Published:Updated:

எலெக்ட்ரிக் கார்கள்... 7 சந்தேகங்கள்!

எளிய விளக்கங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ன்றைக்கு கார் வாங்க நினைப்பவர்கள்கூட ‘பிறகு பார்த்துக்கொள்ளலாமே...’ என்று நினைக்க முக்கியக் காரணம் எலெக்ட்ரிக் கார்கள். இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளின் பட்டியல் வெகு நீளம். எனவேதான் லியோனார்டோ டிகாப்ரியோ, கேமரூன் டயஸ் போன்ற ஹாலிவுட் பிரபலங்கள் எலெக்ட்ரிக் கார்களையே பயன்படுத்துகிறார்கள். என்றாலும், நம்மவர்களுக்கு எலெக்ட்ரிக் கார்கள் பற்றிப் பல சந்தேகங்கள் உள்ளன. அவற்றுக்கான எளிய விளக்கங்கள் இங்கே...

electric car
electric car

சந்தேகம் 1: அதிக தூரம் பயணிக்க முடியாது!

விளக்கம்: பெட்ரோல்/டீசல் கார்களைவிட, எலெக்ட்ரிக் கார்கள் குறைந்த தூரமே செல்லும். அதாவது, சிங்கிள் சார்ஜில் சராசரியாக 250 கி.மீ தூரம் செல்லக்கூடியவை. ஆனால், அவற்றின் செயல்பாடு பேட்டரியின் சைஸ், வாகனத்தின் எடை, காரை ஓட்டும் முறை, எலெக்ட்ரிக் மோட்டாரின் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். கோனா EV, நெக்ஸான் EV, MG eZS போன்ற லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் கார்களில் டிரைவிங் மோடுகள், ஷிஃப்ட்-பை-வயர் (Shift-By-Wire) அமைப்பு, பல்வேறு லெவல்களைக்கொண்ட ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங், பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம், அதிக செயல்திறனுக்குப் பெயர்பெற்ற ‘Permanent Magnet Synchronous’ வகை எலெக்ட்ரிக் மோட்டார், லித்தியம் அயான் பேட்டரி (Lithium Ion Battery) எனப் பல்வேறு வசதிகள் இதற்காகவே இடம்பெற்றுள்ளன.

சந்தேகம் 2: பராமரிப்புச் செலவு அதிகம்!

விளக்கம்: பெட்ரோல்/டீசலில் இயங்கும் கார்களைவிட, எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகம்தான். ஆனால் பெட்ரோல், டீசல் கார்களைவிடப் பராமரிப்புச் செலவு குறைவு. சர்வீஸ் சென்டருக்கு இந்த காரைக் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும், இதில் இன்ஜின் இல்லாததால் இதன் பராமரிப்பு எளிதான விஷயமே (வால்வ், டிரைவ் பெல்ட், ஸ்பார்க் ப்ளக், ஹோஸ், ஆயில்கள், ஃபில்டர்கள் என எதுவுமே தேவை இல்லை); வீல்களில் நைட்ரஜன் காற்று மற்றும் தேவையான Fluid-களை நிரப்பினாலே போதும்!

எலெக்ட்ரிக் கார்கள்... 7 சந்தேகங்கள்!

உதாரணமாக, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஏறக்குறைய ரூ.80. அதே நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை உத்தேசமாக 7-8 ரூபாய். எனவே, பெட்ரோல் காரில் ஒரு கி.மீ தூரம் செல்ல ரூ.5-6 செலவானால், எலெக்ட்ரிக் காரில் ஒரு கி.மீ செல்வதற்கு ரூ.1-2 ரூபாய் மட்டுமே செலவாகும். தவிர பெட்ரோல் காரில் அடிக்கடி பெட்ரோல் நிரப்புவதைப்போல, எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும். டேங்க்கில் இருக்கும் பெட்ரோலுடன் ஒப்பிட்டால், பேட்டரியின் ஆயுள்காலம் அதிகம்.

சந்தேகம் 3: வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோல சார்ஜிங் ஸ்டேஷன்கள் நம் நாட்டில் இல்லை!

விளக்கம்: எலெக்ட்ரிக் கார்களுடன் வழங்கப்படும் போர்ட்டபிள் ஏசி (Portable AC) சார்ஜரைக்கொண்டே வீடுகளிலுள்ள 220V ப்ளக் பாயின்ட்டில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இந்த வாகனங்களுக்கு மானியம் வழங்கக்கூடிய ஃபேம் 2 (FAME II) திட்டத்தின்படி, நாடெங்கும் 2,636 சார்ஜிங் பாயின்ட்களை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. அந்தப் பட்டியலில் தமிழகத்தில் அமைக்கப்படும் 256 சார்ஜிங் பாயின்ட்டுகளும் அடக்கம்; சென்னையில் 141, கோவையில் 25, மதுரையில் 50, வேலூர், சேலம், ஈரோடு, தஞ்சை ஆகிய நகரங்களில் தலா 10 என்ற எண்ணிக்கையில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும். நகரத்தில் ஒவ்வொரு 3 கி.மீட்டருக்கும், நெடுஞ்சாலைகளில் 25 கி.மீட்டருக்கும், எலெக்ட்ரிக் பஸ் மற்றும் ட்ரக்குகளை சார்ஜ் செய்ய ஒவ்வொரு 100 கி.மீட்டருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கும். ஏத்தர் (Ather) போன்ற சில எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், ஷாப்பிங் மால், ரயில்வே/பஸ் ஸ்டேஷன், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்து வருகின்றன. இவை தவிர, எலெக்ட்ரிக் கார்களுடன் வழங்கப்படும் CCS Type 2 சார்ஜர்களைப் பயன்படுத்தினால், வேகமாக மின்னேற்றம் செய்ய முடியும்.

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களைவிட, எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகம்தான்.

சந்தேகம் 4: எலெக்ட்ரிக் கார்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இல்லையா?

விளக்கம்: பெட்ரோல்/டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையுடன் ஒப்பிட்டால், எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பை (Zero Emission) ஏற்படுத்தாது. ஆனால் அவற்றின் இயக்கத்துக்குத் தேவையான மின்சாரம் தவிர, நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 80% நிலக்கரி மின்நிலையம் மற்றும் வெப்ப ஆலை ஆகியவற்றிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

எலெக்ட்ரிக் கார்கள்... 7 சந்தேகங்கள்!

தன்வசமுள்ள ஆற்றலைப் பயன்படுத்துவதில் எலெக்ட்ரிக் கார்களுக்கு முதலிடமும் (90% Efficiency), பெட்ரோல்/டீசல் கார்களுக்கு இரண்டாவது இடமும் (40% Efficiency) கிடைக்கிறது. பழைய நிக்கல் மெட்டல் ஹைட்ரைடு (Nickel Metal Hydride) பேட்டரிகளுடன் ஒப்பிட்டால், நவீன லித்தியம் அயான் பாலிமர் (Lithium Ion Polymer) பேட்டரிகள் அதிக செயல்திறன், சார்ஜிங் திறன், சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. கோனா EV, நெக்ஸான் EV, MG eZS, E-வெரிட்டோ, டிகோர் EV போன்ற எலெக்ட்ரிக் கார்களில் இந்த பேட்டரிகள் இருப்பது பெரிய ப்ளஸ்.

எலெக்ட்ரிக் 
கார்
எலெக்ட்ரிக் கார்

சந்தேகம் 5: பெட்ரோல், டீசல் கார்கள்போல எலெக்ட்ரிக் கார்கள் வேகமாகச் செல்லாது!

