Published:Updated:

“என்னை 400 முறை பாம்பு கடித்திருக்கிறது!”

வாவ சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
வாவ சுரேஷ்

ஏற்கெனவே பாம்பு கடித்ததால் என் இடது கை மோதிர விரலை இழந்துட்டேன். வலது கை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு சரியாகச் செயல்படாமல் இருக்கு.

“என்னை 400 முறை பாம்பு கடித்திருக்கிறது!”

ஏற்கெனவே பாம்பு கடித்ததால் என் இடது கை மோதிர விரலை இழந்துட்டேன். வலது கை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு சரியாகச் செயல்படாமல் இருக்கு.

Published:Updated:
வாவ சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
வாவ சுரேஷ்

பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் ‘வாவ சுரேஷ்’ பெயரைக் கேட்டால் பாம்புகளே நடுங்கும் என்னும் அளவுக்கு பாம்புபிடியில் பிரபலமானவர், திருவனந்த புரத்தைச் சேர்ந்த வாவ சுரேஷ். ஆனால் இந்தப் பாம்புக்கடியே சுரேஷுக்கு ஆபத்தையும் கொண்டுவந்து சேர்த்தது.

கடந்த ஜனவரி 31-ம் தேதி கோட்டயம் குறிச்சி பகுதியில் நாகப்பாம்பைப் பிடித்து சாக்குப்பைக்குள் அடைக்க முற்பட்டபோது வாவ சுரேசின் வலதுகால் முட்டிப் பகுதியில் பாம்பு பலமாகக் கடித்துப் பிடித்துக்கொண்டது. அந்தச் சமயத்தில் பாம்பை இழுத்துக் கீழே போட்டவர், மீண்டும் பாம்பைப் பிடித்து சாக்குப்பையில் அடைத்து விட்டுதான் மயங்கினார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணத்தின் வாயிலைத் தொட்டுவிட்டு மீண்டு வந்திருக்கிறார் வாவ சுரேஷ்.

திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே சிறுவைக்கலில் சிறிய ஓலைக் குடிசையில் அப்பா பாகுலேயன், அம்மா கிருஷ்ணம்மா ஆகியோருடன் வசித்து வருகிறார். வாவ சுரேஷுக்கு அரசு வீடுகட்டிக் கொடுப்பதாகக் கூறியிருக்கிறது. இப்போது சிகிச்சை எடுக்க ஏதுவாக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி அருகிலேயே ஒரு அறை எடுத்துத் தங்கியிருப்பவரை நேரில் சந்தித்து உரையாடினேன்.

“என்னை 400 முறை பாம்பு கடித்திருக்கிறது!”
“என்னை 400 முறை பாம்பு கடித்திருக்கிறது!”

“என் நிஜப்பெயர் சுரேஷ். சின்ன வயதில் அம்மா என்னை வாவ சுரேஷ் என அழைச்சாங்க. ‘வாவ’ன்னா குழந்தைன்னு அர்த்தம். 13 வயசுல ஸ்கூல் போய்கிட்டு இருந்தப்ப வழியில போன ஒரு பாம்பைப் பிடிச்சேன். அது என்ன பாம்புன்னு ஞாபகம் இல்ல. அதில் இருந்து நான் பாம்பு பிடிக்கத் தொடங்கினேன். எங்கேயாவது மக்கள் பாம்பைக் கண்டால் அடித்துக் கொல்லுவதாகச் செய்தியைக் கேட்டால் எனக்கு ரொம்ப வருத்தம் வந்திரும். அதனால மக்களிடம் இருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மக்களையும் காப்பாத்துறதுக்காக பாம்பு பிடிக்க ஆரம்பிச்சேன். பிடிக்கிற பாம்பை வனத்துறை அதிகாரிகளுடன் சென்று அடர்ந்த வனத்தில் கொண்டு விட்டுட்டு வருவேன். இதுவரை ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாம்புகளைப் பிடிச்சிருக்கேன். அதில் 226 ராஜ நாகங்களும் அடங்கும். உடல்நிலை சரியானதும் இன்னும் இரண்டு வாரத்தில மீண்டும் பாம்பு பிடிக்கப் போவேன்” எனக் கூறும் வாவ சுரேஷ், பாம்பு பிடிக்கும் இந்த விபரீதப் பழக்கத்தால் வாழ்க்கையில் பலவற்றை இழந்திருக்கிறார்.

“வறுமையினால, என் சகோதரி, சகோதரர்களைப் படிக்க வைக்கிறதுக்காகவும் 10-ம் கிளாஸோட என் படிப்பை முடிச்சுக்கிட்டு மேஸ்திரி (கட்டட) வேலைக்குப் போனேன். ஆனா என்னால பாம்பைப் பார்க்காம, பட்டுப்போல இருக்கும் பாம்பின் உடலைத் தொட்டுப் பிடிக்காம இருக்க முடியல. அதனால் மேஸ்திரி வேலையை விட்டுட்டு முழு நேரமா பாம்பு பிடிக்க இறங்கிட்டேன். கல்யாணம் ஆனது. ஆனா என்னோட ஃபீல்டுக்கு சில விசயங்கள் ஒத்துவரல. நான் பாம்பு பிடிக்கிறதுக்காக நீண்ட தூரம் போறதனால மூணு, நாலு நாளுக்கு அப்புறம்தான் வீட்டுக்கு வருவேன். அதனால கல்யாணம் ஆகி ஒரு வருஷத்திலேயே மனைவியைப் பிரிஞ்சுட்டேன்” என்றவரிடம் “பாம்புகளிடம் பாசம் காட்டுவது சரி, அதுவே ஆபத்தை விளைவிக்கிறதே?” என்றேன்.

“என் மரணமும் பாம்பால்தான் நிகழும் என்று உறுதியாக எனக்குத் தெரியும். என்னை இதுவரை 400 முறை பாம்பு கடிச்சிருக்கு. அதில 15 முறை சீரியஸான நிலைமைக்குப் போயிருக்கேன். நான்கு முறை வெண்டிலேட்டரில் இருந்திருக்கேன். அதிலும் இந்த முறை இதுவரை இல்லாத அளவு மிக மோசமான நிலைக்குச் சென்று திரும்பியிருக்கேன்.

“என்னை 400 முறை பாம்பு கடித்திருக்கிறது!”
“என்னை 400 முறை பாம்பு கடித்திருக்கிறது!”
“என்னை 400 முறை பாம்பு கடித்திருக்கிறது!”

ஏற்கெனவே பாம்பு கடித்ததால் என் இடது கை மோதிர விரலை இழந்துட்டேன். வலது கை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு சரியாகச் செயல்படாமல் இருக்கு. கோட்டயத்தில் பாம்பு பிடிக்கும்போது உடல் அளவில் நான் பலவீனமாக இருந்தேன். 2021 ஏப்ரலில் கொரோனா தொற்றி சீரியஸ் நிலைக்குச் சென்றேன். இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி விபத்து ஏற்பட்டு முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டு ஓய்வில் இருந்தேன். அப்பதான் கோட்டயத்தில குழந்தைகள் இருக்கிற பகுதியில பாம்பு நடமாட்டம் இருக்கிறதுன்னு கூப்பிட்டாங்க. முதுகு வலியையும் பொருட்படுத்தாம 160 கிலோ மீட்டர் பயணம் செய்து அங்கு போனேன். முதுகு வலிச்சுக்கிட்டே இருந்ததனால முழுக் கவனத்தோட என்னால பாம்பைக் கையாள முடியல. அதனாலதான் கடிபடவேண்டிய நிலை ஏற்பட்டது. பாம்பு கடித்தபோது நான் இறந்துபோவேன் என நினைத்தேன். மரணத்தை ஏற்றுக்கொள்ள மனத்தளவில் தயாரானேன். ஆனால், மக்களின் பிரார்த்தனைதான் என்னை மீட்டிருக்கிறது” எனக்கூறும் வாவ சுரேஷுக்கு சிகிச்சையின்போது விஷ முறிவுக்காக 65 டோஸ் மருந்து செலுத்தியிருக்கிறார்கள். சாதாரண மனிதர்களுக்கு 30 டோஸ் மருந்துதான் செலுத்துவார்களாம். எந்த மருந்தாக இருந்தாலும் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகம் எடுத்துக்கொண்டால்தான் வாவ சுரேஷ் உடலில் வேலை செய்யுமாம். அதற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார்.

“பாம்பின் விஷம் என நீங்கள் சொல்லும், ஔஷதத்தை (மருந்தை) நான் 900 முறை குடிச்சிருக்கேன். பாம்பு இறந்து கிடந்த தண்ணீரைக் குடிச்சாலோ, வீட்டில் வளர்க்கும் ஆடு, கோழி பாம்பு கடிபட்டு இறந்தால் அவற்றை சமைத்து சாப்பிடும் மனிதர்களுக்கு ஒன்றும் ஆகாது என்பதை நிரூபிக்க, மக்கள் முன்னிலையில் பாம்பின் விஷத்தைக் குடிச்சிருக்கேன். பாம்பின் விஷம் மருந்தாகப் பயன்படுகிறது. மக்களுக்குப் பாம்புமீதான பயம் மாறுவதற்காகவே நான் அவர்கள் முன்னிலையில் பாம்பு பிடிக்கிறேன்” என்கிறார்.

வரதட்சிணைக் கொடுமையின் உச்சமாக பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து உத்ரா என்ற பெண்ணைக் கொலை செய்த வழக்கில் அது கொலை என முதலில் சொன்னது வாவ சுரேஷ்தான்.

“என்னை 400 முறை பாம்பு கடித்திருக்கிறது!”
“என்னை 400 முறை பாம்பு கடித்திருக்கிறது!”
“என்னை 400 முறை பாம்பு கடித்திருக்கிறது!”

“உத்ரா வீட்டின் முதல் மாடியில் படுத்திருந்த நிலையில், பாம்பு டைல்ஸ் சுவர் வழியாக ஏறாது என்பதுபோன்ற காரணங்களை விளக்கிச் சொல்லி, அது பாம்பைக் கடிக்க விட்டுச் செய்த கொலை என நான்தான் முதலில் மீடியாக்களிடம் சொன்னேன். அதன் பிறகுதான் க்ரைம் பிராஞ்ச் அந்த வழக்கில் கணவன் சூரஜைக் கைது செய்தது. உத்ரா கொலை வழக்குக்குப் பிறகு கேரளாவில் பாம்பு பிடிப்பவர்களின் முழு விவரங்களை எடுக்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைத்தேன். அதன்படி அந்தப் பட்டியல் எடுக்கப்பட்டு பாம்பு பிடிப்பவர்களுக்குச் சான்றிதழ் கொடுக்கிறார்கள்” என்றார்.

பாம்புகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட சுரேஷ் ஓர் ஆச்சர்யம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism