Published:Updated:

போதை நெட்வொர்க்கில் ஆர்யான் சிக்கியது எப்படி? - பதறவைக்கும் பாலிவுட் பார்ட்டிகள்...

மும்பையில் மழைக்காலத்துக்குப் பிறகு மும்பை டு கோவா செல்லும் முதல் சொகுசுக் கப்பல் இது.

பிரீமியம் ஸ்டோரி

பாலிவுட்டையும் போதை பார்ட்டிகளையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது. சஞ்சய் தத், தீபிகா படுகோனே, சாரா அலிகான், தியா மிர்சா வரிசையில் இப்போது நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யான் கான் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஏற்கெனவே, ஷாருக் கானின் மனைவி கௌரி கான் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டதாகச் சொல்லப்படும் நிலையில், இப்போது அவரின் மகன் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியிருப்பது பாலிவுட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது!

நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாக விளங்கும் மும்பை, பல காலமாக போதைப்பொருள்களின் கூடாரமாகவும் இருக்கிறது. குறிப்பாக, பாலிவுட்டில் போதைப்பொருள்களின் புழக்கம் அதிகம். அங்கு தினம் தினம் நுரை பொங்கும் பார்ட்டிகளில் கோகெய்ன் மற்றும் சில போதை மாத்திரைகள் எல்லாம் சகஜம் என்கிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது நடிகர் ஷாருக் கானின் மகன் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

போதை நெட்வொர்க்கில் ஆர்யான் சிக்கியது எப்படி? - பதறவைக்கும் பாலிவுட் பார்ட்டிகள்...

அக்டோபர் 2-ம் தேதி, வார இறுதிநாளான சனிக்கிழமை என்பதால் மும்பையில் பார்ட்டிகள் களைகட்டியிருந்தன. அப்படித்தான் அன்றைய தினம் மதியம் மும்பை துறைமுகத்திலிருந்து கோவாவுக்கு ‘எம்பிரஸ்’ உல்லாசக் கப்பல் புறப்படவிருந்தது. இந்தக் கப்பலில்தான் திடீர் ரெய்டு நடத்தி போதைப்பொருள்களை வைத்திருந்ததாக ஷாருக் கான் மகன் ஆர்யான் கான் உட்பட எட்டுப் பேரை சுற்றிவளைத்துள்ளனர் மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார்.

இந்த திடீர் ரெய்டின் பின்னணி குறித்து நம்மிடம் விவரித்தார்கள் போலீஸார் சிலர்... “மும்பையில் மழைக்காலத்துக்குப் பிறகு மும்பை டு கோவா செல்லும் முதல் சொகுசுக் கப்பல் இது. இந்தக் கப்பலில் நடக்கும் போதைப்பொருள் பார்ட்டியில் வி.வி.ஐ.பி-களின் பிள்ளைகள் பலரும் கலந்துகொள்ளவிருப்பதாக ஒரு வாரம் முன்பே எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தலா 80 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து ஆறு அதிகாரிகளைக் கப்பலுக்குள் அனுப்பினோம். நடுக்கடலில் சோதனை நடத்தும்போது யாராவது கடலில் குதித்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதால், அதையும் சமாளிக்க கப்பலிலிருந்து சற்று தொலைவில் மீனவர் படகுகளில் தொழில் பாதுகாப்புப் படையினர் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அக்டோபர் 2-ம் தேதி மதியம் கிளம்பவேண்டிய கப்பல் என்றாலும், பார்ட்டியை முன்னிட்டு முதல் நாள் 1-ம் தேதி காலை 10 மணியிலிருந்தே பயணிகள் கப்பலில் ஏற ஆரம்பித்தனர்.

போதை நெட்வொர்க்கில் ஆர்யான் சிக்கியது எப்படி? - பதறவைக்கும் பாலிவுட் பார்ட்டிகள்...

பயணிகளைக் கடும் சோதனைகளுக்குப் பிறகே மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உள்ளே அனுமதித்தனர். ஆர்யான் கான், அவரின் நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட் ஆகியோர் வி.ஐ.பி வரிசையில் வந்தபோது, அவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அர்பாஸ் அணிந்திருந்த காலணிக்குள் போதைப்பொருள் பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தவிர, கப்பலுக்குள் சென்ற பெண்கள் சிலர் சானிட்டரி நாப்கின்களிலும், சிலர் மூக்குக்கண்ணாடியிலும், சிலர் ஆயுர்வேத மாத்திரைகள் என்று கூறியும் போதைப்பொருள்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பறிமுதல் செய்து, இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த சமீர், பாஸ்கர், மானவ், கோபால், போதைப்பொருள் சப்ளையர் ஸ்ரேயாஸ் நாயர் உட்பட எட்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அடுத்தடுத்த நாள்களில் இது தொடர்புடைய மேலும் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். மொத்தம் 25 அதிகாரிகள் ஈடுபட்ட இந்த ஆபரேஷனை ‘தார்’ என்று பெயரிட்டு நடத்தினோம்” என்றார்கள் விரிவாக.

ஆர்யான் கான் போதைப்பொருள் நெட்வொர்க்கில் சிக்கியது எப்படி என்பது குறித்தும் பாலிவுட் தொடர்புடைய சிலர் நம்மிடம் பேசினார்கள்... “ஆர்யான் கானுக்கு 23 வயதாகிறது. அர்பாஸ் மெர்ச்சன்ட்டும் ஆர்யான் கானும் பால்யகால நண்பர்கள். சிறுவர்களாக இருந்ததிலிருந்தே சுமார் பத்தாண்டுகளாக அவர்களின் நட்பு தொடர்கிறது. அர்பாஸ் மூலமாகத்தான் நான்காண்டுகளுக்கு முன்பே ஆர்யான் கானுக்கு போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆனால், ஆர்யான் கான் போதைப்பொருள் உட்கொண்டாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. பல வருடங்களுக்கு முன்பு ஷாருக் கான் மனைவி கௌரி கான் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியிருந்தார். ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையத்தில் ஒருமுறை அவர் போதைப்பொருள்களுடன் பிடிபட்டார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு கௌரி கான் அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவிட்டார் என்று கூறப்படுகிறது. இப்போது அவரின் மகன் இந்தச் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்” என்றவர்கள், பாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் போதைப்பொருள் பழக்கத்தைப் பற்றியும் விவரித்தார்கள்...

“1982-ல் நடிகர் சஞ்சய் தத் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கைதுசெய்யப்பட்டார். 2001-ல் நடிகர் பர்தீன் கான் கோகெய்ன் வைத்திருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார்.ஹிரித்திக் ரோஷனின் மனைவி சுஷானே கானின் போதைப் பழக்கத்தால்தான் இருவரும் பிரிந்தனர். நடிகை கங்கனா ரணாவத்தும் ஒரு காலகட்டத்தில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியிருந்ததை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 2020, ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரின் காதலியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுஷாந்த் போதைப்பொருள்களைப் பயன்படுத்தியாகத் தெரிவித்தார். இதையடுத்து தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங், தியா மிர்சா உட்பட பலரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேரில் அழைத்து விசாரித்தனர். அந்த விசாரணையே இன்னும் முடிவதற்குள் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது” என்றார்கள்.

போதை நெட்வொர்க்கில் ஆர்யான் சிக்கியது எப்படி? - பதறவைக்கும் பாலிவுட் பார்ட்டிகள்...

போலீஸார் நடவடிக்கையால் மட்டுமே போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க முடியாது. பாலிவுட் பிரபலங்கள் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இதிலிருந்து ஓரளவு விடுபட முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு