தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... சமம்!

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

Knowledge is power என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். கல்வியைப் போன்ற மிகச் சிறந்த ஆயுதம் வேறில்லை. இதன் அவசியத்தை உணர்த்துவதுதான் இந்த அத்தியாயத்தின் நோக்கம்.

மனித மூளை என்பது புதிதாக வாங்கிய கம்ப்யூட்டர் போன்றது. எந்த சாஃப்ட்வேரும் இல்லாத ஒரு கம்ப்யூட்டர். அதில் நாம் என்ன சாஃப்ட்வேர் போடுகிறோமோ, அதையே பிரதிபலிக்கும்.

பாலியல் பற்றிய குழந்தையின் மனப்பதிவு என்பது சரியாக இருக்க வேண்டும். அதைப் பற்றிய ஆரோக்கியமான சிந்தனையும் செயல்பாடும் இருக்க வேண்டுமென்றால் முக்கியமானதொரு விஷயத்தைக் கொடுக்கவேண்டியது அவசியம். கைகால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளைப் பற்றி ஒரு குழந்தை தெரிந்துகொள்வதுபோலவே, பாலியல் உறுப்புகளைப் பற்றியும் அறிந்திருக்கவேண்டியது அவசியம்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... சமம்!

பெற்றோரால்தான் இந்த விஷயங் களை, குழந்தைகளுக்குச் சரியாகவும் பொறுப்பாகவும் சொல்லித்தர முடியும். பெற்றோர் இதைப் பற்றி குழந்தைகளிடம் பேசும்போது குழந்தைக்கு ஒருவித தன்னம்பிக்கை உண்டாகும்.

வயதாக ஆக குழந்தைகள் பல தரப்பிலிருந்தும் பாலியல் தொடர்பான விஷயங்களைத் தெரிந்துகொள்கிறார்கள். ஆசிரியர்கள், சகமாணவர்கள், மீடியா, சினிமா என பாலியல் தொடர்பான தகவல்கள் குழந்தை களுக்கு வந்தவண்ணம் இருக்கும்.

தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களை நாசுக்காகவும் சரியாகவும் சொல்லித்தருவதில்லை. ஊடகங்களும் திரைப்படங்களும் இந்த விஷயத்தில் தவறான எண்ணங்களைப் புகுத்துவதைப் பார்க்கலாம். குறிப்பாக, திரைப்படங்களில் ஹீரோ என்பவர் ஒரே நேரத்தில் நூறு பேரை அடித்து வீழ்த்தும் பலசாலியாகவும், ஹீரோயின் என்பவர் கிண்டல் கேலிகளுக்கு உள்ளாகிறவராகவும், அவமானத்தைச் சந்திக்கும் பலவீனமானவராகவும் சித்திரிக்கப்படுவதைப் பார்க்கிறோம். பெண்களுக்கு ஆபத்து வரும்போது கதாநாயகன்தான் காப்பாற்ற ஓடி வருவார். அதேபோல `பெண் என்பவள் அடங்கி நடக்க வேண்டியவள்' என்பதை அழுத்தமாகச் சொல்லும் பல விஷயங்களை ஊடகங்களில் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம்.

குழந்தைகள் உங்களிடம் கேள்விகள் கேட்பதைத் தடுக்காதீர்கள். கேள்வி கேட்கிறார்கள் என்றாலே நிறைய விஷயங்கள் புரிகின்றன என்றே அர்த்தம்.

சிறுவயதில் இத்தகைய விஷயங்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் பெரியவர்களான பிறகும் இதே சிந்தனையுடன் இருப்பதைப் பார்க்கலாம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களைத் துரத்துவதையும், கேலி செய்வதையும் ஆண்களின் அடையாளமாகக் காட்டும் பல்வேறு திரைப்படங்களே இதற்கு சாட்சி. பெண்ணுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளுக்கும் பெண்களின் நடத்தையையும் உடையையும் காரணமாகக் காட்டும் அவலத்தையும் பார்க்கிறோம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்க்க... `ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், இந்த மாதிரிதான் உடை அணிய வேண்டும்' எனப் பெண்களுக்கே வலியுறுத்தப்படுகின்றன.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

ஆணும் பெண்ணும் சமம், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மதிக்க வேண்டும், ஒழுக்கமுடைமை என்பது ஆண்களுக்கும் அவசியம்தான் என்றெல்லாம் போதிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. குறிப்பாக ஆண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு...

குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை போதிக்கும்போது உறுப்புகளின் சரியான பெயர்களைச் சொல்லித்தர வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் குழப்பம் வராமல் தடுக்க முடிவதுடன் ஏதேனும் பிரச்னை வந்தால் அதுபற்றி பெற்றோரிடம் தெளிவாக வெளிப்படுத்தவும் கற்றுக்கொடுக்கும். இந்த விஷயங்களை எல்லாம் எப்படிச் சொல்லித் தருவது என்ற தயக்கத்தில் மழுப்பலான பெயர்களைச் சொல்லிப் பழக்கிவிட்டால் பின்னாளில் நிச்சயம் அவர்களுக்கு குழப்பங்கள் வரும்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் சரியான பாலியல் கல்வி மிக முக்கியம். குறிப்பாக மனநலப் பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களை மிகத்தெளிவாகச் சொல்லித் தரவேண்டியது அவசியம். பெற்றோர் இந்த விஷயத்தில் தெளிவில்லாமல் இருக்கும் நிலையில், மருத்துவர்கள் அல்லது உளவியல் நிபுணர்களின் உதவியோடு குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு விஷயங்களை போதிக்கலாம். பாலியல் உறுப்புகளைக் குறிப்பிடும்போதோ, அவை தொடர்பான விஷயங்களைப் பேசும்போதோ ஆபாசம் இல்லாத சரியான வார்த்தைகளையே குழந்தைகளிடம் பயன்படுத்த வேண்டும்.

தொடுதல்... எது சரி, எது தவறு?

பாலியல் கல்வியின் அடிப்படையே இதுதான் எனலாம். 64 சதவிகித பெண் குழந்தைகளும், 53 சதவிகித ஆண் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். மனித மிருகங்களின் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஒரே வழி அவர்களுக்கான விழிப்புணர்வைக் கொடுப்பதுதான். அதுதான் அவர்களை மனதளவில் பலசாலிகளாக மாற்றும்.

பாலியல் விழிப்புணர்வு இல்லாததால்தான் குழந்தைகள் தேவையற்ற பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு பலியாகிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நிகழும்போது என்ன நடக்கிறது என்பதே புரிவதில்லை. அதைப் பற்றி வெளியில் சொல்வதே தவறோ என்ற பயமும் தயக்கமும் பல குழந்தைகளுக்கு இருக்கிறது. முதன்முறை தவறு நடக்கும்போது அதை தவறு என உணர்ந்து வெளியே சொல்லுமளவுக்கு குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தேவை. அதைக் கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

`இவையெல்லாம் இந்த வயதில் குழந்தைகளுக்குச் சொல்லித்தருகிற விஷயங்கள் தானா, அதிகப்படியாக இருக்காதா' என்று சில பெற்றோர் நினைக்கலாம். ஐந்து வயது குழந்தைக்கு பிஹெச்.டி அளவுக்கு கணிதம் சொல்லித்தருவது நிச்சயம் அதிகப்படிதான். அதையும் மீறி நீங்கள் சொல்லிக் கொடுத்தாலும் அது பிள்ளையின் மனத்தில் நிற்காது. தேவைப்படும் நேரத்தில் தேவைப்படுகிற விஷயங்களைப் பற்றி குழந்தைகள் உங்களிடம் கேள்விகள் கேட்பதைத் தடுக்காதீர்கள். கேள்வி கேட்கிறார்கள் என்றாலே நிறைய விஷயங்கள் புரிகின்றன என்றே அர்த்தம். கேள்வி கேட்காத நிலையில் அதை அவர்களது ஆர்வமின்மையாகவும் எடுத்துக்கொள்ளலாம். சகஜமாகக் கேட்கத் தயங்குவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

நாமாக இந்த விஷயங்களை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் தவறான பாதைகளுக்குப் போய் விடுவார்களோ என்ற பயமும் பல பெற்றோருக்கு உண்டு. பாலியல் பற்றிய சரியான புரிந்துணர்வுதான் குழந்தைகளைத் தவறுகளில் இருந்து காக்கும்.

மனித வாழ்க்கை நாளுக்கு நாள் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. ஆயுளும் அதிகரித்திருக்கிறது. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது... எது சரியான உணவு, எது தவிர்க்க வேண்டிய உணவு என்றெல்லாம் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறோம்.

சமீப நாள்களாக கொரோனா வைரஸ் பீதியில் இருக்கிறார்கள் பலரும். பயத்தைத் தவிர்த்து அதிலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்யலாம் எனும் விழிப்புணர்வுதான் இப்போது அவசியம் அவசரம். நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகள் போட்டுக் கொள்கிறோம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுகிறோம்.

சரியான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். சுகாதாரம் பேணுகிறோம். இதுபோன்றதொரு விழிப்புணர்வு பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றவும் அவசியம். அடிப்படை பாலியல் விழிப்புணர்வு பால பாடத்துக்குப் பெற்றோரே முதல் ஆசான்களாக இருந்து ஆரம்பித்து வையுங்கள்!