Published:Updated:

பாலியல் புகார்... அர்ச்சகர் பணிநீக்கம்! - என்ன நடக்கிறது சேலத்தில்?

ராமர் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
ராமர் கோயில்

அர்ச்சகர் கண்ணன் மீது ஏற்கெனவே இரண்டு முறை புகார்கள் வந்தன. நானும் அவரை கூப்பிட்டுக் கண்டித்து அனுப்பினேன்.

பாலியல் புகார்... அர்ச்சகர் பணிநீக்கம்! - என்ன நடக்கிறது சேலத்தில்?

அர்ச்சகர் கண்ணன் மீது ஏற்கெனவே இரண்டு முறை புகார்கள் வந்தன. நானும் அவரை கூப்பிட்டுக் கண்டித்து அனுப்பினேன்.

Published:Updated:
ராமர் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
ராமர் கோயில்

கோயிலுக்கு வந்த கைம்பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் சேலம் ராமர் கோயில் அர்ச்சகர். தி.மு.க கவுன்சிலரின் தலையீடே இதற்குக் காரணம் என்று அர்ச்சகர் சொல்வதால், பிரச்னை தீவிரமடைகிறது.

கண்ணன்
கண்ணன்

சேலம், அம்மாபேட்டை, கிருஷ்ணாநகர் பகுதியில் இருக்கிறது சீதா ராமச்சந்திர மூர்த்தி கோயில். ராமையர் எனும் செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவரால் கட்டப்பட்ட இந்தக் கோயில் 2015 முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. கோயிலின் அர்ச்சகர் கண்ணன் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். “21 வருடங்களாக சீதா ராமச்சந்திர மூர்த்தி கோயிலில் பூஜித்துவருகிறேன். சமீபகாலமாக தி.மு.க-வைச் சேர்ந்த 40-வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா என்பவரால் நிறைய இடையூறுகள் ஏற்படுகின்றன. `கோயிலுக்கு வரக் கூடாது, சாமிக்கு பூஜை பண்ணக் கூடாது’ என்று அடியாட்களை வைத்து என்னை மிரட்டுகிறார். என்னை அர்ச்சகர் பதவியிலிருந்து நீக்குவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் முயல்கிறார். இதனால் எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் தி.மு.க கவுன்சிலர் மஞ்சுளாவே அதற்குப் பொறுப்பு” என்று அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார் கண்ணன்.

மஞ்சுளா
மஞ்சுளா

வீடியோ வெளியான சில நாள்களிலேயே (ஏப்ரல் 27-ம் தேதி), அர்ச்சகர் கண்ணன் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர்மீது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்ததே பணிநீக்கம் செய்யப்படக் காரணம் என்று அறநிலையத்துறை அறிவித்தது. இது குறித்த உண்மைத்தன்மையை அறிவதற்காக, புகார் அளித்த பெண்ணிடம் பேசினோம். “என்னோட கணவர் இறந்துட்டாருங்க. நான் மகள்களோட கோயிலை ஒட்டியுள்ள இந்த வீட்டுக்குக் குடி வந்ததுல இருந்து, திண்ணையிலகூட உட்கார முடியலைங்க. எப்பப் பார்த்தாலும் கோயில் ஜன்னல் வழியா என்னைப் பார்க்குறது... கண்ணடிக்குறதுனு தவறான எண்ணத்துடனேயே செயல்பட்டுவந்தாரு அர்ச்சகர் கண்ணன். இதனால வீட்டுக்குப் பக்கத்துல கோயில் இருந்தும் போவதை நிறுத்திட்டேன். என் மகள் கோயிலுக்குப் போனா அவகிட்டயே, ‘ஏன் உங்க அம்மா கோயிலுக்கு வரலை.. வரச் சொல்லு... வெளியிலயும் பார்க்க முடியலை’னு அசிங்கமாப் பேசியிருக்கான். குடும்பச் செலவுக்காக வீட்டுக்கு வெளியிலயே இட்லிக் கடை நடத்திக்கிட்டு இருந்தேன். இவரால அதையும் மூடிட்டு கூலி வேலைக்குப் போய்க்கிட்டிருக்கேன். அவரோட தொல்லையை போலீஸ்ல சொன்னா அசிங்கம்னுதான் எங்க ஏரியா பெண் கவுன்சிலர்கிட்ட சொன்னேன். அவங்க சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிங்ககிட்ட சொல்லி கோயில் ஜன்னல்கள்ல திரை போட்டாங்க. அதுக்கப்புறமும் அவர் அடங்கலை. அதனால திரும்பவும் கவுன்சிலர் அக்காகிட்ட கண்ணீரோட முறையிட்டேன்” என்றார்.

புனிதராஜ்
புனிதராஜ்

தி.மு.க கவுன்சிலர் மஞ்சுளாவிடம் பேசினோம். “சம்பந்தப்பட்ட அர்ச்சகர் கண்ணன் மீது ஏற்கெனவே புகார் எழுந்தப்போ என் வீட்டுக்கு வந்து, ‘நேத்து ராமர் என் கனவுல வந்தாரு. கிருஷ்ணா நகர் 3-வது கிராஸ்ல ராமரும் சீதையும் இருக்காங்க. அவங்ககிட்ட போயி உன் குறையைச் சொல்லுனு சொன்னாரு’ என்று என்னிடம் உதவி கேட்டார். நானும் உதவி செஞ்சேன். ஆனா அதுக்கப்புறம்தான் அவர் செஞ்ச பல தவறான விஷயங்கள் வெளியில வர ஆரம்பிச்சுது. அப்படி பாதிக்கப்பட்ட பெண் தானாக முன்வந்து அர்ச்சகர் கண்ணன் மீது புகார் கொடுத்தார். நான் முதற்கட்டமாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசி ஜன்னல்களில் திரை போடச்செய்தேன். அதன் பிறகும் திரையை விலக்கி விட்டுட்டு அந்தப் பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்ததால், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அந்தப் பெண்ணின் புகாரை அறநிலையத்துறை அதிகாரியிடம் கொடுத்து, இதற்கொரு முடிவுகட்டச் சொன்னேன். அதன்பேரில் கண்ணன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்மீது எனக்கு எந்தத் தனிப்பட்ட காழ்ப்புணர்வும் கிடையாது. அவரோ நான்தான் பொய்ப் புகார் கூறி அவரை வேலையிலிருந்து தூக்கியதாக அவதூறு பரப்புகிறார். நான் அடியாட்களை வைத்து தாக்கினேன் என்கிறாரே... அவர் பக்கம் நியாயம் இருந்தால் போலீஸில் புகார் அளித்திருக்கலாமே... ஏன் அதைச் செய்யவில்லை.... போலீஸுக்குப் போனால் மாட்டிக்கொள்வோம் என்பது அவருக்கே தெரியும்” என்றார்.

பாலியல் புகார்... அர்ச்சகர் பணிநீக்கம்! - என்ன நடக்கிறது சேலத்தில்?

புகார் குறித்து அர்ச்சகர் கண்ணனிடம் கேட்டோம். “சீதா ராமச்சந்திரமூர்த்தி கோயிலை பிரதிஷ்டை பண்ணின ராமையர் காலத்துலருந்தே நான்தான் அர்ச்சகரா இருக்கேன். 2014-க்குப் பிறகு நானே கோயிலை முழுப் பொறுப்பெடுத்து கவனிச்சேன். இந்தக் கோயில் செளராஷ்டிரா மக்களுக்கு பாத்தியப்பட்ட கோயிலுனு சொல்லுவாங்க... அது உண்மை கிடையாது. இது ஊர்ப் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்டது. செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த சிலர், டிரஸ்டினு சொல்லிக்கிட்டு கோயில்ல ஆதிக்கம் பண்ணப் பார்த்தாங்க. அதனால அவங்களுக்கும் எனக்கும் 2014-ல வாக்குவாதம் ஏற்பட்டு கோயிலைச் சாத்திட்டாங்க. இந்தப் பிரச்னையால 2015-ல கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல எடுத்துக்கிட்டாங்க. அதுக்கு நான்தான் காரணம்னு நினைச்சு, டிரஸ்டிங்க சிலர் என்னைய வேலையவிட்டுத் தூக்க நெனைச்சாங்க. அப்ப முடியலை, இப்ப தி.மு.க கவுன்சிலரை வெச்சு வீண்பழி சுமத்தி அவங்க நினைச்சதைச் சாதிச்சிட்டாங்க” என்றார்.

இறுதியாக அறநிலையத்துறை செயல் அலுவலர் புனிதராஜிடம் பேசினோம். “அர்ச்சகர் கண்ணன் மீது ஏற்கெனவே இரண்டு முறை புகார்கள் வந்தன. நானும் அவரை கூப்பிட்டுக் கண்டித்து அனுப்பினேன். ஆனால், மீண்டும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததால்தான் அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார் சுருக்கமாக.

ராமர் கோயிலில் இருந்துகொண்டு துச்சாதனன் வேலையைக் காட்டினால், எப்படிச் சகிப்பது?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism