Published:Updated:

திருப்பத்தூர்: `அப்பாவின் கடைசி ஆசை; நாங்க படிக்கணும்!’ - கல்விக் கடனுக்காகப் போராடும் சகோதரிகள்

``எப்படியாவது எங்களைப் படிக்கவைத்துவிட வேண்டும் என்று இறுதி மூச்சு நிற்கும்போதும் கலங்கின அப்பாவின் கண்கள்.’’

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரின் மனைவி அனுராதா. இவர்களுக்கு சிந்து, மௌனிகா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில், பெட்ரோல் பங்க்கில் மேலாளராகப் பணிபுரிந்த தினேஷ்குமார், ஓரளவுக்கு வசதி வாய்ப்புடன் இருந்திருக்கிறார். இதனால், தன் மூத்த மகளை டாக்டராக்கிப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக, மிகவும் சிரமப்பட்டு சீனாவிலுள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்த்திருக்கிறார். நடப்பு கல்வியாண்டில், அவரது மூத்த மகள் சிந்து நான்காம் ஆண்டு படிக்கிறார். இளைய மகள் மௌனிகா, வாணியம்பாடியிலுள்ள கல்லூரியில் இந்த ஆண்டு பி.சி.ஏ முடித்திருக்கிறார்.

தினேஷ்குமார்
தினேஷ்குமார்

இதற்கிடையே, பங்க் மேலாளர் வேலையிலிருந்து விலகி சிறியதாக ஹோட்டல் ஒன்றை நடத்தினார் தினேஷ்குமார். அந்தத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, வறுமையை நோக்கி தினேஷ்குமாரின் குடும்பம் மெள்ள மெள்ள நகர்ந்தது. கல்லீரல் பிரச்னையால், அவரது உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். வசிப்பதோ வாடகை வீடு. தொழிலும் முடங்கியது. வருமானமும் இல்லை. இப்படியிருக்க, மகள்களின் கல்விச் செலவுக்காக அடுத்தவரிடம் உதவி கேட்டார். தினேஷ்குமாரால் பயனடைந்த நண்பர்கள்கூட பண உதவி செய்யாமல் விலகி நின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாததால், சீனாவில் மகள் கவலையோடு இருப்பதை நினைத்து மேலும் கலங்கிப்போனார் தினேஷ்குமார்.

இந்த நிலையில், அவரின் மனைவி அனுராதா கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடம் தனது குடும்ப வறுமையை எடுத்துச் சொல்லி மகள்களின் படிப்புக்கு உதவி செய்யுமாறு மன்றாடினார். அவரது மனு இதுநாள் வரை பரிசீலனை செய்யப்படவில்லை. இந்தச் சூழலால், மேலும் மனமுடைந்த தினேஷ்குமார், கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி திடீரென மரணமடைந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக, சீனாவிலிருந்து மூத்த மகளால் ஊர் திரும்ப முடியவில்லை. வீடியோ கால் மூலமாக தந்தையின் முகத்தைப் பார்த்துக் கதறி அழுதார். இந்த நிலையில், மகள்களின் படிப்புக்கு உதவி செய்யுமாறு மீண்டும் கலெக்டரை அணுகியிருக்கிறார் அனுராதா.

திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள்
திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள்

இந்த மாதம் 15-ம் தேதி அவர் கொடுத்த அந்தக் கோரிக்கை மனுவுக்கும் பதில் வரவில்லை. இது குறித்து, அனுராதாவின் இளைய மகள் மௌனிகா, ``அப்பாவுக்கு நாங்கதான் உயிர். மூச்சு நிக்கும்போதுகூட எங்களுடைய படிப்பை நினைச்சுதான் கண்கலங்கினார். சீனாவுல மருத்துவம் படிக்கிற அக்காவுக்கு கல்விக்கட்டணம் செலுத்த இன்னும் ரெண்டு நாள்தான் டைம் கொடுத்திருக்காங்க. அவளும் போன் பண்ணி அழறா. ரெண்டு நாள்ல எப்படிக் கட்ட முடியும்? நாங்களும் மார்ச் மாசத்துலருந்து கல்விக்கட்டணம் கேட்டு நடையா நடக்கிறோம். யாருமே உதவி செய்ய மாட்டேங்கறாங்க. சும்மா கொடுக்க வேணாம்... நாங்க படிச்சு முடிச்ச பிறகு வேலைக்குப் போய் திருப்பிக் கொடுத்திடுறோம். நானும் எம்.பி.ஏ படிக்க ஆசைப்படுறேன். கலெக்டர் சார்தான் கருணை காட்டணும்’’ என்றார் உருக்கமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு