அலசல்
Published:Updated:

‘தமுக்கத்தைக் காப்போம்!’

தமுக்கம் மைதானம்
பிரீமியம் ஸ்டோரி
News
தமுக்கம் மைதானம்

மதுரையில் முன்னெடுக்கப்படும் முழக்கம்

‘மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான தமுக்கம் மைதானத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோரிக்கைக் குரல், மதுரையில் உரத்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மதுரையில் நடைபெறும் பணிகளில் ஒன்றாக, 9.68 ஏக்கர் பரப்பளவு உள்ள தமுக்கம் மைதானத்தில், 45.55 கோடி ரூபாய் செலவில் கலாசார மையம் கட்டப்படவுள்ளது. இங்கு 2.47 ஏக்கரில் பார்க்கிங் வசதியுடன் 200 பேர் முதல் 3,500 பேர் வரை அமரக்கூடிய வகையில் உள்ளரங்கம் அமைக்கவும் வேலை நடந்துவருகிறது. இதற்குத்தான் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

‘`தமுக்கத்தை கார்ப்பரேட்டுகளின் சொத்தாக மாற்றுகின்றனர். எளிய மக்கள் இனி உள்ளே போக முடியாது. சித்திரைப் பொருட்காட்சி அங்கு நடக்காது. தமிழன்னை சிலை அப்புறப்படுத்தப்பட்டு தமிழரின் வரலாற்றை அழிக்கும் வேலைகளிலும் அரசு இறங்கியுள்ளது’’ என்று கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ராணி மங்கம்மாள் ஆட்சியில் போர்வீரர்களின் விளையாட்டு மைதானமாக உருவாக்கப்பட்டது தமுக்கம். அதன் பிறகு பிரிட்டிஷ் அரசுப் படையினரின் தங்கும் இடமாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு கலைவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், அரசியல் கட்சிகளின் மாநாடுகள், பொருட்காட்சி, ஆன்மிக நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் நடக்கும் இடமாக மாறியது. இப்படிப்பட்ட இடத்துக்குத்தான் இப்போது ஆபத்து வந்திருப்பதாக பலரும் குரல் எழுப்புகின்றனர்.

‘தமுக்கத்தைக் காப்போம்’ என்ற கோஷத்தை முன்னெடுத்துவரும் வழக்கறிஞர் அன்புநிதியிடம் பேசினோம். ‘‘மக்களின் வாழ்க்கையோடு கலந்து விட்ட தமுக்கம் மைதானத்தை, `நவீனமாக்குகிறோம்’ என்ற பெயரில் அதன் தொன்மையைச் சிதைத்தும், கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் வகையில் மாற்றவும் திட்டமிட்டிருக்கின்றனர். தமுக்கம் பொழுது போக்கும் இடம் மட்டுமல்ல, தமிழகத்தில் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்ட இடமும்கூட. ‘மாதமோ சித்திரை மணியோ பத்தரை உங்களைத் தழுவுவதோ நித்திரை மறக்காது எமக்கு இடுவீர் முத்திரை!’ என்று அறிஞர் அண்ணா தமிழால் கட்டிப்போட்ட இடம் தமுக்கம் மைதானம். எம்.ஜி.ஆர் உலகத்தமிழ் மாநாடு நடத்தியதும் இங்குதான்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தமுக்கத்தை கமிஷனுக்காகச் சிதைக்கப்பார்க்கிறார்கள். சித்திரைப் பொருட்காட்சி, இந்த ஆண்டு மாட்டுத்தாவணியில் நடக்கவுள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் உள்ள கலையரங்கத்தை இடிக்க உள்ளார்கள். கள்ளழகர் திருவிழாவுக்கு வரும் மக்கள் இரவில் தமுக்கத்தில்தான் தங்குவார்கள். இனி அதற்கு வாய்ப்பில்லை. ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றைச் சுருக்கி கால்வாயாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். பி.ஜே.பி அரசின் சொல்கேட்டுச் செயல்படும் தமிழக அரசு, இப்போது நம் பண்பாட்டு அடையாளங் களிலும் கை வைக்க ஆரம்பித்துவிட்டது. இதைத் தடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை’’ என்றார்.

அன்புநிதி - பி.ஸ்டாலின் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - விசாகன்
அன்புநிதி - பி.ஸ்டாலின் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - விசாகன்

வழக்கறிஞர் பி.ஸ்டாலின், ‘‘நூறு அடி உயரம்கொண்ட தமிழன்னை சிலை மதுரையில் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதை நிறைவேற்றாத எடப்பாடி அரசு, இப்போது உள்ள ஆறடி உயர தமிழன்னை சிலையை யும் காலிசெய்யப்போகிறது. சமீபத்தில் செல்லூரில் அமைச்சர் செல்லூர் ராஜு பார்வையிட்டபோதே ரவுண்டானா இடிந்து விழுந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்ட வேலைகள் எந்த லட்சணத்தில் நடக்கின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம்’’ என்றார்.

மதுரை மத்தியத் தொகுதி எம்.எல்.ஏ-வும், தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமுக்கம் மைதான கட்டுமானப் பணியை நிறுத்த சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத் திருக்கிறார். அவரிடம் பேசியபோது,

‘‘அ.தி.மு.க ஆட்சி முடிய இன்னும் ஓராண்டு மட்டும் உள்ள நிலையில், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தமுக்கம் மைதானத்தில் மிகப்பெரிய கூட்ட அரங்கு கட்டுவதற்கு டெண்டர் விட்டிருக்கின்றனர். அடுத்து ஆட்சிக்கு வர முடியாது என்பது தெரிந்துவிட்டதால், இருப்பதைச் சுருட்ட முடிவெடுத்து விட்டனர். ஏற்கெனவே மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் கருங்கற்கள் பதிக்கும் பணி மிகவும் மோசமாக நடந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்துப் பணிகளும் ஆய்வுசெய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

தமுக்கம் மைதானம்
தமுக்கம் மைதானம்

இதுபற்றி மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகனிடம் கேட்டதற்கு, ‘‘தவறான தகவலைப் பரப்புகின்றனர். தமுக்கம் மைதானத்தில் எதுவும் சிதைக்கப் படாது. அங்கு உள்ள அரங்கம் மிகவும் பழையதாகிவிட்டதால்தான், அதைப் புதிதாகக் கட்டுகிறோம். எதிர்காலச் சூழலைக் கணக்கில்கொண்டு கிரவுண்ட் ஃப்ளோர் அமைத்து பார்க்கிங் அமைக்க உள்ளோம். வேறு எந்த மாற்றமும் செய்ய வில்லை. தமிழன்னை சிலை அங்கேதான் இருக்கும். கார்ப்பரேட்டுகளுக்காக எதுவும் செய்யவில்லை. மக்களின் பயன்பாட்டுக் காகத்தான் வேலையைத் தொடங்குகிறோம். அடுத்த ஆண்டு சித்திரைப் பொருட்காட்சி இங்குதான் நடைபெறும்’’ என்றார்.

மாற்றங்கள் அவசியம்தான்... அது மக்கள் விரும்பும் மாற்றமாக இருப்பது அதைவிட அவசியம்!