Published:Updated:

ஒரு ஊர்... ஒரு குடும்பம்... ஒடுக்கப்படுதலின் ஓராயிரம் வலி... நடவடிக்கை எடுக்கப்படாத 1,500 புகார்கள்!

வேட்டைவில்லான்
பிரீமியம் ஸ்டோரி
வேட்டைவில்லான்

சிவகங்கைக்குப் பக்கத்துல மல்லல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்னலி கிராமத்துல, புதிரை வண்ணார் சாதியான நாங்க ஆண்டாண்டு காலமா வாழ்ந்துவர்றோம்.

ஒரு ஊர்... ஒரு குடும்பம்... ஒடுக்கப்படுதலின் ஓராயிரம் வலி... நடவடிக்கை எடுக்கப்படாத 1,500 புகார்கள்!

சிவகங்கைக்குப் பக்கத்துல மல்லல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்னலி கிராமத்துல, புதிரை வண்ணார் சாதியான நாங்க ஆண்டாண்டு காலமா வாழ்ந்துவர்றோம்.

Published:Updated:
வேட்டைவில்லான்
பிரீமியம் ஸ்டோரி
வேட்டைவில்லான்

‘என் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பில்லை... காப்பாத்துங்க...’ என்று காவல்துறை, மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் என எல்லா அதிகாரத் தரப்புக்கும் பல ஆண்டுகளாக 1,500-க்கும் மேற்பட்ட புகார் மனுக்களை அனுப்பியிருக்கிறார், சிவகங்கை மாவட்டம் பொன்னலி கிராமத்தைச் சேர்ந்த 73 வயது பெரியவரான வேட்டைவில்லான். அவற்றில், ஒரு புகாரைக்கூட யாரும் இதுவரை விசாரிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை!

பொன்னலி கிராமத்தில் பல்வேறு கொடுமைகளால், தாக்குப்பிடிக்க முடியாமல் வேட்டைவில்லானின் மனைவி, பிள்ளைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருந்து இடம்பெயர்ந்துவிட்டார்கள். பிறகும், பல்வேறு நெருக்கடிகளைத் தாங்கிக்கொண்டு ‘அரசாங்கம் என்னைப் பாதுகாக்கும்’ என்று தொடர்ந்து நம்பிவந்த வேட்டை வில்லான், இப்போது தனது நம்பிக்கையை இழந்துவிட்டார். வயோதிகத்தால் தொடர்ந்து போராட முடியாமல் மதுரை வந்துவிட்டவர், ஒத்தக்கடை வவ்வால் தோட்டம் பகுதியில், ‘டப்பா’ போன்ற ஒரு தகர சீட் வீட்டில் வசித்துவருகிறார். ‘‘சொந்த ஊரில் வாழ்வதற்கு அப்படியென்ன பிரச்னை?’’ என்று கேட்டால், ‘‘மற்றவர்கள்போல வாழ முயன்றதுதான் பிரச்னை!” என்கிறார்.

ஒரு ஊர்... ஒரு குடும்பம்... ஒடுக்கப்படுதலின் ஓராயிரம் வலி... நடவடிக்கை எடுக்கப்படாத 1,500 புகார்கள்!

வயலை உழக் கூடாது... படிக்கக் கூடாது!

தன் துயரக் கதையை வேட்டைவில்லானே விவரிக்கிறார்... ‘‘சிவகங்கைக்குப் பக்கத்துல மல்லல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்னலி கிராமத்துல, புதிரை வண்ணார் சாதியான நாங்க ஆண்டாண்டு காலமா வாழ்ந்துவர்றோம். எஸ்.சி மக்களுக்கு மட்டும் துணி வெளுக்குற வேலையை எங்க முன்னோருங்க செஞ்சுக்கிட்டு வந்திருக்காங்க. எங்களுக்குப் பரம்பரையா பட்டாவோட விவசாய நெலம் இருக்கு. ஆனா, அந்த நெலத்தை உழ விடலை. எங்க அப்பா காலம்வரை பரம்பரைத் தொழிலைச் செய்யச் சொல்லி கொடுமை பண்ணினாங்க.

எனக்கு விவரம் தெரிஞ்ச பெறகு, என்னையும் பரம்பரைத் தொழில் செய்யக் கட்டாயப்படுத்தினாங்க. ‘தெருவுக்குள்ள வரக் கூடாது; புள்ளைகளைப் படிக்கவெக்கக் கூடாது; வெளியே வேலைக்கு அனுப்பக் கூடாது’னு பல கண்டிஷன்களைப் போட்டாங்க. நான் மாட்டேன்னு சொல்லி வெவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். அப்பயிருந்து என் குடும்பத்தை அழிக்கணும்னு ஊருல இருக்குற அத்தனை சாதிக்காரவுகளும் ஒண்ணா சேர்ந்து வஞ்சம்வெக்க ஆரம்பிச்சாங்க.