விளக்கம்: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் வருகையைத் தொடங்கிவைத்த ரேவா, டிகோர் மற்றும் வெரிட்டோவின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள், திறன் குறைவான பேட்டரி மற்றும் மோட்டாரைக் கொண்டிருந்தன. எனவே, அதன் பர்ஃபார்மன்ஸ் மற்றும் ரேஞ்ச் குறைவாக இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வெளிப்பாடாக நவீன எலெக்ட்ரிக் கார்களில் லித்தியம் அயான் பேட்டரி இடம்பெற்றிருப்பதால், 0 - 100 கி.மீ வேகத்தை 10 விநாடிகளுக்குள் எட்டிவிடக்கூடிய திறனைக்கொண்டுள்ளன. இவை சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டிருந்தாலும், வாகனத்தை ஓட்டத் தொடங்கிய மாத்திரத்திலேயே (0 ஆர்பிஎம்மில் இருந்தே) பவர் கிடைக்கும். இதன் டார்க்கும் (இழுவைத் திறன்) பெட்ரோல்/டீசல் வாகனங்களுக்கு இணையாகவே இருக்கிறது; இதுவே பெட்ரோல்/டீசல் வாகனங்கள் என்றால், அவை குறிப்பிட்ட ஆர்பிஎம்மில்தான் அதிகபட்ச பவர்/டார்க்கைத் தரும். எனவே, டிராக் ரேஸ் (Drag Race) வைத்தால், தற்கால எலெக்ட்ரிக் கார்கள் சில பெட்ரோல்/டீசல் கார்களைத் தோற்கடித்துவிடும் என்பதே நிதர்சனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எலெக்ட்ரிக் 
கார்
எலெக்ட்ரிக் கார்

சந்தேகம் 6: எலெக்ட்ரிக் கார்களில் விசாலமான இடவசதி இருக்காது.

விளக்கம்: எலெக்ட்ரிக் காரில் இன்ஜின் கிடையாது என்பதால், பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள்கொண்ட கார்களைவிட இவை சத்தமில்லாமல் இயங்கும். ஆரம்பத்தில் இது புதிதாக இருந்தாலும், பழகிய பிறகு சுகானுபவமாக மாறிவிடும். இன்ஜினுக்கு பதிலாக எலெக்ட்ரிக் மோட்டார், டேங்க் மூடிக்கு பதில் சார்ஜிங் பாயின்ட், மூடப்பட்ட கிரில் என பெட்ரோல், டீசல் காரிலிருந்து கணிசமாக மாறியிருக்கும். ஆனால், காரின் ஃப்ளோர் பகுதியில் பேட்டரி வைக்கப்பட்டிருக்கும் என்பதால், கேபின் இடவசதியில் பெரிய மாற்றம் இருக்காது (எரிபொருள் டேங்க் இல்லாததும் காரணம்). தோற்றத்தில் சில வேறுபாடுகள் இருந்தாலும் (ஏரோடைனமிக் அம்சங்கள்), வசதிகளின் பட்டியலில் பெரிய மாறுதல் இருக்காது.

Electric cars
Electric cars

சந்தேகம் 7: எலெக்ட்ரிக் கார்களின் பாதுகாப்பு நிரூபிக்கப்படவில்லை!

உண்மை: பெட்ரோல்/டீசல் இன்ஜின் தவிர எலெக்ட்ரிக் அமைப்பைப் பொருத்தக்கூடிய திறனுடனேயே கார் உற்பத்தியாளர்கள் தங்கள் சமீபகாலத் தயாரிப்புகளைத் தயாரித்து வருகின்றனர். எனவே, காரின் சேஸி/பாடியில் எடை குறைவான அதே நேரம் திடமான உலோகங்கள் இடம்பெறுவதுடன், கட்டுமானத்தில் நவீன முறைகள் பின்பற்றப்படுகின்றன. Euro NCAP நடத்திய பாதுகாப்புச் சோதனையில் கோனா EV மற்றும் MG eZS ஆகியவை 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது. மேலும் Global NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் வழக்கமான நெக்ஸான் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் நெக்ஸானும் அந்த வரலாற்றைத் தொடரும் என நம்பலாம். பேட்டரி அமைப்புக்கு IP67 மற்றும் AIS-48/UL 2580 ரேட்டிங் தவிர, லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டீல் பேக்கேஜிங் வழங்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம். இவை தவிர வழக்கமான கார்களில் இருக்கும் காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, BA, டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரிவர்ஸ் கேமரா, சீட் பெல்ட் ரிமைண்டர், க்ரூஸ் கன்ட்ரோல் எனப் பல பாதுகாப்பு வசதிகள் லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் கார்களில் இடம்பெற்றுள்ளன.

மின்சார கார்கள் குறித்த உங்கள் சந்தேகங்கள் இனி தீர்ந்திருக்குமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு