Published:Updated:

உறவினருக்கு கொடுக்கும் கடன்... கவனிக்க 7 அம்சங்கள்!

நெருங்கிய உறவினராக இருந்தாலும், கடன் பணத்தை எப்போது திருப்பித் தருவீர்கள் என்பதைக் கேளுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

டன் வாங்குவதும் கொடுப்பதும் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதவை. “இன்று பொருளாதார மந்தநிலையால் பலர் வேலையிழந்து, பணத்தேவையில் தவித்து வருகிறார்கள். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், வங்கியிடமிருந்து நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணமில்லாமல் தவிக்கும் நிலையில், மீண்டும் யாரிடம் கடன் வாங்களாம் என்று தேடி அலைகிறார்கள். அவர்களில் ஒருவராக நம் நண்பரோ, உறவினரோ இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவி செய்ய முன்வந்தாலும், அவர்களுக்குக் கடன் கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் சில முக்கியமான அம்சங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன். அந்த அம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

உறவினருக்கு கொடுக்கும் கடன்... கவனிக்க 7 அம்சங்கள்!

1. நிதிநிலையை மதிப்பிடுங்கள்!

பொருளாதாரம் மந்தமடைந்துவரும் இந்த நாள்களில் வேலையிழப்பு, கடன் நெருக்கடி, சம்பளம் பெறுவதில் தாமதம் போன்றவை அதிகரித்துவருகின்றன. இதனால் தனிநபர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கடன் கேட்பதும் அதிகரித்துவருகிறது.

உறவினர்கள், நண்பர்கள் கடனுதவி கேட்டால் அதை மறுப்பது கடினம். முதலில் உங்கள் செலவுகள் போக, கடன் கேட்பவர்களுக்கு எவ்வளவு தர முடியும் என்று கணக்குப்போட்டுப் பாருங்கள். அத்தியாவசியச் செலவுகளுக்குப் பணத்தை ஒதுக்கிய பிறகு மீதமுள்ள தொகை ஏதாவது இருந்தால் மட்டுமே கடன் தர வேண்டும். முக்கியமாக, கடன் கேட்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள்மீது உங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தால் மட்டும் அவர்களுக்கு உதவுங்கள்.

2. முதலீடுகளைத் தொட வேண்டாம்!

நீங்கள் பண உதவி செய்யத் தயாராக இருந்தாலும், எந்தப் பணத்தை எடுத்துத் தருவது என்ற குழப்பம் அவ்வப்போது ஏற்படும். நம்மிடம் இருக்கும் உபரிப் பணத்தை மட்டுமே கடனாகத் தர வேண்டும். நீங்கள் செய்திருக்கும் முதலீட்டிலிருந்து பணத்தை எடுத்துத் தராதீர்கள். உதாரணமாக, சிலர் தங்க நகையை அடகு வைத்தோ, விற்றோகூடக் கடன் தருவார்கள். அப்படிச் செய்யவே கூடாது. இன்னும் சிலர் ஓய்வுக்காலத்துக்கோ, குழந்தைகளின் எதிர்காலத்துக்கோ செய்து வைத்திருக்கும் முதலீட்டிலிருந்து பணத்தை எடுத்துத் தருவார்கள். அந்த முதலீட்டில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டால்கூட நீங்கள் நினைத்ததை அடைய முடியாது.உங்கள் சேமிப்புக் கணக்கில் பணம் இருந்தால் அதை எடுத்துத் தரலாம்.

உறவினருக்கு கொடுக்கும் கடன்... கவனிக்க 7 அம்சங்கள்!

3. `இல்லை’ என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!

நம் அன்புக்குரியவர்களிடம் `இல்லை’ என்று சொல்வது சற்று கடினமானதுதான். ஆனால், உதவி செய்யும் அளவுக்குப் போதிய பணம் இல்லையென்றாலோ, நமது வேலை நிலையற்றதாக இருக்கிறது என்றாலோ கடன் தருவதைத் தவிர்த்துவிடுங்கள்.

கடன் கேட்பவரின் தேவை முக்கியமானதாகவோ, அவசரத்துக்குத் தேவைப்படுவதாகவோ இருந்தால் மட்டும் கடன் கொடுங்கள். அவர் கார் வாங்கவோ, கிரெடிட் கார்டு பாக்கியைக் கட்டுதற்கோ கடன் வழங்காதீர்கள். மேலும், கடன் வாங்கியவர் அதே தேவைக்காக மீண்டும் கடன் கேட்டாலும் தர வேண்டாம். நிதியைச் சரியாகத் திட்டமிடாததால்தான் அவர் மீண்டும் கடன் பெறுகிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கடனளிக்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால், ‘என்னிடம் பணமில்லை’ என்று சொல்வதில் தவறில்லை. உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக நீங்கள் கடன் தர மாட்டீர்கள் என்பதை உணர்த்திவிட்டால், தேவையில்லாமல் உங்களிடம் கடன் கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

நெருங்கிய உறவினராக இருந்தாலும், கடன் பணத்தை எப்போது திருப்பித் தருவீர்கள் என்பதைக் கேளுங்கள்!

4. திருப்பிக் கேட்க வெட்கப்பட வேண்டாம்!