நான் துணிச்சலா பேசுவேன். அரசாங்கம் எங்களைப்போல மக்களைப் பாதுகாக்க என்ன மாதிரி சட்டம் போட்டிருக்குன்னு ஊர்க்காரங்ககிட்டே பேசுவேன். அவங்களுக்கு ஆத்திரம் வரும். உடனே என்னைய அடிப்பாங்க; வீட்டை உடைப்பாங்க; மரத்தை வெட்டுவாங்க; ஆடுகளைத் திருடுவாங்க; பயிரைக் கொளுத்துவாங்க. இதையெல்லாம் தடுக்க வேண்டிய அதிகாரிங்ககிட்ட புகார் கொடுத்தா, அவங்களும் ஊர் சாதிக்காரங்களுக்கு ஆதரவாத்தான் செயல்படுவாங்க. ஒத்த வீட்டுக்காரனான என்னால எதுவும் செய்ய முடியலை. அரசாங்கத்தை நம்பி தொடர்ந்து புகார் அனுப்பிக்கிட்டே இருந்தேன்.

ஒரு ஊர்... ஒரு குடும்பம்... ஒடுக்கப்படுதலின் ஓராயிரம் வலி... நடவடிக்கை எடுக்கப்படாத 1,500 புகார்கள்!

என் மவன் முருகன் பக்கத்து ஊரு பள்ளிக்கூடத்துல படிக்கப் போனான். அவனைப் படிக்கவிடாம கொடுமை செஞ்சு ஏழாவதோட நிறுத்தவெச்சுட்டாங்க. இதுக்கு பயந்து என் இன்னொரு மகனையும் மகளையும் சிவகங்கையில கவர்மெண்டு ஹாஸ்டல்ல சேர்த்து படிக்கவெச்சேன்.

“அம்மணமாக்கி... கட்டிவெச்சு அடிச்சாங்க!”

2006-ம் வருஷம், என் மகன் முருகன் செருப்பு போட்டு நடந்ததுக்காகவும், சைக்கிள் வெச்சிருந்ததுக்காகவும் அம்மணமாக்கி கட்டிவெச்சு அடிச்சாங்க. சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்ததுக்கு, விசாரணையே செய்யாம, எங்க மேலயே வழக்கு போட்டாங்க. இந்தக் கொடுமைகளால அவமானப்பட்ட அவன், வெளியூருக்குப் போயிட்டான். நாங்க கொடுக்குற புகாரையெல்லாம் வாங்கி வெச்சுக்கிற போலீஸ்காரங்க, அதுல உண்மையில்லைன்னு மேலதிகாரிக்குத் தகவல் தெரிவிச்சுடுறாங்க.

கடந்த 2013-ம் வருஷம், வறட்சி நிவாரணம் வாங்க சாத்தரசன்கோட்டை சொசைட்டிக்குப் போனேன். பாதிப் பணம்தான் கொடுத்தாங்க. மீதிப்பணம் கேட்டதுக்குக் கடுமையாப் பேசி அடிச்சாங்க. ஊருல வாழவே முடியாத நிலைமையை மதுரையில இருந்த மகன் முருகன்கிட்ட சொன்னேன். குடும்பத்தோட மதுரைக்குப் போயி, ஐ.ஜி-கிட்ட புகார் கொடுத்தோம். நடவடிக்கை எடுக்கலை. ஐ.ஜி ஆபீஸ்ல குடியேறி சமையல் செய்யும் போராட்டம் நடத்தப்போறோம்னு அறிவிச்சோம். பாத்திர பண்டங்களோட மாட்டுத்தாவணியிலருந்து போகும்போது போலீஸ் தடுத்து நிறுத்திட்டாங்க. அதுக்குப் பிறகு புகாரை வாங்கிக்கிட்டாங்க. ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்கலை.

செந்தில்குமார்
செந்தில்குமார்

எங்கமேல ஊர்க்காரங்க கொடுத்த பொய் வழக்குகளுக்கு, நீதிமன்றத்துல ஆஜராகி, பின்னால விடுதலை ஆனோம். ஆனா, எங்களைக் கொடுமைப் படுத்தினவங்க ஒரு நாள்கூட தண்டனை வாங்கலை. என் பொண்டாட்டி, பிள்ளைங்க இங்க வாழ முடியாதுன்னு முன்னமே மதுரைப் பக்கம் வந்துட்டாங்க. நான்தான் அந்த ஊருக்குள்ள வாழணும்னு வைராக்கியமா இருந்து பார்த்தேன். தாங்க முடியலைய்யா. அரசாங்கமும் எங்களை கைவிட்ருச்சு. இப்ப இங்க வந்து கெடக்குறேன்’’ என்றார் இயலாமையோடு.

வேட்டைவில்லானின் மனைவி மூக்கம்மாளிடம் பேசினோம். ‘‘வீடு, நிலத்தை கிராமத்துல அப்படியே போட்டுட்டு, இங்க தங்க இடமில்லாம ஆளுக்கொரு தெசையில கெடக்குறோம். நாங்க கொடுத்த ஒரு புகாரையாவது போலீஸு விசாரிச்சு நடவடிக்கை எடுத்திருந்தா, மனசுக்குக் கொஞ்சம் நிம்மதியாவது இருந்திருக்கும். புதிரை வண்ணார் சாதியில பொறந்தா வெவசாயம் செய்யக் கூடாதா? புள்ளைகளைப் படிக்கவெக்கக் கூடாதா? இப்ப நான் கூலி வேலைக்குப் போய்க்கிட்டிருக்கேன். இங்கேயும் சாதியைக் கேட்டுத்தான் வீடு வாடகைக்குத் தர்றாங்க. அதனால, ஊருக்கு ஒதுக்குப்புற தோட்டத்துலயும், காடு மாதிரியுள்ள பகுதியில கிடைச்ச வீட்டுலேயும் வாழ வேண்டியிருக்கு’’ என்று கண்ணீர்விட்டார்.

ஒரு ஊர்... ஒரு குடும்பம்... ஒடுக்கப்படுதலின் ஓராயிரம் வலி... நடவடிக்கை எடுக்கப்படாத 1,500 புகார்கள்!

சாதி ஆதிக்கம் எங்கே போனாலும் துரத்துது!

வேட்டைவில்லானின் மகன் முருகனிடம் பேசினோம். ‘‘என்னதான் சட்டம் இயற்றினாலும், புதிரை வண்ணார் சாதிக்கு இன்னும் விடுதலை கிடைக்கலை. பி.சி சாதியினரோடு சேர்ந்துக்கிட்டு எஸ்.சி சாதியினரும் எங்களை ஒடுக்குறாங்க... இழிவுபடுத்துறாங்க. புதிரை வண்ணார் சமூகம் தமிழகத்துல எப்படி இருக்கும்கிறதுக்கு என் குடும்பமே உதாரணம். இதுவரைக்கும் 1,500 புகார் மனுக்கள் அனுப்பியிருக்கேன். எல்லாமே வீண். இங்கும் நிம்மதி இல்லை. சாதி ஆதிக்கம் எங்கே போனாலும் துரத்துது’’ என்றார் வலியோடு.

பொன்னலி கிராமத்துக்குச் சென்றோம். காட்டுக்கருவை மரங்களாக நிறைந்துகிடக்கிற மிகவும் பின்தங்கிய பகுதியாகத் தெரிகிறது. கிராமமே அமைதியாக இருந்தது. வேட்டைவில்லான் புகார் பற்றி ஊர்க்காரர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க. அவரை ஊர்க்காரங்க யாரும் தொந்தரவு பண்றதில்லை. பரம்பரைத் தொழிலைச் செய்யணும்னு கட்டாயப்படுத்தலை. அவர் மகன் முருகன்தான் மதுரையில இருந்துக்கிட்டு இப்படி கிளப்பிவிட்டுக்கிட்டு இருக்காரு. மத்த ஊரு மாதிரி இங்கே சாதிப் பிரச்னை, தீண்டாமையெல்லாம் இல்லீங்க’’ என்றார்கள். வேட்டைவில்லான் வீடு, ஆளில்லாமல் சேதமான நிலையில் ஊரின் மூலையில் பரிதாபமாகக் காட்சியளித்தது.

முருகன்
முருகன்

சிவகங்கை தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சியைச் சந்தித்து விவரங்களைக் கூறி, ‘‘ஏன் ஒரு புகாரைக்கூட விசாரிக்கவில்லை?’’ என்று கேட்டோம். ‘‘நான் இங்கு பணிக்கு வந்து நான்கு மாதம்தான் ஆகுது. நீங்க சொன்னவர் அனுப்பிய புகார்கள் எதுவும் என் கவனத்துக்கு வரலை’’ என்றவர், ரைட்டரை அழைத்து வேட்டைவில்லான் புகார் பற்றிக் கேட்டவுடன், ‘‘அவர் அனுப்பிய எல்லாப் புகார்களையும் ஒரு கட்டாகப் போட்டு வெச்சுருக்கோம் மேடம்’’ என்றார். ‘‘இதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லையா?’’ என்று இன்ஸ்பெக்டர் கேட்க, ‘‘எல்லாம் அப்படியேதான் இருக்கு மேடம்’’ என்று ரைட்டர் சொல்ல, இன்ஸ்பெக்டர் ஜெர்க் ஆனார். நம்மிடம் கூடுதல் விவரங்களைக் கேட்டுக்கொண்டவர், ‘‘உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

சிவகங்கை மாவட்ட எஸ்.பி-யான டாக்டர் செந்தில்குமாரிடம் வேட்டைவில்லானின் புகார் பற்றிச் சொன்னோம். பொறுமையாகக் கேட்டு குறித்துக்கொண்டவர், ‘‘சமீபத்தில்தான் இங்கு பொறுப்பேற்றேன். உடனே நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

கொரோனாவைவிடக் கொடிய கிருமி இந்தச் சாதி. ‘மனிதர் நோக, மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?’ என்ற பாரதியின் கேள்விக்கான பதில் மிகக் கசப்பானது.

நீதி கிடைக்குமா இந்த எளியவர்களுக்கு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism