மத்திய அரசாங்கம், பணியாளர்கள் நிர்வாகத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. தொழில் உறவு வரைமுறை (Industrial Relations Code) 2020-ன் படி, நிரந்தர வேலைகளைக் குறிப்பிட்ட காலம்வரை கொண்ட ஒப்பந்த வேலைகளாக மாற்ற தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அறிக்கையைக் கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி வெளியிட்டுள்ளது.

இந்த மாற்றத்தின்படி, இனி நிரந்தரப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றாலும் இந்தப் பணியாளர்கள் வேலை இழக்கும்பட்சத்தில் எந்த இழப்பீட்டையும் பெற முடியாது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், இனி ஓய்வுக்காலத் தேவைக்கான பணத்தை நாம்தான் சேர்த்தாக வேண்டும் என்பதுதான்.
ஓய்வுக்காலத் தேவைக்கான பணத்தைச் சேர்க்க பல வழிகள் உண்டு. அதில் முக்கியமானதுதான் நேஷனல் பென்ஷன் ஸ்கீம் என்று சொல்லப்படும் என்.பி.எஸ் (NPS). மத்திய அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்காக 2004 ஜனவரியில் நடைமுறைக்குக் கொண்டுவந்த இந்தத் திட்டம், இந்தியக் குடிமக்கள் அனைவரும் தமது முதுமைக் காலத்தில் ஓய்வூதியம் பெற வேண்டும் என்ற பரந்த நோக்கத்துடன் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான ஓய்வூதியத் திட்டமாக மே 2009 முதல் விரிவாக்கம் செய்தது. 18 முதல் 65 வயது வரையான இந்தியக் குடிமக்கள் இதில் சேரலாம்.
இன்றைய தேதியில் என்.பி.எஸ்ஸின் ஒட்டுமொத்த உறுப்பினர் எண்ணிக்கை சுமார் 1.4 கோடி. ஓய்வூதிய நிதியத்தின் மொத்தத் தொகை சுமார் ஐந்து லட்சம் கோடி. இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது. என்றாலும், என்.பி.எஸ்ஸில் பணத்தைச் சேமித்தால், ஓய்வுக்காலத்தில்தானே பலன் கிடைக்கும். அவசரத் தேவைக்கு பணத்துக்கு என்ன செய்வது என்ற சந்தேகம் மக்கள் மனதில் இருக்கவே செய்கிறது. ஆனால், என்.பி.எஸ் திட்டத்தில் மிகப்பெரிய சிறப்பம்சமே, இந்தத் திட்டத்தில் ஓய்வுக் காலத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நீங்கள் விரும்பினால் பணம் பெறலாம் என்பதே. அதாவது, என்.பி.எஸ் இரண்டு பிரிவாக உள்ளது. என்.பி.எஸ் கணக்கு I மற்றும் என்.பி.எஸ் கணக்கு II என்பதுதான் அந்த இரண்டு வகை கணக்குப் பிரிவுகள். இந்த இரண்டு வகை என்.பி.எஸ் கணக்குகளில் தேவைக்கேற்ப பணம் பெறக்கூடியது கணக்கு II மூலம்தான். ஆனால், என்.பி.எஸ் கணக்கு I–ல் சந்தாதாரராக இருந்தால்தான் கணக்கு II–ஐ தொடங்க முடியும். எனவே, ஓய்வுக்கால பணத் தேவைக்கு கணக்கு I-யும், உடனடித் தேவைக்கு கணக்கு II-யும் தொடங்கிப் பராமரிப்பது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கணக்கு II தொடங்குதல்
என்.பி.எஸ் II கணக்கைத் தொடங்க விரும்புவோர், தங்களது கணக்கு I–ஐ பராமரிக்கும் வங்கிக்குச் சென்று, தொடக்க நிலை சந்தா 1,000 ரூபாயுடன் பதிவுக் கட்டணம் (சுமார்) 200 ரூபாயும் செலுத்தி கணக்கு II-ஐ தொடங்கலாம். இதை ஆன்லைன் வழியிலும் தொடங்கலாம். (பார்க்க பெட்டிச் செய்தி).

பணம் பெறுதல்
என்.பி.எஸ் கணக்கை நிர்வகிக்கும் வங்கியை அணுகி படிவம் UOS-S12–ஐ பூர்த்தி செய்து கொடுத்தால், கொடுத்த நாள் தவிர்த்து மூன்றே நாள்களில் கேட்ட பணம் சந்தாதாரின் வங்கிக் கணக்குக்கு வந்துசேர்ந்துவிடும்.
பிற பயன்பாடுகள்
தேவைப்பட்டால் கணக்கு II–ல் உள்ள பணத்தை என்.பி.எஸ் I கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம். குறிப்பிட்ட காலம் வரை பணத்தை எடுக்க முடியாது என்ற நிபந்தனை பொதுமக்களுக்கு கிடையாது. என்.பி.எஸ் கணக்கு I-க்கு இருப்பதுபோல் வருடாந்தர பராமரிப்புக் கட்டணம் கிடையாது. தேவைப்படும்போது பணம் பெறலாம். இவற்றுக்கெல்லாம் மேலாக ஓய்வு பெறும் போது என்.பி.எஸ் I கணக்குமூலம் பெறப்படும் ஒட்டுமொத்தத் தொகையுடன், கணக்கு II-ன் கணிசமான தொகையும் கிடைக்கும்போது நிம்மதியான ஓய்வுக்காலம் நிச்சயம்.
என்.பி.எஸ்ஸுக்கு தற்போதைய சலுகைகள்
1. முன்னதாக, என்.பி.எஸ்ஸில் உறுப்பினராக இருந்து ஓய்வூதியக் கணக்கு முதிர்வுக்கான 60 வயது நிறைவு பெறும்முன்பே திட்டத் திலிருந்து வெளியேறியவர்கள், மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம். திட்டத்தை நிர்வகிக்கும் ஓய்வூதிய நிதிய ஒழுங்கமைப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA).

2. நியமனதாரரை மாற்றியமைக்க கணக்கு வைத்துள்ள வங்கிக்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என்ற தற்போதைய நடைமுறையை மாற்றி, மின்னணு கையொப்பம் மூலம் ஆன்லைன் வழியே நியமன தாரர்களை மாற்றிக்கொள்ள முடியும்.
3. மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி (Systematic investment Plan) முறையில் முதலீடு செய்வதுபோல, என்.பி.எஸ்ஸிலும் உண்டு.
பணத்தை நிர்வகிக்கும் நிறுவனங்கள்..!
என்.பி.எஸ்ஸில் முதலீடு செய்யும் நமது பணம் இப்படி ஆகுமோ, அப்படி ஆகுமோ என்ற மனக்குழப்பம் தேவையற்றது. ஏனென்றால் நமது முதலீட்டை எப்படி வளர்த்தெடுப்பது என்ற விருப்பம் (Option) நம்மிடமே உள்ளது. எப்படியெனில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை நிர்வாகம் செய்வது அரசால் அமைக்கப்பட்ட ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA).
உறுப்பினர்களின் சந்தா தொகையை நிர்வாகம் செய்ய எட்டு நிறுவனங்களை நியமித்துள்ளது ஆணையம். அவை, 1. ஆதித்ய பிர்லா சன் லைஃப் மேனேஜ்மென்ட், 2. ஹெச்.டி.எஃப்.சி பென்ஷன் ஃபண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி, 3. யு.டி.ஐ ரிடையர்மென்ட் சொல்யூஷன்ஸ், 4. எஸ்.பி.ஐ பென்ஷன் ஃபண்ட் (பி) லிமிடெட், 5. ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல், 6. ரிலையன்ஸ் பென்ஷன் ஃபண்ட், 7. கோட்டக் மஹிந்திரா பென்ஷன் ஃபண்ட், 8. எல்.ஐ.சி பென்ஷன் ஃபண்ட். இந்த நிறுவனங்கள் அனைத்துமே முதலீட்டு அனுபவம் மிக்கவை. எனவே, நீங்கள் எந்த நிறுவனத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

மூன்று வகை முதலீட்டு முறை
என்.பி.எஸ்ஸைப் பொறுத்தவரை, E-C-G என மூன்று வகையான முதலீட்டு முறைகள் உள்ளன. பங்கு (Equity), பெரு நிறுவன முதலீடு (Corporate), அரசுக் கடன் பத்திரம் (Govt security) என்பவையே அவை. இவற்றில் எந்த முதலீட்டு முறையும் நாம் தேர்வு செய்யலாம் அல்லது தேர்வு செய்ய அனுமதிக்கலாம். எந்தெந்த இனங்களில் எத்தனை சதவிகிதம் முதலீடு என்பதையும் நாமே தேர்வு செய்யலாம்.
நமக்கு முதலீட்டு அனுபவம் இருந்து தேர்வு செய்தால் அது ஆக்டிவ் சாய்ஸ் (Activie choice) முதலீட்டு முறையையும், அனுபவம் இல்லாத நிலையில் தானாகத் தேர்வு செய்ய அனுமதித்தால் அது ஆட்டோ சாய்ஸ் (Auto choice) முதலீட்டு முறையும் தேர்வாகும். தவிர, ஏற்கெனவே தேர்வு செய்த மேலாளர், முதலீட்டு முறை மற்றும் முதலீட்டு சதவிகிதம் ஆகிய வற்றையும் நாமே அவ்வப்போது மாற்றி யமைக்கலாம். எம்.பி.எஸ் திட்டத்தில் பண்ட் மேனேஜர்களைப் பொறுத்து 8 - 10% என்ற அளவுக்கு வருமானம் கிடைக்கிறது.
இதற்கு மேல் முதலீட்டுக்கு என்ன பாதுகாப்பு தேவை? வளர்ச்சிக்கு என்ன உத்தரவாதம் தேவை..?
என்.பி.எஸ் கணக்கைத் தொடங்குவது எப்படி?
என்.பி.எஸ் கணக்கு II-ஐ ஆன்லைனில் தொடங்க நினைப்பவர்கள் https//enps.nsdl.com என்ற வலைதளத்தை அணுக வேண்டும். இதில் ‘Tier II Activation’ என்பதை க்ளிக் செய்தால், அதில் 1. PRAN Number (நிரந்தர ஓய்வுக்காலக் கணக்கு எண்) 2. Date of Birth (பிறந்த நாள்) 3. PAN (நிரந்தரக் கணக்கு எண்) ஆகிய தகவல்களைத் தந்து ‘Verify PRAN’ என்பதை க்ளிக் செய்தால், ஓ.டி.பி கிடைக்கும். ஓ.டி.பி-யை அதற்கான இடத்தில் பதிவு செய்து, வங்கி விவரங்களைப் பூர்த்தி செய்து ‘Validate AADHAR‘ என்பதை க்ளிக் செய்தால், ஒப்புகை (Acknowledgement) கிடைக்கும். இதை ஓ.கே செய்ய வேண்டும். பிறகு, பி.எஃப்.எம் (Pension Fund Manager) தேர்வு செய்து, முதலீட்டு முறை ஆக்டிவ் (Active) அல்லது ஆட்டோ (Auto) என்பதையும் தேர்வு செய்து ‘Save and Proceed’-ஐ க்ளிக் செய்த பின் நியமனதாரர் விவரம் பூர்த்தி செய்து மீண்டும் Save and Proceed’ க்ளிக் செய்து, பான் கார்டு ஸ்கேன் செய்த காப்பியையும் மற்றும் ரத்து செய்த காசோலையையும் பதிவேற்றவும். இந்த ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து முடிந்ததும ்‘Upload’-ஐ க்ளிக் செய்தபின், Tier II NPS கணக்கில் 1,000 ரூபாய் செலுத்தி கணக்கைத் தொடங்கலாம். இதற்கான ரசீது கிடைக்கும். ஆதார் எண்ணைப் பயன்படுத்தி மின்னணு கையொப்பம் (e-sign) செய்ய வேண்டும். இப்போது மீண்டும் ஓ.டி.பி வரும். இந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, கையொப்பமிட்டு பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைப்பது அவசியம். TRADE WORLD, 4th Floor, ‘A’ Wing, Kamala Mills Compound, Lower Parel, Mumbai - 400013.