Published:Updated:

ஊரடங்கு துயரங்கள்! - “இந்தப் பழைய செருப்பு மாதிரியேதான் எங்க வாழ்க்கையும்!”

செருப்பு தைக்கும் தொழிலாளர்
பிரீமியம் ஸ்டோரி
செருப்பு தைக்கும் தொழிலாளர்

செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் கண்ணீர்ப் பக்கங்கள்

ஊரடங்கு துயரங்கள்! - “இந்தப் பழைய செருப்பு மாதிரியேதான் எங்க வாழ்க்கையும்!”

செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் கண்ணீர்ப் பக்கங்கள்

Published:Updated:
செருப்பு தைக்கும் தொழிலாளர்
பிரீமியம் ஸ்டோரி
செருப்பு தைக்கும் தொழிலாளர்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை... சாலையோரம் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்குச் சாக்கடை நாற்றம். கூடவே கொசுக்கடி. தகரத்தால் ஆன ஒரு பெட்டியைக் கடையாக வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார் தட்சிணாமூர்த்தி. ‘‘இந்தத் தகரப்பெட்டி, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்துல எங்க அப்பாவுக்கு அரசு கொடுத்தது. மத்த எல்லாரும் பெட்டி துருப்பிடிச்சு, காயலாங்கடையில போட்டுட்டாங்க. நான் மட்டும் பெயின்ட் அடிச்சு, ரிப்பேர் பார்த்து வெச்சுருக்கேன். இதுலதான் என் பொழப்பு ஓடுது’’ என்று அவர் பேசத் தொடங்கினார். ‘‘நான் மட்டுமில்லை... எந்த ஊருக்குப் போனாலும் சாக்கடை ஓரத்துலயும், கக்கூஸ் ஓரத்துலயும்தான் எங்க ஆளுங்க தொழில் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. எங்களுக்குனு ஒரு இடத்தை ஒதுக்கி, தேவையான வசதிகளை அரசாங்கம் செஞ்சு கொடுத்தா, நிம்மதியா தொழில் செய்வோம்ல?’’ கையிலிருந்த கூர்மையான ஊசிபோலவே அவரது கேள்வியும் இருந்தது!

தட்சிணாமூர்த்தி சொன்ன விஷயம் மனதைத் தைத்தது. நாமும் பார்த்த வரை... சாலையோரம், சாக்கடையோரம், குப்பைமேட்டோரம், கழிப்பறைக் கதவோரம் என ஏதாவது ஒரு ஓரங்களில்தான் ஒரு சிறிய நிழலில் அமர்ந்திருக்கிறார்கள் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள். அறைக்குள் அமர்ந்துகொண்டு புதிய காலணிகளைத் தயாரிப்பவர்களைக் காட்டிலும், கிழிந்த குடையின்கீழ் கந்தலான சாக்குப்பை மீது சாலையோரம் அமர்ந்தவாறு பிய்ந்துபோன செருப்புகளைத் தைப்பவர்களின் நிலை கொடுந்துயரம். ஒருகாலத்தில், பெரும்பாலான மக்கள் தோல் காலணிகளையே பயன்படுத்தினார்கள். அச்சு வார்ப்பில் தயாராகும் ரெடிமேட் செருப்புகளின் வருகை ஆரம்பித்த பிறகு, தோல் செருப்புகளுக்கான மவுசு குறைந்தது. அதனால், பொருளாதாரரீதியில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துவந்த செருப்பு தைக்கும் தொழிலாளிகளுக்கு, கொரோனா பெருந்தொற்று பேரிடியைக் கொடுத்திருக்கிறது.

தட்சிணாமூர்த்தி தொடர்ந்தார்... “ஒரு நாளைக்கு நூறு, இருநூறு கிடைக்கும். இந்த வருமானத்துலதான் என் பையனையும் பொண்ணையும் படிக்கவெக்கிறேன். பையன் எம்.எஸ்சி., பொண்ணு ப்ளஸ் ஒன் படிக்கிறாங்க. ஊரடங்கு நேரத்துல சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். பால் வாங்கக்கூட காசு இல்லாம, சுடுதண்ணியைக் காய்ச்சிக் காய்ச்சிக் குடிச்சோம். முருங்கைக்கீரையைப் பறிச்சு, அவிச்சு சாப்பிட்டு மூணு மாசம் உயிர் வாழ்ந்தோம். ஊரடங்கு தளர்வு அறிவிச்ச பிறகும் சரியா வேலை வர்றதில்லை... நூறு ரூபாயைக் கண்ல பார்த்தா அதிசயமா இருக்கு. இதோ... இந்தப் பழைய செருப்பு மாதிரியே எங்க வாழ்க்கையும் தேய்ஞ்சுபோய்த்தான் கெடக்குது’’ என்றார் வேதனையுடன்.

ஊரடங்கு துயரங்கள்! -  “இந்தப் பழைய செருப்பு மாதிரியேதான் எங்க வாழ்க்கையும்!”

சென்னையில் திரு.வி.க சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் முழுக்க முழுக்க செருப்பு தைக்கும் தொழிலாளர்களே வசிக்கிறார்கள். காலணிகள் தயாரிப்பு, ஒரு குடிசைத் தொழிலாக நடக்கிறது. ஒரு குடிசை வீட்டின் சிறிய திண்ணையில் அமர்ந்தவாறு ஷூ தைத்துக்கொண்டிருந்தார் லோகநாதன்.

‘‘நாங்க லெதர் ஷூ, லெதர் செருப்பு மட்டும்தான் செய்வோம். ஒருகாலத்துல எங்க தொழில் நல்லா இருந்துச்சு. பம்பாய், கல்கத்தா தயாரிப்புல்லாம் வந்தப்புறம் நாங்க செய்யுற லெதருக்கு மதிப்பு இல்லாம போச்சு. எட்டு பேரைவெச்சு வேலை பார்த்துக்கிட்டு இருந்த நான், இப்போ ரோட்டுல உட்கார்ந்து பிஞ்சுபோன செருப்பைத் தைக்கிறேன். கொஞ்ச நஞ்சம் இருந்த வேலையையும் கொரோனா வந்து காலி பண்ணிடுச்சு. சாப்பாட்டுக்கே திண்டாடிப்போயிட்டோம்.

ஊரடங்கு நேரத்துல தினமும் மெயின் ரோடு ஓரமாப் போய் உட்கார்ந்துருவோம். யாராவது வந்து சாப்பாடு பொட்டலம் கொடுப்பாங்க. அதை வாங்கிட்டு வந்து வீட்ல எல்லாரும் சாப்பிடுவோம். அப்படித்தான் பல நாள்களை ஓட்டினோம். வீட்டு வாடகை, சாப்பாடு, கரன்ட் பில் எல்லாம் சேர்ந்து ஒரு மாசத்துக்குப் பத்தாயிரம் ரூபாய் வந்துரும். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கொஞ்சம் வேலை வந்தாலும், மாசம் பத்தாயிரமெல்லாம் கிடைக்கிறதில்லை. கடன ஒடன வாங்கி சமாளிச்சுக்கிட்டிருக்கோம். ஒருசில பேரு ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டினு வேலைய மாத்திக்கிட்டாங்க. எப்போ மீண்டு வருவோம்கிறதைவிட, மீண்டு வருவோமாங்கிறதே சந்தேகமாத்தான் இருக்கு’’ என்றார் விரக்தியுடன்.

மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள ‘ஷூ மேக்கர் காலனி’யைச் சேர்ந்தவரும், பெரியார் அம்பேத்கர் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காலணித் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவருமான சுடலைமுத்துவிடம் பேசினோம். ‘‘நகரங்களைத் தூய்மைப்படுத்துறோம், அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில், சிறு சிறு பெட்டிக்கடைகளாக இருந்த செருப்பு தைக்கும் கடைகளை அப்புறப்படுத்திவிட்டார்கள். அதனால், வெட்டவெளியிலும், மோசமான இடங்களிலும் உட்கார்ந்து பலர் தொழில் செய்துவருகிறார்கள். கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் மனைவிகள் பலர், இப்போது செருப்பு தைக்கும் தொழிலுக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும், போதுமான வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்’’ என்றார் வருத்தமாக.

காலணிகள் தயாரிக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையனிடம் பேசினோம். ‘‘கடந்த பத்து ஆண்டுகளாக ‘காலணி மற்றும் தோல் தொழிலாளர்கள் நலவாரியம்’ செயல்படவில்லை. அதைச் செயல்படுத்தினால், காலணி தயாரிக்கும் தொழிலாளர்களுக்குக் கடனுதவி, குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை, உடல்நிலை சரியில்லாமல் போனால் நிவாரணம் போன்ற உதவிகள் கிடைக்கும். கொரோனா பாதிப்புகளிலிருந்து இவர்கள் மீண்டுவர வேண்டுமென்றால், ஒரு குடும்பத்துக்குக் குறைந்தபட்சம் ரூ.50,000 நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

கைகொடுக்குமா... கவனிக்குமா அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism