Published:Updated:

மீண்டு வருவாய் சிந்து!

சிந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்து

வீட்டுக்கு வந்த ஒரு மாசத்துல எலும்பு சதையுடன் கூடாம சீழ் அரிச்சு ராடு கையோடு கழண்டு வந்துடுச்சு. அதை அப்படியே பிடிச்சிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்

மீண்டு வருவாய் சிந்து!

வீட்டுக்கு வந்த ஒரு மாசத்துல எலும்பு சதையுடன் கூடாம சீழ் அரிச்சு ராடு கையோடு கழண்டு வந்துடுச்சு. அதை அப்படியே பிடிச்சிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்

Published:Updated:
சிந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்து

பழுப்படைந்த, காரை உதிரும் சுவர்களுடன் காட்சியளித்த அந்த அறையில் முடங்கிப்போய் படுத்திருந்தார் சிந்து. வாலிபால் பிளேயர் ஆக வேண்டும் என்கிற ஆசையுடனும், ராணுவத்தில் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்ற லட்சியத்துடனும் இருந்தவர், எழுந்து நிற்கவே பிறரின் உதவி தேவைப்படும் என ஒரு நாளும் நினைத்திருக்க மாட்டார்.

மீண்டு வருவாய் சிந்து!

அப்போது சிந்து பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் தன் தோழியுடன் மூன்றாவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்தவர் கால் தவறிக் கீழே விழுந்திருக்கிறார். பதற்றத்துடன் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஒரே நாளில் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருக்கும் சிந்து, தற்போது தன் தந்தையின் உதவியுடன் பள்ளிக்குச் சென்று பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார். சிந்துவின் நிலையை அறிந்து அவரின் கல்விச் செலவையும், மருத்துவச் செலவையும் தமிழக அரசு ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சிந்துவை அவருடைய இல்லத்தில் சந்தித்தேன்.

“2020-ல் எனக்கு இந்த விபத்து ஏற்பட்டுச்சு. விபத்து நடந்த உடனேயே ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. ‘காலுக்கு ட்ரீட்மென்ட் பண்ணுவோம்... ஆனா, முகத்துக்கு எங்களால ட்ரீட்மென்ட் பார்க்க முடியாது’ன்னு சொல்லி அங்கிருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வச்சிட்டாங்க. பொதுவா அனஸ்தீசியா முதுகு வழியாக, மூக்கு வழியாக அல்லது வாய் வழியாகக் கொடுக்கலாம். ஆனால், என்னால எழுந்து உட்கார முடியாது. வாய் முழுவதும் கோணலாகியிருக்கிறதனால வாய் வழியாகவும் கொடுக்க முடியாது. மூக்கிலும் பிளேட் இருக்குங்கிறதனால மூக்கு வழியாகவும் கொடுக்க முடியல. ரொம்ப போராட்டத்துக்குப் பிறகு வாய் வழியாகக் கொடுத்து ஆப்ரேஷன் பண்ணி இரும்பு ராடு போட்டாங்க. கிட்டத்தட்ட 6 மாசம் ஆஸ்பத்திரியிலேயே இருந்தோம்.

குடும்பத்துடன் சிந்து
குடும்பத்துடன் சிந்து

வலது காலுக்கு மட்டும் ஆபரேஷன் பண்ணி பிளேட் வச்சாங்க. கால் ரொம்ப சீழ் பிடிச்சிருச்சு. எலும்பு மூலமா சீழ் கால் முழுக்கப் பரவி இன்ஃபெக்‌ஷன் ஆகிடுச்சு. ஏழெட்டு முறை மறுபடி மறுபடி காலில் ஆப்ரேஷன் பண்ணினாங்க. எதனால சீழ் வடியுதுன்னு பார்த்தப்ப பிளேட்தான் பிரச்னைன்னு மறுபடி பிளேட் ரிமூவ் பண்ணிட்டாங்க. பே வார்டில் இருந்ததால ஒரு நாளைக்கு 400 ரூபாய் ஆச்சு. எங்க ஸ்கூல் டீச்சர்ஸ் தான் அதற்கான பணத்தைக் கொடுத்து உதவினாங்க. எங்க ஸ்கூல் தலைமை ஆசிரியர் சாந்தி மேடம் என் ஸ்கூல் ஃபீஸ் முழுக்கவும் கட்டினாங்க.

வீட்டுக்கு வந்த ஒரு மாசத்துல எலும்பு சதையுடன் கூடாம சீழ் அரிச்சு ராடு கையோடு கழண்டு வந்துடுச்சு. அதை அப்படியே பிடிச்சிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். பிறகு, மாவுக்கட்டு போட்டு அனுப்பி வச்சாங்க. இதுக்கு இன்னமும் சரியான ட்ரீட்மென்ட் இல்ல. நல்ல ட்ரீட்மென்ட் கிடைச்சா நல்லா இருக்கும்னு எதிர்பார்க்கிறேன். எனக்கு வாலிபாலில் ஏதாவது சாதிக்கணும், மிலிட்டரிக்குப் போகணும்னு ஆசை ஆனா இப்ப என்னால எழுந்து கூட வெளியில் போக முடியாது” என்றதும் சிந்துவின் தந்தை சக்தி தொடர்ந்தார்.

மீண்டு வருவாய் சிந்து!

“என் பொண்ணு அனுபவிச்ச வேதனையை எந்தப் பொண்ணும் அனுபவிக்கக் கூடாதுங்கிறதுதான் ஒரு தந்தையா என் வேண்டுதல். யார் உதவின்னு கேட்டாலும் சிந்து உடனே பண்ணுவா. 2020 டிசம்பர் 17-க்குப் பிறகு என் பொண்ணோட வாழ்க்கை இப்படியாகும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல. சிந்து கண்டிப்பா நடந்திடுவான்னு ரொம்ப நம்பிட்டு இருந்தேன்... இப்ப அவ நடப்பாளான்னே எங்களுக்குத் தெரியல” என உடைந்து அழுதவரின் கரம் பற்றி சிந்து தொடர்ந்தார்.

“என் அப்பா டீ வியாபாரம் பண்றார். ஒரு நாளைக்கு 400 ரூபாய் கிடைக்கும். இப்ப வெயில் காலத்துல 200 ரூபாய்க்கு விற்கிறதே பெரிய விஷயம். எனக்கு ஒரு தம்பி இருக்கான். அம்மா ஒரு தனியார் கல்லூரியில் செக்யூரிட்டி வேலை பார்த்தாங்க. என்னை கவனிச்சுக்கணும்னு அந்த வேலையையும் விட்டுட்டாங்க. அப்பா ஒருத்தருடைய சம்பளம் வீட்டு வாடகை, சாப்பாட்டுச் செலவுக்கே போதுமானதா இல்ல. மருத்துவச் செலவும் சேர்ந்திருச்சு. இந்தச் சூழலில் முதல்வரின் அறிவிப்பு கொஞ்சம் ஆறுதலா இருக்கு. என் கால் எலும்பு கூடுவதற்கு ஏதாவது பண்ணணும், சீழ் சரி பண்ணணும். இதுக்கு யாராவது உதவினாங்கன்னா அதுவே போதும்” என்றவரை, படுக்க வைத்துவிட்டு சிந்துவின் தாய் தேவி பேச ஆரம்பித்தார்.

மீண்டு வருவாய் சிந்து!

“கஞ்சி மாதிரி சாப்பாட்டைக் கரைச்சு பாட்டிலில் ஊற்றி இப்போதைக்கு அவளுக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருக்கோம். பாத்ரூம் போகிறது, மாதவிடாய் நாள்களில் நாப்கின் மாத்துறதுன்னு அவளுக்கு உதவியா நான் இருக்கேன். என் பொண்ணு நடக்கணும், அவ படிப்பு நல்லா இருக்கணும் அதுதான் என் ஆசை. எங்களுக்கு யாராவது உதவி பண்ணாங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்” என்றவர் உடைந்து அழுதார்.

அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் சிந்து மீண்டு வருவாள் என்பதாகத்தான் இருக்கிறது... நம் நம்பிக்கையும்தான்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கட்டுரையை வீடியோ வடிவில் காண கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/3vEihHU

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism