Published:Updated:

“உழைக்கிற மக்கள்கிட்டதான் நிலம் இருக்கணும்!”

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

இப்ப கொரோனா பயத்தால பிள்ளைங்க என்னை வெளியில விடுறதே இல்ல. கொஞ்ச நாளுக்கு முன்னாடி கீழ விழுந்து சின்னதா காயம். அதனால, அன்புக் கட்டளை போட்டுட்டாங்க.

“உழைக்கிற மக்கள்கிட்டதான் நிலம் இருக்கணும்!”

இப்ப கொரோனா பயத்தால பிள்ளைங்க என்னை வெளியில விடுறதே இல்ல. கொஞ்ச நாளுக்கு முன்னாடி கீழ விழுந்து சின்னதா காயம். அதனால, அன்புக் கட்டளை போட்டுட்டாங்க.

Published:Updated:
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்… நிலமில்லா ஏழை எளிய மக்களுக்காக வாழ்நாள் முழுக்கப் போராடி, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்கிக்கொண்டிருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர். கணவர் சங்கரலிங்கம் ஜெகநாதனுடன் இணைந்து, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக காந்திய வழியில் போராடியவர். இந்தியாவில் இவர் பாதங்கள் படாத இடங்களை எண்ணிச் சொல்லிவிடலாம். எளிய மக்களுக்கான போராட்டக் களங்கள் இவரை எல்லா திசைகளிலும் இழுத்துச் சென்றிருக்கிறது. 96 வயதுக்கே உரித்தான உடல் நடுக்கம், தளர்வுகள் இருந்தாலும், பேச்சில் உறுதியும் போராட்டக் குணமும் கொஞ்சமும் குறையவில்லை. செங்கல்பட்டு மலையடிவாரத்தில், மகளுடன் வசித்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனை 75-வது சுதந்திர தினத்தையொட்டி சந்தித்தோம்.

“எங்க வீட்டுல மொத்தம் 12 பிள்ளைங்க. நான் 5-வது பிள்ளை. எங்க அண்ணனுங்கல்லாம் படிச்சாங்க. பொம்பளப்புள்ளைன்னு என்னைப் படிக்க வைக்கல. சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி அப்பாகிட்ட என் மாமா சண்டையே போட்டாரு. ஆனா, என் எண்ணமெல்லாம் படிப்புமேல மட்டும்தான் இருந்தது. எங்க அண்ணன் முனியாண்டி மதுரையில படிச்சுக்கிட்டிருந்தார். அவர்கிட்ட, ‘நீ மட்டும் படிக்கிற, நான் படிக்கக்கூடாதா'ன்னு கேட்டேன். என்னைப் புரிஞ்சுக்கிட்ட அண்ணன், வீட்டுல யார்கிட்டேயும் சொல்லாம என்னை மதுரைக்குக் கூட்டிக்கிட்டுப் போயி ஸ்கூலில் சேர்த்து விட்டுட்டாரு. அப்போதான், சமூக சேவை செய்துகொண்டிருந்த செளந்திரம்மா அறிமுகமானாங்க. அவங்க இல்லத்துல தங்கிதான் படிச்சேன். என்னை மாதிரி எத்தனையோ பெண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, கல்வி, உணவு கொடுத்து முன்னேற்றினாங்க.

“உழைக்கிற மக்கள்கிட்டதான் நிலம் இருக்கணும்!”

1942-ம் வருஷம் அமெரிக்கன் கல்லூரியில் படிச்சிக்கிட்டிருந்தேன். எல்லோரும் தீவிரமா சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டுக்கிட்டிருந்த காலகட்டம் அது. மதுரைக்கு காந்தி வந்தார். செளந்திரம்மா கூடவே இருந்ததால காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பும் அவருடன் மேடையில் இருக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அதுக்கு முன்னாடியே, காலேஜ்ல `காந்தி ஸ்டடி சர்க்கிள்’ மூலமா வாரந்தோறும் கூட்டம் நடத்துவோம். காந்தியைச் சந்தித்ததாலும், செளந்திரம்மா கூடவே இருந்ததாலயும், காந்தியக் கொள்கைகள்ல பிடிப்பு வந்தது. சமூக சேவை செய்யணும்ங்குற ஆர்வமும் வந்துடுச்சு. அதன்பிறகுதான், வினோபா பாவேவுடன் இணைந்து பூமிதான இயக்கத்தின் மூலம் இந்தியா முழுக்கப் பயணப்பட்டேன். இப்படித்தான் தொடங்குச்சு என்னோட சமூகப் போராட்டப் பயணம்.

இப்ப கொரோனா பயத்தால பிள்ளைங்க என்னை வெளியில விடுறதே இல்ல. கொஞ்ச நாளுக்கு முன்னாடி கீழ விழுந்து சின்னதா காயம். அதனால, அன்புக் கட்டளை போட்டுட்டாங்க. இப்போ, நான் வெளியில் மட்டும் போனால் இன்னும் 5,000 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்க முயற்சி பண்ணுவேன். நன்னிலத்துல 45 வீடுகள் கட்டப்பட்டுப் பாதியிலேயே நிற்குது. என் உடம்புல தெம்பு இருக்கிறவரைக்கும் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்துக்கிட்டே இருப்பேன்” என்று இதயம் கனக்க வைக்கிறார் கிருஷ்ணம்மாள்.

``இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?’’

“ஒரு வருஷமா? ரெண்டு வருஷமா? 75 வருஷங்கள் ஆகுது. இன்னும் வயித்துக்குச் சோறு இல்லாம, சொந்த வீடு, சொந்த நிலம் இல்லாம எத்தனை பேரு திண்டாடுறாங்க. இன்னமும் சாலையோரங்களில் படுத்துறங்குற மக்கள் இருக்கத்தானே செய்யறாங்க. உழைக்கிற மக்கள்கிட்டதான் நிலம் இருக்கணும். உழைக்காதவர் யாரா இருந்தாலும் அவங்ககிட்ட நிலம் இருக்கக்கூடாது. இதைத்தான் காந்தியும் வினோபாவும் சொல்லிப் போராடுனாங்க. ஆனா, இன்னைக்கு வரைக்கும் அந்த நிலை மாறல. சுதந்திரம் கிடைச்சப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா, நான் எதிர்பார்த்த சுதந்திரம் இது கிடையாது.”

``இவ்வளவு போராட்டங்களைச் செய்து மக்கள் மத்தியில் பேசப்பட்ட நீங்கள் ஏன் அரசியலுக்குள் வரவில்லை?’’

“அரசியலுக்கு வந்தால் பொய் சொல்லணும். இதைச் செய்யுறேன், அதைச் செய்யுறேன்னு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாத்துற நிலை வரும். அதனால, அரசியலே எனக்குப் பிடிக்கல. அரசியலுக்கு வரக்கூடாதுங்குறதுல உறுதியா இருந்தேன். நாங்க வைக்குற ஏழைகளுக்கான திட்டங்களும் கோரிக்கைகளும் அரசியல் கட்சிகளால் ஏத்துக்க முடியாது; தாங்கிக்க முடியாது. அதனால எந்தக் கட்சியும் என்னை அழைக்கல.''

“உழைக்கிற மக்கள்கிட்டதான் நிலம் இருக்கணும்!”

``காந்தியத்தின் இன்றைய தேவை என்ன?’’

“மனுசனுக்கு எல்லா விதத்திலேயும் சுதந்திரம் வேணும்னு காந்தி கேட்டாரு. அந்தச் சுதந்திரம் இப்போவரை கிடைக்கல. அந்தச் சுதந்திரம் கிடைக்குறவரைக்கும் காந்தியத்தோட தேவை இருக்கும்.”

``உங்களால் மறக்க முடியாத ஆத்மார்த்தமான போராட்டக் களம் எது?’’

“கீழ்வெண்மணி படுகொலைக்காக நியாயம் கேட்டுப் போராடியதுதான். அந்த ஏழைங்க என்ன தப்புப் பண்ணினாங்க? கூலி உயர்வுங்குற அவங்களோட உரிமையைத்தான் கேட்டாங்க. அதுக்குப் போயி அவங்களோட உயிரையே எடுக்கிறதா? எரிச்சுக் கொல்றதா? அந்தச் சம்பவம் என் மனசை ரொம்பவே பாதிச்சிடுச்சு. தகவல் தெரிஞ்சதுமே நேரடியா அந்த இடத்துக்குப் போயிட்டேன். ஆரம்பத்துல மக்கள் எனக்கு சரியா ஒத்துழைப்புக் கொடுக்கல. மூணு வருஷம் அவங்களை ஒன்றுதிரட்டினேன். சாப்பாடுகூட இல்லாம வெறும் நீராகாரம் மட்டுமே குடிச்சுட்டுப் போராடினேன்.

