லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

மதன் மட்டுமா...ஏழரை லட்சம் பார்வையாளர்களும் குற்றவாளிகளே!

மதன்
பிரீமியம் ஸ்டோரி
News
மதன்

ஆபாச யூடியூபர் சர்ச்சை... ஓர் அலசல்

பல உயிர்களைப் பறித்த பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டபோதும், வி.பி.என் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதைப் பலர் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விளையாட்டை சிலருடன் இணைந்து விளையாடி, அதை யூடியூபில் நேரலை செய்துகொண்டிருந்தார் சேலத்தைச் சேர்ந்த மதன் என்ற இளைஞர்.

இதற்கென, ‘மதன் ஓபி’ என்ற யூடியூப் சேனலை அவர் நடத்தி வந்தார். ஆபாசமான வர்ணனைகள், அத்துமீறும் வார்த்தைகள் என எல்லைமீறிய ஆட்டமே அவரது அடையாள மானது. பெண்களையும், உடன் விளையாடு பவர்களையும் தரக்குறைவாகப் பேசும் இவரது சேனலுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பப்ஜி யூடியூப் சேனலைத் தொடங்கி, அதிலும் பப்ஜி விளையாட்டின் நேரலையையும் ஆபாச வர்ணனைகளையும் தொடர்ந்தார் மதன்.

18 வயதுக்குக் கீழேயுள்ள பெண் குழந்தை களுடனும் தகாத வார்த்தைகளில் மதன் உரையாடிய ஸ்க்ரீன் ஷாட்களை சில யூடியூபர்கள் வெளியிட்டனர். இந்த விவகாரம் சென்னை நகரக் காவல்துறையினரின் சைபர் குற்றப் பிரிவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, மதன் கைதாகியிருக்கிறார். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களில் லேட்டஸ்ட் சேர்க்கை இந்த வக்கிரம்.

மதன் மட்டுமா...ஏழரை லட்சம் பார்வையாளர்களும் குற்றவாளிகளே!

பெற்றோர் அதிக கவனமாக இருக்க வேண்டும்!

இதுகுறித்துப் பேசிய சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஆதிலட்சுமி, “பெண்கள், குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களில் இதுபோல் பழக்கவழக்கங்கள் ஏற்படும்போது அவர்களிடம் அத்துமீறிப் பேசுவது கண்டிக்கப்பட வேண்டியது. இவை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வருகிற சைபர் குற்றங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கு நிகழும் குற்றங்கள் என்பதால், `போக்சோ' சட்டத்தின் கீழும் சேர்த்தே பதிவு செய்யப்படும். பள்ளியாக இருந்தாலும் சரி, இணையதளமாக இருந்தாலும் சரி, யாரிடம் எந்த அளவோடு பழக வேண்டும், மனிதர்களின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வது எப்படி எனக் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் படிக்கிறார்களா, கேம் விளையாடுகிறார்களா என்பதுகூடத் தெரியாத பெற்றோர்கள் பலர் இருக் கிறார்கள். இன்று மதனோடு பல குழந்தை கள் பேசியிருப்பது அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இணைய வழி பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் பெற்றோர் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்” என்கிறார்.

மதன் மட்டுமா...ஏழரை லட்சம் பார்வையாளர்களும் குற்றவாளிகளே!

மக்களின் ஆதரவும் முக்கிய காரணம்!

‘`மதனுடைய சேனலுக்கு சுமார் ஏழரை லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக் கிறார்கள். ஆபாசம் நிறைந்த அவரின் பேச்சுகளை அத்தனை லட்சம் பேர் ஆதரித்ததும் இதற்கு ஒரு காரணம். மேலும், ஒவ்வொரு குடும்பத்திலுமே ஆண், பெண் குழந்தைகளின் மீது கருத்தியல் ரீதியிலான வன்முறை நடக் கிறது. அவர்களுக்கு அந்தந்த வயதில் தோன்றும் சந்தேகங்களை, கேள்விகளை பெற்றோரே உரிய வகையில் அணுகுவதில்லை. இதுவே பொதுசமூகத்திலான இத்தகைய வன்முறை வரை இட்டுச் செல்கிறது” என்று தன் கருத்தை முன் வைக்கிறார் பெண்ணுரிமை ஆர்வலர் ஓவியா.

மதன் மட்டுமா...ஏழரை லட்சம் பார்வையாளர்களும் குற்றவாளிகளே!

கட்டுப்பாடுகளும் சட்டங்களும் அவசியம்!

சமூக வலைதள பிரபலம் சோனியா அருண் குமாரிடம் பேசினோம். “சமூக வலைதளங்களில் எதையெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது என்ற விழிப்புணர்வே நம்மிடமில்லை. இணையதளங்களில், பெண்களைத் தவறாகச் சித்திரிப்பதில் தொடங்கி, அவர்களுக்கு எதிரான நவீன முறை பாலியல் குற்றங்கள்வரை நடக்கின்றன.

சைபர் குற்றங்களுக்கு பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப் படுவதில்லை. சமூக வலைதளம் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வரின் சமூக வலைதளக் கணக்கை மூடவோ லாக் செய்யவோ அறிவுறுத்தப் படுகிறது. சமூக வலைதளங்களில், ஒருவர் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவைக்கான கட்டுப்பாடுகளை உடனடியாக சட்டங்களாகக் கொண்டு வருவது தீர்வாகலாம்” என்கிறார்.

மதன் மட்டுமா...ஏழரை லட்சம் பார்வையாளர்களும் குற்றவாளிகளே!


பெற்றோரின் அலட்சியம் மாற வேண்டும்!

உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்திடம் பேசினோம். “அந்த இளை ஞரின் நடவடிக்கைகளை, ஆளுமைக் கோளாறு என்று சொல்வோம். அவர்களிடம் தற்காதல் மிகவும் அதிக மாக இருக்கும். சிறு வயதிலிருந்தே அவர் ஆபாசமாகப் பேசிப் பழகியிருக்கலாம். பெற்றோர்கள் கண்டிக்காமல் விட்டிருக்க லாம். ஐபாட், கணினி, மொபைல் எதையாவது கொடுத்து விட்டு, நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி எனப் பெற்றோர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். குழந்தைகள் என்ன செய்கிறார்கள், யாரிடமிருந்து எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை யெல்லாம் கண்காணிப்பதில்லை. அதன் விளைவாக, தங்கள் குழந்தைகளையே இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதெல்லாம் தவறு என்று தெரிவதற்கு முன்பே குழந்தைகள் அதற்குப் பலியாகிவிடுகிறார்கள்” என்கிறார்.

மதன் மட்டுமா...ஏழரை லட்சம் பார்வையாளர்களும் குற்றவாளிகளே!

மதன் போன்றோரின் ஆபாச, வக்கிர வீடியோக்களை ரசிப்பதோடு, அவற்றுக்கு ஆதரவளிக்கிற லட்சக்கணக்கான மக்களுக்கும் இந்தக் குற்றங்களில் பங்குண்டு. குழந்தை களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல் உங்களை சுய பரிசீலனை செய்துபார்க்க வேண்டிய தருணமிது.