸா பிரமிடு எப்படிக் கட்டப்பட்டிருக்கலாம் என்பதைப் பலரும் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எதுவுமே உண்மையில்லை. ஒரு லட்சத்துக்கும் மேலான அடிமைகளைக்கொண்டு, கட்டுமானத்துக்கான அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றியிருக் கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் உண்மையில்லை. எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட சுவர்ச் சித்திரங்களில், பிரமிடு கட்டுமானப் பணியின் காட்சிகள் வரையப்பட்டிருக்கின்றன. அத்துடன் அவை பற்றிய குறிப்புகளும் கிடைத்திருக்கின்றன. அங்கு பணிபுரிந்தவர்கள் எவரும் அடிமைகளாகக் காட்டப்படவில்லை. அதில் வரையப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் மதிப்புக்குரிய மக்களாகக் காணப்படுகிறார்கள். குறிப்புகளும் அதையே சொல்கின்றன. அத்துடன், ஒரு லட்சம் பேர் பிரமிடு கட்டுவதில் ஈடுபடவில்லை. மொத்தமாக 20,000 பேர் அளவிலேயே அந்தப் பணியைச் செய்து முடித்திருக்கிறார்கள். எகிப்தின் குடிமக்களாக வாழ்ந்த அனைவரும் ஒன்றுகூடி, தாங்கள் கடவுள்போல வழிபடும் மன்னனுக்காக, அந்தப் பிரமிடைக் கட்டி முடித்திருக்கிறார்கள். மொத்தம் இருபதே ஆண்டுகளில் எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன. இன்றைய நவீன மனிதனால், அன்றுள்ள வசதிகளையும் ஒருசில நவீன ஆயுதங்களையும்கொண்டு, அப்படியொரு பிரமிடைக் கட்டிமுடிக்கவே முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அப்படியென்றால், எப்படி அதைக் கட்டி முடித்திருக்க முடியும்... அப்படியான சிறப்பம்சம் அவர்களிடம் என்னதான் இருந்தது? இந்தச் சமயத்தில்தான், “பிரமிடுகள் ஏலியன்களால் கட்டப்பட்டவை” என்ற வெடிகுண்டும் போடப்பட்டது. ஆனால், அதுவும் உண்மையில்லை. ஏலியன்களை நாம் இங்கு இழுக்க வேண்டிய அவசியமேயில்லை. மனிதத் திறமைகளால் செய்யப்பட்ட அதிசயத்தை, எதற்கு ஏலியன்மேல் சுமத்திப் பெருமைப்படுத்த வேண்டும்... பிரமிடு நிச்சயமாக மனிதனால் கட்டப்பட்ட கட்டடமேதான். ஆனால், எப்படி என்பதுதான் மர்மம்

146 மீட்டர் உயரம்கொண்ட கீஸா பிரமிடு, 23 லட்சம் கற்களைக்கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கல்லும் 2,500 கிலோவிலிருந்து 80,000 கிலோவரையிலான கல். கீஸா பிரமிடின் மொத்த எடை 65 லட்சம் டன்கள் என்றால், அதன் பிரமாண்டத்தைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நேர்த்தியான நேர்கோடுகளுடன், செவ்வக வடிவில் வெட்டப்பட்ட சுண்ணாம்புக் கற்களால் வெளிப்புறமும், கடினமான கிரானைட் கற்களால் உட்புறமும் அமைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே வைக்கப்பட்டிருக்கும் அரசனின் கல்லறையைச் சுற்றியுள்ள பகுதிகள் 25,000 முதல் 80,000 கிலோ எடைகொண்ட கற்களாலும், வெளிப்பகுதி 2,500 கிலோ சுண்ணாம்புக் கற்களாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்திலிருந்துதான் பிரமிடுகளின் பிரமிப்புகளும் ஆரம்பமாகின்றன. அத்தனை கற்களையும் எங்கிருந்து, எப்படி நகர்த்தினார்கள் அவர்கள்? தரைவழியே மட்டுமன்றி, மேல்நோக்கியும் நகர்த்தியிருக்கிறார்கள். 146 மீட்டர் உயரத்துக்கு எப்படிக் கொண்டு சென்றார்கள்? இப்போது, மேலே நான் சொல்லியிருக்கும் இல்லாமைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பாருங்கள்.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 21 - எவ்வாறு நகர்ந்தன கற்கள்?

பிரமிடுக்கான கிரானைட் கற்களை 850 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஒரு மலைப்பகுதியிலிருந்து வெட்டியெடுத்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை அங்கிருந்து இங்குவரை எப்படி நகர்த்தியிருப்பார்கள்? 80,000 கிலோ எடையுள்ள கற்களை 850 கிலோமீட்டர் தூரத்துக்குத் தரைவழியே நகர்த்துவது எவ்வளவு கடினமென்று உங்களுக்குத் தெரியும். முடியவே முடியாத காரியம் அது. யானை, குதிரைகள் இல்லாமல், மனிதர்கள் இழுத்து வருவதென்றால், எத்தனை கடினமென்று சிந்தித்துப்பாருங்கள். ஒரு கல்லுக்கே அவ்வளவு கஷ்டப்பட வேண்டுமென்றால், அத்தனை கற்களையும் எப்படி நகர்த்துவது? அவர்களுக்கிருந்த ஒரேவழி நைல் நதி ஊடாகக் கொண்டுவருவதுதான். இங்கும் ஒரு சிக்கல் இருந்தது. 80,000 கிலோ எடையுள்ள கல்லை ஏற்றுவதற்கான படகு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்... அதை நைல் நதியூடாகக் கொண்டுவருவது சாத்தியம்தானா? மர உருளைகளைப் பயன்படுத்துவதும் சாத்தியமில்லை. மரங்கள் கிடைத்தாலும், மண் நிறைந்திருக்கும் நிலத்தில், மரங்கள் எப்படி உருளும்? பனியில் சறுக்கும் வண்டிபோலக் கீழே தட்டையான சறுக்கும் பலகைகள் அமைத்து, இழுத்து வந்திருக்கலாம். அங்கும் மணலில் சறுக்குவது சிரமமாகத்தான் இருக்கும். ஒருவேளை, மலைகளிலிருந்து வெட்டி நைல் நதியூடாகக் கொண்டு வந்திருந்தாலும், பிரமிடு கட்டப்படும் பகுதிக்கு அக்கற்கள் எப்படி நகர்த்தப்பட்டன... அவை எப்படி மேல்நோக்கி உயர்த்தப்பட்டன? இன்றுள்ள நிலையை வைத்துச் சிந்திக்கும்போது, பலவிதமான வழிகள் நமக்குத் தோன்றலாம். ஆனால், 4,500 ஆண்டுகளுக்கு முன்னரான அன்றிருந்த நிலைகளில், கயிறும், தடிகளும்கொண்டு அவை எப்படி உயர்த்தப்பட்டன? எப்படியிருந்தாலும், ஏதோவொரு வகையில் அவை நகர்த்தப்பட்டோ, உயர்த்தப்பட்டோதான் இருக்கின்றன. அதற்கான சாட்சியமாக, இன்றுகூட பிரமிடு நம் கண்முன்னே நிமிர்ந்து நிற்கிறது. ஆனால், அதை அவர்கள் எப்படிச் சாத்தியமாக்கினார்கள் என்ற மர்மம் மட்டும் புரியவில்லை. அங்கு என்ன ஒளிந்திருக்கிறது என்பதும் தெரியவில்லை.

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 21 - எவ்வாறு நகர்ந்தன கற்கள்?

“ஒவ்வொரு கல்லுக்கும் மேலே, மிதக்கக்கூடிய பொருள்களை வைத்துக் கட்டி, நைல் நதியின் வெள்ளம் பெருகும்போது, அந்த நீரின் உதவியுடன் மேல்நோக்கிக் கற்களைக் கொண்டு போயிருக்கிறார்கள்” என்று சிலர் சொல்கிறார்கள். “சுண்ணாம்புக் கற்கள், மலைகளிலிருந்து வெட்டியெடுக்கப்படவில்லை. எகிப்திலிருக்கும் மண்வகைகளைக் கலந்து, சிமென்ட்போலக் களியாக்கி, அங்குள்ள ஒவ்வொரு கல்லையும் உருவாக்கினார்கள்” என்று சிலரும், “கீழிருந்து மேலாகக் கோண வடிவில், ஏற்றமான அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் உதவியால் கற்கள் மேலே கொண்டு செல்லப்பட்டன” என்று சிலரும், “எகிப்தின் சிலிக்கா மண்ணின் மூலம் உருவாக்கிய மிகப்பெரிய அளவான கண்ணாடி வில்லைகளால் (Lense) சூரிய ஒளியைச் செலுத்தி கற்களை நேராக வெட்டியெடுத்தார்கள்” என்று சிலரும் வரிசையாக வெவ்வேறு வழிகளைச் சொல்கிறார்கள். அனைத்துக்கும் அவரவர் பாணியில் ஆதாரங்களையும் அள்ளி வழங்குகிறார்கள். ஆனால், அவை எதுவுமே உண்மை கிடையாது. எல்லாமே வெவ்வேறு காரணங்களால் மறுக்கப்படுகின்றன. அப்படி யென்றால் உண்மைக் காரணம்தான் என்ன என்று கேட்கும் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது கீஸாப் பிரமிடு.

பிதாகரஸ் பிறப்பதற்கு முன்னரே, சரியான கோணங்களுடன் இம்மியும் பிசகாமல், கணித விற்பன்னர்களையே மிரட்டும் விதமாக, மிக நேர்த்தியாகப் பிரமிடை அமைத்திருக்கும் அந்த மக்களுக்கு, அந்தக் கற்களையா நகர்த்த முடியாது? அருமையான தொழில்நுட்பம் ஒன்று அவர்களுடனேயே மர்மமாக மறைந்துவிட்டது!

(தேடுவோம்)