நாய் அடிபட்டுச் செத்தாக்கூட கேட்பாங்க. ஆனா, மனுஷ உயிர் அவ்வளவு மலிவாப் போய்டுச்சா? 44 உயிர்கள் போயிருக்கு. எந்த சர்க்காரும் மக்கள் பக்கம் நிற்கல. மக்கள் காலப்போக்கில் என்னைப் புரிஞ்சுக்கிட்டு என்னோடு கைகோத்தாங்க. இதைப் பிடிக்காத நிலச்சுவான்தார்கள் ஒரு கல்யாண மண்டபத்துல மீட்டிங் போட்டு என்னை வரச்சொன்னாங்க. ‘நீ சும்மா ஏதோ பார்த்துட்டுப் போய்டுவேன்னு நினைச்சா, மக்களைச் சேர்த்துக்கிட்டு மாநாடு நடத்திக்கிட்டிருக்க. இனிமே, இங்க இருந்தா உன் தல தப்பாது’ன்னு நேரடியாவே மிரட்டினாங்க. அதுக்கெல்லாம், நான் பயப்படுற ஆள் கிடையாது.

நேரா கலைஞரைப் பார்க்க மெட்ராஸுக்குப் போயிட்டேன். ‘தயாளு… அம்மா வந்திருக்காங்க. காபி கொண்டு வா' என்ற கலைஞர், ‘உங்க பிரச்னை தீருகிறவரைக்கும் நீங்க இங்கதாம்மா இருக்கணும்’னு சொல்லிட்டு அதிகாரிங்களை அழைத்தார். ‘இவங்க என்ன கோரிக்கை வைக்கிறாங்களோ அதைச் செஞ்சு கொடுங்க’ன்னு உத்தரவிட்டார். கீழ்வெண்மணி குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம் ரெஜிஸ்ட்ரேஷன் ஃபீஸ் இல்லாமப் பண்ணிக் கொடுங்க. நிலம் வாங்குற பணத்துல இரண்டு பங்கு அரசும் ஒரு பங்கு மக்களும் கட்டுற மாதிரி செய்யணும்னு கோரிக்கை வச்சேன். கலைஞரும் ஏத்துக்கிட்டாரு. அந்த மக்களுக்காக நான் நின்னதுதான் இன்னமும் மறக்கமுடியாதது.”

“உழைக்கிற மக்கள்கிட்டதான் நிலம் இருக்கணும்!”

``இந்தியா முழுக்க நீங்கள் போராடிப் பெற்ற நிலங்களை எல்லாம் பெரும்பாலும் பெண்கள் பெயரிலேயே பதிவு செய்துள்ளீர்கள். ஒரு பெண்ணுக்கு நிலம் எவ்வளவு முக்கியமானது?’’

‘‘ஒரு குடும்பத்தோட ஆணிவேரே பெண்தான். குடும்பத்தை நிர்வகித்து குடும்பத்தோட எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்றது பெண்கள்தான். அப்படி இருக்கும்போது ஆண்கள் பெயரில் ஏன் சொத்து இருக்கணும்? திடீர்னு வீட்டுல ஒரு பிரச்னைன்னா, பெண்ணை வீட்டை விட்டு அடிச்சுத் துரத்திடுறாங்க. அந்தமாதிரி சூழலில் பெண்கள் எங்க போவாங்க? நிலம் அவர்கள் பெயரில் இருந்தால் இப்படியொரு நிலை ஏற்படுமா? வீட்டை விட்டுத் துரத்தப்படுவார்களா? சொத்து பெண்கள் பெயரில்தான் இருக்கவேண்டும்.”

``பஞ்சமி நிலங்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளதே? அரசியல்வாதிகளும் ஆக்கிரமித்துள்ளார்களே?’’

‘‘கக்கன் காலத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க நிறைய போராடியிருக்கோம். மெட்ராஸிலிருந்து வேதாரண்யம்வரை போராடி ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கோம். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆகுது. இன்னும் இந்த அவலம் தொடர்ந்துகிட்டு இருக்கிறது வேதனையா இருக்கு. பஞ்சமி நிலங்களை மீட்டு, உழைக்கிறவங்ககிட்ட கொடுக்கணும்.”

``உங்களுடைய சேவைகள், போராட்டங்கள் பெரிது. ஆனால், அவை மறைக்கப்பட்டதாகச் சொல்லப்படுவது உண்மையா?’’

‘‘எனக்கு எந்தப் புகழும் வேண்டாம், வெளிச்சமும் வேண்டாம். இல்லாதவங்களுக்கு நிலம் வாங்கிக் கொடுத்துட்டேன், வீடு கட்டிக் கொடுத்துட்டேன். கல்வி கிடைக்காத பிள்ளைகளைப் படிக்க வெச்சுட்டேன். இந்த வாழ்க்கைக்கு அர்த்தமா இதைவிட வேற என்ன எனக்கு வேணும்? இப்பவும் கீழ்வெண்மணிக்குப் போனா ‘அம்மா வந்துட்டாங்க’ன்னு ஆசையா வந்து என் கையைப் பிடிச்சிக்கிறாங்க. எனக்கு இந்த மனத் திருப்தி போதும்.''

``இத்தனை வருடங்களில் நீங்கள் செய்ய முடியாமல் போனது எது? இன்னமும் செயல்படுத்த நினைப்பது எது?’’

‘‘ஆதீனங்களிடம் நிறைய சொத்துகள் சும்மாவே கிடக்கு. ஆதீனங்களில் சும்மா கிடக்குற நிலங்களை மீட்டு, நிலமில்லாத மக்களுக்குக் கொடுக்கணும். அதைச் செய்தாதான் என் கட்டை வேகும். அந்த நினைப்பு என்னை இன்னமும் தூங்க விடாம செஞ்சிக்கிட்டிருக்கு. ஒரு மனுஷனுக்கு நிலமும் வீடும் மிக முக்கியமானது. எங்கோ வெளியில போயி உழைச்சுட்டு வர்றவன், தனக்குச் சொந்தமான வீட்டுக்கு வந்து நிம்மதியா உறங்கணும். சஞ்சலமான வாழ்க்கை மனுஷனுக்கு இருக்கக்கூடாது. ஆனா, அது இன்னமும் சாத்தியப்படல. மத்திய, மாநில அரசுகள் வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கணும். அதோட, கல்வியையும் கொடுத்துட்டா அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க.”

``உங்கள் திருமணத்தைக்கூட சுதந்திரம் கிடைத்தபிறகுதான் செய்துகொண்டீர்கள். அந்த நினைவுகள் குறித்து?’’

‘‘எங்களுடையது காதல் திருமணம்னு பலரும் நினைச்சுக்கிட்டிருக்காங்க. அப்படி எதுவும் இல்ல. எங்களுக்குக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமே இல்ல. நீரும் நிலமும் எங்களுக்குச் சொந்தமில்லங்குற கொள்கையில வாழந்தவங்க. அப்படியிருக்கும்போது எப்படி காதல் வரும்? என் கணவர், விவேகானந்தர் மேல ஈடுபாடு ஏற்பட்டு ராமகிருஷ்ண மடம் போறேன்னு சொன்னார். அப்போ, மக்களுக்காக இவ்ளோ நல்லா போராடுற ஆளு யாரும் கிடைக்கமாட்டாங்க. யாராவது ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கப்பான்னு காந்தி கூடவே இருந்த குமரப்பா சொன்னார். அப்பதான் என்னையும் அறிமுகப்படுத்தி வைத்தார். நாங்க திருமணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தோம். ஆனா, சுதந்திரத்துக்குப் பிறகுதான் திருமணம் பண்ணிக்கணும்னு உறுதியா இருந்து அதைச் செயல்படுத்தினோம். எங்க வாழ்க்கை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை. இந்தப் போராட்டக் களத்தில் எனக்கு எப்போதுமே சலிப்பு ஏற்பட்டதில்ல. ஏழைகள் வெற்றியடையவேண்டும் என்பது மட்டும்தான் எனது நோக்கமாக இருந்தது, இப்போதும் இருக்கிறது.”