Published:Updated:

ஆன்மிகம் நிறைந்த பங்குச் சந்தை ஊழல்!

ஆன்மிகம் நிறைந்த பங்குச் சந்தை ஊழல்!
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகம் நிறைந்த பங்குச் சந்தை ஊழல்!

செபி, தனது விசாரணை அறிக்கையை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், அதிர்ச்சிக்குரிய பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆன்மிகம் நிறைந்த பங்குச் சந்தை ஊழல்!

செபி, தனது விசாரணை அறிக்கையை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், அதிர்ச்சிக்குரிய பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Published:Updated:
ஆன்மிகம் நிறைந்த பங்குச் சந்தை ஊழல்!
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகம் நிறைந்த பங்குச் சந்தை ஊழல்!

உலக அளவில் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்றான இந்திய தேசிய பங்குச் சந்தையின் தலைமை அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணாவின் ஊழல்கள் தேசத்தையே அதிரவைத்துள்ளன. இமயமலை ‘மர்மயோகி’யின் உத்தரவுகளின்படி, அவர் செய்த ஒவ்வொரு தகிடுதத்தமும் `பகீர்’ ரகமாக இருக்கிறது!

இந்திய தேசிய பங்குச் சந்தை, உலக அளவில் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் முக்கியமானது. ஐ.டி.பி.ஐ., எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ உட்பட முன்னணி தனியார் நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் இதன் பங்குதாரர்கள். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய பங்குச் சந்தையில், நாளொன்றுக்கு சுமார் 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் பணம் புழங்குகிறது என்ற புள்ளிவிவரம் மலைக்கவைக்கிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில்தான், மிகப்பெரிய ஊழல்களைச் செய்திருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன்.

இவருக்கு எதிராக இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று, தேசிய பங்குச் சந்தை நிர்வாக இயக்குநரின் தலைமை ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டது தொடர்பானது. இரண்டு, தேசிய பங்குச் சந்தை பற்றிய மிக முக்கியமான தகவல்களை ‘இமயமலை யோகி’ என்று சொல்லப்படும் மர்ம நபரிடம் பகிர்ந்துகொண்டது தொடர்பானது. 1992-ம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய ரூ.5,000 கோடி அளவுக்கான மும்பை பங்குச் சந்தை ஊழலையே மிஞ்சிவிட்டது, இந்த ஊழல். மும்பை பங்குச் சந்தை ஊழலின் ‘நாயகன்’ ஹர்ஷத் மேத்தா என்றால், தேசிய பங்குச் சந்தை ஊழலின் ‘நாயகி’ சித்ரா ராமகிருஷ்ணா.

ஆன்மிகம் நிறைந்த பங்குச் சந்தை ஊழல்!

லட்சத்திலிருந்து கோடிக்குப் போன சம்பளம்!

தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் (எம்.டி மற்றும் சி.இ.ஓ) 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் பல கோல்மால்களைச் செய்த சித்ரா ராமகிருஷ்ணா, எம்.டி மற்றும் சி.இ.ஓ-வின் தலைமை ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை 2013-ம் ஆண்டு நியமித்தார். அதுவரை ஒரு தனியார் நிறுவனத்தில், ஆண்டுச் சம்பளமாக 15 லட்சம் வாங்கிக்கொண்டிருந்தார் ஆனந்த் சுப்பிரமணியன். ஆனால், 1.68 கோடி ரூபாய் ஆண்டுச் சம்பளம் வழங்க, தேசிய பங்குச் சந்தை முன்வந்தது. விளம்பரம் எதுவும் கொடுக்கப்படாமலேயே ஆனந்த் சுப்பிரமணியன் வேலைக்கு எடுக்கப்பட்டார். ஒருவர் மட்டுமே அவரை நேர்காணல் செய்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, சாட்சாத் சித்ரா ராமகிருஷ்ணாதான். அடுத்த ஓராண்டில், ஆனந்த் சுப்பிரமணியம் சிறப்பாகப் பணியாற்றினார் என்று கூறி அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவரது ஆண்டுச் சம்பளம் 2.06 கோடி ரூபாயாக உயர்ந்தது.

ஆனந்த் சுப்பிரமணியன்
ஆனந்த் சுப்பிரமணியன்

அடுத்தாக 2015-ம் ஆண்டில், 3.34 கோடி ரூபாயாகவும், 2016-ம் ஆண்டு 4.21 கோடி ரூபாயாகவும் ஆனந்த் சுப்பிரமணியனின் ஆண்டுச் சம்பளம் உயர்ந்துகொண்டே போனது. அந்த நபரின் வளர்ச்சியையும் செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்துவந்த நபர்கள் அதிர்ந்துபோனார்கள். அதன் பிறகு, தேசிய பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் அதிகாரம்கொண்ட ‘செபி’க்கு (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) 2015-ம் ஆண்டு புகார் போனது. செபி, விசாரணையைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென சித்ரா ராமகிருஷ்ணா ராஜினாமா செய்தார்.

மூன்று வேதங்களில் இமெயில் ஐடி... ஆன்மிக உறவும் மர்மயோகியும்!

செபி, தனது விசாரணை அறிக்கையை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், அதிர்ச்சிக்குரிய பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ‘கடந்த 20 ஆண்டுகளாக ஒரு யோகியின் ஆலோசனைப்படியே முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுத்தேன்’ என்று கூறுகிறார் சித்ரா ராமகிருஷ்ணா. அந்த யோகியை அவர், கங்கைக்கரையில் ஒரு முறைதான் சந்தித்திருக்கிறாராம். மற்றபடி, இருவருக்கும் இடையே மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே இருந்தது என்கிறார். தலைமை ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியனை நியமிக்குமாறு யோகி மின்னஞ்சல் அனுப்பினாராம். அது மட்டுமல்ல... இமயமலையிலிருந்து சுவாரஸ்யமான பல மின்னஞ்சல்களை யோகி அனுப்பியிருக்கிறார். அவற்றில், சித்ரா ராமகிருஷ்ணாவின் ஹேர் ஸ்டைல், டிரெஸ்ஸிங் ஸ்டைல் பற்றியெல்லாம் யோகி கமென்ட் அடித்திருக்கிறார். செசல்ஸ் தீவுக்குப் பயணம் செல்வதாக ஒரு மின்னஞ்சலில் தெரிவித்த யோகி, ‘உங்களுக்கு நீச்சல் தெரியுமா?’ என்று சித்ரா ராமகிருஷ்ணாவிடம் கேட்டிருக்கிறார்.

ஆன்மிகம் நிறைந்த பங்குச் சந்தை ஊழல்!

rigyajursama@outlook.com என மூன்று வேதங்களின் பெயர்களைக்கொண்டதாக யோகியின் மின்னஞ்சல் முகவரி இருந்திருக்கிறது. இளையராஜா பாடல்களைப் பற்றியெல்லாம் மின்னஞ்சலில் சிலாகித்திருக்கிறார் யோகி. அதிர்ச்சி என்னவென்றால், தேசிய பங்குச் சந்தையின் மிக முக்கியமான தகவல்களையெல்லாம் தினந்தோறும் யோகிக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்திருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணா. ‘எனக்கும் யோகிக்கும் இடையே இருப்பது ஆன்மிக உறவு மட்டுமே...’ என்று விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். கடைசியில், ‘ஆனந்த் சுப்பிரமணியன்தான் அந்த இமயமலை யோகி’ என்ற குட்டு, விசாரணையில் வெளிப்பட்டிருக்கிறது.

2013-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ஆரம்பித்த இந்த ஊழல், 2016-ல் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வரை தொடர்ந்திருக்கிறது. தேசப் பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில், ஒரு விசாரணை அறிக்கையை அளிக்கவே ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்றுள்ள இந்த ஊழல் குறித்து மத்திய நிதியமைச்சரோ, பிரதமரோ இதுவரை ஒரு வார்த்தைகூட பேசவில்லை!