Published:Updated:

“பின்னாலிருந்து கட்டிப்பிடித்தார்... முகத்தில் குத்துவிட்டேன்!”

விளையாட்டுத்துறையை அதிரவைக்கும் செக்ஸ் டார்ச்சர்...
பிரீமியம் ஸ்டோரி
விளையாட்டுத்துறையை அதிரவைக்கும் செக்ஸ் டார்ச்சர்...

- விளையாட்டுத்துறையை அதிரவைக்கும் செக்ஸ் டார்ச்சர்...

“பின்னாலிருந்து கட்டிப்பிடித்தார்... முகத்தில் குத்துவிட்டேன்!”

- விளையாட்டுத்துறையை அதிரவைக்கும் செக்ஸ் டார்ச்சர்...

Published:Updated:
விளையாட்டுத்துறையை அதிரவைக்கும் செக்ஸ் டார்ச்சர்...
பிரீமியம் ஸ்டோரி
விளையாட்டுத்துறையை அதிரவைக்கும் செக்ஸ் டார்ச்சர்...
‘அம்மாவின் வழியில் ஆட்சி செய்கிறோம்’ என்று மூச்சுக்கு முந்நூறு முறை நீட்டி முழங்குகிற அ.தி.மு.க ஆட்சியில், அரசுத்துறையில் பணிபுரிந்துவரும் ஒரு பெண்ணுக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகள் அதிரவைக்கின்றன. எந்தப் பின்புலமும் இல்லாமல் சொந்தத் திறமையால் விளையாட்டுத்துறையில் முன்னுக்கு வந்திருக்கும் அந்த இளம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கேட்கும்போதே நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கேட்டு துறைரீதியாக முறையிட்டும் சரியான நீதி கிடைக்காததால், தற்போது நீதிமன்றப் படியேறியிருக்கிறார் அந்தப் பெண். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையில் பணிபுரிந்து வரும் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரிக்கிறார்...

‘‘சென்னைதான் என் சொந்த ஊர். என் சிறு வயதிலேயே அப்பா இறந்துவிட, கூலி வேலை செய்துதான் அம்மா என்னைப் படிக்கவைத்தார். சிறு வயதிலிருந்தே கராத்தே, குங்ஃபூ என எனக்கு ஆர்வம் உண்டு. 16 வயதிலேயே குங்ஃபூவில் பிளாக் பெல்ட் வாங்கினேன். தமிழக பெண்கள் பாக்ஸிங் போட்டியில் ஆரம்பித்து தேசிய, சர்வதேசப் போட்டிகள் வரை பல சாம்பியன் பட்டங்களைப் பெற்றிருக்கிறேன்.

2012-ம் ஆண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கோகோ-கபடி கோச்சாக பணியில் சேர்ந்தேன். 2019-ல் சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலராகப் பதவி உயர்வு கிடைத்தது. இங்கிருந்துதான் பிரச்னையும் ஆரம்பமானது.

சிவகங்கையிலுள்ள திறந்தவெளி விளையாட்டு அரங்கம் ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாகப் பராமரிப்பின்றி இருந்தது. உள்ளூர் ஆளுங்கட்சிப் பிரமுகரின் வாரிசும், சில ரௌடிகளும் மைதானத்தை ஆக்கிரமித்திருந்ததுடன், மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டுவந்தனர். ஹாஸ்டல் மாணவர்களுக்கான உணவுப்பொருள்கள் வாங்குவதிலும், ஊழியர்கள் துணையுடன் இவர்கள் ஊழல் செய்துவந்தனர். நீச்சல் குளத்தில் பயிற்சிக்கு வருபவர்களிடம் பண வசூல் செய்தனர். இதையெல்லாம் தட்டிக்கேட்டு நடவடிக்கை எடுத்தேன். உடனே, இதை சாதிரீதியான பிரச்னையாகத் திசைதிருப்பினார்கள்.

“பின்னாலிருந்து கட்டிப்பிடித்தார்... முகத்தில் குத்துவிட்டேன்!”
AH86

இந்தநிலையில், நாகர்கோவில் மகளிர் விளையாட்டு விடுதி மேலாளராக எனக்கு இடமாறுதல் கிடைத்தது. அங்கு மாவட்டப் பொறுப்பில் இருந்த அதிகாரிமீது போதைப் பழக்கம், முறையற்ற பெண்கள் சகவாசம் என நிறைய புகார்கள் இருந்தன. நான் மகளிர் விடுதி மேலாளராகப் பொறுப்பேற்ற முதல் நாளே, என் பின்புறத்தில் அவர் தட்டினார். உடனே நான் முறைத்து, கண்டிக்கவும், ‘சாரி’ கேட்டார். ஏற்கெனவே அந்த மகளிர் விடுதியில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்திருந்ததால், ‘விடுதிக்குள் ஆண்கள் யாரும் வரக் கூடாது’ என்று உத்தரவிட்டு, கண்டிப்புடன் நடந்துகொண்டேன். இதனால் கோபமடைந்த மாவட்ட அதிகாரி எனக்குத் தொடர்ச்சியாக செக்ஸ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார்.

மகளிர் விடுதியில் தங்கியிருந்த 56 மாணவிகளுக்கும் சீருடை, உணவுப்பொருள்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக வருடத்துக்கு 85 லட்சம் ரூபாய் வரை அரசு ஒதுக்கீடு செய்கிறது. பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு இறைச்சி, முட்டை, பால் எனச் சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாணவரின் ஒரு நாள் உணவுக்கென்று 250 ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், முழுத்தொகையையும் செலவழிக்காமல் மாவட்ட அதிகாரி ஊழல் செய்துவந்தார். நான் பொறுப்பேற்றதும் இது குறித்த கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து, துறைரீதியாகப் புகார் அளித்தேன். இதையடுத்து சக கோச்களை எனக்கு எதிராகத் திசைதிருப்பியதுடன், பயிற்சி மாணவி ஒருவரின் பெற்றோர் மூலமாகவே என் நடத்தையைத் தவறாகச் சித்திரித்து புகார் கொடுக்கவைத்தார்.

இதையடுத்து துறைரீதியிலான விசாரணைக்காக சென்னையிலிருந்து மண்டல அளவிலான ஓர் அதிகாரி வந்தார். இவர் ஏற்கெனவே சிவகங்கையில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, ‘ஊழல்கள் குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது’ என்று என்னிடம் முறையிட்டவர். விசாரணைக்காக வந்தவர் என் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்ததோடு, பின்னாலிருந்து என்னைக் கட்டிப்பிடித்துத் தூக்கினார். அதிர்ச்சியில் நான் கத்தியதும், ஓடிவிட்டார். மறுநாள் மாணவிகளிடம் வலுக்கட்டாயமாக என்னைப் பற்றிப் புகார்க் கடிதங்கள் எழுதி வாங்கிக்கொண்டு, சென்னையில் மேலதிகாரிகளிடம் கொடுத்துவிட்டார்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரிடம் புகார் தெரிவிப்பதற்கு நேரம் கேட்டு சென்னைக்கே வந்திருந்தேன். ஆனால், ஒரு நாள் முழுக்க அலுவலகத்திலேயே என்னைக் காத்திருக்கவைத்துவிட்டு, செயலாளரைச் சந்திக்க நேரம் இல்லையென்று சொல்லி திருப்பியனுப்பி விட்டனர். மேலும் என்மீதான புகார்களையடுத்து, சென்னை தலைமை அலுவலகத்துக்கு என்னைப் பணிமாற்றம் செய்துவிட்டனர்.

இங்கேயும் ஒரு தலைமை அதிகாரி ‘உன்னைப் பற்றி மண்டல அதிகாரி மோசமாகப் புகார் தந்திருக்கிறார். உனக்கு இன்னும் சர்வீஸ் இருக்கிறது. என்னைக் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டால் உன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நல்லபடியாக வைத்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி என் முதுகைத் தட்டினார். ‘நீங்கள் நினைக்கிற ஆள் நானில்லை. என்மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு அவரது அறையிலிருந்து வெளியேறிவிட்டேன்.

இதையடுத்து ஒருநாள், ‘பழைய கோப்புகளையெல்லாம் தயார்செய்ய வேண்டியிருக்கிறது. நாளை காலை 8:30 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்துவிடு’ என்று அந்தத் தலைமை அதிகாரி சொன்னார். அதன்படி காலை 8:30 மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று பழைய கோப்புகளையெல்லாம் அடுக்கித் தயார் செய்துகொண்டிருந்தேன். அப்போது கோப்புகள் இருந்த அறைக்குள் நுழைந்த அந்த அதிகாரி, பின்னாலிருந்து என்னைக் கட்டிப்பிடிக்கவும், என் முழங்கையால் அவரது முகத்திலேயே ஓங்கி ஒரு குத்துவிட்டேன். வலி தாங்க முடியாமல், கத்திக்கொண்டே ஓடிவிட்டார். இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன்.

எனக்கு நேர்ந்த இந்தக் கொடுமைகளை யெல்லாம் முதன்மைச் செயலாளருக்கு விளக்கமாகப் புகார்க் கடிதமாகக் கொடுத்ததோடு நேரிலும் விளக்கம் அளித்தேன். அதாவது, ஊழல் செய்திருப்பதை மண்டல அதிகாரி வாக்குமூலமாக ஒப்புவித்திருந்த ஆடியோ மற்றும் பெண் விவகாரத்தில் அவர்மீதான குற்றச்சாட்டுகள் குறித்த செய்தி விவரங்களைக் கொடுத்திருந்தேன். இதையடுத்து துறைரீதியிலான நடவடிக்கையில், மண்டல அதிகாரியை சஸ்பெண்ட் செய்துவிட்டனர். ஆனாலும் மற்ற அதிகாரிகள்மீது இன்னும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

என் புகாரையடுத்து, அலுவலகரீதியிலான விசாரணைக்காக ‘ஐ.சி.சி கமிட்டி’ ஒன்றை அமைத்தனர். அதிலும்கூட, பாதிக்கப்பட்ட என்னைத்தான் எட்டு மணி நேரம் விசாரணை செய்தார்களே தவிர, குற்றத்துக்குக் காரணமான வர்களை விசாரிக்கவே இல்லை. அதுமட்டுமல்லாமல், என் புகாரை வாபஸ் வாங்குமாறும் அழுத்தம் கொடுத்தனர்.

என்னைப்போல், பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் இதே துறையில் பணிபுரிகிறார்கள். ஆனாலும், துணிந்து வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். வறுமையான வாழ்க்கைச் சூழலில், சிறுவயதிலேயே அப்பாவை இழந்து, போராட்டமான வாழ்க்கையில், என் சொந்த முயற்சியாலும் திறமையாலும் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். அதிகாரிகள் செய்த தவற்றைத் தட்டிக் கேட்ட ஒரே காரணத்துக்காக என்னைத் தவறான நடத்தைகொண்ட பெண்ணாகச் சித்திரித்துவிட்டனர். இதனால் எனக்குக் கல்யாண வரன்களெல்லாம் தடைப்பட்டுப் போகின்றன. இப்படி என் வாழ்க்கையைக் கெடுத்ததோடு, பாலியல்ரீதியாகவும் என்னைத் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்கள். நடந்த கொடுமைகளுக்கெல்லாம் தீர்வு தேடி இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறேன். அந்த நீதி தேவதைதான் கண் திறக்க வேண்டும்’’ என்றார் கலங்கிய குரலில்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இது குறித்து துறை சார்ந்து விளக்கம் பெறுவதற்காக ‘பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை’ அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்புகொள்ள முயன்றோம். அமைச்சரிடம் நேரில் பேச அப்பாயின்மென்ட் கேட்டும், உதவியாளர்கள் மூலம் தொடர்புகொண்டும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. மூன்று முறை அவரது மின்னஞ்சல் முகவரிக்கு (mlagobichettipalayam@tn.gov.in) நமது கேள்விகளை அனுப்பிவைத்தோம். அவற்றுக்கும் இந்த இதழ் அச்சாகும் வரை பதில் வரவில்லை. அமைச்சர் தரப்பிலிருந்து விளக்கம் கிடைக்கும் பட்சத்தில் அதையும் பரிசீலித்துப் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் 2-வது இடத்தைப் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. ஆனால், இந்தச் சிறப்பை சீரழிக்கிற வகையில், தமிழ்நாடு அரசுத்துறையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவிவருவது வெட்கக் கேடானது. இனியும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை யெனில், தமிழக அரசுத்துறையில் பெண்கள் ‘மீ டூ’ இயக்கத்தைத் தொடங்கினாலும் தவறில்லை!