Published:Updated:

குறைத்துக் காட்டப்படுகின்றனவா கொரோனா மரணங்கள்? - அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள்...

கொரோனா மரணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா மரணங்கள்

தமிழ்நாடு முழுமைக்கும் கணக்கிட்டு 1,08,721 முதல் 1,26,841 வரை அதிக இறப்புகள் நடந்திருக்கக்கூடும் என்றும் கணித்திருந்தோம்

குறைத்துக் காட்டப்படுகின்றனவா கொரோனா மரணங்கள்? - அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள்...

தமிழ்நாடு முழுமைக்கும் கணக்கிட்டு 1,08,721 முதல் 1,26,841 வரை அதிக இறப்புகள் நடந்திருக்கக்கூடும் என்றும் கணித்திருந்தோம்

Published:Updated:
கொரோனா மரணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா மரணங்கள்

கொரோனா இரண்டாவது அலை குறைந்துவரும் நிலையில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ‘தமிழகத்தில் அரசு அறிவித்த மரணங்களைவிட, ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம்’ என அடுத்தடுத்து ஆய்வுகள் வெளியாகிவருவதுதான் இந்த அதிர்ச்சிக்குக் காரணம்!

அமெரிக்காவின் வர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் கிறிஸ்டோபர் டி.லெஃப்லர் இந்தியாவில் நிகழ்ந்த கொரோனா மரணங்களை ஆராய்ந்து, ‘இந்த ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட கணக்குகளைவிட, இந்திய அளவில் சுமார் 19.7 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 1.46 லட்சம் பேரும் கூடுதலாக மரணம் அடைந்திருக்கலாம்’ என்ற தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், ‘கடந்த வருடம் ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை தமிழ்நாட்டில் 72,052 கூடுதல் இறப்புகள் நிகழ்ந்திருக்கலாம்; சென்னையில் மட்டுமே 5,921 கூடுதல் மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம்’ என்றும் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் அறப்போர் இயக்கம் மேற்கொண்ட கள ஆய்வுத் தகவல்களும் இவரது ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல்.

குறைத்துக் காட்டப்படுகின்றனவா கொரோனா மரணங்கள்? - அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள்...

இது தொடர்பாக பேசுவதற்காக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனைச் சந்தித்தபோது, “கொரோனா மரணங்களை வேறு நோய்களுக்கான மரணங்களாக தமிழக அரசு வேறுபடுத்திக் காட்டுவதால் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா மரணங்களில், சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் இழப்பீடு கிடைக்காது...” என்றபடி அதற்கான தரவுகளை அடுக்கினார்...

‘‘மதுரை அரசு இராசாசி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட ஆறு மருத்துவமனைகளில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், ‘2019 ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா வராத காலகட்டங்களில் நிகழ்ந்த மரணங்களைவிட 2021 ஏப்ரல், மே மாதங்களில் எட்டு மடங்கு மரணங்கள் அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன’ என்று சொல்லியிருந்தோம். அதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுமைக்கும் கணக்கிட்டு 1,08,721 முதல் 1,26,841 வரை அதிக இறப்புகள் நடந்திருக்கக்கூடும் என்றும் கணித்திருந்தோம். தமிழ்நாடு அரசின் பிறப்பு, இறப்பு எண்ணிக்கை ஆவணமும் அதை தற்போது உறுதிப்படுத்தியிருக்கிறது. 2019-ம் ஆண்டைவிட, 2021-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி வரை 1,42,143 இறப்புகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. ஆனால், கொரோனாவால் 19,929 பேர் மட்டுமே மரணமடைந்ததாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா மரணங்களைக் கணக்கிடுவது குறித்து, உலக சுகாதார நிறுவனம் சில நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் அதைத்தான் பின்பற்றச் சொல்கிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும் சரி... இந்த தி.மு.க ஆட்சியிலும் சரி... அந்த வழிமுறைகளைப் பின்பற்றவில்லை. தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இதைப் பற்றிக் கேட்டால், ‘பாடகர் எஸ்.பி.பி., எம்.பி வசந்தகுமார் ஆகியோரின் மரணங்களை கொரோனா மரணம் என்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறிக்கை கொடுத்தார்களா?’ என்று கேள்வி எழுப்புகிறார். ஆனால், உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.சி.எம்.ஆரின் வழிகாட்டுதல்படி அவர்களின் இறப்புகளும் கொரோனா கணக்கில்தான் வரும்.

கொரோனாவால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், ‘மெடிக்கல் சர்டிஃபிகேஷன் ஆஃப் காஸ் ஆஃப் டெத் ஃபார்ம்’-ல் இறப்புக்கான காரணத்தில், ‘கொரோனா’ என்று குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அந்த இழப்பீடு கிடைக்கும். ஆனால், பெரும்பாலான மரணங்களில் வைரல், நிமோனியா போன்ற பிற காரணங்களை எழுதுகிறார்கள். இப்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரணங்கள் விடுபட்டிருக்கும்போது, அவர்களின் குடும்பங்களுக்கு எப்படி இழப்பீடு கிடைக்கும்... குறிப்பாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் கதி என்ன?’’ என்று கேள்வி எழுப்புகிறார் ஆதங்கத்துடன்!

ஜெயராமன் - சாந்தி - ராதாகிருஷ்ணன்
ஜெயராமன் - சாந்தி - ராதாகிருஷ்ணன்

இதே கருத்தை வலியுறுத்தும் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தி, ‘‘இந்தியாவில் கொரோனா மரணங்கள் தொடர்பான குளறுபடிகளுக்குப் பிறகு பீகாரில் 4,000 மரணங்கள், மகாராஷ்டிராவில் 10,000 மரணங்களைக் கூடுதலாகச் சேர்த்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும்கூட, ‘கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை விடுபட்டுவிட்டது’ என்று சொல்லி 2,000 மரணங்களைப் பிறகு சேர்த்தார்கள். அந்தவகையில், அறப்போர் இயக்கத்தினர் வழக்கமாக நிகழும் மரணங்களைவிட தற்போது நிகழ்ந்த மரணங்களை ஒப்பிட்டு, ஒரு கணக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்தான். தமிழக அரசு இதைப் பரிசீலித்தால்தான், இழப்பீடுகள் முறையாகப் போய்ச் சேரும். அதேபோல, தனி நபர்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் பாலிசி எடுத்திருப்பார்கள். முறையான தகவல்கள் இருந்தால்தான், அவர்களும் பயனடைய முடியும்’’ என்றார்.

இதற்கெல்லாம் என்ன சொல்கிறார் தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்? ‘‘கொரோனா பாதிப்பிலிருந்து ஒருவர் விடுபட்டு, சில நாள்களிலோ சில மாதங்களிலோ இறக்கும்போது, அதை போஸ்ட் கோவிட் காம்ப்ளிகேஷன் என்றுதான் பதிவுசெய்ய வேண்டும். அப்படிச் செய்யாதபட்சத்தில், போஸ்ட் கோவிட் காம்ப்ளிகேஷன்களால் இறந்தவர்களின் கணக்கு நம்மிடம் இல்லாமல் போகும். ஆனாலும், அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் கூறியுள்ள ஆறு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், அனைத்து மருத்துவமனைகளுக்கும் அவர்களின் தரவுகளைக் கொடுத்து, கொரோனா மரணங்கள் விடுபட்டிருந்தால் மருத்துவப் பதிவேட்டில் திருத்தங்கள் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட யாருக்கும் இழப்பீடுகள் விடுபட்டுப்போகும் என்ற கவலை வேண்டாம். அதேசமயம், கொரோனா இறப்பைக் குறைத்துக்காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism