Published:Updated:

ஏலகிரியில் ரூம் போடலாமா? - வலைவீசிய மின்வாரிய அதிகாரி... வரிசைகட்டும் பாலியல் புகார்கள்...

திருப்பத்தூரில் இருக்கும் மின்வாரிய அதிகாரி ஒருவர்மீது பாலியல் புகார்கள் குவியத் தொடங்கியிருக்கின்றன

பிரீமியம் ஸ்டோரி

திருப்பத்தூரில் இருக்கும் மின்வாரிய அதிகாரி ஒருவர்மீது பாலியல் புகார்கள் குவியத் தொடங்கியிருக்கின்றன. 22 பெண்களிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியதாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் புகாரை அடுத்து இந்த விவகாரம் கொழுந்துவிட்டு எரிகிறது!

திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தின் இயக்கம், பராமரித்தல் பிரிவுச் செயற்பொறியாளராக இருந்தவர் எஸ்.கிருஷ்ணன். இவரது அலுவலகம் திருப்பத்தூர் வெங்களாபுரத்தில் இருக்கிறது. 50 வயதைக் கடந்த கிருஷ்ணன், கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக திருப்பத்தூரில்தான் பணியாற்றுகிறார். பல ஆண்டுகளாக பாலியல் சர்ச்சைகள் அவரைப் பின்தொடர்ந்தாலும், அவை எதுவும் அம்பலத்துக்கு வராததுதான் வேதனை என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள்!

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

ஆஜரான 22 பெண்கள்... அதிர்ந்துபோன விசாரணைக்குழு!

இந்தநிலையில்தான், சமீபத்தில் தனக்குக் கீழ் பணிபுரியும் 25, 28, 36, 43 வயதுடைய நான்கு பெண்களிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியதாகப் புதிய சர்ச்சையில் சிக்கினார் கிருஷ்ணன். அறைக்குள் அழைத்து கையைப் பிடிப்பது, கன்னத்தைக் கிள்ளுவது எனப் பாலியல் வக்கிரங்கள் தொடர்ந்ததால் மேற்கண்ட நான்கு பெண்களும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் புகார் அனுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகங்களிலும் புகார் அளித்தனர். இதையடுத்தே, இந்த விவகாரம் சூடுபிடித்து, நான்கு பேர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, விசாரணைக்கு அந்த நான்கு பெண்களை அழைத்தபோது, அவர்களுடன் மேலும் 18 பெண் அலுவலர்கள் ஆஜராகவே... அதிர்ந்துபோனார்கள் விசாரணைக்குழுவினர்!

வக்கிரம் கூடும் வெள்ளிக்கிழமை!

புகார் அளித்த பெண் அலுவலர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘செயற்பொறியாளர் கிருஷ்ணனின் பாலியல் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கணவரை இழந்த பெண் அலுவலர்கள் என்றால் அவரது அத்துமீறல்கள் தாங்க முடியாது. என்ன காரணமோ தெரியவில்லை... வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலே அவருக்கு வக்கிரம் கூடிவிடும்... பெண் அலுவலர்களை அறைக்குள் அழைத்து, கண்ட இடங்களில் தொட்டுப் பேசுவார்... பக்திமான்போல நடித்து நெற்றியில் பொட்டுவைத்து, கன்னத்தைக் கிள்ளுவார். சிலரிடம் இதைத் தாண்டியும் அத்துமீறியிருக்கிறார். ஒரு நாள் வேலைக்குத் தாமதமாக வந்துவிட்டால் போதும்... உள்ளே அழைத்து, ‘ஏன் லேட்டு, வீட்டுல ஏதாச்சும் பிரச்னையா?’ என்று ஆறுதல் சொல்வதுபோல தொட்டுப் பேசுவார். அறைக்குள் சென்றால் கொஞ்சம்கூட கூச்சப்படாமல் உடலெங்கும் உற்றுப் பார்த்து, உடல் அமைப்புகளை வர்ணிப்பார். நாங்கள் கூனிக்குறுகிவிடுவோம்.

ஒரு பெண் அலுவலரிடம் ஆபாசமாகப் பேசி, ‘ஏலகிரியில் ரூம் போடலாமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ‘இப்படியெல்லாம் பேசாதீங்க சார்’ என்று குரலை உயர்த்தியபோது, பேப்பரை முகத்தில் வீசியிருக்கிறார். இன்னொரு பெண் அலுவலர், ‘செருப்பால் அடிப்போம்’ என்று சொல்லியும் ஆள் அடங்கவில்லை. இன்னொருமுறை பெண் அலுவலர் ஒருவரிடம் இவர் அத்துமீறியபோது அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். அப்போதும் அசராமல், ‘அறைந்ததெல்லாம் ஓகே. ஆனால், விஷயத்தை வெளியே சொன்னால் சஸ்பெண்ட் செய்துவிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார்.

வீடியோ எடுத்த அலுவலருக்கு அடி!

2019, மே மாதம் ஒரு வெள்ளிக்கிழமையில், பெண் அலுவலர்களை அறைக்குள் அழைத்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டிருந்தார் கிருஷ்ணன். இதை சிவாஜி என்ற அலுவலர் செல்போனில் வீடியோ எடுத்துவிட்டார். உடனே ஆத்திரமடைந்த கிருஷ்ணன், அவரை அங்கேயே அடித்து வெளுத்ததுடன், செல்போனையும் பிடுங்கி உடைத்துவிட்டார். இது குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், கட்டப்பஞ்சாயத்துப் பேசி தப்பித்துவிட்டார். அதேபோல இப்போதும் உயரதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு தப்பிக்க முயன்றுவருகிறார். கிருஷ்ணனைக் கைதுசெய்து எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்றனர் குமுறலோடு!

ஏலகிரியில் ரூம் போடலாமா? - வலைவீசிய மின்வாரிய அதிகாரி... வரிசைகட்டும் பாலியல் புகார்கள்...

இதற்கிடையே வெங்களாபுரம் அலுவலகத் திலிருந்து அருகிலுள்ள வெலக்கல்நத்தம் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக் கிறார் கிருஷ்ணன். அவர்மீது நடவடிக்கை எடுக்காததால் கொதித்தெழுந்த மின் பகிர்மான வட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அக்டோபர் 25-ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவைச் சந்தித்து புதிய மனு ஒன்றை அளித்தனர். அதில், ‘‘செயற்பொறியாளர் கிருஷ்ணன்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உயரதிகாரிகள் அவருக்குச் சாதகமாக செயல் படுகின்றனர். புகார் அளித்த 22 பெண்களுக்கும் நிர்வாகரீதியாக மிரட்டல்கள் வருகின்றன. கிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

புகார் தொடர்பாக விளக்கம் கேட்க செயற்பொறியாளர் கிருஷ்ணனை செல்போனில் தொடர்புகொண்டோம். போனை எடுத்தவர், நமது அத்தனை கேள்விகளையும் கேட்டுவிட்டு, “பதில் சொல்ல முடியாது” என்று மறுத்துவிட்டார். திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணனிடம் பேசியபோது, ‘‘இந்த விவகாரத்தில், துறைரீதியான விசாரணை நடைபெற்றுவருகிறது. மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து இதுவரை எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. அப்படி வந்தால், தீவிரமாக விசாரிக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

குடும்பக் கட்டமைப்பு தொடங்கி சமூகத்தின் அத்தனை கட்டமைப்புகளிலும் கூடவோ, குறையவோ ஒடுக்குதல்களை எதிர்கொண்டுதான் பெண்கள் வெளியே வருகிறார்கள். அவர்களைப் பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்தும் இத்தகைய அதிகாரிகள் ஒருபோதும் தப்பக் கூடாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு