Published:Updated:

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த சக்திகாந்த தாஸ்..! - செய்த சாதனைகளும் சந்தித்த சவால்களும்!

சக்திகாந்த தாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சக்திகாந்த தாஸ்

RBI

டந்த 11-ம் தேதியுடன் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவியேற்று தனது இரண்டாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளார். ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் கருத்து மோதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான உர்ஜித் பட்டேல் திடீரென பதவி விலகிய போது, இந்தியாவின் 25-வது ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட சக்திகாந்த தாஸின் கடந்த இரண்டு ஆண்டுக் கால செயல்பாடுகள் குறித்தும் அவர் இனி சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்தும் இங்கு காண்போம்.

வரலாறு முதல் பொருளாதாரம் வரை...

2016-ம் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோது, அவற்றை மென்மை யாகவும் அதேசமயம் உறுதியாகவும் எதிர்கொண்ட மத்திய அரசின் குரலாகத் திகழ்ந்தார் சக்திகாந்த தாஸ். ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் போன்ற பொருளாதார நிபுணர்களுக்கு அடுத்தபடியாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப் பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தனியார் வங்கிகளின் வீழ்ச்சி...

வங்கித் துறையைப் பொறுத்த வரை, கடந்த இரண்டு ஆண்டுகள் சோதனையானதொரு காலகட்ட மாகவே இருந்துவந்துள்ளது. யெஸ் வங்கி மற்றும் லக்ஷ்மி விலாஸ் போன்ற தனியார் வங்கிகள் வீழ்ச்சி அடைந்த போதும் பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா போன்ற கூட்டுறவு வங்கிகள் சரிவைச் சந்தித்தபோதும், வங்கித்துறையின் மீதான மத்திய வங்கியின் மேற்பார்வை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுப்பப் பட்டன. திவான் ஹவுஸிங் போன்ற நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியின் தொடர்ச்சியாக பெரு முதலாளிகளின் மீது மோசடி வழக்குகள் பதியப் பட்டதும் பெரும் கவனத்தை ஈர்த்தது.

சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில், பெரு முதலாளிகளின் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில், வங்கித் துறையில் பெருநிறுவனங்களை அனுமதிக்க வகை செய்யும் விதத்தில் ரிசர்வ் வங்கிக் குழுவொன்று பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருப்பது புதிய சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கிறது.

குறைந்த வட்டி, அதிக பணவீக்கம்...

சக்திகாந்த தாஸ் ஆளுநராகப் பதவி ஏற்றபின், ரிசர்வ் வங்கியின் கொள்கை வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் பல தவணை களில் 2.50% குறைக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களுக்கும் கடன்தாரர் களுக்கும் இது ஒரு மகிழ்ச்சியான காலகட்டமாக இருந்தாலும் வட்டி வருவாயை நம்பியிருக்கும் சிறு சேமிப்பாளர்களுக்கும் ஓய்வூதியதாரர் களுக்கும் சற்று சோதனையான காலம்தான். எளியோரை அதிகமாகப் பாதிக்கும் பணவீக்க வரம்பைக் (2-6%) கட்டுப்படுத்தும் சட்டரீதியான முக்கியப் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 7.61 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சியின் வீழ்ச்சி..!

ரிசர்வ் வங்கியின் மற்றுமொரு முக்கியப் பொறுப்பாகக் கருதப்படுவது பொருளாதார வளர்ச்சி ஆகும். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முந்தைய காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2020) 23.9% வீழ்ச்சி அடைந் துள்ளது. இதற்கு முக்கியமான காரணம், கொரோனாத் தொற்று என்றாலும், இந்தியாவின் பொருளாதாரப் பின் னடைவு, கொரோனாகால கட்டத்துக்கு முன்னரே தொடங்கிவிட்டது. அதே சமயம், பொருளாதாரத்தை மீட்பதற்கு ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்து தொடங்கப்பட்டுள்ள பல்வேறு புதுமை யான நடவடிக்கைகள் நிச்சயமாக வரவேற்கத் தக்கவை.

அரசின் ஆபத்பாதவன்..!

அரசின் வங்கி என்ற முறையில் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் பெரிதளவுக்கு பாராட்டப்படுகின்றன. இந்தியாவின் பொருளாதார மீட்சிக்காக அறிவிக்கப் பட்ட திட்டத் தொகையில் பெரும்பங்கு ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்து அறிவிக் கப்பட்டவையே. கடும் சரிவைச் சந்தித் திருக்கும் இந்திய பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசுக்கும் மாநில அரசு களுக்கும் தேவையான நிதியைக் கடன் சந்தையிலிருந்து குறைந்த வட்டி செலவில் திரட்ட ரிசர்வ் வங்கி சிறப்பான முயற்சி களை மேற்கொண்டு வருகிறது.

‘ஆப்பரேஷன் டிவிஸ்ட்’, ‘டாலர் ஸ்வாப்’, ‘நீண்டகால ரெப்போ’ போன்ற ரிசர்வ் வங்கியின் புதுமையான முயற்சிகள் கடன் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

முப்பரிமாண சவால்கள்..!

கொரோனா தொற்றை முன்னிட்டு பல நாடுகளின் மத்திய வங்கிகள் ஏராளமான நிதியைப் பொதுச் சந்தையில் வெளியிட்டு வருவதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்குள் குறிப்பாக, மூலதனச் சந்தையில் ஏராளமான அந்நியப் பணம் நுழைந்து வருகிறது. குறுகியகால நோக்கில் இது மூலதனச் சந்தைகளின் உயர்வுக்கு வழி வகுக்கும் என்றாலும், அதிகப் படியான அந்நியப் பணவரவு உள்நாட்டு பணவீக்கத்தை மேலும் அதிகப்படுத்துவதுடன் நீண்ட கால நோக்கில், நமது மூலதனச் சந்தையின் ஸ்திரத் தன்மையையும் பாதித்துவிடும் அபாயம் உள்ளது.

உள்நாட்டு பொருளாதாரத்தின் தற்போதைய மீட்சி எத்தனை காலகட்டத்துக்குத் தொடரும் என்பதும் இந்தியாவின் வளர்ச்சி எப்போது அதிவேகப் பாதைக்குத் திரும்பும் என்பதும் பலரது கேள்விகளாகத் தொடர்கின்றன. மேலும், வேலைவாய்ப்புகள் வீழ்ச்சியடைந்துள்ள தற்போதைய சூழ்நிலையில், அதிவேக விலைவாசி உயர்வு ஏற்பட்டு விட்டால், அது சாமானிய மக்களைப் பெரிதளவில் பாதித்து விடும் அபாயமும் உள்ளது.

ஆக, பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் நிதித்துறை ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் சக்திகாந்த தாஸ் பெரும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும், இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் சந்தித்த சவால்களைப்போல மூன்றாம் ஆண்டிலும் சந்திக்க வேண்டி யிருக்கும். அதில் அவர் பெறும் வெற்றியே, ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக்கு அவர் பெயரை இரண்டாவது முறையாகப் பரிசீலிக்க வைக்கும்!

பிட்ஸ்

லக அளவில் ஒரு ட்ரில்லியன் டாலர் முதலீட்டை நிர்வகிக்கும் முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த வான்கார்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பெற்றுள்ளது!