Published:Updated:

‘இன்ஸ்டா’ ரோமியோக்களின் வலையில் மாணவிகள்! - காரைக்காலில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்...

காரைக்காலில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
காரைக்காலில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்...

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் பின்னணியில் ‘இன்ஸ்டா ரோமியோ’ என்ற குரூப் செயல்படுவது தெரியவந்திருக்கிறது. அவர்கள் அனைவரும் போலிப் பெயர்களில் இயங்குகிறார்கள்.

‘இன்ஸ்டா’ ரோமியோக்களின் வலையில் மாணவிகள்! - காரைக்காலில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்...

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் பின்னணியில் ‘இன்ஸ்டா ரோமியோ’ என்ற குரூப் செயல்படுவது தெரியவந்திருக்கிறது. அவர்கள் அனைவரும் போலிப் பெயர்களில் இயங்குகிறார்கள்.

Published:Updated:
காரைக்காலில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
காரைக்காலில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்...

ஆன்மிகச் சுற்றுலா மையமான காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளைக் குறிவைத்து அரங்கேறிவரும் பாலியல் வன்முறை பெற்றோரைக் கதிகலங்க வைத்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த மாவட்டத்தில் 31 இளம்பெண்கள் மாயமாகியிருக்கிறார்கள். இவர்களில் பலர் மீட்கப்பட்டுவிட்டாலும், இதில் சிக்கியவர்கள் பெரும்பாலும் பள்ளி மாணவிகள் என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல். காரைக்காலில் என்னதான் நடக்கிறது?

சில மாதங்களுக்கு முன்பு காரைக்காலில் ஹோட்டல் அதிபர் ஒருவரின் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் ஒரே நேரத்தில் காணாமல்போனார்கள். பதறிப்போன ஹோட்டல் அதிபர் காவல்துறையை நாடினார். விசாரணையில் அந்தச் சிறுமிகள் இருவருக்கும், பொறியியல் படிக்கும் மாணவன் ஒருவனுடன் சமூக ஊடகம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த மாணவனுடன் தினமும் சாட் செய்த சகோதரிகள் இருவரும், ஒருகட்டத்தில் வீட்டைவிட்டுக் கிளம்பி பட்டுக்கோட்டைக்குச் சென்றுவிட்டார்கள். இதையடுத்து, பட்டுக்கோட்டைக்குச் சென்ற போலீஸார் அந்த மாணவனைக் கைதுசெய்து, சிறுமிகளை மீட்டு வந்தனர்.

சுப்பிரமணியன்
சுப்பிரமணியன்

இதேபோல நெல்லையைச் சேர்ந்த ராஜ் என்பவனுக்கு காரைக்காலைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியுடன் சமூக ஊடகம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. திருமணமாகி குழந்தைகளுடன் வாழும் ராஜ், மாணவியை நேரில் வந்து சந்தித்து காரைக்கால் பீச்சில் சுற்றிவிட்டு, விடுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். அங்கு இருவரும் நெருக்கமாக இருப்பதுபோல வீடியோ எடுத்துக்கொண்டவன், சில நாள்களிலேயே அந்த மாணவியிடம் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்திருக்கிறான். மாணவியின் பெற்றோர் இது பற்றி போலீஸில் புகார் செய்த நிலையில், போலீஸார் அந்த நபரிடம் செல்போனில் பேசினார்கள்... அப்போது அவன், ‘முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள்’ என்று சவால்விட்டு மும்பைக்குப் பறந்துவிட்டான். செல்போன் டவர் சிக்னல் மூலம் அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த தனிப்படை போலீஸார், மும்பைக்குச் சென்று அவனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்தில் திருநள்ளாரைச் சேர்ந்த ப்ளஸ் டூ படிக்கும் மாணவியைக் காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுத்தார்கள். போலீஸார் அந்த மாணவியின் தோழிகளிடம் விசாரித்தபோது, கும்பகோணத்தில் டாட்டூ தொழிலில் ஈடுபட்டிருந்த முஷாரப் என்பவனுடன் அந்த மாணவி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. சென்னையில் அந்த இளைஞனைக் கைதுசெய்ததுடன், அவனுடன் இருந்த மாணவியையும் போலீஸார் மீட்டார்கள்.

நெய்வாச்சேரியைச் சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழகிய நந்தா, அவனுடைய நண்பன் ராமுவுடன் சேர்ந்து சிறுமியைச் சீரழித்திருக்கிறான். இதனால் விரக்தியடைந்த சிறுமி, பூச்சி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். சிறுமியை உரிய நேரத்தில் தேனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். இதையடுத்து, நந்தா, ராமு என இருவர் கைதுசெய்யப்பட்டனர். திருப்பட்டினத்தில் 11-ம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை பிறக்கும் வரை அவர் கர்ப்பமடைந்த விவரம்கூட அவரின் பெற்றோருக்குத் தெரியவில்லை. அந்தச் சிறுமியைப் பாலியல் வன்முறை செய்த படையப்பா என்பவனை போலீஸ் சிறையில் அடைத்துள்ளது. மேற்கண்ட சம்பவங்களெல்லாம் உதாரணங்கள் மட்டுமே. தவிர, இவையெல்லாம் வெளியே வந்தவை மட்டுமே. வெளியே வராமல் மூடி மறைக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘இன்ஸ்டா’ ரோமியோக்களின் வலையில் மாணவிகள்! - காரைக்காலில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்...

இது பற்றி நம்மிடம் பேசிய காவல்துறை இளம் அதிகாரி ஒருவர், “குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் பின்னணியில் ‘இன்ஸ்டா ரோமியோ’ என்ற குரூப் செயல்படுவது தெரியவந்திருக்கிறது. அவர்கள் அனைவரும் போலிப் பெயர்களில் இயங்குகிறார்கள். அந்தக் குழுவை நடத்திவரும் நபரைப் பிடிக்க முயன்றுவருகிறோம். கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்ததால், செல்போன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்தது. அவர்களில் சிலர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு அடிமையானார்கள். இந்தச் செயலிகளில் குத்துப்பாட்டு, கவர்ச்சி அசைவுகள், இரட்டை அர்த்த காமெடிகள், ஆபாசக் காட்சிகள் குவிந்துகிடக்கின்றன. சமூக விரோதிகள் சிலர் இந்தச் செயலிகள் மூலம் சிறுமிகளிடம் நட்பாகப் பழகத் தொடங்குகிறார்கள். ஒருகட்டத்தில் தங்கள் வழிக்கு வரும் மாணவிகளை ஏமாற்றி அழைத்துச் சென்று, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறார்கள்.

காரைக்காலில் கடந்த ஆண்டு மட்டும் 31 இளம்பெண்கள் மாயமானதாக வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் 17 வழக்குகள் போக்சோ பிரிவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டு வயது குழந்தைகள்கூட பாலியல் வன்முறை செய்யப்பட்டதாக திருப்பட்டினம் மற்றும் காரைக்கால் நகரக் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. திருநள்ளாறு காவல் நிலையத்தில் இளம்பெண்கள், சிறுமியர் மாயமானதாக 12 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் பள்ளிச் சிறுமியரே அதிகமாகக் காணாமல் போயிருக்கிறார்கள்” என்று புள்ளிவிவரங்களையும் அடுக்கினார்.

இது குறித்து காரைக்கால் மாவட்ட எஸ்.பி சுப்பிரமணியனிடம் கேட்டோம்... “இது வருத்தமான விஷயம்தான்... இது போன்ற பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவிருக்கிறோம். காரைக்கால் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினாலே இது போன்ற குற்றங்கள் கணிசமாகக் குறையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism