தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: தவறு என்றால் தயங்காமல் `நோ' சொல்லவும்!

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

பாலியல் கல்வியைப் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால், அதை எங்கே, எப்படி, யார் தொடங்குவது என்பதில்தான் குழப்பமே... பல பெற்றோரும் இப்படியொரு கேள்வியை எழுப்புவதன் தொடர்ச்சியாகவே இந்த அத்தியாயம்...

கவனமாகத் தயாரிக்கப்பட்ட பாலியல் கல்வி பற்றிய பாடத்திட்டம் இளம் பிள்ளை களுக்கு பயனுள்ள, அவசியமான விஷயமாக இருக்கும். அவர்களின் பொறுப்புகளை உணர்த்தி, தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கும். பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் போதிக்கப்பட வேண்டும். அதற்கு முன்பாகவே பெற்றோர் பிள்ளைகளுக்கு இதைச் சொல்லித் தர வேண்டும். குழந்தைகளுக்குப் பாலியல் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கு முன்பாகவே, கவனத்தோடும் நெறிமுறைகளோடும் தார்மிக ரீதியிலும் சொல்லித் தர வேண்டும். ஆனால், பெற்றோர் இதில் எந்தவிதப் பயிற்சியும் இல்லாதவர்களாக இருப்பதால் எப்படிச் சொல்லித் தருவதெனத் தெரியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்தவற்றை வைத்து, குழந்தைகளுக்கு ஒருசில விஷயங்களைச் சொன்னாலும் அவை போதுமானவையாக இருப்பதில்லை. இணையதளம், திரைப்படங்கள், விளம்பரங்கள், போர்னோகிராபி, நண்பர்கள் தரும் தகவல்கள், ஹார்மோன்களின் தூண்டுதல், அவை ஏற்படுத்தும் உணர்வுக் கொந்தளிப்பு என பிள்ளைகளுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்தங்கள் தாக்கலாம். பாலியல் உறவு கொள்வதொன்றும் தவறானதல்ல என மூளைச்சலவை செய்யும் நண்பர்களின் வார்த்தைகள் அவர்களை இன்னும் குழப்பும்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: தவறு என்றால் தயங்காமல் `நோ' சொல்லவும்!

72 சதவிகித குழந்தைகள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாவதாக 2017-ல் நடத்தப்பட்ட ‘கேன்ட்டர் அண்டு லெபிக்ஸ்’ ஆய்வு சொல்கிறது. இதனால்தான் பாலியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.

எந்த வயதில் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கலாம்?

பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? 5-ம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். தன் உடலில் என்ன நடக்கிறது என்ற அடிப்படை முதலில் குழந்தைகளுக்குப் புரிய வேண்டும். இதைப் பற்றிய தகவல்களைக் குழந்தைகளுக்குச் சொல்லாமலிருப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும். பல பெற்றோர்களும் 5-ம் வகுப்பில் குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இதையும்விட தாமதிப்பது சரியானதல்ல. ஒருவர் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக் கும்போது நீச்சல் கற்றுத்தர முடியாதல்லவா? எனவே, எளிமையான பாலியல் கல்வியை ஆரம்பிக்க நிபுணர்கள் குறிப்பிடும் இந்த வயது தான் சரியானது. பெற்றோர், பிள்ளைகளின் சிறுவயதிலிருந்தே சில விஷயங்களைப் பேசத் தொடங்கலாம். டி.வியில் விளம்பரம் வரும்போது, கர்ப்பிணியைக் காட்டும்போது... இப்படி சில விஷயங்களைக் கற்றுத் தரலாம்.

என்னவெல்லாம் சொல்லித் தரலாம்?

செக்ஸ் என்பது இயல்பான ஓர் உணர்வு. பசி, தூக்கம் போன்றது. தவறான விஷயமல்ல. சரியான வயதில் அதைத் தெரிந்துகொள்வதும், அதற்கான வயதில் ஈடுபடுவதும் ஆரோக்கிய மானது. குறிப்பிட்ட வயதுக்கு முன்பே அதில் ஈடுபடுவதென்பது பல பயங்கர ஆபத்துகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற மன அழுத்தம், உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தி, சில நேரம் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம். தவிர... குழந்தைகளுக்கு யாராவது பாலியல் தொந்தரவுகளைக் கொடுக்க நேரலாம். அவர்களைப் பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கலாம். பால்வினை நோய்களைக் கொடுத்துவிடலாம். இவையெல் லாம் குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குப் பிரச்னைகளைக் கொடுப்பவை.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் பற்றிய சரியான தகவல்களைக் குழந்தைகளுக்குச் சொல்வதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. கேலியாகவும் கிண்டலாகவும் ஆபாசமாகவும் அவற்றைப் பேசும் திரைப்படங்களையும் ஊடகக் காட்சிகளையும் பார்க்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கு அவற்றை விஞ்ஞானபூர்வ மாக, சரியான முறையில் கற்றுத்தருவதுதான் சவால்.

விடலைப் பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் விஷயத்தில் இந்தச் சவால் இன்னும் சற்று அதிகம். அந்த வயதுக்குண்டான பாலியல் மாற்றங்களை உடலளவிலும் மனதளவிலும் பெற்றோர் பார்ப்பார்கள். விடலைப் பருவத்தினருடனான அணுகுமுறையும் பெற்றோருக்குச் சவாலானதாகவே இருக்கும். ஆனாலும், அதைச் செய்துதானாக வேண்டும். மிக இளவயதில் பாலியல் உறவில் ஈடுபடுவது ஆபத்தானது. திருமணம்வரை உறவு கொள்ளக் கூடாது என்கிற பாரம்பர்யம் நமக்கு உண்டு. திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு, கருக்கலைப்பு போன்றவற்றைத் தவறாகப் பார்க்கும் சமூகம் நம்முடையது. அது பற்றியெல்லாம் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். திருமணம் என்பது பலமான ஒரு நிறுவனம். அதற்கு ஒழுக்கமான பாலியல் அறிவு அவசியம். இந்த விஷயங்களையெல்லாம் சொல்லித்தரும்போதே யாராவது தவறாக அணுகும்போது தயங்காமல் ‘நோ’ சொல்லவும் குழந்தைகளைப் பழக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான பாலியல் கல்வியில் எத்தகைய பாடத்திட்டத்தை வைக்கலாம் என்ற கேள்வி எங்களைப் போன்ற மருத்து வர்கள், மனநல நிபுணர்களிடம் தொடர்ந்து கேட்கப்படுகிறது.

இதோ சில பரிந்துரைகள்...

1. பொதுவாக பாலியல் கல்வி என்றால் என்ன?

அடிப்படை விதிமுறைகள் என்னென்ன?

2. இது ஆண் பிள்ளைகளுக்கானது. உடலிலும் மனத்திலும் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

3. இது பெண் குழந்தைகளுக்கானது.

பருவமடைதல், அந்த நேரத்தில் நிகழும் உடல், மன மாற்றங்கள்...

4. ஆண் பெண் இருவருக்குமான ஒற்றுமைகள் மற்றும் உடல் தொடர்பான பிரச்னைகள்.

5. பாலியல் உறவு, கர்ப்பம், குழந்தைப் பேறு.

6. பாலியல் உறவின் நல்ல பக்கங்களான காதல், திருமணம் போன்றவை.

7. பாலியல் உறவு பற்றிய தவறான நம்பிக்கைகள், உண்மைகள், திருநங்கைகள், அவர்களையும் மனிதர்களாக நடத்த வேண்டியதன் அவசியம்.

8. கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு.

9. பால்வினை நோய்கள்.

10. பாலியல் துன்புறுத்தல்கள், மிரட்டல்கள், வன்கொடுமை, தற்காப்பு.

11. ஏதேனும் வன்கொடுமைகள் நடந்தால் அவற்றைக் கையாளும் முறைகள்.

12. பாலியல் கல்வி எப்படி ஒருவரது சுய மதிப்பீட்டுக்கு அவசியமாகிறது.

இப்படிச் சரியான கல்வியை போதிக்கும் போது பிள்ளைகளின் தன்னம்பிக்கை அதிகரிப்பதைப் பார்க்க முடியும்.

முதல் கட்டமாக இந்தக் கல்வியை போதிக்கச் சரியான ஆசிரியர்கள் தேவை. அவர்களுக்குச் சரியான பக்குவமும் அணுகுமுறையும் தெரிந்திருக்க வேண்டும். சரியான பதங்களைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். வெட்கப்பட்டுக்கொண்டு தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆசிரியர்கள் உலகம் முழுவதும் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. தன்னுடைய நம்பிக்கைகளை மாணவர்கள் மேல் திணிப்பதும் கூடாது. தனிப்பட்ட நபரது பாலியல் அனுபவத்தைப் பற்றிப் பேசுவது தவறு மட்டுமல்ல, அநாகரிகமும்கூட.

பாலியல் கல்வியைப் பொறுத்தவரை சரியான புரிந்துணர்வோடு கற்பிக்கப்பட வேண்டும். அந்தக் கல்விக்கான வகுப்பறை ஆசிரியர்களுக்கானதல்ல, மாணவர்களுக்கானது. குழந்தைகள் தங்கள் குழப்பங்களைத் தீர்த்துக்கொள்ளும் இடமாக அது இருக்க வேண்டும். இங்கே குழந்தைகள் முக்கியமான பல கேள்விகளை எழுப்பலாம். சுய இன்பம் பற்றி, உறுப்புகள் பற்றி, அவற்றின் அளவுகள் பற்றி... இப்படிப் பல கேள்விகளுடன் இருப்பார்கள். இவற்றுக்குச் சரியான கண்ணோட்டத்தில் விளக்கம் சொல்லித்தர ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

பாலியல் கல்வி முடிந்ததும் மாணவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கலாம். ஆசிரியர் கேள்விகளை சத்தமாகக் கேட்க வேண்டும். இந்த வார்த்தைகளை உரக்க உச்சரிக்கலாம், தவறில்லை, அசிங்கமில்லை என்பதை இதன் மூலம் மாணவர்களுக்கு உணர்த்த முடியும்.

கணிதம், சமூக அறிவியல் போன்று அணுகப்பட வேண்டியதல்ல பாலியல் கல்வி. ஒருவரை ஒருவர் கேலி செய்வதோ, அவமானப்படுத்துவதோ, மட்டமாகப் பார்ப்பதோ கூடாது. எப்போதும் தனிப்பட்ட விஷயங்களைப் பேசக்கூடாது. இது மாணவர்கள், ஆசிரியர்கள் இருவருக்கும் பொருந்தும். முட்டாள்தனமான கேள்வி என இதில் ஒன்றுமில்லை. எதை வேண்டுமானாலும் கேட்க அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், பேச வேண்டிய விஷயத்தைத் தாண்டி வேறு விஷயங்களுக்குப் போகாமல் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தக் கல்வியை ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் தனித்தனியே நடத்தலாமா?

பல பள்ளிகளில் இப்படிச் செய்கிறார்கள். ஆனால், இது சரியானதல்ல. இது அவர்களுக்குள் ஒருவிதப் பதற்றத்தையே உருவாக்கும். ஒன்றாகக் கற்றுத்தரும்போது அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்வதைத் தவிர்க்கும். ஆண் குழந்தைகளின் உடலமைப்பு, சந்தேகங்கள் பற்றிய விஷயங்களைப் பெண் குழந்தைகளும், பெண் குழந்தைகளின் உடலமைப்பு, பிரச்னைகள் பற்றி ஆண் பிள்ளைகளும் தெரிந்துவைத்திருப்பதுதான் ஆரோக்கியமானது.