Published:Updated:

வீழாத பாரதிக்கு விழா!

சிவசங்கரி
பிரீமியம் ஸ்டோரி
சிவசங்கரி

பாரதி நினைவின் நூற்றாண்டு

வீழாத பாரதிக்கு விழா!

பாரதி நினைவின் நூற்றாண்டு

Published:Updated:
சிவசங்கரி
பிரீமியம் ஸ்டோரி
சிவசங்கரி

ஓவியம்: ரவி

அமைதி ததும்பும் அந்த வீடு புத்தகங்களாலும் அழகிய சித்திரங்களாலும் நிறைந்திருக்கிறது. கைகளைக் கூப்பி வரவேற்று இருக்கை தருகிறார் சிவசங்கரி. 35க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதை, பயணக்கட்டுரைகள் என எழுதிக் குவித்தவர் சிவசங்கரி. பாரதியின் நூறாவது நினைவு நாளையொட்டிய நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். வெட்டிச் செதுக்கியதுபோல நிதானித்து வார்த்தைகளை அடுக்கி உரையாடுகிறார் சிவசங்கரி.

``27 ஆண்டுகளுக்கு முன்னால் ‘வானவில் பண்பாட்டு மையம்’ என்ற அமைப்பை வழக்கறிஞர் ரவி மற்றும் சிலர் தொடங்கினார்கள். பாரதி வாழ்ந்த காலத்தில் எட்டயபுரம் மகாராஜா அவரை அழைத்தபோது, `என்னை அழைக்க ஜதி பல்லக்கு அனுப்பு, பொற்கிழி தா... வருகிறேன்' என்றார். ஆனால் அவருக்கு அவை கிடைக்கவில்லை. வானவில் பண்பாட்டு மையம் மூலம் அதை நாங்கள் இப்போது செய்கிறோம். ஆண்டுதோறும் டிசம்பர் 11-ம் தேதி திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் மூன்று நாள்கள் நிகழ்ச்சி நடத்துவோம். பாரதி அன்பர்களெல்லாம் இணைந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலிருந்து, பாரதி இல்லம் வரைக்கும் ஜதி பல்லக்கு சுமந்துவந்து பாரதியார் இல்லத்தில் வைப்போம். பிறகு ஒரு கவிஞருக்குப் பொற்கிழி, ஒரு படைப்பாளிக்கு பாரதி விருது வழங்குவோம்.

வீழாத பாரதிக்கு விழா!

இந்த செப்டம்பர் 11, பாரதியாரின் 100வது நினைவுநாள். அதனால் மிகவும் பிரமாண்டமாக பாரதியைக் கொண்டாடவிருக்கிறோம். செப்டம்பர் 11 முதல் அவர் பிறந்த டிசம்பர் 11 வரை மூன்று மாத காலம் இந்தியா முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்.

செப்டம்பர் 11 அன்று திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் விழா தொடங்குகிறது. 12-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அன்று `பாரதி சுடர்' ஏற்றப்படும். செப்டம்பர் 18-ம் தேதி இந்தியப் பாராளுமன்றத்தில் `பாராளுமன்றத்தில் பாரதி' என்ற விழா நடக்கிறது. அங்கு பாரதி சுடர் கொண்டு வரப்படும். துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தலைமையில் அமைச்சர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளார்கள். `செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்' என்ற பாரதியின் வரியைப் பதினெட்டு மொழிகளிலிருந்தும் பிரபலமான கவிஞர்கள், எழுத்தாளர்கள் மொழிபெயர்க்கவுள்ளார்கள். அருண் பிரகாஷ் இசையமைக்க, அனுராதா ஸ்ரீராம் அதைப் பாடலாக்கி பாராளுமன்றத்தில் பாடவிருக்கிறார். தியாகய்யரின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் போல பாரதியின் 5 பாடல்களை 100 குழந்தைகள் பாடுகிறார்கள். பாரதியின் 5 பாடல்களுக்கு நாட்டிய குரு சரோஜா வைத்தியநாதன் தலைமையில் 30 நங்கைகள் மெட்லி நடனமாடுகிறார்கள். பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி நிகழ்ச்சியில் கௌரவிக்கப்படுவார்.

வீழாத பாரதிக்கு விழா!

பாரதியின் காலடித்தடம் எங்கெல்லாம் பட்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது நினைவுகளைப் போற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்கு `பாரதியின் சுவடுகள்' என்று பெயர் சூட்டியிருக்கிறோம். கல்கத்தாவில் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். அதனால் கல்கத்தாவில் விழா. காசியில் நான்கு ஆண்டுகள் தங்கிப் படித்தார். அதனால் காசியில் விழா. அப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரதமர் மோடியை அந்த நிகழ்வில் பங்கேற்க அழைத்திருக்கிறோம்.

பாரதி பிறந்த எட்டயபுரம், செல்லம்மாவின் சொந்த ஊரான கடையம், பாரதி வசித்த திருநெல்வேலி, அவர் ஆசிரியராகப் பணியாற்றிய மதுரை, சிறைப்பட்ட கடலூர், பத்தாண்டுகள் வாழ்ந்த புதுச்சேரி ஆகிய ஊர்களிலும் விழாக்கள் நடக்கவுள்ளன. திருவனந்தபுரத்திற்குச் செல்லம்மாவை அழைத்துச் சென்று விலங்குகள் சரணாலயத்தைச் சுற்றிக் காட்டியிருக்கிறார் பாரதி. அங்கும் ஒரு விழா. ஈரோடு, கருங்கல்பாளையத்தில், `மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பில் பாரதி கடைசியாகப் பேசினார். அங்கும் ஒரு நிகழ்ச்சி.

`பல்கலைக்கழகங்களில் பாரதி' என்றொரு நிகழ்வுக்கும் திட்டமிட்டுள்ளோம். இந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் பாரதி குறித்த கருத்தரங்குகள் நடைபெறும். `பத்திரிகைகளில் பாரதி' என்றொரு திட்டத்தையும் உருவாக்கியிருக்கிறோம். பத்திரிகையாளர் மாலன் இதை ஒருங்கிணைக்கிறார். இதெல்லாம் முடிந்து, டிசம்பர் 11-ம் தேதி ஜதி பல்லக்கு, பொற்கிழி வழங்குவதோடு விழா நிறைவுறும். இந்த விழாக்கமிட்டியின் தலைவராக டாக்டர் சுதா சேஷையன் செயல்படுகிறார்.”

"பாரதி நினைவின் நூற்றாண்டு இது... அவரைத் தமிழகம் சரியாகப் புரிந்துகொண்டதாக நினைக்கிறீர்களா?’’

``வாழும் காலத்தில் அவரை யாரும் புரிந்துகொள்ளவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சுதந்திரத்துக்குப் பிறகு, பாரதியின் மகத்துவம் எல்லோருக்கும் புரிந்துவிட்டது. அவரின் பாடல்களை எம்.எஸ்ஸும், டி.கே.பட்டம்மா அம்மாவும் பாடி எல்லா வீடுகளுக்குள்ளும் கொண்டுசென்றார்கள். ஆனாலும் இப்போது நடக்கும் கொண்டாட்டங்கள் போதாது. அவர் உலக அளவில் கொண்டாடப்பட வேண்டிய மகா சிந்தனாவாதி.’’

"1980களிலேயே ஆடியோ புத்தகம் கொண்டு வந்தீர்கள்... புனைவுகளைத் தாண்டி இந்தியா முழுவதும் களப்பணி செய்து படைப்பாளிகளை ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள்... இவையெல்லாம் எப்படி சாத்தியமானது?’’

``எல்லாவற்றிலும் முன்னோடியாக இருப்பவர்தான் படைப்பாளி. `இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என் வாழ்நாளில் நிறைவான பணி. அது ஒரு வேள்வி. அப்படித்தான் சொல்ல வேண்டும். 16 ஆண்டுகள் என் வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது அந்தப்பணி. தமிழும் ஆங்கிலமுமாக 4 பகுதிகள் நூல்களாக வந்துள்ளன."

"கடந்த 20 ஆண்டுகளாக புனைவிலிருந்து விலகியிருக்கிறீர்கள்... ஏன்?’’

``ஆன்மிகம் என்னை ஈர்க்கிறது. இந்துதர்மம் நான்கு நிலைகளைச் சொல்கிறது. திருமணத்துக்கு முன்னால் பிரம்மச்சர்யம், திருமணத்துக்குப் பின்பு கிரகஸ்தன், மூன்றாவது நிலை வானப்பிரஸ்தம்... அதற்கடுத்த நிலை சன்னியாசம். நான் வானப்பிரஸ்த நிலையைத் தாண்டி சன்னியாசத்துக்கு அருகில் நிற்கிறேன். சன்னியாசம் என்பது காவிகட்டிக்கொண்டு காட்டில் போய் அமர்வதல்ல. படிப்படியாகப் பற்றை விட்டு விலகுவது.

வீழாத பாரதிக்கு விழா!

அடுத்த ஆண்டு எனக்கு 80 வயது. நிறைய பேசிவிட்டேன். நிறைய செய்துவிட்டேன். போதும்... இனிமேல் அடங்கத் தொடங்கவேண்டும். எழுத்திலிருந்து விலகவில்லை. பாபாவின் வாழ்க்கை பற்றி இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் செய்தேன். என் ஆன்மிக குரு சுவாமி சுத்தானந்தாவின் இரண்டு நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கொரோனா நேரத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் பட்ட துயரங்களைப் பொறுக்கமாட்டாமல் சில சிறுகதைகள் எழுதினேன். இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு அடுத்தடுத்து இரண்டு முறை மாரடைப்பு வந்தது. ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்தார்கள். அதன்பிறகான ஓய்வில் என் வாழ்க்கை சரிதத்தை `சூர்ய வம்சம்' என்ற பெயரில் இரண்டு பாகங்களாக எழுதிமுடித்தேன்.

எனக்குக் குழந்தைகள் கிடையாது. கணவரும் போய்விட்டார். எனக்கு ஏதாவது ஆகிட்டால் என் கனவுகளை யார் நிறைவேற்றுவார்கள்? உத்தண்டியில் இருந்த பண்ணை வீடு, கொடைக்கானலில் இருந்த வீடு, நிலங்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். மருத்துவமனைகளில் வார்டு கட்டுவது முதல் 101 திருமணங்கள் செய்வதுவரை எந்த விளம்பரமும் இல்லாமல் கடந்த பத்தாண்டுகளாக முடிந்த காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறேன். அமைதியான நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறது!’’