உறவினர்களிடம் கடன் கொடுத்தால், அதைத் திருப்பிக் கேட்கப் பெரும்பாலானோர் கூச்சப்படுவது வழக்கம். அவர்களிடம் வழங்கிய கடனை எப்படித் திருப்பிக் கேட்பது என்று தெரியாமல் தவிப்போம். என்னதான் நெருங்கிய உறவினராக, நன்கு பழகிய நண்பராக இருந்தாலும், `எப்போது பணத்தைத் திருப்பித் தருவீர்கள்?’ என்று கேட்டு, உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டு கொடுங்கள். அவர் சொல்லும் காலத்துக்குள் பணத்தைத் தரவில்லையென்றால் உங்கள் நிதி நிலையையும், உங்கள் நிதித் திட்டத்தையும் சொல்லி பணத்தைத் திருப்பித் தரும்படி கோபப்படாமல், ஆனால் உறுதியாகக் கேளுங்கள்.

money
money

சில நேரங்களில் சிறு தொகையைக் கடனாக வழங்கினால் அதை நாம் மறந்துவிடுவோம். கடன் பெற்றவரும் அது சிறு தொகை என்பதால் மறந்துவிடுவார். எனவே, தொகை சிறிதோ பெரிதோ நீங்கள் தந்த கடனை எழுதி வைத்துக் கொள்வதோ, போனில் ரிமைண்டர் செட் செய்து வைத்துக்கொள்வதோ அவசியம்.

5. பத்திரங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்!

நமக்கு நெருக்கமானவர்களுக்குத்தான் கடன் வழங்குகிறோம் என்றாலும், அவற்றை ஆவணப்படுத்தி வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். சாதாரணமான கடனுதவியாக இருந்தால், நீங்கள் உறுதிமொழிப் பத்திரம் (Promisory Note) தயார் செய்துகொள்ளலாம். இதில் கடன் வாங்கியவர் குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட தேதியில் செலுத்த வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடுங்கள். அந்தப் பத்திரத்தில் கடன் வாங்கியவர் கையெழுத்திட வேண்டும். கூகுளில் தேடினாலே அதற்கான மாதிரி படிவங்கள் கிடைக்கும். அது கட்டாயமில்லை என்றாலும், ஒரு முத்திரைத்தாளில் குறிப்பை வரைந்து ஒரு நோட்டரியிடம் (சிறப்பு நீதித்துறை அதிகாரி) ஒரு சிறிய கட்டணத்தைச் செலுத்தி சான்று பெறலாம்.

பத்திரத்தில் பயன்படுத்தும் சொற்களில் கவனமாக இருங்கள். முழுப் பெயர்களைப் பயன்படுத்தவும் (பான் / வாக்காளர் ஐடி கார்டுகள் போன்ற அடையாளச் சான்றுகளில் இருப்பதைப்போல இருக்க வேண்டும்). தேதியையும் இடத்தையும் தெளிவாகக் குறிப்பிடவும். திருப்பிச் செலுத்தும் கால அளவு (மாதந்தோறும், ஆண்டுதோறு, மொத்தத் தொகை அல்லது தவணைகளில்) மற்றும் வட்டி எவ்வாறு கணக்கிடப்படும் போன்ற தகவல்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு பத்திரத்தைத் தயார் செய்ய வேண்டும். வங்கிக் காசோலை மூலம் பரிவர்த்தனையை மேற்கொண்டால், ஒப்பந்தத்தில் காசோலை எண்ணைக் குறிப்பிடவும்.

6. கேரன்டி கையொப்பம் வேண்டாம்!

உங்கள் உறவினருக்கோ, நண்பருக்கோ கடனுதவி செய்ய முடியவில்லை என்பதால், அவர்கள் வங்கிக் கடன் பெறுவதற்கு கேரன்டி கையொப்பம் மட்டும் போடாதீர்கள். கடன் வழங்குவதைவிட, அதை கேரன்டி செய்வதில் உள்ள ஆபத்துகள் அதிகம். உங்கள் உறவினரோ, நண்பரோ கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், வங்கி உங்களுக்குத்தான் நோட்டீஸ் அனுப்பும்.

உதாரணமாக, உங்கள் நண்பர் வாங்கிய ரூ.50,000 கடனுக்கு நீங்கள் உத்தரவாதம் அளித்திருந்து, அதை அவர் திருப்பிச் செலுத்தாமல்விட்டால் கடன், வட்டி, அபராதம் போன்றவற்றைச் சேர்த்து சுமார் ஒரு லட்ச ரூபாயை நீங்கள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

7. கடன் வாங்கி, கடன் கொடுக்காதீர்கள்!

உங்கள் நண்பரோ, உறவினரோ அவசரமாகக் கடன் கேட்டு வந்து நின்றால், இன்னொருவரிடம் கடன் வாங்கி அதை அவர்களுக்குக் கொடுக்காதீர்கள். கடன் செலுத்தக் கடன் வாங்குவது எப்படிப் பிரச்னையை உருவாக்குமோ, அதேபோலத்தான் கடன் கொடுக்கக் கடன் வாங்குவதும்.

நம் அன்புக்குரியவர்கள் நிதிப் பிரச்னையில் சிக்கித் தவிப்பதைப் பார்க்க சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், உங்களுக்குச் சிக்கல் இல்லாமல் அவர்களுக்கு உதவ முடியுமா என்று யோசிப்பதுதான் புத்திசாலித்தனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு