Published:Updated:

“தெய்வத்தின் பெயரால் சிறுவர்களின் வாழ்வை சிதைக்கலாமா?”

ஹெத்தையம்மன் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெத்தையம்மன் ஆலயம்

டி.வி., செல்போனுக்குத் தடை... பெண்களை நேரில் பார்க்கக் கூடாது...

நீலகிரியில் வாழ்ந்துவரும் படுகர் இன மக்கள், தங்கள் குலதெய்வமாக ஹெத்தையம்மனை வழிபட்டுவருகிறார்கள். நீலகிரியில் கல்வியறிவில் உயர்ந்த சமூகமாக அறியப்படும் இந்த மக்களின் ஆலயத்தில், ‘சிறுவர்களைக் கோயில் பூசாரிகளாக நியமித்து, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவருகிறார்கள்’ என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.

பேரகணி, பெத்தளா ஆகிய இரண்டு படுகர் கிராமங்களில் அமைந்திருக்கும் ஹெத்தையம்மன் கோயில்கள், படுகர் சமூக மக்களின் புண்ணியதலங்களாகக் கருதப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் அல்லது ஜனவரியில் ஒரு வாரம் நடைபெறும் கோயில் திருவிழாவுக்கு உலகின் எந்த மூலையில் இருந்தாலும் படுகர் சமூகத்தினர் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்பது ஊர் கட்டுப்பாடு. இந்த நிலையில்தான், அந்தக் கோயில்களுக்கு சிறுவர்களைப் பூசாரிகளாக நியமிக்கும் விவகாரம் வெடித்துள்ளது.

“தெய்வத்தின் பெயரால் சிறுவர்களின் வாழ்வை சிதைக்கலாமா?”

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் கோத்தகிரியைச் சேர்ந்த சிவன் என்பவரிடம் பேசினோம்... ‘‘ஹெத்தையம்மன் கோயிலில் எருமைப்பாலில் கடைந்த நெய்யில் விளக்கேற்ற வேண்டும். பூசாரியே கோயில் எருமையிலிருந்து பாலைக் கறக்க வேண்டும் என்பதால், உடல் வலிமைகொண்ட இளவயது பூசாரியை நியமிப்பது வழக்கம். அந்த வகையில் முன்பெல்லாம் 14 முதல் 21 வயதுடையவர்களே பூசாரியாக நியமிக்கப்பட்டார்கள். ஆனால், 2018-ல் பெத்தளா கோயிலில் 6 வயது சிறுவனைப் பூசாரியாக நியமித்திருக்கிறார்கள். திருவிழாவின் போது பல லட்சம் ரூபாய் காணிக்கையாகக் குவிகிறது. இது பூசாரிக்கே சொந்தம் என்பதால், ஒரு குடும்பத்தின் ஆதாயத்துக்காகவே இப்படிச் செய்திருக்கிறார்கள். கடந்த மூன்றாண்டுகளாக அந்தச் சிறுவன், பெற்றோரைப் பிரிந்து கோயில் வளாகத்திலேயே இருக்கிறான். அவன் கல்வி கற்க எந்த வசதியும் இல்லை. அதுபற்றி தற்போது நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பதால், அதைச் சமாளிக்க போலியான அறிக்கையைத் தயார் செய்துவருகிறார்கள்’’ என்றார்.

இதையடுத்து, பெத்தளா கிராமத்திலிருக்கும் கோயிலுக்குச் சென்றோம். 9 வயது மதிக்கத்தக்கச் சிறுவன் ஒருவன் வெள்ளை நிறத் தலைப்பாகையுடன், வெள்ளை நிறப் போர்வை ஒன்றைப் போர்த்தியபடி, கோயில் கொடிக் கம்பத்தைச் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவன்தான் பூசாரி. திடீரென்று அங்கு வந்த சிலர் நம்மை‌ ஊர்த்தலைவர் கிருஷ்ணனிடம் அழைத்துச் சென்றார்கள்.

“தெய்வத்தின் பெயரால் சிறுவர்களின் வாழ்வை சிதைக்கலாமா?”

‘‘எங்க தாத்தா காலத்துக்கு முன்னாடி இருந்தே இதுதான் நடைமுறை. சின்னப் பசங்க மனசுல வேற எந்த சிந்தனையும் இருக்காது. ஒரே மனசா அம்மனை வழிபடுவாங்க. அப்போதான் அம்மனோட அருள் கிடைக்கும். எங்க வம்சத்தைச் சேர்ந்த ஆண் வாரிசுகள்தான் பூசாரியா இருக்கணும். ஆறு, ஏழு வயசுல இருந்து 15, 16 வயசு வரைதான் பூசாரியா இருக்க முடியும். அருள்வாக்குக் கேட்டுத்தான் பையனைத் தேர்வுசெய்வாங்க. கோயிலுக்குள்ள பூசாரியா போற பையன்தான் எங்களுக்கு குலசாமி. பூசாரி ரொம்பக் கட்டுப்பாடா இருக்கணும். கோயில்லயே தங்கி, குளிச்சு, விளக்கேத்தி பூஜை செய்யணும். செல்போன், டி.வி பார்க்கக் கூடாது. கடையில விக்குறதைச் சாப்பிடக் கூடாது. உறவுக்கார ஆண்கள் கோயிலுக்குள்ள சமைச்சுக் கொடுக்குறதைத்தான் சாப்பிடணும். வெள்ளை நூல்ல துணி நெசவு செஞ்சு கொடுப்போம். அதைத்தான் உடுத்தணும். ஊர் மக்கள் நடக்குற பாதையில நடக்கக் கூடாது. அம்மாவா இருந்தாலும்கூட பொம்பளைங்களை நேரா பார்க்கக் கூடாது. குடும்பத்துல யாராச்சும் இறந்தாக்கூட வந்து பார்க்கக் கூடாது‌. பருவ வயசு வந்து வேற யோசனை வர ஆரம்பிக்குறப்ப, கோயில்ல இருந்து வெளியே வந்துடணும்’’ என்று ஊர்த்தலைவர் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது. பேரகணி கோயிலுக்குச் சென்றபோது அங்கிருந்த முதியவர் ஒருவரும் இதேபோலவே சொன்னார்.

கோவிலுக்குள் பூசாரி சிறுவன்
கோவிலுக்குள் பூசாரி சிறுவன்

‘பூசாரிகளாக இருக்கும் சிறுவர்களின் கல்விக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று போலியான அறிக்கையைக் கல்வித்துறை அதிகாரிகள் தயார் செய்துவருவதாகப் புகார்கள் வரவே... ஊட்டி வட்டாரக் கல்வி அலுவலர் பாலமுருகனிடம் பேசினோம். ‘‘பெத்தளா கோயில் பூசாரியாக ஆறு வயது சிறுவனை 2018-ல் நியமித்திருக்கிறார்கள். அந்தச் சிறுவன் பள்ளிக்கு வரக் கூடாது; பெண் ஆசிரியர்களும் வகுப்பெடுக்கக் கூடாது என்பதால், கூக்கல் பள்ளியின் உதவி ஆசிரியர் கண்ணன் வாரம் ஒரு முறை கோயிலுக்குச் சென்று பாடம் நடத்திவந்தார். கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாடம் நடத்தவில்லை. தற்போது ஆன்லைன் மூலம் கல்வி பெற்றுவருகிறார். அதனால், சிறுவன் கல்வி கற்பதில் எந்த பாதிப்பும் இல்லை’’ என்றார். ஆனால், இது பற்றிச் சந்தேகம் எழுப்புபவர்களோ, “சிறுவன் கல்வி கற்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறுவன் செல்போனே பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கும்போது எப்படி ஆன்லைனில் வகுப்பு எடுத்தார்கள்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

ஏற்கெனவே கோயில் பூசாரியாக இருந்த இளைஞர் ஒருவரிடம் பேசினோம். ‘‘எனக்கு 14 வயசு இருக்கும்போது படிப்பை நிறுத்தி, பூசாரியா அனுப்புனாங்க. ஆரம்பத்துல ஜாலியா இருந்துச்சு. ஆனா பல வருஷம் அம்மா, அப்பா, அக்கா, ஃப்ரெண்ட்ஸ், வீடு எல்லாத்தையும் விட்டுட்டு அங்க இருக்கறது ரொம்பக் கொடுமையா இருந்துச்சு. ஊர்ல என்ன நடக்குதுன்னே தெரியாம ஜெயிலுக்குள்ள இருக்குற மாதிரி இருந்தேன். எனக்கு 20 வயசு ஆனப்ப வெளியே அனுப்பிட்டாங்க. கோயில்ல இருந்தவரைக்கும்தான் மரியாதை. வெளியே வந்த பின்னாடி யாரும் கண்டுக்கலை... வெளியுலகம் புரியலை. வாழ்க்கையே கொடுமையா மாறிடுச்சு. நானா முயற்சி எடுத்து டுடோரியல்ல பத்தாவது படிச்சேன். தொடர்ந்து படிக்க முடியலை. ஊர்ல கிடைக்குற வேலையை செஞ்சுக்கிட்டிருக்கேன். கோத்தகிரி ஏரியாவுல என்னைப்போல பலர் பூசாரியா இருந்து, இப்போ சும்மா ஊர் சுத்திக்கிட்டு இருக்காங்க’’ என்றார் விரக்தியுடன்!

அம்ரித்
அம்ரித்
கிருஷ்ணன்
கிருஷ்ணன்

நீலகிரி கலெக்டர் அம்ரித்திடம் பேசினோம். ‘‘இப்படியொரு வழக்கம் இருப்பதும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதும் இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. இது பற்றி விசாரித்துவருகிறோம்” என்றார்.

‘‘மரபுகள் என்பவை காலத்துக்கு ஏற்றபடி மாறுவதே இயல்பு. தெய்வத்தின் பெயரால் சிறார்களின் வாழ்வைச் சிதைக்கும் முறையைக் கைவிட வேண்டும்!’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.