அலசல்
சமூகம்
Published:Updated:

மதுக்கடைகளைத் திறக்கப் போராடும் அரசு... குறு, சிறு தொழில் நிறுவனங்களை கவனிக்குமா?

கோவை
பிரீமியம் ஸ்டோரி
News
கோவை

கொந்தளிப்பில் கோவை

“டாஸ்மாக் கடைகளைத் திறந்து கஜானாவை நிரப்பிக்கொள்ள துடிக்கும் தமிழக அரசு, நம் பொருளாதாரத்தின் அடித்தளமான குறு, சிறு தொழில்களை கண்டுகொள்ளவில்லை” என கொந்தளிக்கின்றனர் குறு, சிறு தொழில்களைச் சார்ந்தவர்கள்.

கோவை மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பவை, அந்த மாவட்டத்தில் இயங்கும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள்தான். நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்பவை, இந்த நிறுவனங்கள்தான். அந்தத் தொழில் நிறுவனங் களுக்கு சலுகை அளித்து, அவை மீண்டும் திறம்பட செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, மது விற்பனையில் முனைப்பு காட்டு கிறதே ஒழிய, குறு, சிறு தொழில் வளர்ச்சியில் அக்கறை செலுத்த வில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகத் தயாரிப்பாளர்கள் சங்கத் (கோப்மா) தலைவர் மணிராஜ், ‘‘பம்ப்செட் உற்பத்தி செய்ய 75 வகையான உதிரிபாகங்கள் தேவை. சில மூலப்பொருள்கள் வட மாநிலங்களிலிருந்து வருகின்றன. தற்போது போக்குவரத்து முடங்கி யிருப்பதால், மூலப்பொருள்களை வாங்க முடியவில்லை. பம்ப்செட் களுக்கு இந்தக் காலகட்டம்தான் சீஸன். நிலைமை சரியாகும் வரை நாங்கள் வாங்கியிருக்கும் அனைத்து வங்கிக் கடன்களுக்கான வட்டி மற்றும் தாமதமாகச் செலுத்தப்படும் ஜி.எஸ்.டி-க்கான அபராதத் தொகை ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். இதையெல்லாம் சரிசெய்யவில்லையென்றால், நாங்கள் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

மதுக்கடைகளைத் திறக்கப் போராடும் அரசு... குறு, சிறு தொழில் நிறுவனங்களை கவனிக்குமா?

கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாகத் தயாரிப் பாளர்கள் சங்கத்தின் (கௌமா) தலைவர் சௌந்திரகுமார், ‘‘இந்தியாவுக்குள் விற்பனை செய்வதுடன், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் நாங்கள் தயாரிக்கும் கிரைண்டர்களை ஏற்றுமதி செய்கிறோம். கடந்த ஓர் ஆண்டாகவே எங்கள் சந்தை நிலவரம் சரியில்லை. கிட்டத் தட்ட 40,000 குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பியிருக்கின்றன. ஊரடங்கால் நாங்கள் அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டு விட்டோம். ஊரடங்கைத் தளர்த்தினாலும் நாங்கள் மீண்டும் பழையபடி தொழில் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறிதான். எங்களின் சுமைகளைக் குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, குறு, சிறு நிறுவனங்களின் மின்கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் ராமமூர்த்தி, ‘‘இந்தியா முழுவதும் நிலைமை சரியாகி போக்குவரத்து சீரானால்தான் கோவை இயல்புநிலைக்குத் திரும்பும். எப்போது நிலைமை சரியாகும் என்பது கேள்விக்குறிதான். மூன்று மாதக் கடன் தள்ளிவைப்பு என்பதை ஓர் ஆண்டு என நீட்டிக்க வேண்டும். வங்கிகள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். புதிதாக ஒருவர் தொழில் தொடங்கினால் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்வாரோ, அதே நிலைதான் எங்களுக்கும். எல்லோரும் பூஜ்ஜியத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்’’ என்றார்.

மதுக்கடைகளைத் திறக்கப் போராடும் அரசு... குறு, சிறு தொழில் நிறுவனங்களை கவனிக்குமா?

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர்கள் சங்கத்தின் (டேக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ்,

‘‘பல நாடுகள் தங்கள் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, துரித நடவடிக்கைகளை எடுக்கின்றன. நம் நாட்டில் அப்படி இல்லாதது வேதனையைத் தருகிறது.

பெரு முதலாளிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் வங்கிகள், எங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்காக சட்டப் போராட்டம் நடத்தும் அரசு, எங்களைப் போன்ற குறு, சிறு தொழில் நிறுவனங்களைக் கண்டுகொள்ள மறுக்கிறது’’ என்றார்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத்தின் (காட்மா) தலைவர் சிவக்குமார், ‘‘நாங்கள் பயன்படுத்தும் ஆட்டோமெடிக் மெஷின்கள் ஓடாமல் நின்றுகொண்டிருக்கின்றன. அந்த மெஷின்களை சர்வீஸ் செய்து ஓடவைப்பதற்கே லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். அரசாங்கம் உதவினால் மட்டுமே நாங்கள் இயல்புநிலைக்குத் திரும்ப முடியும்’’ என்றார்.

மணிராஜ் - ராமமூர்த்தி -  சிவக்குமார் - ஜேம்ஸ் - இராசாமணி
மணிராஜ் - ராமமூர்த்தி - சிவக்குமார் - ஜேம்ஸ் - இராசாமணி

இவர்களின் பிரச்னை குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணியிடம் பேசினோம். ‘‘பல்வேறு குறு, சிறு நிறுவன அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். பிற மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்களை வரவழைக்க, அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். கோவை, குறு, சிறு நிறுவனங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம். ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து, அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்’’ என்றார்.

மது விற்பனையைவிட தொழில் மீட்சிதான் முக்கியம் என்பதை அரசு உணர வேண்டும்!