Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: நிறைய கேளுங்கள்... நிறைய கவனியுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிறைய கேளுங்கள்... நிறைய கவனியுங்கள்!
நிறைய கேளுங்கள்... நிறைய கவனியுங்கள்!

பாலியல் மருத்துவர் காமராஜ்

பிரீமியம் ஸ்டோரி
பாலியல் கல்வி பற்றி நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. பெற்றோர் குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லித் தருகிறார்கள் என்பது பற்றியும் நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளன.

பெற்றோரில் தந்தை, குழந்தைகளிடம் பாலியல் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறார். அவர் குழந்தையிடம் பேசும்போது நெருக்கமான உறவு குறித்து எதுவும் பேசுவதில்லை. அதுவே தாய் பேசும்போது உறவுகள், நெருக்கம் பற்றியெல்லாம் பேசுகிறார்.

தாய், ஆண் குழந்தைகளைவிடவும் பெண் குழந்தைகளுடன்தாம் இவற்றைப் பற்றி அதிகம் பேசுகிறார்.

பெரும்பாலான பெற்றோர் ஆண் குழந்தைகளுக்கு எதையும் சொல்லித் தருவதில்லை. பெண் குழந்தைகளுக்கு வரும் மாதவிலக்கு, பருவமடைதல் பற்றியும் ஆண் குழந்தைகளிடம் பேசுவதில்லை.

பள்ளிக்கூடங்களில் இவற்றைப் பற்றிச் சொல்லித் தருவார்கள் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால், பிள்ளைகள் பள்ளியிலோ, வெளியிலோ யாருடனாவது நெருக்கமாகிறார்கள், அவர்களுக்கு ஏதோ பிரச்னை எனத் தெரியவரும்போது தான் பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றிப் பேசவே ஆரம்பிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அப்படி ஆரம்பிக்கும்போது அது விவாதமாக மாறுகிறது. குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதாக நினைத்துப் பெற்றோர் செய்யும் இந்தச் செயல் பிரச்னையாக மாறுகிறது. குழந்தைகளைக் கண்டிப்பதாக மாறுகிறது. சில நேரம் பெற்றோர்கள் வித்தியாசமான, தர்மசங்கடமான மொழியில் பேசுகிறார்கள். கண்களைப் பார்த்து நேரடியாகப் பேசுவதில்லை. சுய இன்பம், ஓரின ஈர்ப்பு போன்றவற்றைப் பற்றிப் பேசுவதிலும் அவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. குழந்தைகள் இவற்றையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டீன்ஏஜில் இருக்கும் குழந்தைகள் இத்தகைய பேச்சுகளைக் கேட்க விரும்புவதில்லை. குழந்தைகளாக இருக்கும்போதே பெற்றோர் இந்தப் பேச்சுகளை ஆரம்பித்திருந்தால் பிரச்னை இருக்காது. ஓரளவு விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு பேசுவதில்தான் சிக்கல். இத்தகைய உரையாடல்களை டீன்ஏஜ் பிள்ளைகளும் தவிர்க்கவே நினைக்கிறார்கள். பெற்றோரின் இந்தப் பேச்சுகளைக் கேட்பதில் அவர்களுக்கும் தர்மசங்கடமே அதிகமிருக்கிறது.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: நோ மீன்ஸ் நோ!

பிறகு எப்படித்தான் பாலியல் கல்வியைக் குழந்தைகளுக்கு வெற்றிகரமாக போதிப்பது என்ற கேள்வி பெற்றோர்களுக்கு எழும்.

பாலியல் கல்வியை ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் போதிக்க பெற்றோர் களிடமும் பிள்ளைகளிடமும் சில பண்புகள் அவசியமாகின்றன. அவை...

 காமராஜ்
காமராஜ்
  • பெற்றோர்கள் நிறைய கேட்பவர்களாகவும் கவனிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

  • உண்மையான, நேர்மையான, மனம் திறந்த பதில்களை குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும்.

  • குழந்தைகள் தங்கள் கருத்துகளை எவ்வித தயக்கமுமின்றி பயமுமின்றி பெற்றோரிடம் வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.

  • ஏதாவது பேசினால் அடி உதையோ, தண்டனையோ கிடைக்கும் என்ற நிலை இருந்தால் குழந்தைகள் தங்கள் கருத்துகளை விவாதிக்க மாட்டார்கள்.

  • கண்டிப்பு என்ற பெயரில் `இப்படித்தான் பேச வேண்டும், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்' என விதிகளைக் கட்டாய மாக்கினாலும் குழந்தைகள் மனம் திறந்து பேச மாட்டார்கள்.

பெற்றோர்களை எப்படித் தயார் செய்வது?

உடல் உறுப்புகள், அவற்றின் வளர்ச்சி, பருவமடைதல், தாம்பத்ய உறவு, திருமணத்துக்கு முன்பான உறவு, பாதுகாப்பற்ற உறவு, தேவையற்ற கர்ப்பம், பால்வினை நோய்கள், ஓரின ஈர்ப்பு போன்றவற்றைப் பற்றி பெற்றோர்களுக்கு விஞ்ஞானபூர்வமாகத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

விஞ்ஞானபூர்வமாக என்பதை அடிக்கோடிட்டு நினைவில் நிறுத்தவும். இந்த விஷயங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். ஆனால், உலக சுகாதார நிறுவனம் இதைப் பற்றிய தெளிவான கருத்துகளை வரையறுத்துள்ளது. அவைதாம் சரியானவை. அவற்றைத் தவிர்த்து தமக்குச் சரியெனப் படுகிற கருத்துகளைப் பின்பற்றுவதும் போதிப்பதும் சரியானதல்ல.

பெற்றோரிடம் போதுமான தகவல்கள் இருக்கவேண்டியது அவசியம். பாலியல் நிபுணர்களின் ஆலோசனை, முக்கியமான, நம்பகமான இணையதளங்களின் தகவல்கள், வீடியோக்கள், கட்டுரைகள் போன்றவை இதற்கு உதவும்.

பாலியல் தொடர்பான விஷயங்களை எப்போதோ ஒருமுறை பேசுவதைத் தவிர்த்து அவ்வப்போது உரையாடல்களில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பதின்ம வயதிலுள்ள மகனையோ, மகளையோ திடீரென ஒருநாள் அழைத்து உட்காரவைத்து இது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்தால் அவர்கள் கூச்சப்படுவார்கள். என்றோ ஒருநாள் உட்கார்ந்துகொண்டு பிள்ளைகளுக்கு லெக்சர் கொடுப்பதற்குப் பதில், அவ்வப்போது இது தொடர்பான சம்பவங்கள் நிகழும்போது பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். உதாரணத்துக்கு நிர்பயா வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. தண்டனை தள்ளிப்போகிறது. இதுபோன்ற நேரத்தில் பாலியல் கல்வியை போதிக்கலாம்.

பாதுகாப்பாக இருக்க
வேண்டியதன் அவசியம்

குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆபத்துகள், பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியம் என எல்லாவற்றையும் பற்றிப் பேசலாம்.

20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பாலியல் வன்முறைகளில் அதிகம் ஈடுபடுகிற செய்திகளையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம். அந்தப் போக்கு, அதன் பின்னணி பற்றியெல்லாம் பிள்ளைகளிடம் விவாதிக்கலாம்.

குழந்தைகளிடம் பாலியல் தொடர்பான விஷயங்களைப் பேசப் போகிறீர்கள் என்றால் முன்னதாகவே அதற்குத் திட்டமிடுங்கள்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: தவறு என்றால் தயங்காமல் `நோ' சொல்லவும்!

நட்புரீதியான இருவழிப்பாதையாக அந்தப் பேச்சு இருக்க வேண்டும். பெற்றோர் மட்டுமே பாடமெடுப்பதைப் போல இல்லாமல், குழந்தைகளுக்குத் தம் நண்பர்களிடம் பேசுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும்விதமாக அந்த உரையாடல் அமைய வேண்டும். குழந்தைகள் தம் சந்தேகங்களைத் தயக்கமின்றிக் கேட்க வாய்ப்பளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

பாலியல் பற்றிப் பேசும்போது, வித்தியாசமான, சிறப்பான எதையோ பேசப் போவது போன்ற உணர்வை உருவாக்க வேண்டாம். சமையல், துணி துவைப்பது, செல்லப் பிராணிகள் பராமரிப்பு போன்று வீட்டில் உரையாடும் இயல்பான விஷயங்களைப் போலவே இதுவும் இருக்கட்டும்.

பேசும்போது குழந்தைகளின் கண்களை நேரில் பாருங்கள். எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசினால் தவறான விஷயங்களைப் பேசுவதாக குழந்தைகள் நினைக்கக்கூடும். பேச ஆரம்பித்த பிறகு உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை, செய்திகளை எடுத்துக்கொண்டு, அவற்றைச் சுட்டிக்காட்டி, ‘இப்படியொரு நிலை வந்தால் என்ன செய்வே’ என உரையாடலை ஆரம்பிக்கலாம்.

ஆம், இல்லை என்ற பதிலை எதிர் பார்க்காமல் அத்தகைய சூழல்களில் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை மனம் திறந்து பேச வைக்கவும். இது நல்லதொரு வாய்ப்பாக அமையும். குழந்தைகள் தங்களின் நம்பிக்கைகள், எண்ணங்களைப் பேச முடியும்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

செக்ஸ் உறவில் சொந்த அனுபவங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். காதல், திருமணம் போன்ற மற்ற விஷயங்களைச் சொந்த அனுபவங்களோடு சேர்த்துப் பேசலாம்.

ஓரளவு வளர்ந்த குழந்தைகளிடம் குடும்ப மதிப்பீடுகள் பற்றியும் பேசலாம். பாலியல் என்பது அதையும் உள்ளடக்கியதுதான் என்பதால், அதையும் குழந்தைகள் அறிந்திருக்க வேண்டும். சில விஷயங்களைப் பேசும்போது தேவையற்ற சூழல்களை, விவாதங்களை நிறுத்த வேண்டியிருக்கும். ‘உன் நம்பிக்கைகளை நிச்சயம் நீ சொல்லியே ஆக வேண்டும்’ என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்தக்கூடாது.

அதே நேரம் குழந்தைகளின் கருத்துகள் தவறு என்ற அபிப்ராயத்துக்கும் பெற்றோர் சட்டெனச் சென்றுவிடக்கூடாது. அவர்கள் சொல்வதை விமர்சிப்பது, கோபப்படுவது, திட்டுவது போன்ற செயல்கள் அந்த உரையாடலை ஆரோக்கியமாக நகர்த்து வதற்குப் பதில் பாதியில் நிறுத்தவே வழி செய்யும். குழந்தைகள் பேசும்போது குறுக்கிட வேண்டாம். பேச்சை முழுமையாகக் கேட்காமல் தவிர்ப்பதும் தவறு.

அவர்கள் உங்களுடைய வழிகாட்டலை எதிர்பார்க்கிறார்கள் என நீங்களாகவே நினைத்துக்கொண்டு தேவையற்ற அறிவுரை களை அவர்களுக்குக் கொடுக்காதீர்கள்.

கறாராக இருப்பது, பிள்ளைகள் உங்களை அணுகவே பயப்படும் நிலையில் இருப்பது, மிரட்டுவது, ‘நீ என் முகத்துலயே விழிக்காதே’ போன்ற கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பது போன்றவற்றைக் கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.

குழந்தைகள் பாலியல் தொடர்பான விஷயங்களில் ஆக்டிவாக இருப்பதாகவோ, பிரச்னைகளுடன் இருப்பதாகவோ நினைத்துக்கொண்டு அவர்களிடம் கேள்விகள் கேட்பது, கோபமாகப் பேசுவது போன்றவை ஆபத்தானவை மட்டுமல்ல, பின்னாளில் பிள்ளைகளுடன் எதையுமே பேச முடியாத நிலைக்கும் தள்ளிவிடலாம்.

சில நேரம் சில விஷயங்களைப் பற்றிப் பேசும்போது பெற்றோர் தர்மசங்கடமாக உணர்ந்தால், அதை அவர்களிடம் சொல்லலாம். அது அந்தச் சூழலை இலகுவாக்கும்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... சமம்!

பெற்றோர்கள் தமக்கே தெரியாத விஷயங்களைத் தெரிந்தாற்போல பேசத் தேவை யில்லை. ஏதாவது ஒரு பதிலையோ, தவறான தகவலையோ சொல்வதைவிடவும், `தெரி யாது' என நேர்மையாகச் சொல்வது சிறந்தது.

சரியான முறையில் பாலியல் கல்வியைப் பற்றிப் பேசும் புத்தகங்களைக் குழந்தைகளுக்குப் படிக்கக் கொடுக்கலாம். பிள்ளைகளின் வயதுக் கேற்ற பாலியல் கல்வி அவசியம். இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைந்து பாலியல் மருத்துவர்கள் எழுதிய பல புத்தகங்கள் கிடைக்கின்றன. ரெட் புக். ப்ளூ புக் போன்ற அவற்றில் பிள்ளைகள் தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

எங்கெல்லாம் உதவிகள் கிடைக்கும்?

மருத்துவர்களிடம், புத்தகங்களிடம், குடும்பக் கட்டுப்பாட்டு அமைப்பு போன்றவற்றிடம்.

எவற்றையெல்லாம் நினைவில்கொள்ள வேண்டும்?

பாலியல் கல்வி என்பது நீண்ட, தொடர் பயணம். அரசியல் குறித்த விவாதங்களைப் போல இந்த விஷயத்திலும் அவ்வப்போது சின்னச் சின்ன உரையாடல்களையும் விவாதங்களையும் தொடர்வது அதைப் பிள்ளைகளுக்கு எளிதாகக் கொண்டு சேர்க்க உதவும்.

காலையில் வாக்கிங் போகும்போது, டூ வீலர், காரைக் கழுவும்போது... இப்படி இயல்பான செயல்களின் இடையில் பாலியல் தொடர்பான விஷயங்களையும் பிள்ளைகளுடன் விவாதிப்பது எளிதாகவும் தர்மசங்கடமற்றதாகவும் அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு