Published:Updated:

பனிப்பொழிவை சமாளிக்க இரசாயனங்கள் மற்றும் ரோபோக்கள், சிம்லா மாவட்டம் நிர்வாகம் திட்டம்!

பனிப்பொழிவு
News
பனிப்பொழிவு

சிம்லா முனிசிபல் கார்ப்பரேஷன் இந்த ரோபோக்களைப் பயன்படுத்தி பனியை அகற்றுவதன் மூலம் வேலையை விரைவாக முடிக்கவும், அதன் மூலம் வாகன நெரிசலைத் தவிர்க்கவும்‌ திட்டமிட்டுள்ளனர்.

இமாச்சல் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் தற்போதைய சமயம் அதிகம் பனிப்பொழிவு இருக்கும் சமயம். இந்த பனிப்பொழிவு சமயங்களில் சாலைகளில் வாகனங்களை ஓட்டவே மிகவும் சிரமமாக இருக்கும். பணி நிறைந்த சாலைகளில் போக்குவரத்தைத் தடை செய்வது இங்கு இயல்பு தான். வருடா வருடம் இப்படி உறைந்து கிடக்கும் பனியை அகற்றுவது அதிகாரிகளுக்கு மிகவும் சவாலான, அதிக நேரமும் எடுத்துக் கொள்ளும் வேலையாக இருக்கும். ஆனால், இந்த வருடம் பனியை அகற்றும் பணியை எளிதாக்குவதற்காகப் புதிதாக மூன்று ரோபோக்களை வாங்கியிருக்கிறது சிம்லா மாவட்ட நிர்வாகம். சிம்லா முனிசிபல் கார்ப்பரேஷன் இந்த ரோபோக்களைப் பயன்படுத்தி பனியை அகற்றுவதன் மூலம் வேலையை விரைவாக முடிக்கவும், அதன் மூலம் வாகன நெரிசலைத் தவிர்க்கவும்‌ திட்டமிட்டுள்ளனர்.

ஸ்னோ ப்ளோயர் (மாதிரிப் படம்)
ஸ்னோ ப்ளோயர் (மாதிரிப் படம்)

இந்த திட்டத்தைச் செயல்படுத்தும்‌ பொறுப்பிலுள்ள நிர்வாகப் பொறியாளர் அமித் (Amith) கூறுகையில், "சிம்லாவில் சாலைகளில் உள்ள பனியை அகற்றுவதற்காக‌ மூன்று ரோபோக்களை வாங்கியுள்ளோம். ஒரு ரோபோ ஸ்னோ ப்ளேடைக் கொண்டது, மற்ற இரண்டும் ஸ்னோ ப்ளோயர் வகையைச் சேர்ந்தது. ஸ்னோ ப்ளோயர் என்பது சாலையில் அல்லது நடைபாதையில் இருக்கும் பனியை உடனடியாகவும் விரைவாகவும் அப்புறப்படுத்தும் திறன் கொண்டவை. ஒவ்வொரு‌ ரோபோவும் 45 லட்சம் மதிப்புள்ளதாகும். இவற்றைப் பயன்படுத்தி சாலைகள் மட்டும் என்றில்லாமல் நடைபாதைகள், குறுகிய பாதைகள் ஆகியவற்றிலுள்ள பனியைக் கூட அகற்றலாம்." என்றார். இன்னும் பெரிய ரோபோக்களை வாங்குவதற்கு இமாச்சல் பிரதேசத்தின் பேரிடர் மேலாண்மை குழு, 5 கோடி ரூபாய் வரை நிதி வழங்கியுள்ளது. அந்த ரோபோக்களை சிம்லாவின் முக்கியமான பத்து பதினைந்து இடங்களில் உபயோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பனியைக் குறைப்பதற்கான இன்னொரு உத்தியாக இரசாயனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. கால்சியம் க்ளோரைடு (Calcium chloride) என்னும் இரசாயனத்தைப் பனி விழுவதற்கு முன்பு சாலைகளில் தெளிக்க வேண்டும். அந்த இரசாயனத்தின் தன்மையால் சாலைகளில் ‌பனிப் படலம் சேராமல் தடுக்க முடியும். இது‌ குறித்து சிம்லாவின் முனிசிபல் கமிஷனர் ஆஷிஷ் கோஹ்லி (Ashish Kohli) கூறுகையில், "இந்த இரசாயன முறையைப் பயன்படுத்த வேண்டுமானால், எந்த சமயத்தில் எங்கெங்கு பனி விழப்போகிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். அது வானிலையியல் துறையின் கையில்தான் உள்ளது. அவர்களின்‌ துல்லியமான கணிப்பில் மட்டுமே ‌இந்த உத்தியைச் சரியாகப்‌ பயன்படுத்த முடியும். இந்த வருடம் பனிப்பொழிவைச் சமாளிக்க ரோபோக்கள் மற்றும் இரசாயனங்கள் இரண்டையும் குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

சிம்லா பனிப்பொழிவு
சிம்லா பனிப்பொழிவு

இமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் அதிகமான மற்றும் மிக அதிகமான பனிப்பொழிவு இருக்கும் என வானிலையியல் மையம் கணித்துள்ளது. பனிப்பொழிவின் காரணமாக 200-க்கும் அதிகமான சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சிம்லாவில் அதிகபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியிருக்கிறது. மற்ற மாவட்டங்களான லஹால் மற்றும் ஸ்பிட்டி ஆகிய இடங்களில் குறைந்தபட்சமாக -4 டிகிரி செல்சியல் வரை வெப்பநிலை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.